ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மழைக்காலம்... உணவு... மருந்து!

மழை நாட்களில் ஏற்படும் மப்பும் மந்தாரமும் எனக்கு வயிற்றிலும் அதே நிலையை ஏற்படுத்தி பசி மந்தம் ஏற்படுகிறது. தசை வலியும் உள்ளது. இதை எப்படிச் சரிப்படுத்துவது? 
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மழைக்காலம்... உணவு... மருந்து!


மழை நாட்களில் ஏற்படும் மப்பும் மந்தாரமும் எனக்கு வயிற்றிலும் அதே நிலையை ஏற்படுத்தி பசி மந்தம் ஏற்படுகிறது. தசை வலியும் உள்ளது. இதை எப்படிச் சரிப்படுத்துவது? 

ஜானகி, கோவை.

கடும் கோடையைச் சமாளிக்க நாம் எடுத்துக் கொள்ளும் குளிர்ச்சியான உணவு மற்றும் பானங்களால், வயிற்றிலுள்ள பாசகபித்தம் எனும் பசித்தீயானது மழைக்காலத்தில் மந்தமாகிவிடுகிறது.  கோடை மாறி, மழை பெய்யத் தொடங்கியதும், குளிர்காற்று, குடிநீர் அசுத்தம், கோடையினால் ஏற்பட்ட பசி மந்தம் ஆகியவை பாசக பித்தத்தை மேலும் வலுவிழக்கச் செய்கின்றன.  வயிற்றில் உணவைச் செரிக்கக் செய்யும் பித்தம் -சமான- வாயு - க்லேதக கபம் ஆகியவற்றின் மொத்தநிலையே கலங்கிவிடுவதால், அவை ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து வயிற்றையே கலங்கிடச் செய்யும். அதனால் மழைநாட்களில்  உணவு மற்றும் பானம் ஆகியவை இந்த மூன்று தோஷங்களுக்கும் கேடு வராத வகையிலும் பசியைத் தூண்டச் செய்பவையாக இருத்தலும் நலம். 

அதைப் பெறுவதற்கு உப்பு கலந்து வெந்நீரைக் குடித்து வாந்தி செய்து கொள்வதும்,  திரிபலைக் குடிநீரால் பேதி செய்து கொள்வதும் நன்மையாகும். குடல் சுத்தமான பிறகு, வெது வெதுப்பான  தண்ணீரால் எனிமா கேனை நிரப்பி, ஆசனவாய் வழியாகச் செலுத்தி,  பெருங்குடல் பகுதியில்  உள்ளஅபான வாயுவின் தேக்கத்தையும் வெளியேற்றிவிடுவதும் அவசியமாகும். 

பச்சைப்பயறு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கறுப்பு கொண்டைக் கடலை போன்றவற்றைச் சேர்த்து தயாரிக்கப்பட்ட கஞ்சி, தேன், ஜீரகாத்யாரிஷ்டம், தசமூலாரிஷ்டம் போன்ற ஆயுர்வேத மருந்துகள், தயிர் மேல் நிற்கும் தண்ணீருடன் வர்ச்சலை துகள் உப்பு அல்லது பஞ்சகோல சூரணம் (திப்பிலி, திப்பிலி மூலம், சவ்யம், கொடுவேலி வேர்ப்பட்டை , சுக்கு ஆகியவற்றின் சேர்க்கை) கலந்த நீர், மாமிச சூப் ஆகியவை மழைக்காலத்துக்கு ஏற்ற உணவும், பானகங்களாகும்.

சூரியனையே காண முடியாத கடும் மழை பெய்யும் நாட்களில் புளி, உப்பு மற்றும்  எண்ணெய் சேர்த்துத் தயாரிக்கப்படும்  புளியோதரையைச் சூடான சாதத்துடன் கலந்து சிறிது தேன்விட்டுப் பிசைந்து சாப்பிடுவதால்,  வயிற்றிலுள்ள மப்பும் மந்தாரமும் மாறி பசி நன்றாக எடுக்கும். 

மிளகுக்குழம்பு, கறிவேப்பிலைத் துவையல், சுண்டைக்காய் வற்றல், மணத்தக்காளி வற்றல், மிளகு சீரகம் பூண்டு சேர்த்துத் தயாரிக்கப்பட்ட ரசம், சுட்ட அப்பளம், நல்லெண்ணெய்யில் ஓமம் தாளித்துச் சேர்த்த மோர்க்காய்ச்சி, நன்கு வேக வைக்கப்பட்ட காய்கறிகள்,  எலுமிச்சம் பழ ஊறுகாய் போன்றவையும் சூடான சாதத்துடன் சாப்பிட, பசியானது நன்றாகத் தூண்டிவிடப்பட்டு,  உடல் சோர்வை நீக்கி, சுறுசுறுப்படையச் செய்யும். இவை மழைக்காலத்திற்கான ஏற்ற உணவு வகைகளாகும். 

பசியின் மந்தமான நிலையில் ஏற்படும் தசைவலியை அகற்ற சித்தரத்தை, சுக்கு, ஓமம், சீரகம், தனியா போட்டுக் காய்ச்சிய  வெந்நீரைக் குடிக்கப் பயன்படுத்துவதும், உடலில் மஹாநாராயண தைலம், கற்பூராதி தைலம் போன்றவற்றை வெதுவெதுப்பாகக் தடவி வெந்நீரில் குளிப்பது நல்லதே.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com