கடல் கடந்து  

'திடுதிப்புனு  இப்படியா கணவரின்   முடிவு  நடக்கணும்? சொந்த நாட்டை  விட்டு,    வீட்டை  விட்டு, கடல் கடந்து   எங்கோ வந்த இடத்தில் போயா?' தேவகியால் ஜீரணிக்கவே முடியவில்லை. 
கடல் கடந்து  

'திடுதிப்புனு இப்படியா கணவரின் முடிவு நடக்கணும்? சொந்த நாட்டை விட்டு, வீட்டை விட்டு, கடல் கடந்து எங்கோ வந்த இடத்தில் போயா?' தேவகியால்ஜீரணிக்கவே முடியவில்லை.
"மகனும் மகளும் பல வருஷமாக அழைத்துக் கொண்டிருக்கிறார்களே...
இருவரும் ஒரே இடத்தில் வேறு இருக்கிறார்களே... நமக்கும் வயசாயிட்டே போறது... ஒரு முறை போயிட்டுத்தான் வரலாமே'ன்னு அமெரிக்கா வந்ததுதான் தப்பா? ஒரு தொந்தரவும் இல்லாத உடம்பில் பாதுகாப்பாக அத்தனை பரிசோதனைகளையும் செய்து கொண்டு... இன்ஷுரன்ஸ் எடுத்துக் கொண்டு, நிம்மதியாக... ஆயிற்று. அந்த ஊர் அரசு எங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆறு மாதங்களில் ஒரு மாதம் தான் பாக்கி.
ஊருக்கு வந்து இறங்கியதும் ஏர்போர்ட்டிலேயே மகள் மஞ்சு, "" அம்மா, அப்பா, எங்கள் வீடும் பக்கத்தில் தான் இருக்கிறது. நீங்கள் பாட்டுக்கு அண்ணா வீட்டிலேயே இருந்து கொண்டு அப்பப்போ தலைக்காட்டக் கூடாது. அண்ணா வீட்டில் ஒரு மாதம் எங்கள் வீட்டில் ஒரு மாதம் என்று இருக்கணும் சொல்லிட்டேன்'' என்று அன்புக் கட்டளை போட்டு விட்டாள். அதேபோல் நாங்களும் மாறி மாறி இருந்து கொண்டு ஊரெல்லாம் சுற்றிக் களித்து முடித்தாகிவிட்டது.
அடுத்த மாதம் ஊருக்குக் கிளம்பணும் என்ற நிலையில், இப்படியாகும் என்று நினைத்துக் கூடப் பார்த்திருப்போமா?
நேற்று முன்தினம்.
""தினேஷ் கண்ணா, திகட்டத் திகட்டத் தின்ற தித்திப்புபோல் மனசு நிறைஞ்சு வழியறது... இனி நாங்கள் ஊருக்குப் போய், இந்த இனிய நினைவுகளை வயிறு நிறைய வைக்கோல் தின்ற மாடுஅசை போடுவது
போல நாங்களும் எங்கள் ஆயுசு பரியந்தம் அசை போட்டுக் கொண்டிருப்போம்'' - அன்று மாலையுடன் தன் வாழ்வு முடிந்து விடும் என்று தெரியாமல், காலையில் ஆபிசுக்குக் கிளம்பிக் கொண்டிருந்த மகனை அவசரமாக நிறுத்தி வைத்து மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் சொன்னாரே...
திரும்பத் திரும்ப அந்த நினைவும் காட்சியும் கண்முன் வந்து வந்து வருத்தியது.
முந்தா நாள். இதே நேரம் அப்பாவும் தினேஷும் டின்னரை ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
""அம்மா சேவை பூவாட்டம் இருக்கே... எப்படி? நார்மலா, இவ்வளவு சாஃப்டா இருக்காதே?''
""இது ரெடிமேட் சேவை இல்லிங்க... நம்ப ட்ரெடீஷனல் மெத்தட்ல அரிசியை ஊற வெச்சு அரைச்சு அம்மா பண்ணிருக்காங்க. ஊரிலிருந்து சேவை உரல் கொண்டு வந்திருக்காங்க'' சொல்லிக்கொண்டே நந்தினி மாமனாருக்கு தேங்காய் பாலை பரிமாறினாள்.
""அப்படிச் சொல்லு... சூப்பர்... சூப்பர்'' என்று தினேஷ் வெரைட்டி சேவைகளை மறுபடியும் போட்டுக் கொண்டான்.
""தேங்காய்ப்பாலும் சேவையும் சூப்பர் காம்பினேஷன் தினேஷ். இந்த ஊர்லே ரெடிமேடா தேங்காய்ப் பால் கிடைக்கிறதே தேவகி... நாம ஊருக்குப் போகும்போது இங்கிருந்து வாங்கிக் கொண்டு போற அயிட்டம்ஸ் லிஸ்ட்ல நாலு டப்பா தேங்காய்ப் பாலும் சேர்த்துக்கோ'' ஆசையாய் சொல்லிக் கொண்டிருக்கும்போதே,
""தேவகி... மார்பை என்னம்மோ ரொம்ப வலிக்கிறதே'' என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு துள்ளினார்.
""அப்பா... என்னாச்சு'' பதறிப் போய் தினேஷ் அவரை தோளில் சாய்த்துக் கொள்ள, ஒரு நிமிடம் கூட இருக்காது, வியர்வை வெள்ளத்தில் துடித்து அப்படியே அடங்கிப் போனார்.
டைனிங் டேபிளிலிருந்து பதற்றமாய் குரல்கள் வரவே, ஹாலில் குழந்தைகளுக்கு கதை சொல்லிக் கொண்டிருந்த மஞ்சு பதைபதைத்து ஓடி வருவதற்குள் அப்பாவின் சரிதம் முடிந்து விட்டது. சேவை
ஸ்பெஷல் என்று நாத்தனார் குடும்பத்தை போன் செய்து வரவழைத்திருந்தாள் நந்தினி. அதனால் மஞ்சுவும் அங்கே இருந்தாள்.
பெரியவர்கள் கதறலைப் பார்த்து, குழந்தைகள் ஒன்றும் புரியாமல் தாங்களும் அழ தினேஷ் தான், அடுத்து செய்ய வேண்டியதை உணர்ந்தான். அப்பா சுந்தரத்திற்கு கூடப் பிறந்தவர்கள் யாரும் இல்லை.
இந்தியாவில் மாமாவுக்கு, தேவகியின் ஒரே அண்ணாவுக்கு போனில் விஷயத்தை சொன்னதும் ,""என்னப்பா இப்படி சொல்றே? நல்லா திடமாத்தானே இருந்தாரு. நீ அங்கே கஷ்டப் படாதே. உங்கப்பாவை இங்கே கொண்டு வந்துவிடுங்கள். முறைப்படி எல்லாம் செய்யலாம்'' என்று அவனுக்கு ஆதரவாகச் சொன்னார்.
தினேஷ் , ""அம்மா... மாமா இப்படி சொல்கிறாரேம்மா'' என்று அம்மாவிடம் கலந்து பேசினான்.
ஆனால் தேவகி அதற்கு ஒப்புக் கொள்ள வில்லை.
""தினேஷ் , உன் அப்பா மனதுக்குள் விரும்பியோ விரும்பாமலோ அவரது ஆன்மா இந்த மண்ணில் வந்து சங்கமமாயிருக்கு. கூட்டிலிருந்து கிளி பறந்து போன பின் கூட்டைத் தூக்கிண்டு ஏன் அலையணும். அப்பாவின் உடனடிச் சொந்தங்களான நாமெல்லோரும் இங்கே இருக்கிறோம். பிறகு ஏன் அங்கு இங்குன்னு அலைக்கழிக்கணும்? இந்த ஊரிலும் இது நடக்கத்தானே செய்யும்? இங்கு என்ன வழிமுறை என்பதை யாரிடமாவது விசாரித்து செய்யலாம்''
தினேஷின் நண்பர்கள், அந்த ஊர் கோயில் அர்ச்சகர் எல்லோருமே சொன்னார்கள். அந்த ஊர் வழக்கப்படி வீட்டில் எதுவுமே செய்யக் கூடாதாம். ஆஸ்பத்திரியில் உயிர் பிரிந்தால் கூட பாடியை வீட்டுக்கு எடுத்துச் செல்லக் கூடாதாம். நேரே ப்யூனரல் ஹெளஸ் என்ற இடத்திற்குதான் கொண்டு போக வேண்டுமாம். அங்கு வைத்து அவரவர்கள் சம்பிரதாயப்படி சம்ஸ்காரம் செய்ய வேண்டுமாம். அதன்படியே அங்கே போய் எல்லாம் செய்து சுந்தரம் என்ற தன் அன்பான கணவரை உருத் தெரியாமல் முடித்துவிட்டு வந்தாயிற்று.
தேவகி சத்தமில்லாமல் குலுங்கி குலுங்கி அழுதாள். தினேஷும் மஞ்சுவும் ஓடி வந்து அவள் பக்கத்தில் உட்கார்ந்தனர்.
""அம்மா, ப்ளீஸ்மா... நீ இப்படி அடிக்கடி உடைஞ்சு போனா நாங்க என்னம்மா பண்ணுவோம்? இனி எங்களுக்கு அப்பாவும் நீதானேம்மா'' அவர்களும் அழ, தேவகி தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்..
"பாவம் குழந்தைகள்... திடீரென்று ஏற்பட்ட இந்த நிலைகுலைவு... அவர்களின் பாசம் மிகுந்த தந்தையை இழந்து தவிக்கிறார்கள். தினேஷுக்கு அப்பான்னா உயிர்... அதிலும் இந்த ஊரிலிருந்து கொண்டு... என்ன செய்வது என்று புரியாமல் தெரியாமல் இயலாமையும் துக்கமும் வருத்தத் திணறுகிறார்கள். நான் தான் அவர்களுக்கு வழி காட்ட வேண்டும்..
""சாரிப்பா... உங்கப்பாவுக்கும் எனக்கும் எத்தனை வருடப் பிணைப்பு, பந்தம். தனியா பிரிச்சுக்க முடியாம திணறுகிறேன். மேற்கொண்டு நம் வழக்கப்படி 10 , 11,12 ,13 ஆகிய நான்கு நாட்களில் சில நியமங்களோடு காரியங்கள் செய்ய வேண்டும். அவற்றைப் பற்றி அந்த அர்ச்சகரிடம் கேட்கலாமா? அவர் நம் வீட்டுக்கு வருவாரா தினேஷ்?''
""கண்டிப்பாக வருவாரம்மா. அவரே சொல்லியிருக்கிறார். "மேற்கொண்டு செய்ய வேண்டியவற்றை நீங்கள் இந்த ஊரிலேயே செய்வதாக இருந்தால், என்னிடம் விவரங்கள் கேட்க வேண்டுமென்றால், கூப்பிடுங்கள் வருகிறேன்' என்று. நான் உடனே அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன்'' என்று தினேஷ் அவரை வரவழைத்தான்.
""அம்மா, நீங்கள் சொல்கிற அந்த நான்கு நாட்களும் நம்ம ஊர் சம்பிரதாயம் பற்றி எனக்கு நல்லாவே தெரியும். ரொம்பவே ஆசாரம், அனுஷ்டானம் கடைப்பிடிக்கவேண்டும். அது மாதிரி இங்கு செய்வது கடினம். 10 - ஆம் நாளன்று செய்ய வேண்டிய சில சடங்குகளை வீட்டினுள்ளே செய்யக் கூடாது. வெளியில் தான் செய்ய வேண்டும். ஆனால் இங்கு
அப்படி முடியாது. அதேபோல 11- ஆம் நாளன்று ஒருவர் மட்டும் ஸ்பெஷல். அவர் குளித்து சுத்தமாக மடியுடுத்தி வந்து தனக்குத் தேவையானதை தானே சமைத்து மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு தட்சணை பெற்று சென்று விடணும். அப்படி ஆள்கள் இங்கு கிடைக்க மாட்டார்கள். மேலும் பன்னிரண்டாம் நாளன்று செய்யவேண்டிய தானங்கள் செய்ய முடியாது. அதற்கு பதில் தட்சணை நிறையக் கொடுக்கணும். பொன் வைக்க வேண்டிய இடத்தில் பூ வைக்கணும் என்ற பழமொழியை, இங்கு பூ வைக்க வேண்டிய இடத்தில் கூட பொன் வைக்கணும் என்று மாத்திக்க வேண்டியதுதான். நம்ம ஊர்களில் இந்த மாதிரி அபர காரியங்கள் செய்வதற்கென்றே சில இடங்கள் இருக்கின்றன. இங்கு அதெல்லாம் கிடையாது. எதுவானாலும் வீட்டுக்குள் கதவைச் சாத்திக் கொண்டுதான்.
நீங்கள் சரி என்று சொன்னால் இங்கு உசிதப்படி செய்யலாம்'' அங்கு கடைப்பிடிக்க முடிந்த விவரங்களையும் யதார்த்த நிலைமையையும் விளக்கிச்
சொன்னார்.
தேவகியால் உடனடியாக அவருக்குப் பதில் சொல்ல முடியவில்லை. எழுந்து போய் கணவன் படத்தின் முன்பு நின்றவள் மனதில், வித்தியாசமாய் யோசனைகள் தோன்றின.
தினேஷ் அம்மா அருகில் வந்தான்.
""என்னம்மா ஒன்றும் சொல்லாமலே வந்துட்டே... பணம் நிறைய செலவாகும் என்று பார்க்கிறாயா?
அப்பாவுக்கு செய்வதற்கு கணக்கு பார்க்கலாமா?''
அழுது விடுவான் போல் வருத்தமும் கவலையும் விரவிக் கிடந்தது தினேஷ் குரலில் .
""நீ இப்பொழுது அவரிடம், ஊரில் இருக்கும் என் மாமாவைக் கேட்டு சொல்கிறேன் என்று சொல்லி அவரை அனுப்பி வை'' என்று தேவகி சொல்லவும், தினேஷும் அவரை அனுப்பி விட்டு வந்தான்.
அதற்குள் மஞ்சுவும் நந்தினியும் அங்கு வந்து உட்கார்ந்தனர்.
""தினேஷ்,அவர் சொல்வதுபோல் அந்த நான்கு நாட்கள் சம்பிரதாயங்களை செய்து தான் ஆகணும். ஆனால் இங்கு செய்வதில் எவ்வளவு கஷ்டங்கள் என்பதையும் தெளிவாகக் கூறி விட்டார். பொதுவாக இந்த மாதியான காரியங்களை அதற்குண்டான நியமங்கள் தவறாமலும் மன ஈடுபாட்டுடனும், மிகுந்த சிரத்தையுடனும் செய்ய வேண்டும். வெறும் டாலரில் ஓட்டும் சமாச்சாரமல்ல.
உங்கள் தாத்தா சாஸ்திரத்தில் இருப்பதாக ஒரு விஷயம் சொல்வார். எவன் ஒருவன் பெற்றோருக்குத் திதி கொடுக்க முடியாதபடி மிகுந்த வறுமையிலிருந்தாலும் அதற்காக மனம் மிகவும் வருந்தி, யாருமில்லாத இடத்துக்குச் சென்று தன் நிலையைச் சொல்லி வாய்விட்டு கதறி அழுதால், அவன் திதி செய்ததாக
அந்தப் பெற்றோர்கள் ஏற்றுக் கொள்வார்களாம். இங்கு முறைப்படி செய்ய முடியாமல் தேவையில்லாதவர்களிடம் வெறும் பணத்தை வாரி இறைப்பதை விட நம்ம ஊரில் எந்தவித வருமானமுமின்றி வறுமையில் நலிந்து வாடும் சிலர் இந்த மாதிரி வேலைகளுக்கென்றே காத்திருக்கின்றனர். அவர்களுக்கு கொடுத்தால், அவர்கள் வாழ்க்கைக்கு உபயோகமாக இருக்கும். அதற்காக இப்போது நாம் அங்கு போக முடியாது. ஆபீசில் நெருக்கடி நேரம்... குழந்தைகளுக்கு ஸ்கூல்... என்று உங்கள் நிலைமை எனக்கு நன்கு தெரியும். அதனால் நான் சொல்கிறேன்.
அந்த நான்கு நாட்களும் தினமும் நாம் எல்லாரும் குளித்துவிட்டு சிரத்தையோடு அப்பாவை மனதில் நினைத்துக் கொண்டு, மனப்பூர்வமாக மன்னிப்பும் கேட்டுக் கொண்டு அர்ச்சகர் தட்சணையாக
டாலரில் சொன்ன தொகையை த் தனியாக எடுத்து வைப்போம். அடுத்த மாதம் எல்லாருமே லீவுக்கு எங்களுடன் வருவதாக ஏற்கெனவே திட்டமிட்டு டிக்கெட்டெல்லாம் ரெடியாக இருக்கிறதல்லவா?அப்போது அந்தப் பணத்தை எடுத்துப்போய் அவர்களில் சிலரை நம் வீட்டுக்கு வரவழைத்து சாப்பாடு போட்டு துணிமணிகளும் கை நிறைய தட்சணையும் கொடுத்து திருப்தி செய்து அனுப்புவோம். தாத்தா சொன்னது போல் இந்த நேரத்தில் நமக்கு இந்த சிரத்தை தான் முக்கியம்''
கணவரை மனதில் இருத்தி ,""வேறு வழியின்றி நாங்கள் இப்போது செய்யப் போகும் மன ஆராதனத்தை நீங்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும்''- யாசிக்கும் பாவனையில் கைகளை விரித்துக்கொண்டு கண்மூடிப் பிரார்த்தித்த தேவகியின் கைகளில் வந்து விழுந்தது, கணவர் படத்திலிருந்த ரோஜாப்பூ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com