Enable Javscript for better performance
தனிமை- Dinamani

சுடச்சுட

  தனிமை

  By உஷாதீபன்  |   Published on : 17th October 2021 06:00 AM  |   அ+அ அ-   |    |  

  kadhir4

   

  "என்ன இது? என்னைக்குமில்லாம?' - டிபனைக் கொண்டு வந்து நறுக்கென்று வைத்து, கணத்தில் மறைந்த சாவித்திரியைப் பார்த்துத் துணுக்குற்றார் ரங்கநாதன்.
  அப்படித் திரும்பிப் பார்ப்பதற்குள் ஆளைக் காணவில்லை. அதற்கு மேல் வேகமானால் கழுத்து வலி கண்டுவிடும்.
  பகலில் ஒரு மணி நேரம் உறங்கும்போது அறைக்கதைவை மூடிக் கொள்வதுண்டு. ஹாலில் அலறும் டி.வி. தொந்தரவு வேண்டா
  மென்று... இப்போது இவளுக்கென்ன
  வந்தது... தான் சொல்லாமலே அவளாய்ச் சாத்திவிட்டுப் போகிறாள்?
  சட்டென ஃப்ளாஷ் அடித்தது. ஓ ... தனிமைப் படுத்துகிறாளோ? கரோனாக் கண்றாவியா? அடிப்பாவி - விதிர்த்துப் போனார்ரங்கநாதன்.
  என்ன அநியாயம்? அந்த வியாதி ஆரம்பித்த நாளிலிருந்து வெளியே அடியெடுத்து வைக்கவில்லை... மொட்டை மாடிக்குச் சென்று நடப்பதோடு சரி... எல்லாமும் பையனும் மருமகளும்தான் பார்த்துக் கொள்கிறார்கள். அரசு
  உத்தரவுப்படி "லா அபைடிங்' சிட்டிசனாக, தான் மட்டுமே. அப்பழுக்கு சொல்ல முடியாது... அப்படியிருக்கையில் இன்று என்ன வந்தது? யார் ஓதின மந்திரம் இது? மூளையில் சுறுசுறு என்றது.
  டிபன் சாப்பிடக் கூப்பிடும் அழைப்பை எதிர்பார்த்திருந்த இவருக்கு, இப்படி ஓர் இன்ப அதிர்ச்சி... ஒருவகையில் இன்ப அதிர்ச்சிதான். இருக்கும் இடத்திற்கே சாப்பாடு, டிபன் வருகிறதென்றால்? நிம்மதியாப் போச்சு...
  எழுந்து டைனிங் ஹாலுக்குப் போக வேண்டுமென்ற அவசியமில்லை... அந்த மேஜையில் இருக்கும் கச்சடாக்களைப் பற்றிக் குறை சொல்ல வேண்டிய கட்டாயமில்லை. வாய் நிற்காதே? கோபமுற்று அவைகளைச் "சரக் சரக்'கென்று ஒதுக்கி, வெறுப்புக் காட்ட வேண்டுமென்ற பாடு இல்லை... அவள் பதிலுக்குக் கோபம் கொள்ள வேண்டிய தேவை இல்லை... ஹாலில் ஆளில்லாமல் வெறுமே சுற்றிக்கொண்டிருக்கும் 24 ஹவர்ஸ் ஃபேனைப் பார்த்து வயிறெரிய வேண்டியதில்லை. யார் கண்ணிலும் படாமல், யாருக்கும் தெரியாமல்... சாப்பிட்டதே தெரியாமல், (அப்பா சாப்ட்டாச்சா?... யார் கேட்கப் போகிறார்கள்?) சாப்பிட்டு எழுந்து ரெண்டு எட்டு வைத்து எட்டினாற்போல் இருக்கும் பாத்ரூமுக்குள் நுழைந்து கை கழுவிக் கொண்டு பூனை போல் வந்து மீண்டும் குந்திக் கொள்ளலாம். இருக்கவே இருக்கு... புத்தகங்கள்... படிக்கப் படிக்க... படித்துத் தீராத பக்கங்கள்... ஆனாலும் என்னவோ உதைக்கிறதே... மனசு எதற்கோ பொருமுகிறதே... எதையோ குறைச்சலாய் உணருகிறதே... கெளரவம் தன்னிலை தாழாமையும், அந்நிலை தாழ்ந்தக்கால் உயிர் வாழாமையும் மானம் எனப்படும்... நான் கவரிமான் ஜாதீடீ... கவரிமான் ஜாதி!
  சொல்லப்போனால் அவர்தான் தொட்டதற்கெல்லாம் கையைக் கழுவிக் கொண்டிருக்கிறார். சுத்தம் பார்க்கிறார். தொட்ட புத்தகம்... தொடாத புத்தகம்... தோள் துண்டு, எடுத்த சீப்பு, போட்ட தலையணை... கை வைத்த மேஜை, தூக்கி நகர்த்திய நாற்காலி... என்று அத்தனையிலும் கிருமி ஒட்டிக் கொண்டிருக்க பலமான வாய்ப்புண்டு என்று கருதி அல்லது பயந்து "பொசுக்...பொசுக்'கென்று பாத்ரூமுக்குள் நுழைந்து ஹான்ட் வாஷ் பண்ணிக் கொள்கிறார். (தான் வெளியே போகாட்டாலும், சாமான் வாங்க, காய்கறி வாங்கன்னு பையன் போக, வரன்னு வீட்டின் எல்லா இடத்திலும் புழங்கத்தானே செய்றான்?) புறங்கையில், விரலிடுக்கில், உள்ளங்கையில் என்று அழுத்தி அழுத்தித் தேய்த்துக் கழுவுகிறார்.

  அவருக்கென்று ஒரு தனி பாட்டில் வாங்கிக் கொடுத்திருக்கிறான் பையன். அதிலெல்லாம் ஒன்றும் குறைச்சலில்லைதான். அன்றாடம் புதுத் துண்டு, புது வேட்டி என்று மாற்றியாகிறது... அவிழ்த்துப் போட்டது வாஷிங் மிஷினுக்குப் போயாகிறது. கண்ணுக்கு முன்னே கம்பால் தூக்கிக் கொண்டு போகிறான். ஸ்டிரிக்ட்னா ஸ்டிரிக்ட்தாம்ப்பா... என்ன நினைச்சாலும் சரி... சுத்தம்... சுத்தம்... தொட்டதுக்கெல்லாம் ஒரே சுத்தம்... அடேங்கப்பா... என்னா பயம் பயப்படுறானுங்க இந்தக் காலத்துப் பசங்க?

  ஹாலில் போய் டைனிங் டேபிளில் அமர்ந்து டிபனை முழுங்கிவிட்டு வருவதனால் என்னமாவது விபரீதம் ஆகிவிடப் போகிறதா என்ன? வெறும் ரெண்டு தோசை அல்லது மூணு இட்லி... இதுதானே தன் தேவை... அப்படி என்பதற்குள் முடிந்து விடுமே?

  அப்பா மாதிரி... "இன்னிக்கு எனக்குப் பசியே இல்லை... வெறும் ஆறு தோசை போறும்' என்றா சொல்லப் போகிறேன்? எண்பது தாண்டிய வயதில்... தன் அப்பா சொன்ன விகல்பமில்லாத அந்த வார்த்தைகள்... ஒரு கணம் கண்கள் கலங்கிப் போயின இவருக்கு.

  அட... நான் இப்படி இங்கே முடங்கணும்... அவள் வீடு முழுக்க சர்வ சுதந்திர பாத்தியதையாய்ப் புழங்கலாமா? அது மட்டும் சரியா? அறுபத்தி நாலுக்கும், ஐம்பத்தி எட்டுக்கும் அப்படி என்ன பெரிய வித்தியாசம்?

  வயசானவாளத்தான் ரொம்பத் தொத்துறதாம் வைரஸ்... கவனமா இருக்கிறதுல என்ன தப்பு? தனியா இருக்கறதுதான் சேஃப்டி அப்படீன்னு எவன் சொன்னான்? எம்பத்தி மூணும், எழுபத்தி எட்டும் எத்தனை ஆஸ்பத்திரி போய்த் திரும்பியிருக்கு தெரியுமா? ஒண்ணுமில்லன்னு.

  ஊரே அல்லோலப் பட்டுக் கெடக்கு... வாய்க்கு வாய்... வார்த்தைக்கு வார்த்தை... பெரியவாளத்தான் ஜாக்கிரதைப்படுத்தறா. மணிக்கணக்கா பேப்பர் படிக்கிறேளே... வெளில தலையே காட்டாதீங்கோன்னு சீனியர் சிட்டிசன்சுக்குத்தான் முக்கியமாச் சொல்லிண்டிருக்காளாக்கும்... ஜாக்கிரதையா நாலு சுவத்துக்குள்ள இருந்துக்கிட வேண்டியது நம்ம பொறுப்புதானே? அரசாங்கம் சொன்னா கேட்கிறதுதானே நல்ல பிரஜைக்கு அழகு?

  ""நான்தான் ரூம்லயே அடைஞ்சுதானே கெடக்கேன்... இப்போ புதுஸாக் கெளம்பி வெளில சுத்தப் போறேனா என்ன? ஊரு ஒலகம் எப்படியிருக்குன்னு பார்க்கிறதுக்கு? விடலைப் பயல்கள் செய்ற வேலை அது. போய்ப் போய் மாட்டிக்கிறான் பார் போலீஸ்கிட்ட''

  ""சாயங்காலமா செருப்ப மாட்டிண்டு உற்சாகமாக் கெளம்புவீங்களே... வாக்கிங்னுட்டு... அதச் சொன்னேன்... எதாச்சும் நாலு சாமான்களை அப்டியே வாங்கிண்டு வர்றேன்னு மூலை முடுக்குல திறந்திருக்கிற கடைக்குள்ள நுழையப்போய், யார் மூலமாச்சும் தொத்திண்டுதுன்னா? காற்றுலயே பரவுதாம். உங்களுக்கு முன்னாடி ஒருத்தர் தும்மிட்டுப் போயிருந்தார்னா... அது அங்கயே அந்தரத்துல நிக்குமாம். நீங்க அதைக் கடக்குற போது உங்களைப் பிடிச்சுக்குமாம்... தெரிஞ்சிதா? வினையை விலை கொடுத்து வாங்குவாங்களா...பேசாம ரூமே கெதின்னு கெடங்கோ...போறும்''

  கொஞ்சம் விட்டால் போதும்... ஆதி காலம்போல் முதுமக்கள் தாழி வாங்கி வந்து அடைத்து விடுவார்கள் போலிருக்கிறதே...

  ஏதோவொரு தேசத்தில், இன்னும் சில நாட்களில் முடிந்துவிடும் என்பது போன்ற கேஸ்களை, மலையுச்சியில் கொண்டு விட்டுவிட்டு வந்து விடுவார்களாம்... வெளிநாட்டில் கரோனாவின் புயல் வேகப் பரவலில், வயசானவர்கள் ரெண்டாம்பட்சம், மூணாம்பட்சம் என்று ஆகிப் போனார்களே? இங்கே அறிகுறியே இல்லாத என்னை ஒதுக்கினால் எப்படி? அசாத்திய ஜாக்கிரதை உணர்வு... ரொம்ப அநியாயம்! வந்தவனுக்குத் தனிமை! வராதவனுக்கும் தனிமையா? என்ன கொடுமை சார் இது...-வசனம் ஞாபகம் வர சிரித்துக் கொண்டார்.

  எண்ணங்களை மீறி வயிறு பசித்தது ரங்கநாதனுக்கு. முதலில் சாப்பிடுவோம்... பிறகு வைத்துக் கொள்ளலாம் இந்தப் பஞ்சாயத்தை...

  ""சாம்பார் விடவா?'' - வெளியேயிருந்து சாவித்திரியின் குரல். அறையின் தூரத்திற்கேற்றாற்போல் உரத்து ஒலித்தது.

  எதுக்கு இப்டிக் கத்தறா? செவிடுன்னு நினைச்சிட்டாளா?

  ""நாஞ்சாப்பிடுறது இத்தனூண்டு டிபன்... அதுக்கு இன்னொரு வாட்டி சாம்பாரா? வேணும்னா ஒரு டம்ளர்ல ஊத்திக் குடு... குடிக்கிறேன்''


  ""அதுக்கெதுக்கு கோபம்? போதும்னு ஒரே வார்த்தைல சொல்ல வேண்டிதானே?''

  ""ஆமாண்டீ... சொல்வாங்க ஒரே வார்த்தைல? பொழுது விடிஞ்ச நொடில... ஒரே டேக்ல, சட்டுன்னு என் இடத்தையே மாத்திப்புட்டேல்ல நீ... நாய்க்கும், பூனைக்கும்தான்டி அது இருக்கிற எடத்துக்கு சாப்பாடு போகும்... நீ எனக்கே கொண்டு வந்து வைக்கிறே...இல்ல?''

  ""எல்லாம் நம்மோட நன்மைக்காகத்தான்... பெரிசாக்காதீங்கோ... சாப்ட்டாச்சா... சொல்லுங்கோ. வந்து தட்டு எடுக்கிறேன். அவாளுக்கே ரூமுக்குக் கொண்டுதான் கொடுக்கிறேன். ஒர்க் ஃப்ரம் ஹோம்னாலும் அசைய முடிலயே. அதுபோலதான் உங்களுக்கும்... என்ன தப்பு? செய்ய ஆளில்லேன்னா தெரியும் சேதி. எனக்கு யாராச்சும் ஒரு நாளைக்கு அப்டி செய்து போடுங்களேன்... உட்கார்ந்து சாப்பிடறேன்... ஏக்கமா இருக்கு''
  பாவம்தான்... அவளில்லையானால் வீடு நாறிப் போகும்! துளியும் சலிக்காமல் இப்படி யாரேனும் இயங்க முடியுமா? இந்தப் பெண்களுக்கு எங்கிருந்துதான் இப்படி மனசு அமைகிறதோ? அசாத்திய சகிப்புத் தன்மை... தெய்வசங்கல்பம் ...
  ""நான் புழங்குற ஏரியாவையே கண்மூடிக் கண் திறக்கிறதுக்குள்ளே சுருக்கிட்டே... என்னால பரவும்னு பார்க்கிறேளா... இல்ல என் உசிர் பிழைக்கட்டும்னு ஆசையா? இப்டித் தனிமைப்படுத்தினா, ஒரு வேளை எனக்கு லேசா இருந்து, அது எனக்கே தெரியாம வளர்ந்து, பிறகு ராத்திரி மூச்சு முட்டித்தின்னாக் கூட யாரையும் கூப்பிடாமே... சகிச்சிண்டு... பிடிவாதமா, போனாப் போகட்டும்னு பிராணனை விட்ருவேனாக்கும்... எதுக்கு பூமிக்குப் பாரம்ங்கிற நெனப்பு எப்பயோ வந்தாச்சு '

  ""ஐயோ ராமா... எதுக்கிந்த வேண்டாத பேச்செல்லாம்? நீங்க எப்பயும் தன்னந்தனியா ஒத்த மரத்துக் குரங்காட்டம் உட்கார்ந்துண்டு... படி படின்னு படிச்சிண்டிருக்கிறதுதானே? இன்னிக்குன்னு என்ன இப்டி வக்கரிச்சிண்டு? இருந்த எடத்துல இருந்தா... சேஃப்டின்னு பார்த்தா, என்னென்னவோ பேசறேளே? நீங்க இருக்கேள்ங்கிறதே எங்களுக்கெல்லாம் தெம்பாக்கும்''

  ""வெறும் வாய் வார்த்தை இதெல்லாம். இந்தாடீ... அம்பத்தெட்டு... உனக்கு மட்டும் அந்தக் கண்டிஷன் பொருந்தாதோ? அறுபதைத் தாண்டினவனுக்குத்தான் ஒதுக்கலா? அம்பதைத் தாண்டினாலும் ஆபத்துதான்... நல்லாயிருக்குடி நியாயம்? நீயும் என்னமாதிரி முடங்கு... அவா செய்யட்டும்... இல்லையா யாரயாச்சும் சமையலுக்குப் போட்டுக்கட்டும்... செய்யமாட்டாங்களே... ஏன்னா... நீ அவங்களுக்கு வேணும்... அன்றாடம் வேலை நடந்தாகணும்... இல்லைன்னா பொழப்பு தாளந்தான்... வெளில போய்த் திங்க முடியாது... ஃபோன் பண்ணி வரவழைச்சுக் கொறிக்கவும் வழியில்ல... தெனம் படுக்கையை விட்டு எழுந்திரிக்கிறதே பதினொண்ணு, பன்னெண்டுன்னா... ஒரு சமையல்காரி கண்டிப்பா வேணும்தானே? அவளுக்குக் கொடுக்கிற சம்பளம் வேறே மிச்சம்... மாமியார்க்காரியைப் பிடிக்காதுன்னாலும், வெறுமே பல்லைக் கடிச்சிண்டு, சகிச்சிண்டு இருந்தாப் போறுமே? வேலை நடக்குதுல்ல? உன்னை மாதிரி யாரு விழுந்து விழுந்து செய்யப் போறாங்க? பையக்குன்னு மீதி வாழ்க்கையைத் தத்தம் பண்ணினவ நீ... எங்கூட இருக்கிறபோது கூட இப்டி துடியா இருந்ததில்லை நீ... நினைச்சா வயிரெறியுதுடீ''

  "" உங்க வாயை வச்சிண்டு சும்மா இருக்கேளா... தாறு மாறாப் பேசிண்டு... வெட்டிக்கு சண்டை இழுத்துண்டு? அவா காதுல விழப்போறது''

  ""விழட்டுமேடீ... எனக்கென்ன பயம்? நானென்ன தண்டச் சோறா திங்கறேன் இந்த வீட்ல... பென்ஷன் வருதுடி எனக்கு... தெரிஞ்சிக்கோ''

  ""அதுக்காக? வாயில வந்ததைப் பேசுவேளா? வயசான காலத்துல சின்னஞ் சிறிசுகளை அட்ஜஸ்ட் பண்ணின்டு, சரி சரின்னு போகாமே... நம்ம பிள்ளைகளை நாம அட்ஜஸ்ட் பண்ணாம ரோட்டுல போறவனா அட்ஜஸ்ட் பண்ணுவான்... மனசுல என்னிக்கு செளஜன்யம் வரப் போறது உங்களுக்கு? இதெல்லாம் என்னைக்குத் தெரிஞ்சு பதப்படப்போறேள்?''

  ""அப்டிச் சொல்லு... இப்பத்தான தெரியுது விஷயம்? அப்போ அவா ரெண்டு பேரும் சொல்லித்தான் நீ என்னைத் தனிமைப்படுத்தறே... அதானே? தனியா இருக்க வச்சு... அமைதியைத் தேடித் தர்றேளோ? ஏன்டீ... அறிவிருக்கா உங்களுக்கெல்லாம்? வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடக்கிறவனுக்கு எங்கிருந்தடீ கரோனா வரும்? ஓடுகாலி மாதிரி சொன்ன பேச்சுக் கேட்காமே... ஊர் சுத்திட்டா நான் வர்றேன்... இல்ல வெளில போனாத்தான்... போலீஸ்காரன் விட்ருவானா? ஏ...பெரிசு... ஒனக்கு வேறே தனியாச் சொல்லணுமான்னு கேட்பான்ல... தனிமைப்படுத்துறாங்களாம் தனிமை? ஒரு மட்டு மரியாதை இல்லாம?''

  ""ஐயோ...கடவுளே...உங்க திருவாயை மூடிட்டு இருக்கீங்களா? நல்லாயிருக்கிற குடும்பத்துல புயலக் கெளப்பிடாதீங்கோ... அவா காதுல விழுந்திடப் போவுது... எழுந்திரிக்கிற நேரமாச்சு''

  ""இன்னும் பொழுது விடியலயா அவங்களுக்கு? இப்டிப் பகல் பன்னெண்டு மணி வரை தூங்கி வழியுற வீடு எங்கயாச்சும் வெளங்குமாடீ... மூத்த தலைமுறையான நீ எப்டி இதுக்கு அட்ஜஸ்ட் ஆகுறே? அதான்டி எனக்கு
  ஆச்சர்யம்? பையனுக்காக எத வேணாலும் பொறுத்துப்பியா நீ? என்னோட மட்டும் இருந்த போது எதையுமே விட்டுக் கொடுத்ததில்லயேடி நீ? முணுக்குன்னா கோபப்
  படுவே? இப்போ எப்டி இப்டி மாறினே? உனக்குன்னு ஒரு வாழ்க்கை கிடையாதா? மீதி இருக்கிற காலத்துக்கு, தனியா, அமைதியா இருந்திட்டு... கிருஷ்ணா, ராமான்னு கோயில் குளம்னு போயிட்டுக் காலத்தைக் கழிப்போம்னு நினைச்சா... இப்டி என்னையும் கொண்டு வந்து மாட்டி விட்டிட்டு, இப்போ கரோனா பேரைச் சொல்லி ரூமுக்குள்ளயே அடைக்கப் பார்க்கிறே? ஆரம்பிக்கிறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடியே கிளம்பி ஊரப் பார்த்துப் போயிருக்கணும் நான்... தப்பிப் போச்சு... அப்டிப் போயிருந்தேன்னா... இதே கரோனா காரணத்தைச் சொல்லி அங்கியே நானும் தங்கியிருந்திருப்பேன்... நீங்களும் நிம்மதியா இருந்திருக்கலாம்... எல்லாம் என் தப்பு... இப்போ இங்கயும் இருக்க முடியாமே... ஊர்ப்பக்கமும் போக முடியாமே... இருதலக் கொள்ளியாத் தவிச்சிட்டிருக்கேன்...'' விடாமல் புலம்பிக் கொண்டிருந்தார் ரங்கநாதன். மன ஆதங்கம்... பொங்கிப் பிரவகித்துக் கொண்டிருந்தது.

  வாசலில் பெல் அடிக்கும் சத்தம்.
  ""இதோ வர்றேன்... காய்கறி கொண்டு வந்திருப்பான்... தண்ணிக் கேன் வந்திருக்கும்'' சொல்லிக் கொண்டே ஓடினாள் சாவித்திரி.
  ""இப்டி வீடு வந்து கொடுக்கிறவன் மூலமா கரோனா பரவாதா? விடிகாலம்பற கோயம்பேடு போய் பர்சேஸ் பண்ணிட்டு வந்து, வேன்ல கொண்டு கடைல இறக்கி, இப்டி வீடு வீடாக் கொண்டு வந்து விநியோகிக்கிறவனுக்கு எந்த மூலைலர்ந்து எந்தச் சுத்தம் பார்க்க முடியும்? அதெல்லாம் ஓகே... உனக்கு! ஆனா வீட்டோட, சவமா அடைஞ்சு கெடக்குற எனக்கு ஒதுக்கல்? ஏன்னா அறுபது தாண்டின பெருச்சாளி நானு... அம்பத்தெட்டு தொட்ட சின்னப் பெருச்சாளி நீ... உனக்கு சலுகை... அப்டித்தானே?''
  தலையிலடித்துக் கொண்டு வாயிலை நோக்கிப் போனாள் சாவித்திரி. "ஏன்டா இந்த மனுஷன்ட்ட வாயைக் கொடுத்தோம்' என்று நினைத்து விட்டாளோ? வாயி...வாயி... அநியாய வாய்! கதவைத் திறந்து என்னவோ பேசிவிட்டு படாரென்று சாத்துவது கேட்டது.
  ""வெஜிடபிள்ஸ் வரலையா? எதுக்கு இப்டி டமால்னு கதவை மூடுறே? யார் வந்திருக்கா அங்கே?''-கேட்டுக் கொண்டே முன்னேறினார் ரங்கநாதன்.
  ""கார்ப்பொரேஷன் ஆளு... கிருமி நாசினி தெளிக்கிறானாம்... காசு கேட்கிறான்''
  போய்ப் பார்த்தார்... வராண்டாப் பகுதி முழுதும் மருந்தின் நெடி... மொத்த அபார்ட்மென்டுக்கும் அடித்து முடியாதே.ஒரு பேரல் பத்தாதே? அரசாங்கம் நல்லாத்தான் செய்றது அடேயப்பா... எவ்வளவு ஜாக்கிரதை?
  ""டீக் காசு கொடுங்க சார்'' - பணிவான குரல். பாவமாயிருந்தது.
  ""இருங்க வர்றேன்...'' உள்ளே சென்று ஐம்பது ரூபாயை எடுத்துக் கொண்டு போய் கையில் திணித்தார்.
  "" ரொம்ப டாங்க்ஸ் சார்... ரெண்டு மாடிக்கும் ஃபுல்லா அடிச்சிருக்கேன் சார்''
  சொல்லிவிட்டு நகர்ந்தான் அந்த ஆள்.
  நரைத்து அழுக்கேறிய பரட்டைத் தலை... லேசாய் வெளிறிய அடர்த்தியான மீசை... முதுகில் தொங்கும் நீள சிலிண்டர். தளர்ந்து வியர்வை ததும்பும் உடம்பு... பார்க்கவே பரிதாபமாயிருந்தது.
  இவருக்கு விலக்கில்லையா? பார்க்கவே மனசுக்குக் கஷ்டமாயிருக்கே? நினைக்கவே மனம் சட்டென்று அமைதியாகிப் போனது. இந்தாள் உழைப்பின் முன் தான் எம்மாத்திரம்?
  ""பொத்திட்டுக் கிடய்யா பெரிசு. ஏன் கிடந்து துள்றே? ஊரே அல்லோலப் பட்டுக் கெடக்கு... சும்மா உட்கார்ந்திருக்க வலிக்குதோ உனக்கு?'' திடீர்க் குரல்! எங்கிருந்து வருகிறது? யாரு? யாரு? யாரது? - நெஞ்சைப் பிடித்துக் கொள்கிறார்.
  சுற்று முற்றும் பரபரப்பாய்த் திரும்பிப்
  பார்த்துக் கொண்டே, வியர்த்துப் போன
  வராய், வளைக்குள் நுழையும் நண்டு போல் அறைக்குள் புகுந்து, சட்டெனத் தன்னை மறைத்துக் கொள்கிறார் ரங்கநாதன்.


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  ->
  flipboard facebook twitter whatsapp