அதிக உடல் எடையா?  அதிக கவனம் தேவை!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளது மான்டிஃபியோர் மெடிகல் சென்டர் மருத்துவமனை.
அதிக உடல் எடையா?  அதிக கவனம் தேவை!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளது மான்டிஃபியோர் மெடிகல் சென்டர் மருத்துவமனை. கடந்த மார்ச் 10 - ஆம் தேதி முதல் மே 1 - ஆம் தேதி வரை இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கரோனா நோயாளிகளைப் பற்றி ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.

அனுமதிக்கப்பட்ட 3,530 நோயாளிகளில் 1,579 பேர் பெண்கள். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர்களில் அதிக உடல் எடை உள்ளவர்களும் இருந்தார்கள். சிகிச்சை பலனின்றி இறந்து போனவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும்போது ஓர் அதிர்ச்சியான தகவல் காத்திருந்தது.
அதிக உடல் எடை கொண்ட பெண்களை விட, அதிக உடல் எடை கொண்ட ஆண்களே அதிக அளவில் இறந்து போயிருக்கிறர்கள்.
அதிக உடல் எடை கொண்டவர்களுக்குக் கரோனா தொற்று ஏற்படும்போது, அது அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள். அதிகமான மூச்சுத்திணறல் அவர்களுக்கு ஏற்படுகிறது. வென்டிலேட்டர் வசதி அவர்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது.
இந்தப் பிரச்னை அதிக உடல் எடை உள்ள ஆண், பெண் இருவருக்குமே பொதுவானது.
ஆனால் பெண்களை விட, ஆண்கள் அதிகம் மரணம் அடைவது ஏன் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இது குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் ஜேமிஹார்ட்மான், ""இதற்கு இன்னும் நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டியிருக்கிறது. வெறும் 3,503 நோயாளிகளை மட்டும் வைத்து ஆராய்ச்சி செய்து எந்த ஒரு முடிவுக்கும் வந்துவிட முடியாது'' என்கிறார்.
மிக அதிகமான உடல் எடை கொண்டவர்கள் பொதுவாகவே உடல் நலம் குறைந்தவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுடைய நோய் எதிர்ப்புத்
திறன் குறைவாகவே இருக்கிறது.
இப்படிப்பட்டவர்களை கரோனா தீநுண்மி மிக எளிதில் தொற்றிக் கொள்கிறது. சளி, ரத்தக் குழாய்களுக்குள் ரத்தம் உறைந்துபோதல், ரத்தக் குழாய்களில் வீக்கம், காய்ச்சல் ஆகியவை நோய் எதிர்ப்புத் திறனை அதிக அளவில் ஏற்படுத்த உடலைத் தூண்டுகின்றன. அது உடலின் உள்ளுருப்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் அனைத்தும் மிக அதிக எடை உள்ளவர்களிடம் உள்ளன.
கரோனா தொற்று ஏற்படும்போது, நுரையீரல்களில் அது பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிகப்படியான சளி உண்டாகிறது. நுரையீரல் சளியை வெளியேற்ற வேண்டும்.
அதிக உடல் எடை உள்ளவர்களின் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு, வயிற்றுக்கும் இதயம், நுரையீரல் ஆகியவற்றுக்கும் இடையே உள்ள திரையான உதரவிதானத்தை அழுத்துகிறது. அதாவது, இதயம், நுரையீரல் ஆகியவை இயல்பாக சுருங்கி விரிந்து செயல்பட போதிய இடம் இல்லாமல் குறைந்து விடுகிறது. இதனால் நுரையீரல்களுக்குள் புகுந்துவிட்ட கரோனா தீநுண்மியைச் சளி மூலம் வெளியேற்ற இயலாமல் நுரையீரல் தவிக்கிறது. மூச்சுவிடுதல் இயல்பாக இல்லாமல் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.
அதேபோன்று கொழுப்புத் திசுக்கள் வெளிப்படுத்தும் வேதிப் பொருள்கள், ரத்தக்குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ரத்தக் குழாய்களுக்குள் காயம் ஏற்படுகிறது. காயங்களிலிருந்து வெளிப்படும் ரத்தம் உறைந்து போகிறது. ரத்த ஓட்டத்தில் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் இதயத்துக்குத் தேவைப்படும் ரத்தத்தின் அளவு குறைந்து, இதயத்தின் செயல்பாடும் பாதிக்கப்படுகிறது.
அதிக உடல் எடை உள்ளவர்களின் உடலில் உள்ள கொழுப்புத் திசுக்கள் உடலின் எல்லா உறுப்புகளுக்குள்ளும் ஊடுருவிச் செல்கின்றன. நோய் எதிர்ப்பாற்றலை அதிகமாக்கும் ரத்த வெள்ளை அணுக்கள் எலும்பு மஜ்ஜையில் உருவாகின்றன. கொழுப்பு திசுக்கள் எலும்பு மஜ்ஜையில் ஊடுருவுவதால் ரத்த வெள்ளை அணுக்கள் தோன்றுவது பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்புத்திறனும் போதுமான அளவு ஏற்படுவதில்லை. எனவே அதிக உடல் எடை கரோனா தீநுண்மியை எதிர்த்துப் போராடுவதற்குத் தடையாக உள்ளது.
எனவே அதிக உடல் எடை உள்ளவர்கள் மிக அதிகக் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் கரோனா அதிக உடல் எடை உள்ளவர்களை எளிதில் தொற்றிக் கொள்ளும். ஏனெனில் நோய் எதிர்ப்புத்திறன் தேவையான அளவு அவர்களுக்கு இருப்பதில்லை.
தொற்று ஏற்பட்டுவிட்டால், அதை வெளியேற்றும் திறனும் அதிக உடல் எடை உள்ளவர்களுக்கு குறைவாக இருப்பதால் கரோனா அதிக உடல் எடை உள்ளவர்களை வென்றுவிடுகிறது.
உங்களுக்கு அதிக உடல் எடையா? அதிக கவனம் தேவை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com