காந்தியின் கால் தடத்தில்!

மகாத்மா காந்தி, உலகின் தலை சிறந்த தலைவர்களுக்குள் ஒருவர்.சத்தியம், நேர்மை, அகிம்சை ஆகியவற்றை கொள்கைகளாகக் கொண்டு தவ வாழ்க்கை வாழ்ந்தவர்.
காந்தியின் கால் தடத்தில்!

மகாத்மா காந்தி, உலகின் தலைசிறந்த தலைவர்களுக்குள் ஒருவர்.சத்தியம், நேர்மை, அகிம்சை ஆகியவற்றை கொள்கைகளாகக் கொண்டு தவ வாழ்க்கை வாழ்ந்தவர். அறப்போராட்டம், சத்தியாகிரகம் ஆகிய வழிகளின் மூலம் சென்று வெற்றிபெற்றவர். நமது தேசத் தந்தையின் கொள்கைகளைக் கடந்த 16 ஆண்டுகளாக மக்களிடையே பரப்பி வருகிறார் விருதுநகர் மாவட்டம் ராஜ பாளையத்தைச் சேர்ந்த ஆர்.சங்கர் கணேஷ். காந்தியின் கொள்கைகளை துண்டு பிரசுரமாக அச்சடித்து, பொதுமக்கள் கூடும் இடங்களில் விநியோகம் செய்து வருகிறார். இது குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:

""ஒவ்வோர் ஆண்டும் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 - ஆம் தேதி, எழை எளிய மாணவ மாணவிகள் சுமார் 100 பேருக்கு நோட்டுப் புத்தகம் இலவசமாக வழங்கி வருகிறேன்.

காந்தியின் கொள்கைகளான அகிம்சை, பூரண மதுவிலக்கு உள்ளிட்டவற்றை துண்டு பிரசுரமாக அச்சடித்து, விளையாட்டுப் போட்டி நடைபெறும் இடங்களிலும், கோயில் திருவிழாக்களிலும் பொதுமக்களிடம் விநியோகம் செய்து வருகிறேன். இதன் மூலம் இளைய தலைமுறையினர் காந்தியையும் அவரது கொள்கைகளையும் தெரிந்து கொள்கிறார்கள்.

கடந்த 2012 -ஆம் ஆண்டு கேரளா மாநிலத்தில் உள்ள காந்தி மியூசியம் தனது 75-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடியது. அப்போது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் காந்தியின் மீது மிகவும் பற்று உள்ளவர்கள் தலா ஒருவரைத் தேர்வு செய்து, காந்தி கால் பதித்த பகுதிகளுக்கு அழைத்துச் செல்வது என முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் ஒரு நபரைத் தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பை மதுரை காந்தி மியூசியத்திடம் ஒப்படைத்தார்கள். அதற்கு தமிழகத்தில் பல மாவட்டங்களிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அதில் தமிழகத்தின் பிரதிநிதியாக நான் தேர்வு செய்யப்பட்டேன்.

கேரளா சென்று அங்குள்ள காந்தி மியூசியத்தில் வழிபாடு செய்த பின்னர், காந்தி 1920 முதல் 1938 வரை கால்பதித்த பல பகுதிகளுக்கு பேருந்தில் அழைத்துச் சென்றார்கள்.அந்த காலகட்டத்தில் திருவனந்தபுரம், கோழிக்கோடு, குருவாயூர், தலைச்சேரி, மங்களூர் ஆகிய ஊர்களுக்குச் சென்றோம்.

நாங்கள் சென்ற பகுதிகளில் காந்தி 60 பள்ளிகளில் பேசியுள்ளார். 4 பல்கலைக்கழகங்களிலும், 30 பொதுக்கூட்டங்களிலும் பேசியுள்ளார். அவர் சென்ற பள்ளி, பல்கலைக்கழகம், பொதுக்கூட்டம் நடைபெற்ற இடம் அனைத்தையும் பார்த்தோம். அந்த புண்ணியபூமியிருந்து காந்தி காலடி பட்ட பகுதியிலிருந்து பேருந்தில் சென்ற அனைவரும் மண்ணை சேகரித்துக் கொண்டசம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. காந்திய கொள்கைகளை மேலும் அதிக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என மனஉறுதியையும் ஏற்படுத்தியது.

இது என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சியாகும். மக்களிடம் காந்திய கொள்கைகள் குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்வதன் மூலம் எனக்கு முழு மனத்திருப்தி ஏற்படுகிறது. எனது சேவை வாழ்நாள் முழுவதும் தொடரும்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com