உண்மை அன்பு

மதியம் ஒரு மணி. அதுவொரு தட்டச்சு பயிலகம். மாணவ மாணவியர் தட்டச்சு செய்து கொண்டிருந்தனர்.
உண்மை அன்பு

மதியம் ஒரு மணி. அதுவொரு தட்டச்சு பயிலகம். மாணவ மாணவியர் தட்டச்சு செய்து கொண்டிருந்தனர். ஒரு சிறிய டிபன் பாக்சில் கொண்டு வந்திருந்த தயிர் சாதத்தினைச் சாப்பிட்டு முடித்து, காலையில் டெஸ்ட் அடித்தவர்களின் தாள்களை எடுத்து வைத்து சிவப்பு மை பேனாவினால் திருத்திக் கொண்டிருந்த இன்ஸ்ட்ரக்டர் வளர்மதி, புதிதாக திருமணமாகியிருந்த ஒரு பெண்ணும் பையனும் கைகளைக் கோர்த்துக் கொண்டு ஒருவரையொருவர் உரசிக் கொண்டும் சந்தோஷமாய் சிரித்துப் பேசிக் கொண்டும் வருகிறபோது, கை நிறைய அவள் அணிந்திருந்த வளையல்களினால் "கிணுங்கிணுங்கென்று' வரும் சத்தம் கேட்டு வாசல் பக்கம் பார்த்தவள், "அவன்... அவன் சுதாகர் போலல்லவாயிருக்கிறான்' என்று நினைத்தாள்.

அவனுடன் சேர்ந்து வரும் அவள் மிகுந்த அழகுடையவளாய் இருந்தாள். இடுப்பு வரை நீண்டிருந்த ஒற்றை ஜடையின் உச்சியிலிருந்து அவளின் பாதி முதுகு வரை நான்கைந்து சரங்களாக தொங்கியபடியிருந்த மல்லிகையின் மணம் கமகமத்தது.

அவள் அணிந்திருந்த வெளிர் மஞ்சள் நிறப் புடவைக்கு ஏற்றாற்போல ஒரேயொரு மஞ்சள் ரோஜா மட்டும் தங்க கிரீடம் வைத்ததுபோன்று அவளின் உச்சந்தலையில் சொருகப்பட்டிருந்தது. ரோஜா இதழின் மென்மையையும், மெலிதாயுமாயிருந்த அவள் உடம்பு உச்சி வெயிலுக்கு ஜொலிஜொலிக்க தங்க நிறமாய் மின்னியபடி வந்து கொண்டிருந்தாள்.

வளர்மதி அவர்களையே பார்த்தபடியிருந்தாள். "ஆம்... அவன் சுதாகர்தான்' என்பதனை ஊர்ஜிதப்படுத்தும்விதமாக, அவன் தன் இளம் மனைவியுடன் தட்டச்சு பயிலகத்தினை நோக்கி வருவதனைப் பார்த்தவுடன் அவனைப் பற்றிய நினைவுகளில் மூழ்கினாள் வளர்மதி.

இரண்டு ஏ ஃபோர் பேப்பர்களை ஒன்றிணைத்து தட்டச்சு இயந்திரத்தில் சொருகி பார் ஹாண்டிலை தள்ளிவிட்டு அன்றைய தேதியை வலதுபக்க மூலையில் தட்டச்சு செய்து, "பேக் மை பாக்ஸ் வித் பைவ் டஜன் லிக்கொயர் ஜக்ஸ்' என ஐந்து வரிகள் தட்டச்சு செய்யத் தொடங்கி, டெஸ்ட் ரிகர்சல் முடிந்தவுடன், முதல் பேப்பர் டெஸ்ட் அடிக்க கேள்வித்தாள் கொடுக்கப்பட்டிருந்தது சுதாகரனிடம். மேசைமீது கை அழுந்தியிருக்க அவனது இரண்டு கைகளின் விரல்களும் கீ போர்டில் நர்த்தனமாடத் தயாராக இருந்து
கொண்டிருந்தன.

இன்ஸ்ட்ரக்டர் வளர்மதி "ஸ்டார்ட்' சொல்வதற்காக தனது கைக்கடிகாரத்தினைப் பார்த்தபடியிருந்தாள். அந்த நேரம்பார்த்து, சுதாகரின் மாமா வந்தார். முதலில் வளர்மதிக்கு அவரை யாரென்று தெரிந்திருக்கவில்லை. தனது மாமாவென்று அவன் சொல்லித்தான் அவளுக்குத் தெரியும். அவர் எதற்காக வந்திருக்கிறாரென்று அவனுக்கும் கூடப் புரிந்திருக்கவில்லை.

இருவரும் பேசிக் கொண்டதிலிருந்து அவனை அழைத்துச் செல்வதற்காகத்தான் அவர் வந்திருக்கிறாரென்று அவளுக்குப் புரிந்தது.

""மாப்பிள்ளை வீடு பாக்க வராங்களாம், கையோட உன்னை கூப்பிட்டுக்கிட்டு வரச் சொன்னாங்க'' என்று தான் வந்த விஷயத்தைச் சொல்லி அவனை தன்னுடன் வருமாறு வற்புறுத்திக் கூப்பிட்டுக்கொண்டிருந்தார் அவர். அவன் அவருடன் போக மறுத்தபடியிருந்தான். அவரும் எவ்வளவோ வற்புறுத்திக் கூப்பிட்டுப் பார்த்துவிட்டு வேறு வழியில்லாமல் சென்றுவிட்டிருந்தார்.

இதனையெல்லாம் கவனித்தபடியிருந்த வளர்மதி, "சுதாகர் சின்னப்பையன். அதுக்குள்ள அவனுக்கு கல்யாணமா... மாப்பிள்ளை வீடு பாக்க வராங்கன்னு சொல்லிட்டுப் போகிறாரேயென்று' அவள் ஆச்சர்யப்பட்டாள். ஏனோதானோவென்று கேட்காமல் இருந்துவிடவும் அவளால் முடியவில்லை. ""என்ன சுதாகர்... உங்க மாமா ஏன் வந்து கூப்பிட்டுட்டுப்போறார்?'' என்றாள்.

அவள் அவ்வாறு கேட்டதும் அதிர்ச்சி கலந்ததயக்கம் அவனிடத்தில் தெரிந்தது. தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்பதுபோல சுற்றும்முற்றும் பார்த்தான். யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. அவரவர் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பது போலத்தானிருந்தார்கள். ஆனாலும், சுதாரித்துக் கொண்டு ட்ரிம் செய்யப்பட்டிருந்த தனது இளம் தாடியை கைவைத்து மெல்லத் தடவியபடி, ""மாப்பிளை வீடு பாக்க வர்றாங்களாம்'' என்று மெதுவாய்ச் சொன்னான்.

ஆச்சரியப்படுபவள்போல மெல்ல சிரித்த அவள், ""யாரை... உன்னையா? நல்ல விஷயம்தானே? கிளம்பி போகவேண்டியதுதானே?'' என்றாள்.
""இல்லக்கா... நான் வீக்லி டெஸ்ட் முடிச்சிட்டு கிளம்பறேன்'' என்றான் சுதாகர்.
""வீக்லி டெஸ்ட் மாசத்துக்கு நாலு வருது. இந்த வாரமில்லேன்னா அடுத்த வாரம் டெஸ்ட் அடிச்சிக்கலாம். நீ கிளம்பு'' என்று அவசரப்படுத்தினாள்.
""இல்லக்கா... இன்னைக்கு பாலன்ஸ்ஷீட் டெஸ்ட்டும் இருக்கு'' என்றான்.
""ஒன்னும் கெட்டுடாது. கவலைப்படாத... நான் தனியாவே டெஸ்ட் நடத்தி பேப்பர் கரெக்ஷன் பண்றேன். நீ இப்ப கிளம்பு... மாப்பிள்ளை பாக்க வர்றது நல்ல விஷயம்தானே?'' அவள் பிடிவாதமாக அவனைக் கிளப்பிவிடுவதிலேயே குறியாக இருந்தாள்.
வனாந்திரமான ஒரு பகுதி வந்துகொண்டிருக்கும்போது திடீரென்று வண்டி பஞ்சர் ஆகி யாருமற்று தவிப்பாய் இருப்பதுபோல சுதாகரின் முகம் வெளிறிப் போய் பொலிவிழந்து காணப்பட்டது. என்ன சொல்வதென்று தெரியாமல் அவளைப் பார்த்தான். "என்னக்கா... நீயும் என்னை புரிஞ்சிக்க மாட்டேன்ற?' என்பது போலிருந்தது அவனின் பார்வை.
எத்தனையோ மாணவர்களை வைத்து பொழுதாபொழுதுக்கும் மேய்க்கிறவளாச்சே... அவனின் முகக்குறியா அவளுக்குப் புரியாமலிருக்கும். சிறிது நேரம் அவனையே உற்றுப் பார்த்தாள். குனிந்த தலை நிமிராமலே இருந்தவனை தன் நிலைக்குக் கொண்டுவரும்விதமாய், ""ஏய்'' என்று கூப்பிட்டாள்.
அப்பொழுதும் அவன் பேசாமலேயே தலையைக் குனிந்தபடியே இருந்தான். அவள் அவனுக்குள் விபரீதத்தை சட்டென்று உணர்ந்து கொண்டவளாய் மறு
படியும், ""ஏய்... சுதாகர்'' என்றாள் கொஞ்சம் சத்தமாய்.
கண்களை மட்டும் நிமிர்த்தி அவளைப் பார்த்தவன் மீண்டும் தலையைப் பழையபடி கவிழ்த்துக் கொண்டான். அப்பொழுதுதான் அவளே அதிர்ந்து போகும்படியாய் அவன் கண்கள் கலங்கியிருந்ததனைக் கண்டாள். தளும்பிய கண்களிலிருந்து கண்ணீர் கொட்டுவதற்கு தயார் நிலையிலிருந்தது.
அவனின் கண்களை நேருக்கு நேராய்ப் பார்த்தவள், ""ஏன்... உனக்கு கல்யாணத்துல இஷ்டமில்லையா?'' என்றாள்.
எச்சிலைக் கூட்டி விழுங்குவதுபோன்று கழுத்து நரம்புகள் இறுக்கம் கொடுத்திருக்க, அதனை எவ்வாறு சொல்வதென்று தயங்குபவனாய் கண்கள் ஒருவித பய கிறக்கத்தின் தவிப்பாய், ""அதில்லக்கா'' என்று சொல்லி மறுபடியும் தலையைக் குனிந்து கொண்டான்.
எதனையோ சொல்லத் தயங்குகிறான் என்பதனைச் சட்டென்று புரிந்துகொண்ட அவள், ""ஏய் இங்க பாரு... என்னைப் பாத்துப் பேசு. நீ யாரையாவது விரும்புறியா?'' என்றாள்.
சட்டென்று நிமிர்ந்து அவளைப் பார்த்தானே ஒழிய எதுவும் பேசவில்லை. ஆழ்ந்த சிந்தனையுடன்
கூடிய அமைதி அவனிடம் தெரிந்தது. பக்குவமில்லாத ஒரு நிலையில் அவன் இருப்பதாக அவள் உணர்ந்தாள். ஆனாலும், அவர்கள் குடும்பத்தில் அவனுக்குத் திருமணம் செய்துவைக்க முயற்சி செய்யறாங்கன்னா... ஏதேனும் காரணமிருக்கலாம்' என்று எண்ணியவள், ""இதப்பாரு... சுதாகர். உனக்கு என்ன வயசாகுது... இந்த வயசுல உனக்கு நல்லது, கெட்டது எதுன்னு தெரியாது. அம்மா அப்பா உன் நலனுக்குத்தான் எதுவும் செய்வாங்க. நீ மனச அலைபாயவிடாத''
அவள் சொல்லச் சொல்ல அவனுக்கு கண்கள் மேலும் கலங்கி கண்ணீர் வழிந்தது. நல்லவேளை. அப்போது ஓரிருவர் மட்டும்தான் இருந்தார்கள். அவர்
களும் தட்டச்சு செய்து கொண்டிருந்ததினால் இவர்களின் பேச்சு அவர்கள் காதில் விழுந்திருந்தாலும் துல்லியமாக என்ன விவரம் என்பது புரிந்திருக்காது. இருந்தும், சுதாகரை தடுக்கப்பட்டிருந்த உள் அறையினுள் அழைத்துச் சென்றிருந்த வளர்மதி அங்கிருந்த பெஞ்சில் உட்கார்ந்து அவனையும் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டாள். அப்பொழுதும் தலைகுனிந்தபடியே உட்கார்ந்திருந்த அவனின் தலையை நிமிர்த்தி, ""ஏய்... என்னைப் பாரு'' என்றாள்.
நிமிராமல் இருந்தான்.
முகத்தை நிமிர்த்தி அவனின் கண்களைப் பார்த்தாள். ""நீ காதலிக்கிற பொண்ணு, நம்ம இன்ஸ்டிடியூட்ல இருக்கிறாளா?'' அவள், அவனை உள்ளே அழைத்து வந்திருந்ததின் காரணமே இதனைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் என்பதுபோல மெதுவாய் கேட்டாள்.
""இல்ல'' அதற்கு மட்டும் பட்டென்று பதில் சொன்னான் சுதாகர்.
போன உசிரு திரும்பி வந்ததுபோல தன் நெஞ்சில் கைவைத்து, "பாலை வார்த்தேடா...' என்ற வளர்மதி சிறிது நேரம் அமைதியாயிருந்தாள். பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, அவளின் அடுத்தக் கேள்வியாய், ""உங்க ஊரா?'' என்றாள்.
இப்பொழுது கொஞ்சம் தைரியம் வந்துவிட்டவன்போல, "ம்...' என்றான் ஒற்றைச் சொல்லாய்.
""படிச்சிருக்காளா?''
""நான் படிச்ச காலேஜ்லதான் அவளும் படிச்சா. இப்ப விருத்தாசலத்துல ஒரு நகைக்கடையில வேலை செஞ்சிக்கிட்டிருக்கா''
முகத்தில் புன்னகையை மலரச் செய்தவளாய், ""எப்படிடா அவகூட உனக்கு லவ் ஆச்சு?'' என்று கிண்டலடிப்பதுபோலவும், அது இறுக்கமாயிருக்கும் அவன் மனதை இலகுவாக்குவதற்குமாய் அவ்வாறு கேட்டாள்.
""அவளை காலேஜ்ல சேக்கறதுக்கே என்கிட்டத்தான் வந்து அவுங்க அப்பா ஐடியா கேட்டாரு''
""அதையே சாக்கா வைச்சி நீ அவளை லவ் பண்ணிட்ட... அப்படித்தானே?''
""ரெண்டுபேரும் பஸ்ல ஒன்னாவே போய்வந்துக்கிட்டிருந்தோம். அப்பத்தான்'' என்றிழுத்தான் சுதாகர்.
""வசதியானவங்க வீட்டுப் பொண்ணா?''
""இதுக்கெல்லாம் வசதி பாப்பாங்களாக்கா?''
அவன் அவ்வாறுக் கேட்டவுடன் வசதியில்லாத வீட்டுப் பெண்ணென்று புரிந்துகொண்ட வளர்மதி, ""சொந்தமா... பிறத்தியா?'' என்றாள்.
""பிறத்திதான்''
""உங்க ஜாதியா... வேற ஜாதியா?''
ஊரில் எல்லோருமே ஒரே ஜாதியுள்ளவர்களாயிருந்திருந்தால் எங்க ஜாதியென்று உடனே சொல்லியிருப்பான். ஆனால், அவன் ஊரில் நிறைய ஜாதியைச் சார்ந்தவர்களும், வேறு மதத்தினைச் சார்ந்தவர்களுமிருந்ததினால் உண்மையில் அவள் என்ன ஜாதி, மதமென்று அவன் அறிந்திருக்கவில்லை. பெயரை வைத்து இருவரும் ஒரே மதமென்பதனை மட்டும்தான் அவனால் யூகிக்க முடிந்திருந்ததனை எண்ணிக் கொண்டான். அதனால் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாதவனாய்த் திகைத்தான். ஆனால் ஏதேனும் சொல்லியாக வேண்டும் என்று மனம் துடிப்பதனை கட்டுப்படுத்தமுடியாதவனாய், ""உன்னை நான் அக்கான்னுதானே கூப்பிடுறேன்'' என்றான்.
அவன் எதற்காக அவ்வாறு கேட்கிறான் என்பது ஒரு கணம் அவளுக்குப் புரிந்திருக்கவில்லை. ஆனாலும், அவன் கேட்டிருப்பதில் தவறொன்றுமில்லையே... என்னதான் சொல்கிறானென்று பார்ப்போமே என்று எண்ணியவளாய், ""ஆமாம்'' என்றாள்.
""உன் ஜாதி என்னான்னு எனக்கு தெரியாதுக்கா'' என்றான்.
ஜாதியைப்பார்த்து யாரும், யார்கிட்டேயும் பழகறது இல்லேங்கறத நாசூக்கா சொல்லிட்டான் என்பதனைப் புரிந்து கொண்டவளாய் அவளும், "ம்...' என்று மெல்ல தலையசைத்தபடி அவனைப் பார்த்தாள். ஆனாலும், அவனை சிறுபிள்ளையாகத்தான் அவள் எண்ணியிருந்தாள். "காதல் என்று வருகிறபோது புரியாத தத்துவங்கள் கூட இவனைப்போன்ற இளைஞர்களிடம் கைப்பிடியினுள் சிக்கிக் கொண்டு நர்த்தனம் புரிகிறதே' என்று எண்ணினாள். ஆனாலும் அவனுக்கு அப்படியே பச்சைக்கொடி காட்டி
விடவும் துணிந்திருக்கவில்லை அவள்.
கேள்விகள் கேட்கப்படுவதும், அவனால் பதில் சொல்லப்படுவதுமாய் தொடர்ந்துகொண்டிருந்தன. ""நீ... காதலிக்கிற விஷயம் உங்க அம்மா அப்பாவுக்குத் தெரியுமா?''
""அரசபுரசலான்னு நினைக்கிறேன்''
""அதுதான் இந்த சின்ன வயசிலே உனக்கு கல்யாண ஏற்பாடு செய்யறாங்களா?''
""இருக்கலாம்''
சட்டென்று சொன்னவிதம் அவனின் தெளிவான பதிலாய் அதனை ஏற்றுக்கொண்டவளாய், ""நீ காதலிக்கிற பொண்ணச் சொல்லி அவளை கட்டிக்கிறேன்னு சொல்லலாமே?'' என்றாள்.
""அந்த தைரியமிருந்தா உங்கிட்ட ஏங்க்கா இவ்வளவு நேரம் உட்கார்ந்து பேசிக்கிட்டிருக்கிறேன்?''
""அப்புறம் என்ன செய்யலாம்ன்னு
இருக்கிற?''
""எதுவும் புரியல''
""அப்ப... நான் சொல்றத நீ கேக்குறியா?''
""ம்''
""நீ காதலிக்கிறேன்னு சொல்றியே அவளை மறந்திடு...''
""அக்கா...!''
""அக்காதான்டா சொல்றேன்''
""முடியாதுக்கா''
""முடியாதில்ல? அப்ப நீயே ஒரு முடிவெடு''
அவள் அவ்வாறு சொன்னபோது அவனின் முகம் இருண்டுபோனதுபோல முகம் சுருங்கி, ""இல்லக்கா... எனக்கு என்ன செய்யற
துன்னேப் புரியல. அவளை மறந்திடுன்னு சொல்றதை மட்டும் விட்டுட்டு வேற ஏதாவது சொல்லுக்கா... நான் கேக்கறேன்'' என்றான் ஒருவித தவிப்பாய்,
""நீயாவும் ஒரு முடிவு எடுக்க மாட்டே... நான் சொல்றதையும் கேக்கமாட்டே... ஏன்டா... இப்படி பிடிவாதம் புடிக்கறே?''
""அக்கா... நான் அவளுக்கு வாக்கு கொடுத்திட்டேன்''
""மண்ணாங்கட்டி... அவ உன்னை காதலிக்கிறேன்னுச் சொன்னாளா? உடல் கவர்ச்சியினால் ஏற்படுகிற பிரியம், ஒரு மயக்கம்தானேயொழிய நிச்சயம் காதலாயிருக்க வாய்ப்பேயில்லை. நீ காதலிக்கிறேன்னு சொல்றியே அது சுத்தப் பொய். இந்த வயசு உன்னை அப்படி பேச வைக்குது. பேசாம நான் சொல்றதைக் கேளு. அம்மா, அப்பா பாக்குற பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமாயிரு. அதுதான் உனக்கு நல்லது. நீ இப்பதான் படிப்பை முடிச்சிட்டு டைப்ரைட்டிங் கத்துக்கிட்டிருக்க. உனக்கொரு வேலை கிடைக்கணும். உன் இஷ்டத்துக்கு ஏதாவது பண்ணித் தொலைச்சிட்டு பின்னாடி சங்கடத்துல மாட்டிக்கிட்டு முழிச்சிக்கிட்டிருக்காத. அம்மா அப்பா பாக்குறப் பொண்ண கட்டிக்கிட்டீன்னா எந்தப் பிரச்னையுமிருக்காது'' என்று அவன் காதலை கொச்சைப்படுத்தும்விதமாக அல்லது தளர்ந்து போகும்படியான வார்த்தையில்
சிறிது கடுமையாக முறைத்துச் சொன்னாள் வளர்மதி.
அவன் பேசாமலிருந்தான்.
""என்னடா... நான் சொல்றது புரிஞ்சிதா இல்லையா?''
என்றாள்.
""காதலிக்கிறேன்னு வாயால சொன்னால்தான் காதலா? ஒருநாள்கூட அவளைப் பார்க்காமல் என்னாலும், என்னைப் பார்க்காமல் அவளாலும் இருக்க முடியாம எப்படியேனும் எங்கேனும் பார்த்து பேசிக்கிறோமே... அது காதலில்லையா?'' உணர்ச்சிவசப்படுபவன்போல படபடவென்று நிறுத்தாமல் பேசி முடித்திருந்தான் சுதாகர்.
அவளுக்கு அவன்மேல் கோபம் வருவது போலிருந்தது. ஆனாலும், அவனின் அறியாமையை எண்ணி சங்கடப்பட்டவளாய், அவன் மனதை தெளிவிக்கும் விதமாய், "ம்... நல்லாத்தான் பேசுற. ஆனால், முட்டாள் மாதிரி நடந்துக்கிற. நீயும் நானும்கூடத்தான் தினம் பாத்துக்கிறோம். பேசிக்கிறோம். அதுக்காக நமக்குள்ள காதல்ன்னு சொல்லிட முடியுமா? சொல்லுடா?'' என்றாள்.
அவள் அவ்வாறு கேட்பாளென்று அவன் எதிர்பார்க்கவில்லை. என்ன சொல்வதென்று புரியாமல் உடல் நடுங்குவது போலிருந்தான். அவளே தொடர்ந்து பேசினாள். ""ஏய்... நான் உன் சொந்த அக்காவாயிருந்திருந்தா என்ன செஞ்சிருப்பேன் தெரியுமா? காதலிக்கிறானாம்... என்னடா காதல்? விளக்கமாத்தையெடுத்து இந்நேரம் உன்னை விளாசியிருப்பேன் தெரியுமா? போடா'' என்றாள்.
பேசாமலிருந்தான்.
""என்னடா... நான் சொல்றது புரிஞ்சிதா இல்லையா?'' என்றாள் மறுபடியும்.
""எப்படிக்கா... அவ பாவமில்லையா?''
மறுபடியும் அவன் சொல்கிற ஏதோ ஒன்று சுரீரென்று மனதை இடறுவது போலிருக்க, அவனைக் கூர்ந்து பார்த்தாள். தான் நினைப்பது போலிருக்கக்கூடாது என்றும் அவள் வணங்கும் தெய்வத்தினிடம் வேண்டிக்கொண்டவளாய், ""பேச்சு மட்டும் தானா... இல்ல ...'' கொஞ்சம் கடுமையாகவே கேட்டும் விட்டாள்.
""அப்படியேதும் இல்லக்கா''
அவனும் புரிந்துகொண்டுதான் பதில் சொல்கிறான் என்பதனை தெரிந்து கொண்ட அவளும், "அப்பாடா.. இரண்டாம் முறையாக நெஞ்சில் பாலை வார்த்திட்டான்' என்று நினைத்து பெருமூச்சு விட்டுக்கொண்டாள் வளர்மதி.
""இதப்பாரு... இப்பவும் சொல்றேன். நீ வீட்டுக்குப் போ... பொண்ணு வீட்டுக்காரங்க பாத்திட்டுப் போவட்டும். அவுங்க வந்து பாத்துட்டுப் போவறதுனால ஒன்னும் கல்யாணம் ஆயிடும்ன்னு சொல்லிட
முடியாது. உனக்கு புடிச்ச பொண்ணுக் கூடவேக்கூட உனக்கு கல்யாணம் நடக்கலாம். எந்த நேரத்திலேயும் எது வேணாலும் நடக்கும். உனக்குப் புடிச்ச
பொண்ணு உங்க வீட்டுல உள்ளவங்களுக்கு புடிக்காமப் போறதுக்கு ஜாதிய மட்டுமே காரணமா
சொல்லிட முடியாது. நீ காதலிக்கிற விஷயமே கூட உங்க வீட்டுல தெரியாமலிருக்கலாம். இல்ல வேற ஏதாச்சும் கூட காரணமாயிருக்கலாம்'' என்று மனதை மாற்றி அவனை வீட்டிற்கு அனுப்பி வைப்பதற்காக பொறுமையுடன் சொல்லிக் கொண்டிருந்தாள்
வளர்மதி.
""அப்புறம் எப்படிக்கா... இப்ப உடனடியா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றங்க?''
""தெரியல... அது அவுங்களைக் கேட்டாத்தான் தெரியும். ஆனாலும், "ஒன்னேயொன்னு சொல்றேன். உங்க ரெண்டுபேருக்குள்ளேயும் உண்மையான அன்பிருந்தா நீங்க ஒன்னு சேருவீங்க. ரெண்டுபேர்ல ஒருத்தர்கிட்டே உண்மையான அன்பு இல்லாமப் போனாலும் உங்க காதல் ஜெயிக்காது''
சுதாகரின் காதல் ஜெயிக்கவேண்டும் தோற்கவேண்டும் என்பதெல்லாம் அவளுடைய எண்ணமாக இருக்கவில்லை. எதுவாயிருந்தாலும் அது, இப்போதைக்கு தேவையில்லாததாகப்பட்டது அவளுக்கு. வீட்டிற்குப் போகமாட்டேனென்று பிடிவாதம் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்த அவனை எப்படியாவது பேசி அனுப்பி வைத்துவிடவேண்டுமென்பதுதான் இன்ஸ்ட்ரெக்டர் வளர்மதியின் நோக்கமாயிருந்தது.
எப்படியோ நினைத்தமாதிரி அவனை வீட்டிற்கு கிளப்பிவிட்டிருந்தாள்.
""அக்கா... என்னக்கா அப்படிப் பாக்குற?'' என்ற சுதாகரின் குரல் கேட்டு பழைய நினைவுகளிலிருந்து மீண்டவளாய், ""வாடா'' என்றவள், அந்தப் பெண்ணையும், ""வாம்மா'' என்றழைத்து உட்காரும்படிச் சொன்னாள். ஆனால் அந்தப் பெண் உட்காரவில்லை. வளர்மதியின் முகத்தையே
உற்றுப் பார்த்தபடியிருந்தாள்.
சூழ்நிலையைப் புரிந்துகொண்டவன்போல, ""அக்கா... மேட்னி சினிமாவுக்குப் போறோம்க்கா. டைம் ஆயிடும். கிளம்பறோம்'' என்று அவன் சொல்லி அவசரப்படுத்தவும், "சரி' யென்பதுபோல உதட்டில் புன்னகையை வரவழைத்து, "நீ தைரியசாலிதான்' என்பதுபோல மெல்ல சிரித்தாள் வளர்மதி.
அவனும் அதே புன்னகையுடன் சிரித்து தலையசைத்து கிளம்பியிருந்தான். பிறகு எதையோ நினைத்துக்கொண்டவனாய் நின்று திரும்பி, ""ம்... அக்கா, அப்புறம் எனக்கு ஒரு கம்ப்யூட்டர் சென்டர்ல வேலை கிடைச்சிருக்கு'' என்று சந்தோஷமாய் சொல்லி மீண்டும் அவளுடன் கைகோர்த்தபடி செல்வதனைப் பார்த்த வளர்மதி மனம் நிம்மதியடைந்து குதூகலப்பட்டவளாய் அவர்கள் செல்வதையே பார்த்தபடியிருந்தாள்.
சுதாகரை மாப்பிள்ளை பார்க்க பெண் வீட்டார் வருவதால் சுதாகரை வீட்டுக்கு அழைத்துச் செல்ல அவன் மாமா வந்த அன்று, அவன் பிடிவாதமாக வீட்டுக்குப் போகாமலிருந்ததும், அவனை வற்புறுத்தி வீட்டுக்குப் போகத் தான் சொன்னதும், அவன் அரை மனதாக வீட்டுக்குப் போனதும்... மீண்டும் மீண்டும் வளர்மதியின் நினைவுக்கு வந்தது. அன்று சுதாகர் கம்ப்யூட்டர் சென்டரை விட்டுப் போன ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு அவன் மாமா திரும்பி கம்ப்யூட்டர் சென்டருக்கு வந்தார். அவனை எப்படியாவது
வீட்டுக்கு அழைத்துச் செல்வதே அவருடைய நோக்கமாக இருந்தது. வளர்மதி அவரிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தாள். சுதாகரை மாப்பிள்ளை பார்க்க வரப் போகிற பெண்ணின் அப்பா செல்போன் நம்பரை வாங்கிக் கொண்டாள். சுதாகரைப் பற்றி பெருமையாக அவர்களிடம் சொல்லப் போவதாக அவள் சொன்னதும் அவர் செல்போன் நம்பரைக் கொடுத்துவிட்டார்.
பெண்ணின் அப்பாவிடம் சுதாகரின் காதலைப் பற்றிச் சொன்னதும் முதலில் அவர் அதிர்ந்தார். சிறிதுநேரம் கழித்து, ""நீங்க உண்மையச் சொன்னது நல்லதாப் போச்சு அம்மா... இல்லேன்னா கல்யாணத்துக்கப்புறம் பெரிய பிரச்னையா ஆயிருக்குமே... நாங்க வேற மாப்பிள்ளை பார்த்துக்கிறோம்'' என்றார்.

அதற்குப் பிறகு சுதாகரைப் பார்க்க முடியவில்லை. இப்போதுதான் பார்க்கிறாள் வளர்மதி.

""உங்க ரெண்டுபேருக்குள்ளேயும் உண்மையான அன்பிருந்தா நீங்க ஒன்னு சேருவீங்க. ரெண்டுபேர்ல ஒருத்தர்கிட்டே உண்மையான அன்பு இல்லாமப் போனாலும் உங்க காதல் ஜெயிக்காது'' என்று சுதாகரிடம் அன்று சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. உண்மையான அன்புதான் என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள் வளர்மதி.
ஊத்தங்கால் ப.கோவிந்தராசு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com