நிம்மதி எங்கே? 

நிம்மதி எங்கே? 

நான் தான் ராமநாதன். உங்களிடம் சில விஷயங்கள் சொல்ல வேண்டும். சொந்த விஷயங்கள் தான். அவ்வளவு முக்கியம் இல்லை என்றாலும் நேரம் இருந்தால் கேளுங்கள். நிச்சயம் மகிழ்வேன். 

முப்பது வயதில் திருமணம் செய்து கொண்டேன். அதே முப்பது ஆண்டுகள் அவளோடு அன்பான அழகான வாழ்க்கை. எண்ணிலடங்கா நினைவுகள். எத்தனையோ போராட்டங்கள், வெற்றிகள், அவமானங்கள்,  தோல்விகள், மறக்க முடியாத தருணங்கள்... எல்லாமே பசுமையாக நெஞ்சில் நின்று போன நினைவலைகள். எதை நினைத்தாலும் மனது சிறகடிக்கும் சிறு பறவை போல. 
சரியாக மூன்று வருடம் முன்பு மருத்துவர்களுக்கே புலப்படாத நோய் வந்து என்னை தனியனாக்கிப்  போனாள் வானதி. அந்த இழப்பில் இருந்து மீள இன்னும் போராடி வருகிறேன். 

விக்ரம், வினய் இருவருமே படித்து பட்டம் பெற்று மேற்படிப்புக்கு அமெரிக்கா போய் அங்கேயே செட்டில் ஆகிவிட்டனர். அறுபத்து நான்கு வயதில் நான் மட்டும் தனியே.. இங்கே ! பிபி, சுகர் எல்லாமே கட்டுக்குள் இருக்கு. மூட் இருந்தால் சமைப்பேன். இல்லாவிடில், சாதம் வடித்து ரசம் குழம்பு வாங்கி சாப்பிடுவேன். வானதி போல எனக்கு சுவையான காபி போட வராது. அவள் வைக்கும் ரசத்தின் மணம் என் கைக்கு வராது. அவள் கைமணமே தனி தான். 
அவளோடு தான் எத்தனை கொஞ்சல்கள், செல்லச் சண்டைகள், சிறு சிறு பயணங்கள்... சேமிப்பில் திட்டமிடுவதில் அவளைப் போல வராது. நான் வெறும் வாய்ச்சொல் வீரன். இங்கே மூன்று பெட்ரூம் வீடு நகரத்தின் மத்தியில் என்றால் அது கட்டாயம் அவளது திட்டமிடல் தான். வீட்டில் அலங்காரம் எல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்வாள். ஒரு பெண்மணி விளக்கேற்ற மட்டுமல்ல, அவள் இல்லாமல் அந்த வீடு பெரிய சூனியம் தான். வேறு யாராலும் ஈடுகட்ட முடியாது அந்த பேரிழப்பை.

முன்பெல்லாம் பிள்ளைகள் பெற்றோரிடம் கனிவாக மரியாதையாக இருப்பர். இப்போது பெற்றோர் தான் அப்படி. குழந்தைகள் பெற்றுக்கொள்ள பெற்றோர் ஆசைப்படுவர் முன்பு. இப்போது "நாமே குழந்தை நமக்கேன் குழந்தை' என்கிறவர்கள் அதிகம். முன்பு திருமணம் செய்து கொள்ளுவது சுலபம். விவாகரத்து என்பது மிக கடினம். அப்படியே மாறிப் போய் இன்று விவாகம் கடினம், விவாகரத்து மிக சுலபம் என்றான நிலை. அக்கம்பக்கத்தினர் அனைவரையும் நாம் அறிவோம் அன்று. அடுத்த வீட்டில் யாரென்றே தெரியாது இன்று. 

ஒருவர் மட்டும் வேலைக்குப் போய் மொத்த குடும்பத்தைக் காப்பாற்றினார் அன்று. எல்லோருமே வேலைக்கு போனாலும் குடும்பம் கஷ்டத்தில்தான் தவிக்கிறது இன்று. நிறைய புத்தகங்கள் படித்தனர் அன்று. இன்று எல்லோரும் முகநூலில் முழுகிக் கிடக்கின்றனர். நேரடி தொடர்புகள் அறுந்து வெறும் வாட்ஸ் அப் மெசேஜ் ஆனது இன்று. சும்மா இருக்கும் மனது இவற்றை எல்லாம் அசைபோட்டு அசைபோட்டு காலம் கடத்தும் வேளையில் தான் அந்த விளம்பரம் கண்ணில் பட்டது. 

'நிம்மதி' -  'ஆனந்தமான ஓய்வு இல்லம் உங்களுக்காக'  என்று இருந்த அந்த விளம்பரத்தை முழுவதுமாக படித்தேன். 

அனைவருக்கும் தனியறை, டிவி, கட்டில், மெத்தை, அலமாரி, அலுவலக மேசை, நாற்காலி, தனி சமையலறை, தேவையான பாத்திரங்கள், மிக்ஸி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், கீசர் கொண்ட தனி பாத்ரூம், நடக்க பூங்கா, பிரார்த்தனை ஹால், தேவை என்றால் சுவையான ஆரோக்கியமான பொது சாப்பாடு, வாரம் ஒரு முறை வெளியே செல்ல ஏற்பாடு, உள்ளேயே கோயில், வெள்ளிக்கிழமை பஜனை அல்லது ஆன்மிக உரை, பண்டிகை நாள்களில் சிறப்பு பூஜை, பட்டிமன்றம் மற்றும் இசைக் கச்சேரிகள் என்று மேலும் விவரங்கள் இருந்தன அந்த விளம்பரத்தில். யார் படித்தாலும் மயங்கிப் போவது உறுதி. 

எனக்கு பென்சன் கிடையாது. கடைசியாக வந்த பணத்தை முதலீடு செய்ததில் வருகிற பணம் எனக்கு போதுமானதாக இருந்தது. 

விளம்பரம் செய்து இருந்த இடத்திற்கு நேரில் சென்று பார்த்தேன். நகரத்தில் இருந்து 25 கி.மீ. தூரத்தில் மிக அமைதியாக இருந்தது. பஸ் மற்றும் ரயில் வசதி மிக அருகில் இருந்தது. சுத்தமாக இருந்தது. சர்வீஸ் அருமை. விசாரித்ததில் அங்கு இருந்த அனைவருமே ஆனந்தமாக நிம்மதியாக இருப்பதாக சொன்னார்கள். ஆனால் நிம்மதியில் தங்க மாத செலவு மிக அதிகம். 

விக்ரம் மற்றும் வினய் இருவருமே சொல்லி வைத்தாற்போல ஒரே மாதிரி பேசினார்கள்.  'அப்பா எங்களுக்கு அந்த வீடு வேண்டாம். நாங்கள் இங்கே செட்டில் ஆகி விட்டோம். உங்களுக்கு எப்போது எவ்வளவு பணம் தேவை என்றாலும் தயங்காமல் கேளுங்கள். உங்கள் நிறைவுக்காலத்தை நிம்மதியாக கழியுங்கள். உங்கள் பணம் உங்களுடையது. நீங்கள் சம்பாதித்தது உங்களுக்குத்தான் முழு உரிமை. எங்களைப் பற்றி எதுவுமே யோசிக்க வேண்டாம். இயன்றபோது வருகிறோம். உங்கள் முடிவில் எங்கள் தலையீடு கிடையாது.'

யோசித்தேன். வீட்டை விற்றால் நிச்சயம் நல்ல தொகை கிடைக்கும். நிம்மதி இல்லத்திற்கு ஐந்து வருடங்களுக்கு கட்டிவிட்டு மீதி பணத்தை வங்கியில் வைத்து விடலாம் என்று மனம் சொன்னது. 

இருக்கும் உறைவிடத்தை வீட்டை காலி செய்வது என்பது குருவிக்கூட்டை கலைப்பது போலத்தான். பெட்டிகள், மேசை நாற்காலிகள், படுக்கை, கட்டில்கள், பாத்திர பண்டங்கள், துணிமணிகள், வீட்டு அலங்காரப் பொருட்கள், ஊஞ்சல் மற்றும் பூஜை அறை பொக்கிஷங்கள் என்று நீளுகிற பட்டியல். அது மட்டுமா ? பல ஊர்களுக்கு சென்ற போதெல்லாம் வாங்கிய சில நினைவுப் பொருட்கள் ஷோ கேசில், வானதியின் புடவைகள், எக்கச்சக்க போட்டோ ஆல்பங்கள், பாட்டு சிடிக்கள், ஒவ்வொரு நல்ல நிகழ்விலும் வாங்கிய சில ஆபரணங்கள், அந்தக் கால பெட்டிகள், நானும் பிள்ளைகளும் பெற்ற விருதுகள், வெள்ளி மற்றும் பித்தளை பாத்திரங்கள், மிக்ஸி, கிரைண்டர், இரண்டு டிவிக்கள், கம்ப்யூட்டர் மற்றும் பிரிண்டர், ஏகப்பட்ட  உணவுப் பொருள்கள், ஊறுகாய் வஸ்துக்கள், மியூசிக் சிஸ்டெம் மற்றும் ஸ்பீக்கர்.. தலையே சுற்றியது.

'நிம்மதி' தருகிற ஒரு அறையில் ஏற்கெனவே அந்த விளம்பரத்தில் சொன்ன படி படுக்கை, கட்டில், டேபிள், சேர், சமையலறை பொருட்கள், டிவி எல்லாம் அந்த கட்டணத்தில் அடங்கும். அப்படி என்றால் இங்கிருந்து என்னால் ஒன்றையும் கொண்டு போக முடியாது. 

யோசித்தால், தனியாக இருக்கும் எனக்கு எதற்கு இவ்வளவு சொத்து ? அநியாயமாக இப்படி சேர்த்து வைத்திருக்கிறேனே! பெரிய பெரிய ராஜாக்களின் அரண்மனை கூட அவர் இறப்பிற்கு பிறகு காட்சிப் பொருளாக மாறுகிறது. நாமெல்லாம் எம்மாத்திரம்? எதையும் கொண்டு வரவில்லை. எதையும் கொண்டு போக முடியாது. அப்படி இருக்க இவ்வளவு பொருள்கள் தனி ஒருவனுக்கு எதற்கு? இது புரியாமல் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து இருக்கிறேனே என்று நினைத்து வெட்கப்பட்டேன். கொஞ்சம் வேதனையுற்றேன். 

விக்ரம் வினய் இவற்றை எல்லாம் மதிக்க மாட்டார்கள். நாளை பேரன் பேத்திக்கும் இவை எல்லாம் தேவை இல்லை. கஷ்டப்பட்டு ஆசை ஆசையாக சேர்த்து வைத்த இந்தப் பொருட்களை என்ன செய்ய? இவற்றை எல்லாம் விற்பது என்றால் ஸ்க்ராப் காரன் எது எடுத்தாலும் 300 அல்லது 500 என்பான். அதற்கு இனாமாக கொடுத்து விடலாம். வீட்டை வாங்குபவருக்கு இவை தேவைப்படுமா? இதற்கெல்லாம் அவர் பணம் சற்று கூடப் போட்டு தருவாரா ? அதுவும் விசாரித்தேன். வீடு மட்டும் தான் வேண்டும். பொருட்கள் வேண்டாம் என்றே பலரும் சொன்னார்கள். 

என் நண்பனின் மகன் ரமேஷ் வீட்டை விற்றுத் தருகிற முழுப் பொறுப்பை ஏற்று முதலில் 'நிம்மதி'க்கு கட்ட வேண்டிய அட்வான்ஸ் தொகையை வாங்கிக் கொடுத்தான். ரிஜிஸ்ட்ரேஷன் அன்று வந்து கூட்டிப் போவதாகச் சொன்னான். அந்த விஷயத்தில் ரமேஷ் புண்ணியம் கட்டிக் கொண்டான். 

இறந்தவர்கள் சாம்பல் ஆவது போல, பணம் பத்திரமாக மாறுவது போல, எல்லோருமே நினைவுகளாக மட்டும் நின்று போவது போல எனது வீட்டின் பொருட்களும் அர்த்தமற்றவைகளாகவே ஆகி விடும் நிலை. 

பழைய ஸ்டாம்ப் நிறைய சேர்த்து வைத்திருந்தேன். அவற்றை யார் விரும்பிப் பெற்றுக்கொள்ளுவர் என்று அப்படியே தூக்கிப் போட்டேன். அதே போல நான் பயன்படுத்திய மெத்தை, தலையணை, போர்வை அவைகளையும் குப்பையில் போட்டேன். போட்டோ ஆல்பங்களை கொஞ்சமும் மனம் கோணாமல் அப்படியே கிழித்துக் குப்பையில் போட்டேன். 

தினம் உடுத்தத் தேவையான உள்ளாடைகள், இதர உடைகள் ஒரு பெட்டியில், மிக முக்கியமான ஒரு சில புத்தகங்கள், இரண்டு ஜோடி செருப்பு, செல் போன், சார்ஜ்ர், பேங்க் புத்தகங்கள், செக் புக், ஆதார் பான் வோட்டர் ஐடி பாஸ்போர்ட் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் இவை எல்லாம் ஒரு போல்டரில், தவிர இன்சூரன்ஸ் பேப்பர், வேறு சில ஐடி கார்டுகள், நானும் வானதியும் இருக்கும் ஒரு போட்டோ, ஓரிரு சுவாமி போட்டோ என்று இவை தான் நான் கொண்டு செல்ல வேண்டிய லக்கேஜ்.  மீதி எல்லாமே தேவையற்றவை என்று ஆகிவிட்டன. 

எடுத்து வைத்த பொருட்களை மறுஆய்வு செய்தேன். நிம்மதி தேடி போகிற நேரம் எதற்கு என் மனதைக் குழப்பும் இந்த குடும்ப  போட்டோ, இந்த குலதெய்வ போட்டோ மற்றும் சுவாமி போட்டோ என்று மனதுக்குள் போராட்டம். அடையாளங்கள் இழந்து போவோம் என்று உறுதியாக முடிவு செய்து அவைகளையும் எடுத்து வெளியே வைத்தேன். மனது ஏதோ ஒரு விதத்தில் கனமானது. இருப்பினும் நிச்சயம் லேசானது என்றும் சொல்லலாம். 
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்த பிறகு தான் உணர்ந்தேன்,  ஒரு மனிதனுக்கு இவ்வளவு பொருட்கள் தேவை இல்லை என்று. அதுவும் எதன் மீதும் அளவுக்கு மீறிய பற்று வைக்கக்கூடாது என்றும்தான். எத்தனை வீடு இருந்தாலும் ஒரு வீட்டில் தான் வசிக்க முடியும். எத்தனை பெட் ரூம் இருந்தாலும், ஒரு பெட் ரூமில் தான் உறங்க முடியும். மீதி எல்லாமே பார்க்க, நினைத்துப் பார்க்க, எண்ணி மகிழ... அவ்வளவே. 

இன்னும் பல ஞானம் மனதில் தோன்ற ஆரம்பித்தன. புகழுக்கு, பெருமைக்கு, அதிர்ஷ்டத்துக்கு என்று யாரும் அலையக்கூடாது. வாழ்க்கை ஒரு படுக்கையில் முடியும். பிறகு பூமித்தாய் மடியில் அல்லது நெருப்புக்கு இரையாக. 

போக வேண்டும் என்று முடிவாகி விட்டது. அக்கம்பக்கத்தினரிடம் போய் சொல்லிக் கொண்டேன். வீட்டை இரண்டு முறை சுற்றி வந்தேன். ஆசையாக வளர்த்த அந்த செம்பருத்தி செடி மற்றும் துளசிச்  செடியின் முன்பு  போய் சில விநாடி நின்று பெருமூச்சு விட்டேன். வாசற்படியில்  கதவருகே நிலம் தொட்டு மூன்று முறை வணங்கினேன். "வரும்' போல இருந்த அழுகையை அடக்கிக் கொண்டேன். மிகுந்த திருப்தியுடன் கிளம்பத் தயாரானேன் "நிம்மதி' நோக்கி. எங்கே நிம்மதி, அங்கே என் மதி...!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com