பாடம் கற்பிக்கும்  பள்ளிச் சுவர்கள்!

மாணவ-மாணவியரின் கல்வித்தரத்தை உயர்த்தி, தனித்திறமைகளை வெளிக் கொணர்ந்து அவர்களின் வாழ்க்கைக்கு நல்வழிகாட்டும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு, சமூகத்தில் பெரும் மதிப்பும் மிகுந்த மரியாதையும் கிடைத்து
பாடம் கற்பிக்கும்  பள்ளிச் சுவர்கள்!

மாணவ-மாணவியரின் கல்வித்தரத்தை உயர்த்தி, தனித்திறமைகளை வெளிக் கொணர்ந்து அவர்களின் வாழ்க்கைக்கு நல்வழிகாட்டும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு, சமூகத்தில் பெரும் மதிப்பும் மிகுந்த மரியாதையும் கிடைத்து விடுகிறது.

அந்த வரிசையில், தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ஒருவர் இடம் பிடித்துள்ளார். நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகிலுள்ள கோத்திரி மலை கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் ஸ்ரீதர். 5 வயதிலேயே இளம்பிள்ளை வாதத்தால், இரு கால்களும் பாதிக்கப்பட்ட இவர், தன்னம்பிக்கையோடு படித்து இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்து, கடந்த 2002 பிப்ரவரி2- இல், சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றியம் வேப்பிலைப்பட்டி ஊராட்சி முடியனுôர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை உதவி ஆசிரியராகப் பணியேற்றார்.

கடந்த 2018 ஜூன் 18-ஆம் தேதி பதவி உயர்வின் காரணமாக, காளியம்மன்புதுôர் தொடக்கப் பள்ளிக்கு தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டார். 3 மாணவர்கள் மட்டுமே படித்ததால் மூடும் நிலையில் இருந்த அந்த பள்ளிக்கு புதிதாக தலைமையாசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டார் ஸ்ரீதர்.

தனது மூன்று சக்கர வாகனத்தில் பள்ளியைச் சுற்றியுள்ள கிராமப்புற குடியிருப்புகளுக்கு வீடுவீடாகச் சென்று, பெற்றோர்களைச் சந்தித்து, "உங்களது குழந்தைகளை அரசுப்பள்ளிக்கு அனுப்புங்கள், தனியார் பள்ளிகளை விட தரமான கல்வியைக் கற்றுத் தருகிறோம்' என வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும், இவரால் எல்.கே.ஜி வகுப்பில் 3 மாணவர்கள், 1முதல் 5 -ஆம் வகுப்பு வரை 3 உட்பட 6 மாணவர்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.

பெற்றோர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், நவீன கணினி, எல்.இ.டி., தொலைக்காட்சி, பிரிண்டர், புரஜெக்டர், வெண்திரை மற்றும் கற்றல் கற்பித்தல் கருவிகளை தனது சொந்த செலவில் வாங்கி, பள்ளியில் வைத்து 6 மாணவர்களுக்கும் சிறப்பாக கல்வியைக் கற்றுத்தந்தார்.

ஸ்ரீதரின் செயல்பாட்டைக் கண்ட, சுற்றுப்புற கிராம மக்கள், தங்களது குழந்தைகளை காளியம்மன்புதுôர் அரசு தொடக்கப்பள்ளியில் சேர்ப்பதற்கு முன்வந்தனர். இதனையடுத்து, இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 53 ஆக உயர்ந்துள்ளது.

இவரது செயல்பாட்டைக் கண்ட பெற்றோர்கள், பொதுமக்கள், ஊராட்சி மன்ற நிர்வாகிகளும் பழுதடைந்து கிடந்த பள்ளியின் வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டனர்.

இது குறித்து தகவலறிந்த இப்பள்ளிக்கு அருகிலுள்ள முத்தம்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் ஒரு தனியார் பால் பண்ணை நிறுவனம், பழுதடைந்திருந்த பள்ளிக் கட்டடத்தைப் புதுப்பித்து, வண்ணம் தீட்டியதோடு, தரைத்தளம், மின் சாதனங்கள், குடிநீர் குழாய்கள், கழிவறைகளையும் புதுப்பித்துக் கொடுத்தது.

இதனையடுத்து, பள்ளிச்சுவர்களையும், பாடம் கற்பிக்கும் கருவியாக பயன்படுத்த வேண்டுமென கருதிய ஸ்ரீதர், பள்ளிச் சுவர்களில் முப்பரிமாண தோற்றத்தில், பாடங்களைச் சித்தரிக்கும் பல வண்ண படங்களைப் பொருத்தி, எளிய வகையில் கற்பித்தலில் புதுமையை புகுத்தியுள்ளார்.

இதுமட்டுமின்றி, பொதுமக்கள் தன்னார்வர்களின் ஒத்துழைப்போடு, பள்ளி வளாகம் முழுவதும் தேசிய தலைவர்களின் படங்கள் மட்டுமின்றி, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய அனைத்து பாடங்களையும் வண்ண ஓவியங்களாக தீட்டியுள்ளார்.

ஸ்ரீதரின் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய செயல்பாட்டிற்கு, தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை, மாநில அளவில் உயரிய விருதான "டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதினை' நிகழாண்டு வழங்கி கௌரவித்துள்ளது.

இதுகுறித்து ஸ்ரீதர் கூறியதாவது:

""3 மாணவர்கள் மட்டுமே படித்து வந்ததால் மூடும் நிலையில் இருந்த பள்ளியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென எண்ணினேன். எனது முயற்சிக்கு இப்பகுதி பொதுமக்களும், பெற்றோர்களும், கல்வித்துறை அலுவலர்களும், ஊராட்சி நிர்வாகத்தினரும் ஒத்துழைப்புக் கொடுத்தனர். இரு ஆண்டுகளாக, உதவி ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதால் இப்பள்ளியில் நான் ஒருவன் மட்டுமே பணியாற்றி வருகிறேன். பேருந்து வசதியில்லாத காளியம்மன்புதுôர் குக்கிராமத்து பள்ளி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு எல்.கே.ஜி முதல் 5- ஆம் வகுப்பு வரை தற்போது 53 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பழுதடைந்து கிடந்த பள்ளிக் கட்டடம், தற்போது பாடங்களைக் கற்பிக்கும் வகையில் பல வண்ணத்தில் பிரகாசிப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. கரோனா தொற்று பரவல் தருணத்திலும், சமூக ஊடகங்கள் வாயிலாக குழந்தைகளுக்குப் பாடங்களைக் கற்பித்தேன். தமிழக அரசு நல்லாசிரியர் விருதை எனக்கு வழங்கியது ஊக்கம் ஊட்டுவதாக இருக்கிறது. இதனால், மென்மேலும் கிராமப்புற குழந்தைகளின் கல்விக்காகப் பணியாற்ற வேண்டுமென்று, எனக்குள் நானேஉறுதியேற்றுக் கொண்டுள்ளேன்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com