தாமுவின் இன்னொரு முகம்!

"ஓட்டேரி நரி' என்ற அடைமொழியுடன் பிரபலமானவர்,  நடிகர் தாமு. படம்:  " கில்லி'. கடந்த முப்பது ஆண்டுகளாக தனது நகைச்சுவை மூலம் தமிழ் திரைப்படங்களில் வலம் வந்தவர்.
தாமுவின் இன்னொரு முகம்!

"ஓட்டேரி நரி' என்ற அடைமொழியுடன் பிரபலமானவர், நடிகர் தாமு. படம்: " கில்லி'. கடந்த முப்பது ஆண்டுகளாக தனது நகைச்சுவை மூலம் தமிழ் திரைப்படங்களில் வலம்வந்தவர். டாக்டர் ஏ.வி.தாமோதரன் என்கிற நடிகர் தாமு, இயக்குநர் சிகரம் பாலசந்தரின் சீடர்.

இவருக்கு சமீபத்தில் ஓர் உயரிய கெளரவம் கிடைத்திருக்கிறது. அது சினிமா மூலம் கிடைத்தது அல்ல. சினிமாவைத் தாண்டிய கெளரவம். தாமுவிற்கு இன்னொரு முகமும் இருக்கிறது. ஆம், கல்வி சேவையாளர் என்கிற முகம்.

கல்வித்துறையில் கடந்த பத்து ஆண்டுகளாக, தொடர்ந்து நடிகர் தாமு மேற்கொண்ட முயற்சிகளுக்காக, தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் "ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021' என்கிற தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது அளிக்கப்பட்டுள்ளது.

அதைப் பற்றி நடிகர் தாமுவிடம் கேட்டோம்.

""உலக அளவில் பெற்றோர், ஆசிரியர், மாணவர் அமைப்பை நான் 10 ஆண்டுகளாக நடத்திக் கொண்டு வருகிறேன். இது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தந்த நேரடி பயிற்சியால் எனக்கு கிடைத்த வரம். அவர் எப்படி எனக்கு நேரடிப் பயற்சி கொடுத்தார் என்று நீங்கள் கேட்கலாம்.

ஒரு மிமிக்ரி நிகழ்சிக்காக என்னை 2011- ஆம் ஆண்டு அழைத்தார்கள். கோவையில் நடந்த அந்த விழாவிற்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வர ஒப்புக்கொண்டுள்ளார்கள் என்றும் கூறினார்கள். அவர் பங்கு கொண்டு பேசி விட்டுப் போன பிறகு, என்னுடைய பல குரல் நிகழ்ச்சி நடக்க வேண்டும் என்று கூறினார்கள். நானும் சரி என்று ஒப்புக்கொண்டு கோவை கொடிசியா அரங்குக்குச் சென்றேன். அங்கு தான் அந்த நிகழ்ச்சி நடந்தது.

அன்று கலாம் வரவேண்டிய விமானம் தாமதமாக வந்தது. அவர் வரும் வரை விழா அமைப்பாளர்கள் என்னுடைய நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று சொன்னார்கள். அவர் விமானநிலையத்திலிருந்து என் நிகழ்ச்சியை கைபேசியின் ஸ்பீக்கரிலேயே கேட்டுக் கொண்டு வந்தார்.

அந்த நிகழ்ச்சியின் கடைசி அரைமணி நேரத்திற்கு மேல், நான் பேசியது, என்னை செதுக்கிய ராதா பாய் என்கிற வேலம்மாள் டீச்சரைப் பற்றி தான்.

எப்படி என்னுடைய பல குரல் கலையை ராதாபாய் டீச்சர் ஊக்குவித்து, வெளியே கொண்டு வந்தார்கள் என்று அங்கு பெரும் திரளாக கூடி இருந்த எல்லாரிடமும் நான் கூறிக் கொண்டு இருந்தேன்.

நான் பேசியது, அங்குள்ள மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களின் கண்களில் நீரை வரவழைத்து விட்டது. இதை எல்லாம் கலாம் சார் கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டும் வந்தார்கள். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் கலாம் என்னை அழைத்து, ""நீ மாணவ சமுதாயத்திற்காக, என்னுடன் வந்து விடு. எனக்கு உன்னைக் கொடுத்திடு'' என்றார். அவர் சொன்ன வார்த்தைகள் என் இதயத்தில் ஆழமாகப் பதிந்து விட்டன. அந்த கணமே ""வந்துடறேன் சார்'' என்று சொல்லி அவருடனே பயணம் செய்ய தொடங்கினேன்.

ஓர் ஐந்து வருடம் நான் அவருடன் பயணம் செய்தேன். அவருடன் பயணம் என்றால், அவர் தமிழ் நாட்டுக்கு வரும் போதெல்லாம் அவர் கூட இருப்பேன். மாணவர்களுக்கு கலாம் சாருடைய பத்து கட்டளைகள் இருக்கின்றன. ஆசிரியர்களுக்கு 11 கட்டளைகள் இருக்கின்றன. ஒரு கட்டளையை விரிவாகச் சொல்வதற்கே ஒரு நாளாகும்.

தொடக்கப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் ஆகிய அனைவரிடமும் நான் அவரது கட்டளைகளைக் கூறி பயிற்சி பட்டறை நடத்தினேன். நான் இதுவரை சுமார் 20 லட்சம் மாணவர்களுக்கு இந்த பயிற்சி பட்டறையை நடத்தி இருக்கிறேன். நாங்கள் இதுவரை சந்தித்த பெற்றோர்கள் சுமார் 25 லட்சம்.

ஒருமுறை கலாம் சார் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்து இருந்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, போகும் முன்னர், உணவு இடைவேளை வந்து விட்டது. சாப்பிட போவதற்கு முன், கையில் சோப்பு போட்டு, உள்ளங்கையை சுரண்டி கையைக் கழுவுவார். கேட்டால், "ஆயிரம் கிருமி இருக்கும்' என்று சொல்லுவார். இப்போது நாம் எப்படி சோப்பு போட்டு கைகளைக் கழுவுகிறோமோ, அதை எல்லாம் அவர் அப்போதே செய்து விட்டார்.
கலாம் சாரை பொருத்தவரைக்கும் எல்லாமே பாசிட்டிவ் தான். அவரிடம் நாம் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. அதைச் சொல்லிக் கொண்டே போகலாம்'' என்றார் நடிகர் தாமு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com