ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ஏழு கட்டளைகள்

நன்றாகப் படிக்க வேண்டிய வயதில் உடலையும் உள்ளத்தையும் கெடுத்துக் கொள்ளும் வகையில் உங்களுடைய மகன் தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ஏழு கட்டளைகள்

என் மகனுக்கு வயது 20. கட்சிப் பணி, தேர்தல் பிரசாரம் என்றெல்லாம் வெளியே சென்று சரி வர உரிய நேரத்தில் வீடு திரும்புவதில்லை. வீட்டில் தங்கினாலும் இரவில் தூக்கத்தில் ஏதோதோ உளறுகிறான். உடல் மெலிந்து கறுத்துப் போய், கன்னமெல்லாம் ஒட்டிப் போய் பார்ப்பதற்கே நன்றாக இல்லை. அவனை எப்படிக் குணப்படுத்துவது?

நாகா, தாம்பரம்,
சென்னை.

நன்றாகப் படிக்க வேண்டிய வயதில் உடலையும் உள்ளத்தையும் கெடுத்துக் கொள்ளும் வகையில் உங்களுடைய மகன் தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். "கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்ற அருமையான சொற்றொடர் கூறும் கருத்து, அவர் கவனத்தில் படவில்லை என்றே தோன்றுகிறது. தன் உள்ளமும் உடலும் வாடுவதை தன் இளம் வயதின் காரணமாக அவர் உணரவில்லை.

கட்சியில் சேர்ந்து நிறையச் சம்பாதித்து என்றும் சுகமுடன் வாழ வேண்டும் என்று நினைத்து பல இளைஞர்களும் காணாமல் போன கதை இங்கு நிறைய உண்டு.

என்றும் சுகமுடன் வாழ நம் முன்னோர் கடைப்பிடித்த ஏழு கட்டளைகளை உங்கள் மகன் மட்டுமல்ல, இளைஞர் சமுதாயமே உணர்ந்து கொண்டால், தனக்கு மட்டுமல்ல, பிறருக்கும் சுகத்தையும்தன்னால் பெற்றுத் தர முடியும் என்ற நல்லதொருபாதையைத் தேர்ந்தெடுப்பர்.

அந்த ஏழு கட்டளைகள்:

1.காலோஅநுகூல: பருவ காலங்களுக்குத் தகுந்தாற்போல வாழ்க்கைமுறையை அமைத்துக் கொள்ளுதல். மேலும் செரிமானம், செரிமானமின்மை ஆகியவற்றை நன்குணர்ந்து உணவை ஏற்பதும், தவிர்ப்பதுமாகிய நிலைகளைத் தேர்ந்தெடுத்தல்.

2.விஷயா மனோஞா: தன் மனதிற்குப் பிடித்த விஷயங்களில் அவற்றின் நன்மை - தீமை ஆகியவற்றின் பாகுபாடுகளை அறிந்த பின் ஈடுபடுதல். நல்லதையே தேர்ந்தெடுத்தல்.

3.தர்ம்யா: க்ரியா: செய்யக் கூடிய எந்தச் செயலும் தர்மத்தை ஒட்டியே இருக்கும்படி செய்தல்.

4.கர்ம ஸூகானுபந்தி: இம்மையிலும் மறுமையிலும் சுகத்தைத் தரும் செயல்களையேசெய்தல்.

5.சத்வம் விதேயம்: சுதந்திரமான மனம், அதாவது செய்யக் கூடிய நல்ல செயல்கள் அனைத்திற்கும் தடையின்றிச் செய்யக் கூடிய அளவிற்கு மனதில் சுதந்திரம் அடைந்திருத்தல்.

6.விசதா ச புத்தி: நிர்மலமான புத்தி. செயல்கள் அனைத்தும் தூய்மையானதாக இருத்தல்.

7.தீர: நற்செயல்களை மட்டுமே செய்வது என்ற விஷயத்தில் உறுதியுடனிருத்தல்.

இந்த ஏழு கட்டளைகளையும் உறுதியாக ஏற்று அதன் பின் கட்சிப் பணி, தேர்தல் பிரசாரம் என்று இளைஞர்கள் செய்தால், அது தன் வளர்ச்சியுடன் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் உதவிடும். ஆனால் இவற்றைச் சொல்வதற்கும், செய்வதற்கும் யார் இருக்கிறார்கள்?

தன் உடல் வலுவையும் மனதில் எழும் பற்பல சிந்தனைகளையும் ஒழுங்காக அமைத்துக் கொள்வதற்கு அவர் கீழ்காணும் சில ஆயுர்வேத முறைகளைப் பின்பற்றலாம்.

புதன், சனிக்கிழமைகளிலாவது உடலுக்கு வெதுவெதுப்பாக நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது. இதற்காகச் சிறிது நேரம் செலவிட வேண்டியது மிக அவசியம்.

முடிந்தவரை நல்ல தரமான உணவு வகைகளை மட்டுமே சாப்பிடுவது. இரவு நேரத்தில் அவசியம் வீட்டில் தங்கும்படி செய்து கொள்ளுதல். வீட்டுக்கு வந்தவுடன் குளித்துவிட்டு அம்மா சமைத்த உணவை மட்டுமே சாப்பிடுவது, நேரத்துக்கு படுத்துறங்குவது ஆகியவற்றில் கண்ணும் கருத்துமாய் இருப்பது. மதுபானம், புகைப்பழக்கம், தகாத வார்த்தைகள் பேசும் நபர்களை, நண்பனாக சேர்க்காதிருத்தல். அவர்களைத் தவிர்த்தல் போன்றவைநல்லது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com