'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 52

பாபர் மசூதி தகர்க்கப்பட்டபோது, நான் அயோத்தியிலோ, தில்லியிலோ இருக்கவில்லை.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 52


பாபர் மசூதி தகர்க்கப்பட்டபோது, நான் அயோத்தியிலோ, தில்லியிலோ இருக்கவில்லை. ஆனால், அந்த சம்பவம்  தொடர்பான எல்லாத் தகவல்களையும் திரட்டவும், அதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் சந்தித்து உரையாடவும், பேட்டி எடுத்து ஒப்பிட்டுப்  பார்க்கவும் முனைந்தேன். அந்த சம்பவத்துக்குப் பின்னால் இருந்த அரசியலும், தவறான பரப்புரைகளும் வேதனையளிப்பவை.

பாபர் மசூதி தகர்ப்பு என்பது தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்பதுதான் பரவலான அபிப்ராயமாக ஊடகங்களில் தெரிவிக்கப்படுகிறது. அதைத் தவிர்ப்பதற்கு நரசிம்ம ராவ் தலைமையிலான மத்திய அரசு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டது என்பதை யாருமே கூறுவதில்லை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களேகூட, பாபர் மசூதி தகர்ப்புக்கான முழுப் பழியையும் அன்றைய பிரதமர் நரசிம்ம ராவின்மீது சுமத்தித் தப்பித்துக் கொள்ளப் பார்த்தார்கள் என்பதுதான் மிகப் பெரிய சோகம். 

பாபர் மசூதி தகர்க்கப்பட்டபோது, பிரதமர் நரசிம்ம ராவ் தூங்கிக் கொண்டிருந்தார் என்று பரப்புரை செய்யப்படுகிறது. அவரது மறைமுக அனுமதியுடன்தான் பாபர் மசூதி தகர்க்கப்பட்டது என்று கூடப் பலரும் எழுதுகிறார்கள்; குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல என்பதை பல நேரடி சாட்சியங்கள் தெளிவுபடுத்துகின்றன.

பாபர் மசூதி தகர்க்கப்பட்டபோது, பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் என்ன செய்து கொண்டிருந்தார்? நரசிம்ம ராவுக்கு நெருக்கமான சிலரிடமும், அப்போது பிரதமர் அலுவலகத்தில் உயர் பதவிகளில் இருந்த சிலரிடமும் இது குறித்து நான் கேட்டுத் தெரிந்து கொண்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பிரதமர் நரசிம்ம ராவின் தனிப்பட்ட மருத்துவராக அப்போது இருந்தவர் டாக்டர் கே. ஸ்ரீநாத் ரெட்டி. முன்னாள் அமைச்சரும், ஆளுநராக இருந்தவருமான கே.வி. ரகுநாத் ரெட்டியின் புதல்வர். பிரபல இதயநோய் மருத்துவர். 1990-இல் பைபாஸ் அறுசை சிகிச்சை நடந்தது முதல், டாக்டர் ஸ்ரீநாத் ரெட்டியின் தனிக்கவனத்தில் இருந்து வந்தார் நரசிம்ம ராவ்.

டிசம்பர் 6, 1992 அன்று தனக்கும் தனது கவனிப்பில் இருக்கும் நோயாளியான பிரதமர் நரசிம்ம ராவுக்கும் இடையே நடந்த நிகழ்வுகளை டாக்டர் ஸ்ரீநாத் ரெட்டி பதிவு செய்திருக்கிறார்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. டிசம்பர் மாத தில்லி குளிரிலும் ஏழு மணிக்கே எழுந்திருந்தார் பிரதமர் நரசிம்ம ராவ். அயோத்தியில் லட்சக்கணக்கான விஸ்வ ஹிந்து பரிஷத் தொண்டர்கள் கூடுவதுதான் எல்லா தினசரிகளிலும் தலைப்புச் செய்தியாக இருந்தது. காலையில் எல்லா தினசரிகளையும் பிரதமர் படித்திருந்தார் என்பதை வரவேற்பறை மேசையில் கலைந்து கிடந்த பத்திரிகைகள் வெளிப்படுத்தின.

டாக்டர் ஸ்ரீநாத் ரெட்டி பிரதமரின் 7, ரேஸ் கோர்ஸ் சாலை வீட்டுக்கு வந்தபோது, பிரதமர் நரசிம்ம ராவ் டிரட் மில்லில் தனது நடைப்பயிற்சியை முடித்திருந்தார். வழக்கம்போல, அவரது ரத்த அழுத்தத்தைக் கவனித்த பிறகு, சிறிது நேரம் அவருடன் தெலுங்கில் உரையாடிக் கொண்டிருந்தார் டாக்டர் ஸ்ரீநாத். அவரது ரத்த மாதிரிகளைப் பரிசோதனைக்கு எடுத்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பிவிட்டார்.

அயோத்தியில் கரசேவைக்குத் தொண்டர்கள் குவிந்து கொண்டிருப்பதும், அவர்கள் அமைதியாகப் பங்கு பெறுவதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. நண்பகலுக்குப் பிறகு பாபர் மசூதிக் கட்டடத்தை நோக்கிப் பலர் ஓடத் தொடங்கியதைப் பார்த்த டாக்டர் ஸ்ரீநாத் அதிர்ந்தார்.

முதலாவது குவிமாடம் தகர்ந்தபோது மதியம் மணி சுமார் 2 இருக்கும். மருத்துவர் ஸ்ரீநாத்துக்குப் பகீரென்றது. இதய நோயாளியான பிரதமருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்கிற அச்சத்தில், உடனடியாக உடை மாற்றிக் கொண்டு, ரேஸ் கோர்ஸ் இல்லத்துக்குக் கிளம்பினார் அவர். தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, பிரதமர் அவரது அலுவலகத்தில் இருப்பதாகத் தகவல் வந்தது.

""நான் உடனே செளத் பிளாக்குக்கு விரைந்தேன். அங்கே பிரதமரைச் சுற்றி அதிகாரிகளும், அமைச்சர்களும், காங்கிரஸ் தலைவர்கள் சிலரும் இருந்தனர். எல்லோருடைய கவனமும் தொலைக்காட்சிப் பெட்டியில் குவிந்திருந்தது. அதற்குள் மூன்றாவது குவிமாடமும் தகர்க்கப்பட்டிருந்தது. எல்லோரும் பிரமை பிடித்தாற்போல இருந்தனர். எனது கவலை எல்லாம் பிரதமரின் உடல்நலத்தின்மீது இருந்தது'' என்று அன்றைய நிகழ்வை விளக்கினார் டாக்டர் ஸ்ரீநாத் ரெட்டி. 

அவர் வந்ததைப் பிரதமர் முதலில் கவனிக்கவில்லை. பார்த்ததும் கோபம் வந்துவிட்டது. 

""நீங்கள் எதற்காக இப்போது இங்கே வந்திருக்கிறீர்கள்?'' என்று கோபமாகக் கேட்டார் நரசிம்ம ராவ்.

""நான் உங்களைப் பரிசோதிக்க வேண்டும். ரத்த அழுத்தம் பார்க்க வேண்டும். தேசத்துக்கு நீங்கள் பிரதமராக இருக்கலாம். ஆனால், எனக்கு நீங்கள் எனது கண்காணிப்பில் இருக்கும் நோயாளி'' என்று  சொன்னபோது அசிரத்தையாக முகத்தைத் திருப்பிக் கொண்டார். டாக்டர் ஸ்ரீநாத் ரெட்டியின் வற்புறுத்தலைத் தொடர்ந்து, சோபாவில் இருந்து எழுந்து, ரத்த அழுத்தம் எடுக்க நகர்ந்தார் பிரதமர் நரசிம்ம ராவ்.

""பிரதமரின் முகம் இறுகியிருந்தது. அதில் ஏமாற்றமும், கோபமும், ஒருவித படபடப்பும் இருந்ததை நான் கவனித்தேன். நாடித் துடிப்பு அதிகரித்திருந்தது. ரத்த அழுத்தமும் எகிறிப்போய் இருந்தது. உடனே அவருக்கு பீட்டா பிளாக்கர்ஸ் கொடுத்து, சீராக்கும் முயற்சியில் இறங்கினேன். ஓரளவுக்கு அவர் சமநிலைக்கு வந்த பிறகுதான் பிரதமர் அலுவலகத்திலிருந்து அகன்றேன்'' என்றார் டாக்டர் ஸ்ரீநாத்.

எல்லோரும் கூறுவதுபோல, பிரதமர் நரசிம்ம ராவின் ரகசிய அனுமதியுடன் பாபர் மசூதி இடிக்கப்பட்டிருந்தால் அவருக்குப் படபடப்பும், ரத்த அழுத்தமும் இருந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. டாக்டர் ஸ்ரீநாத் ரெட்டி கூறுவதுபோல, ஒருவருடைய சொற்களும், முக பாவமும் பொய் சொல்லலாம். ஆனால், உடல் பொய் சொல்வதில்லை.

அதேபோல, பாபர் மசூதி தகர்க்கப்பட்டபோது, பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் தூங்கிக் கொண்டிருந்தார் என்று பரப்பப்படும் தகவலும் முற்றிலும் தவறானது. வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு அதைப் பரப்பியதற்கு ஏற்பாடு செய்தவர், பிரதமராக வேண்டும் என்று இலவு காத்த கிளியாகக் காத்துக் கொண்டிருந்த அமைச்சரவை சகா ஒருவர் என்று கூறப்படுகிறது. என்னால் உறுதிப்படுத்த முடியாததால், அவரது பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. 

பாபர் மசூதி தகர்க்கப்பட்டபோது, பிரதமர் நரசிம்ம ராவ் தூங்கிக் கொண்டிருந்தார் என்றும், வேறு சிலர் அவர் பூஜையறையில் தியானத்தில் ஆழ்ந்திருந்தார் என்றும் கூறுவதில் எந்தவித அடிப்படையும் இல்லை. அதே நேரத்தில், தனது நெருங்கிய சில தலைவர்கள், அதிகாரிகளைத் தவிர வேறு யாரிடமும் அவர் நேரிலோ, தொலைபேசியிலோ தொடர்பு கொள்வதைத் தவிர்த்தார் என்பது உண்மை. அதை நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சராக இருந்த ரங்கராஜன் குமாரமங்கலமும், பிரதமர் அலுவலக சிறப்பு அதிகாரி காண்டேகரும் என்னிடம் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

அர்ஜுன் சிங் உள்ளிட்ட பல முக்கியமான அமைச்சர்களும், பல்வேறு கட்சித் தலைவர்களும் பிரதமர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டபோது, "அவரை இப்போது தொந்தரவு செய்ய முடியாது' என்று கூறியது உண்மையா என்று காண்டேகரிடம் நான் கேட்டேன். அவர் சொன்ன பதில் இது:  ""தொந்தரவு செய்ய முடியாது என்றுதான் சொன்னேன். தூங்குகிறார் என்று சொல்லவில்லை. மிகவும் இக்கட்டான அந்த சூழலில், அடுத்தது என்ன செய்வது என்று பிரதமர் ஆலோசித்தாக வேண்டும். எல்லோரிடமும் பேசிக் கொண்டும், விளக்கம் கூறிக் கொண்டும் இருக்க முடியாது.''

நண்பகல் கடந்து முதலாவது குவிமாடம் தகர்க்கப்பட்டது முதல், பல உயரதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நரசிம்ம ராவ் விவரம் கேட்டுக் கொண்டிருந்தார் என்று தெரிகிறது. பிரதமரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரவைச் செயலர் நரேஷ் சந்திராவும், அப்போது அமைச்சரவைச் செயலராக இருந்த எஸ். ராஜகோபாலும், உள்துறைச் செயலர் மாதவ் கோட்போலேவும் பிரதமருக்கு எல்லாத் தகவல்களையும் நொடிக்கு நொடி தெரிவித்தவண்ணம் இருந்ததாக காண்டேகர் என்னிடம் தெரிவித்தார்.

அவர்கள் மட்டுமல்ல, சட்டத்துறைச் செயலர் பி.சி. ராவும் பிரதமருடன் தொடர்பில் இருந்தார். புலனாய்வுத் துறைத் தலைவர் வைத்யா, உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவாண் ஆகியோரையும் அழைத்து, சம்பவம் குறித்துப் பிரதமர் உரையாடியதாகத் தெரிகிறது. பாபர் மசூதி தகர்க்கப்படுவதைப் பார்த்தபோது, பிரதமர் நரசிம்ம ராவ் சில நிமிடங்களுக்குப் பேச்சில்லாமல் திக்பிரமை பிடித்தாற்போல அமர்ந்திருந்தார் என்று ஓர் அதிகாரி பேட்டி அளித்திருக்கிறார். அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

சரி, இத்தனை பேர் அருகில் இருந்தார்களே, ஆனால் ஒருவர் கூட அன்றைய நிகழ்வு குறித்தோ, பிரதமர் நரசிம்ம ராவுக்கு ஆதரவாகவோ, நிஜ நிலவரம் குறித்தோ பேசவில்லையே, ஏன் என்கிற கேள்வி எழுகிறது. அதற்கு அவர்களில் பெரும்பாலோர் சொல்லும் ஒரே பதில்:  "நாங்கள் எதுவும் பேசக் கூடாது என்று எங்களிடம் உறுதிமொழி வாங்கி இருந்தார் பிரதமர். அவர் தன்னிலை விளக்கம் கொடுக்க நினைத்திருக்கலாம். ஏன் கொடுக்கவில்லை என்று தெரியவில்லை.' அயோத்தியில் இப்போது ராமர் கோயில் எழுப்பப்படுகிறது. பாபர் மசூதி தகர்ப்பு நடந்து 30 ஆண்டுகளாகப் போகின்றன. ஆனால் இன்னும்கூட, அது குறித்த முழுமையான விவரங்கள் வெளிவரவில்லை என்பதுதான் வியப்பாக இருக்கிறது. பாபர் மசூதி கட்டடம் இடிக்கப்பட்ட பேரதிர்ச்சியான சம்பவம், அதற்கு முன்னும் பின்னும் நடந்த நிகழ்வுகள் அனைத்தையுமே மறைத்துவிட்டது. 

""பாபர் மசூதி தகர்ப்புக்கு, பிரதமர் நரசிம்ம ராவை மட்டுமே குற்றப்படுத்துவது தவறு'' என்று கூறும் மாதவ் கோட்போலே, அப்போது மத்திய உள்துறைச் செயலராக இருந்தவர். அந்த சம்பவம் குறித்து புத்தகம் கூட எழுதி இருக்கிறார். பிரச்னை இந்த அளவுக்கு முற்றுவதற்கு முன்பே, சமரசப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துத் தீர்வு காணாமல் போனது ராஜீவ் காந்தி அரசின் தவறு என்பது அவரது கருத்து. வி.பி. சிங் பிடிவாதமான நிலைப்பாட்டை எடுக்காமல், தீர்வு காண முற்பட்டிருக்கலாம் என்றும் கருதினார் அவர். 

""நீண்ட விவாதத்துக்குப் பிறகு, நவம்பர் 4-ஆம் தேதியே ஒரு செயல் திட்டத்தை நாங்கள் தயாரித்து வைத்திருந்தோம். மத்திய சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலையும் அந்த செயல்திட்டத்திற்கு நாங்கள் பெற்றிருந்தோம். அமைச்சரவைச் செயலர், பிரதமரின் முதன்மைச் செயலர், பிரதமரின் ஆலோசகர், உள்துறை அமைச்சர், பிரதமர் ஆகியோருக்கு நாங்கள் அளித்திருந்த அந்த செயல் திட்டம் அங்கீகரிக்கப்பட்டிருந்தால், பாபர் மசூதிக் கட்டடம் இடிக்கப்பட்டிருக்காது'' என்பது மாதவ் கோட்போலேவின் கருத்து.

நவம்பர் 22-ஆம் தேதி இரவில், யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அமைச்சரவையைக் கூட்டி சட்டப் பிரிவு 355-க்கும், சட்டப்பிரிவு 356-இன் கீழ் உத்தர பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அறிவிக்கவும் ஒப்புதல் பெறுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருந்தது உள்துறை அமைச்சகம். இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் 20,000-க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினரைத் தயார் நிலையில் வைத்திருக்கவும் ஏற்பாடு செய்திருந்தது.

""கடைசி நிமிடத்தில் பிரதமர் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டார்.  இன்னும் ஓரிரு நாள்கள் பொறுப்பது என்று முடிவு செய்தார். 24-ஆம் தேதி, மத்திய பாதுகாப்புப் படையினரை உத்தர பிரதேசத்துக்கு அனுப்பி, நவம்பர் 26-ஆம் தேதி அயோத்தியின் முக்கியமான பகுதிகளில் நிறுத்தி வைக்க அனுமதியும் அளித்தார். அப்படி இருந்தும், டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி தகர்ப்பை எங்களால் தடுக்க முடியாததற்கு, பிரதமர் அலுவலகம்தான் காரணம்'' - இது உள்துறைச் செயலர் மாதவ் கோட்போலேவின் குற்றச்சாட்டு.

பிரதமர் அலுவலகம் கடைசி நிமிடத்தில் ஏன் அனுமதி வழங்கவில்லை?

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com