அன்றில் பறவைகள்

வாங்கி வந்த காய்கறிகளுடன்,  பையை அப்படியே சமையல் அறையில் கொட்டினேன். 
அன்றில் பறவைகள்


வாங்கி வந்த காய்கறிகளுடன், பையை அப்படியே சமையல் அறையில் கொட்டினேன்.
""என்னடா பண்றே ?'' என்ற
அம்மாவிடம், ""இவ்வளவுதாம்மா வாங்கியிருக்கேன். இன்னிக்கு என்ன சமைக்கப் போறே... சொல்லு... நானும் ஏதாவது ஹெல்ப் பண்றேன்'' பெருமையாகச் சொன்னேன்.
அம்மாவும், குழந்தைக்கு இட்லி ஊட்டிக் கொண்டிருந்த என் மனைவி ஸ்ரீயும் ஓர் ஆச்சரியப் பார்வையைப் பரிமாறிக் கொண்டார்கள்.
"" என்னவோ நல்ல வாசனை வருது. என்னம்மா பண்றேன்னு அதுக்கு மட்டும்தான்... இந்த ரூமுக்குள்ளே வருவே இன்னிக்கு என்னபுதுசா?'' -இது அம்மா
""ஆமாம்மா... ஒரு வெந்நீர் கூடப் போடத் தெரியாது'' இது ஸ்ரீ...
""எனக்குத் தெரியாதா இவனைப் பத்தி. பொண்டாட்டி, பிள்ளைன்னு வந்ததுக்கு அப்புறமும், அப்படியே
இருக்கான்''
""ஸ்டாப்... ஸ்டாப்... இதான்... இதேதான், ஒரு வெந்நீர் கூடப் போடத் தெரியாதுன்னு ஆகிவிடக் கூடாதுல்ல''
""இல்ல... இல்ல... நான் எதுக்கு சொல்றேன்னாஇப்போ ஸ்ரீ கார் ஓட்டக் கத்துக்கலையா? கேட்டா, ஒரு அவசரம்னா, தெரியணுமேன்னு சொல்றா இதுவும் அப்படித்தான''
""அது சரி. இது என்ன இன்னிக்கு திடீர் ஞானோதயம்?''
""மார்க்கெட்டில ஏதாவது போதிமரம் இருந்திருக்கும்'' ஸ்ரீ கேலியாகச் சிரித்தாள்.
""ம்... கூட்டணியா ரெண்டு பேருக்கும் இப்படிச் சேர்ந்த மாதிரி ஒரு வாரம் லீவ் கிடைச்சு ரொம்ப நாளைக்கப்புறம் ஊருக்கு வந்திருக்கோமே... ஃப்ரீயா இருக்கோம், செய்யலாமேன்னு சொன்னேன். பட் ஐ அம் சீரியஸ் பா... இனிமே எனக்குக் கொஞ்சம் கொஞ்சம் சொல்லிக் கொடுத்துடுங்க... அட்லீஸ்ட்... வெந்நீர் வைக்கவாவது.''
""ஒண்ணும் வேணாம். வெய்யில்ல போயிட்டு வந்திருக்கீங்க, சில்லுன்னு மோர் குடிச்சிட்டு, அப்பாவோட பேசிட்டு இருங்க. கோபமா இருக்கார். எதையோ காணோம்னு
அம்மாட்ட சத்தம் போட்டுட்டு இருந்தார். போய் கூல் பண்ணுங்க. அவருக்கும் மோர் எடுத்துட்டுப் போங்க'' என்று என்னை விரட்டாத குறையாகத் தள்ளினாள்.
""ஏய்... என்ன நீ கூல் ஆகுங்க, மோர் குடிங்கன்னு பேசிட்டு இருக்கே... விட்டா , விபூதி வைச்சு, கடவுளே, என் புருஷனுக்கு ஒண்ணும் ஆகாமப் பார்த்துக்கோப்பான்னு கேட்ப போல இருக்கே''
நான் முடிப்பதற்குள், ""நான் கூட நினைச்சேன்'' என்று அம்மாவும் ஆரம்பிக்க... நான் அலறியே விட்டேன்.
""இல்லடா நீ வரும்போதே அப்பா, சத்தம் போட்டுட்டு இருந்தார். ஆனா... நீ எப்பவும் கேட்கற மாதிரி ஏன்ப்பா, அம்மாவைத் திட்டிட்டே இருக்கீங்கன்னு அவர்கிட்டே சண்டை போடாம... பேசாம வந்தே. இப்போ கிச்சன்ல வந்து புதுசா கலாட்டா பண்ணிட்டு இருக்கே... அதான் இவனுக்கு என்ன ஆச்சுன்னு யோசிச்சேன்''
""ச்... ஒண்ணும் இல்லைம்மா ஒரு மனுசன் நல்லது பண்ணலாம்னா வீட்டிலயே எவ்வளவு எதிர்ப்பு? விடுங்க''
சலித்தபடி, ஸ்ரீ தந்த மோரை எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன்.
அம்மாவைத் திட்டிக் களைத்து விட்ட அப்பா, கோப முகத்துடன், டி.வி யில் ஏதோ நியூஸ் சானல் பார்த்துக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்தில் கூல் ஆகி விடுவார் என்றாலும், நான் அவரிடமும், ஒரு மோர் டம்ளரை நீட்டி விட்டு, எதுவும் பேசாமல் ரூமுக்குப் போய் விட்டேன்.
என்ன சொன்னாள் ஸ்ரீ... ம்... போதிமரம் ஆமாம் போதிமரம்தான், ஒன்றல்ல... இரண்டு ... வாசு சார், ராஜி மாமி!!
""உனக்குப் பிடிச்சதா ஏதாவது செய்றேன். நீயே பார்த்து காய் வாங்கிட்டு வா'' என்று அம்மா சொன்னதும், ரொம்ப நாளாயிற்றே, நம்ம ஊர் மார்க்கெட் போய்... என்று ஆசையாய்க் கிளம்பி விட்டேன்.
மார்க்கெட் போகும் வழியில்தான் பெருமாள் கோயில். ஸ்வாமியை நிதானமாகப் பார்த்து, பிரகாரம் சுற்றி எத்தனையோ வருடம் ஆயிற்று.
வரும்போதெல்லாம் கோபுர தரிசனம்தான். இன்று நேரம் என் கையில்... நிதானமாக வீட்டுக்குப் போனால் போதும்... உள்ளே போனால் என்ன? இப்படி முடிவு செய்து, கோயில் வாசல் அருகே போகும்போதுதான் அவரைப் பார்த்தேன். வாசு சார்.
அவர் மாதிரி இருந்தது. ஆனால் அவர் இத்தனை மெலிவாய் இருக்க மாட்டாரே என்று நான் நினைக்கும் போதே அவர், ஒரு காலை லாகவமாகத் தூக்கி வேட்டியை மடித்துக் கட்டினார். அது அவர் ஸ்டைல்தான். பிளஸ்டூவில் அவரிடம்தான் மேத்ஸ் டியூஷன் படித்தேன்.
எத்தனை வருஷமாச்சு? நான் வேலைக்குப் போகும் வரை கூட , அவர் வேலையிலிருந்து ரிடயர் ஆன பிறகும் கொஞ்ச நாள் ஊரில்தான் இருந்தார்.
அதன்பின், சொந்த ஊருக்குப் போய் விட்டதாய் அம்மா சொன்னாள். நடை, உடை எல்லாம் அவர் போல இல்லை. சாயல் மட்டுமே தெரிந்தது.
எதுவானாலும் சரி, செருப்பை மாட்டியபடி கிளம்பிக் கொண்டு இருந்த அவரைப் பிடித்து விட வேண்டும் என்று அவசரமாய் அவர் அருகே ஓடி,
""சார்'' என்றேன்.
சடக்கென நிமிர்ந்து என்னைப் பார்த்த அந்தக்
கண்களும், முகமும்!
எதிர்பாராத நேரத்தில் , பெரிய அலை ஒன்று படாரென முகத்தில் அடித்தது போல் இருந்தது எனக்கு. ஏதோ பெரிய வியாதியில் விழுந்து எழுந்தவர் போல் இருந்தார்.
""சார்.. என்ன ஆச்சு?'' பதறியபடி நான் கேட்க,
அந்த ஒற்றைக் கேள்வியில் உடைந்து போனவராய், என் கைகளைப் பிடித்துக் கொண்டு, ""சந்துரு, என் ஹேமூ என்னை விட்டுட்டுப் போயிட்டாடா உனக்குத் தெரியுமா? கேன்சராம். அதுக்குத் தெரியலை... அவ இல்லாம, என்னால ஒரு நாள் கூட நகர்த்த முடியாதுன்னு இதோ இவனுக்கும் தெரியலை'' என்று கோபுரத்தைக் காட்டினார். ""அதான் என்னை எப்போ அவகிட்டே சேர்க்கப் போறேன்னு தினம் வந்து கேட்டுட்டுப் போறேன்'' கண்ணீர் வழிய அவர் சொல்ல...
ஐயோ ஹேமா மாமி இல்லையா இது நிஜமா? எனக்குத் தெரிந்து எத்தனையோ பேர், கேன்சர் வந்து, முழுக்கக் குணமாகி, கண் முன்னே நடமாடிக் கொண்டிருக்கிறார்களே. இவருக்கு ஏன் இப்படி ஆக வேண்டும்? மாமி இல்லாமல் சாரை என்னாலேயே நினைக்க முடியவில்லை. எப்படி இருப்பார் சார்? என் கைகளைப் பிடித்துக் கொண்டு இன்னமும் அழுது கொண்டிருந்த அவர் வேட்டி பழுப்பாய் இருந்தது. முடி கொட்டிப் போய் பாதி வழுக்கையாய் இருந்தார். நிறைய நரை முடி. தொள தொள வென ஒரு சட்டை. நெற்றியில் சந்தனம் இல்லை. எல்லாவற்றையும் விட என்னைப் பாதித்தது, அவர் கண்களும், அந்தக் குரலும்தான். அந்தக் கண்களின் ஒளி குறைந்திருந்தது. குரலில் அந்த மென்மையும், கம்பீரமும் இல்லை.
முதுமையில், மனைவியின் மறைவு, ஒரு மனிதனை அவன் அடையாளமே காணாமல் போகுமளவு மாற்றி விடுமா?
சாட்சியாய் வாசு சார் நிற்கையில் என்னால் எதுவுமே பேச முடியவில்லை.
""நீங்க ஊரில இருக்கறதாத்தான் அம்மா சொன்னாங்க. இங்கே எப்போ வந்தீங்க?''
""அவளுக்குக்காகத்தான் ஊரோட போனேன். அவளுக்கப்புறம், அங்கே பிடிக்கலை. வந்துட்டேன். சீக்கிரம் அவகிட்டே போயிடணும்''
நான் பதறிப் போய், ""சார், ஏன் இப்படி விரக்தியாப் பேசறீங்க? எவ்வளவு பேருக்கு நீங்க நல்ல வாழ்க்கை தந்திருக்கீங்க? உங்களைப் போல மேத்ஸ் சொல்லிக் கொடுக்க இப்போல்லாம் யாருமே இல்ல சார். ஏன் மறுபடி நீங்க அதை ஆரம்பிக்கக் கூடாது? எத்தனையோ ஏழைக் குழந்தைகளுக்கு நீங்க சொல்லித் தரலாமே. உங்களுக்குப் பெரிய ஆறுதலா இருக்கும். உங்க படிப்பு பெரிய பொக்கிஷமா உங்ககிட்டே இருக்கே. எல்லாருக்கும் தரலாமே? என்ற நான் தொடர்ந்து,
""இது பெரிய இழப்புதான். ஆனா... நீங்க நினைச்சா இதிலேர்ந்து நிச்சயம் வெளில வரலாம். ப்ளீஸ் சார். இது மாதிரி உங்களைப் பார்க்க முடியல. ஹேமா மாமி கூட இப்படிதான் நினைச்சிட்டு இருப்பாங்க.''
அவர் மெல்ல சிரித்துக் கொண்டார்.
""டேய், அப்போ என் ஹேமூ என்னோட இருந்தாடா... என்னோட ஒவ்வொரு அடியும், அசைவும் அவளால, அவளுக்குன்னுதான் இருந்தது. அந்தத் தெம்பிலதான் நான் நடமாடிட்டு, பாடம் எடுத்துட்டு, ஆஃபீஸ் போயிட்டு இருந்தேன். என்னோட எல்லாத்துக்கும் அவதான் மெயின் ஸ்விட்ச். அது ஆஃப் ஆனதும், எல்லாம் போச்சு. தாங்க முடியலைடா... சந்துரு, ஒரு வெந்நீர் வைக்கக் கூட தெரியாதுடா. சொல்லித் தராமயே அவ என்னை விட்டுட்டுப் போயிட்டாடா... ரொம்பக் கஷ்டமா இருக்கு சந்துரு''
என்றார் முகத்தை மூடிக் கொண்டுவாசு சார் அழ, நான் கலங்கி விட்டேன். ""சார்... சார்... ப்ளீஸ்... வேண்டாம் சார்... அழாதீங்க. வீட்டுக்கு வாங்க சார்'' என்றேன்.
சட்டென சமாளித்துக் கொண்டவர். ""இன்னொரு நாள் வரேன். நீ பெருமாளைப் பார்த்துட்டுப் போ'' என்று சொல்லிக் கொண்டே போய் விட்டார்.
நான் இன்று இப்படி ஒரு நல்ல நிலையில் இருக்க, விதையிட்ட, ஒரு நல்ல மனிதனை நான் இப்படியா பார்க்க வேண்டும்... கடவுளே...
அவரது ஒவ்வோர் அணுவிலும், மனைவியின் இழப்பு தெரிந்தது. அந்த வீடு, அதற்கென ஒரு வாசனை, மாமியின் கைமணம்.
நிச்சயம் பெரிய வேதனைதான். யாராலும் தாங்க முடியாது. அது ஏன் இவருக்கு வந்தது?
ஆனால் அவர் அதிலிருந்து வெளியே வரக்கொஞ்சம் கூட விரும்பவில்லை, முயலவும் இல்லை..
விரக்தியின் விளிம்பில் இருந்தார்.
முழுக்க, முழுக்க அவர், மனைவியைச் சார்ந்தே இருந்திருக்கிறார். அவர் உலகமே மாமியைச் சுற்றி இருந்திருக்கிறது. அதனால், மாமி இல்லாத வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்கு வந்து விட்டார். கோயிலுக்குள் போக மனமில்லாமல் மார்க்கெட்டில் என்னவோ காய் எப்படியோ வாங்கி விட்டு வரும் வழியெல்லாம், வாசு சார், ஹேமா மாமியின் நினைவுகள்தான்... என்னைச் சுற்றி...
எப்படியாவது மெரிட்டில் பி.இ. ஸீட் வாங்கி விட வேண்டும் என்ற ஒன்றையே தாரக மந்திரம் போல் பற்றிக் கொண்டிருந்த , எனக்கும் அப்பாவுக்கும், பொக்கிஷமாய்க் கிடைத்தார், வாசு சார்.
""வாசு ஏதோ ஆடிட் ஆஃபீஸில் வேலை பார்க்கிறார். கணக்கில் புலி. சில பசங்களுக்குச் சொல்லிக் கொடுத்து, எல்லாரும் மெரிட்டில ஸீட் வாங்கியிருக்காங்க. அவரிடம் படித்தால், பி.இ. சீட் நிச்சயம் , ஆனா, சேர்த்துக்க மாட்டார். ரொம்ப கண்டிப்புன்னு பசங்க போகமாட்டாங்க . கேட்டுப் பாருங்க,'' என்று அப்பாவின் நண்பர் யாரோ சொல்ல, அப்பாவுடன், முதல் முதலாய் வாசு சார் வீட்டுக்குப் போனேன்.
அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. மாலை. அவர் மனைவிதான் வந்து கதவைத் திறந்தார்கள். வாசு சார் வீட்டில் நான் முதலில் பார்த்தது ஹேமா மாமியைத்தான்.
""அந்த அம்மா முகம் அத்தனை அம்சமா, லக்ஷ்மி கடாட்சமா இருக்கும். கோயில்ல அடிக்கடி பார்ப்பேன். குழந்தை இல்ல. பாவம்...''
வாசு சார் வீட்டுக்குப் போவதாய் அப்பா சொன்னதும், அம்மா இப்படித்தான் சொன்னாள். எனக்கு அவர் மனைவியைப் பார்த்ததும், அம்மா சொன்னதில், "லக்ஷ்மி கடாட்சம்' மட்டும் நினைவுக்கு வந்தது.
ஒரு சின்ன சிரிப்புடன், ""உட்காருங்க, சாரை வரச் சொல்றேன்''என்று சொல்லி விட்டுப் போக, எனக்கு, இப்போது "சார் ஒத்துக் கொள்ளணுமே' என்பது மட்டுமே மனதில் இருந்தது.
பூஜை அறையில் "ஓம்' மெல்லியதாக ஒலித்துக் கொண்டிருக்க, வீடு முழுக்க, சந்தன பத்தியின் வாசனை. வீடே ஒரு கோயில் போல இருந்தது.
""எவ்வளவு நீட்டா இருக்கு பார்த்தியா வீடு''
அப்பா சொன்ன தொனியில், நம்ம வீடும் இருக்கே என்ற எரிச்சல் தெரிந்தது.
""வாங்க'' வாசு சார்.
நல்ல உயரம். சுருண்ட முடி... பளீர் வெள்ளையில் வேட்டி... நெற்றியில் சந்தனம்... என்னவோ பெருமாளையே பார்ப்பதுபோல் நான் எழுந்து நின்றேன்.
அதிசயத்திலும் அதிசயமாக எதுவுமே கேட்காமல் என்னை டியூஷனுக்கு வரச் சொல்லிவிட்டார். எந்த ஸ்கூல் என்ற ஒரே கேள்விதான் அவர் என்னைக் கேட்டது.
""காலைலே சரியா அஞ்சரைக்கு வந்துடணும். ஒருநிமிஷம் லேட்டானாலும், வர வேண்டா'' என்ற ஒரே கண்டிஷன் தான் அவர் சொன்னது.
அப்பாவுக்கு நம்பவே முடியவில்லை. ""என்னவோ அதிர்ஷ்டம்தான்டா உனக்கு'' என்று சொல்லிக் கொண்டே வந்தார்.
வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளி அவர் வீடு. மழையோ, பனியோ, சைக்கிளை மிதித்துக் கொண்டு சரியாக அஞ்சரைக்கு அவர் வீட்டில் இருப்பேன்.
""வாடா'' என்று ஹேமா மாமிதான் கதவைத்திறப்பார். ""என்னவோ சொக்குப் பொடி போட்டுட்டேடா... யாரையும், இப்படி அவர் எதுவுமே கேட்காம எடுத்ததே இல்லை தெரியுமா?''ன்னு, சொல்லும் ஹேமா மாமியை எனக்கும் பிடிக்கும். அதை விட அவர் போடும் காஃபி.
நான் உள்ளே நுழையும் போதே காஃபி, சாமிக்கு சாத்திய பூ, சந்தனம், கற்பூரம், பத்தி என ஒரு கதம்ப வாசனையில் வீடே மணக்கும்.
அநேகமாக சார், செடிக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருப்பார். நான் உள்ளே போனதும், சாருக்கு காஃபி வரும்.
அவருக்கென ஒரு ஸ்டூல், நாற்காலி, அந்த காஃபி டம்ளர், டபரா என எல்லாமே , எப்போதும் பளபளவெனப் புதிதுபோல் இருக்கும்.
தங்க வளையல்கள், விரலில் நெளி மோதிரத்துடன், மாமி காஃபியை பாந்தமாய் கொடுப்பதும், சார் வாங்கிக் கொள்வதும், பார்க்க ஓர் ஓவியம் போல் இருக்கும்.
""அவனுக்கும் ஒரு அரை டம்ளர் குடு. தூங்கி வழியறான் பாரு'' என்று சார் சொல்லி முடிக்கும் முன்னாலேயே மாமி காஃபியை நீட்டி விடுவார். அப்போதுதான் வீட்டில் குடித்து விட்டு வந்தாலும், அந்த இரண்டாவது காஃபியின் சுவை, இன்று வரை என் நாக்கில் உள்ளது. அது ஹேமா மாமியின் கை மணமோ என்னவோ?
சில சமயம் எனக்கு, டெஸ்ட் வைத்து விட்டு, வீட்டுக்குள்ளேயே நடப்பார்.
அப்போதுதான் அவர் ஒரு காலைத் தூக்கி வேட்டியை மடித்துக் கட்டும் அழகைப் பார்த்திருக்கிறேன். சில சமயம் ஸ்ரீ என்னிடம் சொல்லுவாள், "வேட்டி மடித்துக் கட்டறதே ஒரு ஸ்டைலா இருக்கே'ன்னு. சாரோட பாதிப்பாக் கூட இருக்கலாம்.
அதன் பின் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்து, மெரிட்டில் பி. இ. சீட் கிடைத்ததும், முதலில் அவரிடம்தான் ஓடினேன்.
ஹேமா மாமி பால் பாயசம் பண்ணித் தந்தாள்.
அப்புறம், படிப்பு, வேலை என்று வாழ்க்கை, சின்ன சின்ன ஆசைகள், ரசனைகள் , வண்ணங்கள் இல்லாமல், ஒரே மாதிரி , யந்திரம் போல் ஓடியதில், ஒரு இனிய வரவாய்... ஸ்ரீ.
திருமணத்துக்கு அழைக்க என்று, அவர் வீட்டுக்குப் போனால், அவர் அப்போதே ஊரோடு போய் விட்டார் என்றார்கள், பக்கத்தில் இருந்தவர்கள்.
ஏமாற்றத்துடன் திரும்பினேன். அதுதான் எனக்கு வாசு சாரைப் பற்றிய கடைசி நினைவாய் இருந்தது. இன்று அவரை மறுபடி பார்க்கும் வரை அப்படியே இருந்திருக்கலாமோ என்றிருந்தது இப்போது..
""வாடா, சாரோட செல்லம்'' என்று மாமி என்னை அவ்வப்போது வம்பிழுப்பது... காஃபி... அந்த வீட்டின் சுத்தம்... கலவையான சுகந்த வாசனை... சார், ""ஹேமூ'' என்று மெல்லக் கூப்பிடுவது, ( அதற்கே மாமி அடுத்த நிமிடம் வந்து விடுவார்) ஒவ்வொன்றாய்க் கோர்த்த சங்கிலி போல், நினைவுகள் தொடர, வீட்டுக்கு நடந்து கொண்டிருந்தேன்.
வழியில், அந்தப் பச்சை கேட்டைப் பார்த்ததும், ஒரு நிமிடம் நின்று விட்டேன்.
பாவம் ராஜி மாமி... ரொம்ப நாளாச்சு நான் அவளைப் பார்த்து... ஆனால், இப்போதிருக்கும் மனநிலையில் என்னால் நிச்சயம் முடியாது என்று படவே, கொஞ்சம் வேகமாகவே, அந்த வீட்டைத் தாண்டினேன். இன்றும், அம்மா சொன்னதுபோல், ஏதோ புரியாத பாஷையில், வீட்டின் உள்ளே கேசட் ஓடிக் கொண்டிருந்த சத்தம் கேட்டது.
வாசு சாரைப் போலவே...
ராஜி மாமியும் , வயதான காலத்தில், துணை கட்டாயம் வேண்டும் என்கிற நேரத்தில் துணையை இழந்து நிற்பவள்.
அப்பா அந்த இடத்தில் வீடு வாங்கும் போது, மாமா ரிடையர் ஆகி அங்கே ஏற்கெனவே வீடு வாங்கி செட்டில் ஆகியிருந்ததால், அப்பாவுக்கு எல்லாவற்றுக்கும் கைட் பண்ணியதில், அம்மாவும், ராஜி மாமியும் வயது வித்தியாசம் பாராமல், நெருங்கி விட்டார்கள்.
அவர்கள் வீட்டில் கல்யாணம், வளைகாப்பு, குழந்தை பிறப்பு எனத் தொடர்ந்த அத்தனை விழாக்களிலும் அம்மா முன்னால் நின்றாள். அதேபோல் திடீரென மாமா ஹார்ட் அட்டாக்கில் போனதும், அம்மா, அப்பா, ஏன் எங்கள் வீடே மறந்து மாமியுடன் இருந்தோம்.
ஊருக்கு வரும்போதெல்லாம் ராஜி மாமியைப் பார்க்காமல் இருக்க மாட்டேன். ஆனாலும், மூக்குத்தி, குங்குமம் இல்லாத, மாமியைப் பார்க்கப் பிடிக்காமல், சில சமயம், தவிர்த்தும் விடுவேன். அம்மா அடிக்கடி போவாள்.
ராஜி மாமியைப் பார்த்து விட்டு ஒருநாள் அம்மா சொன்னதை நினைத்துப் பார்த்தேன்.
""மாமி வீட்டுக்குப் போயிருந்தேன் டா. அவங்க பின்னாடி இருந்தாங்க. ஒண்ணுமே புரியாம ஏதோ பாட்டு,
ஃபாஸ்ட் ஃபார்வேர்ட்டில "கீங்க் கீங்க்'ன்னு ஒரே சத்தத்தில ஓடிட்டு இருந்தது. டேப் ரிப்பேர். நிறுத்தலாம்னு போனா, மாமி கத்தறா... நிறுத்தாதே... அது பாட்டுக்கு ஓடட்டும். எனக்கு அந்த சத்தம் வேணும்... சத்தமே இல்லைன்னா, பைத்தியம் பிடிக்கிறாப்பில இருக்குடி. மாமா இருந்த வரையில என்னைத் திட்டிட்டேதான் இருப்பார். காலைல எழுந்ததும், ஏதாவது பாட்டைப் போட்டு விடுவார்.
அவர் போனதுக்கப்புறம், பாட்டும் இல்லாம, அவர் சத்தமும் இல்லாம, அமைதியா இருக்கறதே பயமா இருக்கு... பெரிய டேப்பையும், டி.வியையும், ராகவன் எடுத்துட்டுப் போயிட்டான். இது கொஞ்சம் ரிப்பேரான டேப் தான். ஆனா... ஏதோ சத்தம்னு ஒண்ணு வருது.
யாரோ கூட இருக்கற மாதிரி கொஞ்சம் தைரியமா இருக்கு. அவர் இருக்கும்போது எப்போப் பார்த்தாலும் என்ன பாட்டு... ஒரே சத்தமா இருக்கும். கொஞ்ச நேரம் அமைதியா இருக்காதான்னு நினைப்பேன். இப்போ யாராவது பேச மாட்டாங்களான்னு இருக்கு.
அடிச்சாலும் புடிச்சாலும், எனக்குன்னு ஒருத்தர் இருந்தார். அவர்கிட்டே எல்லாத்தையும் சொல்லுவேன். இப்போ யாருக்கும் , எதுக்கும் நேரமே இல்லை.
மனசில இருக்கறதை சொல்றதுக்குக் கூட யாரும் இல்லை. இது ஏதோ ஒரு ஆள் கூட இருக்கற மாதிரி கத்திட்டுப் போகட்டுமே. மாமா போனதுமே அவன் அங்கே என்னோட வந்து இருன்னுதான் சொன்னான். எனக்குத் தான் அவர் இருந்த இந்த இடத்தை விட்டுப் போக முடியல. இந்த ஆன்மிக டூர் எல்லாம் போயிட்டு வாயேன்.தெரிஞ்சவங்ககூட அனுப்பறேன்,உனக்குத் தான் கோயில்னா பிடிக்குமேன்னு சொல்றான். உனக்கே தெரியும், நான் மாமா இல்லாம எங்கேயும் போக மாட்டேன்னு. இங்க பக்கத்தில கோயிலுக்குக் கூட ரெண்டு பேரும் சேர்ந்துதான் போவோம். அவர் இல்லாம நான் வாக்கிங் கூடப் போறதில்ல. என்னவோ போல இருக்கு, அவரோட நடந்த ரோடில, நான் மட்டும் தனியாப் போறதுக்கு''
""மாமி இப்படி சொன்னதும், என்னால எதுவுமே பேசமுடியல. கொஞ்ச நேரம் இருந்துட்டு வந்துட்டேன். சத்தம்தான் எனக்குத் துணைன்னு சொல்றவளை என்னால புரிஞ்சுக்க முடியலை. அவளுக்கு ஏதோ ஆகி விட்டதோன்னு நினைச்சேன்'' அம்மா கவலையுடன் மாமி பற்றிச் சொன்னதை நினத்துக் கொண்டே வீட்டுக்கு நடந்தேன்.
எனக்குப் புரிந்தது. மாமா விட்டுச் சென்ற வெற்றிடத்தை வெறும் சத்தத்தால் நிரப்ப முடியுமா என்று பார்க்கிறாள்... ராஜி மாமி.
வாசு சாருக்கோ... ஹேமா மாமியின் இடத்தை எதை வைத்தும் நிரப்ப முடியாது... என்கிற விரக்தியின் விளிம்பில் வாழ்க்கையே போதும் என்ற வெறுப்பில் தன் அடையாளத்தைத் தொலைத்துப் பரிதாபமாக நிற்கிறார்.
வாழ்க்கைப் பயணத்தில், கூடவே வந்த இணை ஒன்று, பாதியிலேயே, அதுவும், மிகவும் தேவைப்படும் வயதான காலத்தில் பிரிந்து விடுவதைப் போல கொடுமை வேறு எதுவும் இல்லை என எனக்குப்பட்டது.
நாளை எனக்கும் இதுதானே என்கிற பயமும், நம்ம வீட்டிலும் இது போல் நடக்குமோ என்ற கவலையும் குப்பென, மனதில் பற்றிக் கொண்டன. வியர்த்து வடிந்த படி உள்ளே நுழையும் போதே, அப்பா கத்துவது கேட்டது.
""இந்த வீட்டில வைச்சது, வைச்சபடி இருக்காதே... நாலு நாளாத் தேடிட்டு இருக்கேன், கண்ணாடிக் கூடு... எங்கே போச்சுன்னே தெரியலை. யாருக்காவது கவலை இருக்கா''
அம்மாவைத்தான் திட்டிக் கொண்டிருந்தார். அம்மாவைத் திட்டினால், நான் அவரிடம் கத்துவேன் என்பது வழக்கம் என்பதால், என்னைப் பார்த்ததும் நிறுத்தி விட்டார். ஆனால், எனக்கு ஏனோ எதுவும் பேசத் தோன்றவில்லை.
""அப்பா சத்தம் கேட்காம என்னவோ போல் இருக்குடா சந்துரு'' என அம்மா சொல்வது போலவும், எங்கள் வீட்டிலும், ஏதோ புரியாத சத்தத்துடன் கேசட் ஓடுவது போலவும், நான் யாரிடமோ "ஐயோ எனக்கு வெந்நீர் கூட வைக்கத் தெரியாதே' என்று புலம்புவது போலவும் பயங்கரமான நினைவுகள் துரத்த, நான், வீட்டினுள் வேகமாய் நடந்து, இதுவரையில் நுழைந்திராத சமையலறைக்குள் சென்று வாங்கி வந்த காய்கறிகளுடன் பையை அப்படியே கொட்டினேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com