'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 82
By கி. வைத்தியநாதன் | Published On : 03rd April 2022 06:00 AM | Last Updated : 27th May 2022 07:35 PM | அ+அ அ- |

முதலும் கடைசியுமாக, என்னிடம் பிரணாப் முகர்ஜி கடுமையாகக் கோபப்பட்டது அந்த ஒரு தடவைதான். அவரது கோபத்தில் நியாயம் இருக்கிறது என்று எனது மனசாட்சி சொன்னதால், நான் கூனிக் குறுகியபடி அசடு வழிய நின்று கொண்டிருந்தேன்.
""நீ உன்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?'' என்கிற அவரது கேள்விக்குள் பல அர்த்தங்களும் காரணங்களும் இருந்தன. அதன் பின்னணியை எல்லாம் சிந்தித்துப் பார்த்து செயல்படும் வயதில் நான் இருக்கவில்லை.
அடுத்த பத்து நிமிடங்கள், படபடவென இடியும் மின்னலும் போல அவர் எழுப்பிய கேள்விகளுக்கும், திட்டுகளுக்கும் என்னிடம் எந்த பதிலும் கிடையாது. தலை குனிந்தபடியே நின்று கொண்டிருந்தேன். அவரது முகத்தைப் பார்க்க எனக்குத் துணிவிருக்கவில்லை.
நான் அவரது பெயரைப் பயன்படுத்திவிட்டேன் என்பதல்ல அவரது ஆத்திரத்துக்குக் காரணம். ஆபத்து என்று தெரிந்தும், தேவையில்லாத ஒரு முயற்சியில் நான் இறங்கினேன் என்பதால்தான் அவருக்குக் கோபம்.
""ஒரு முறை விசாரணை வளையத்துக்குள் உனது பெயர் வந்துவிட்டால், அது பதிவாகிவிடும் என்பது தெரியுமா? இனிமேல் ஈழப் பிரச்னை, ஈழப் போராளிகள் பிரச்னை என்று எது வந்தாலும் விசாரணை அமைப்புகளின் பார்வை உன்மீதும் விழத் தொடங்கும். யாருக்காவது ஏதாவது, எப்போது நேர்ந்தாலும், உடனடியாக உன்மீதும் சந்தேகப் பார்வை விழும். பத்திரிகையாளன் என்று சொல்லிக் கொள்கிறாய், உனக்கு இதுகூடவா தெரியாது?'' என்கிற அவரது கேள்வியின் 'கனம்' முப்பதாண்டுகளுக்குப் பிறகு இப்போது எனக்கு நன்றாகவே புரிகிறது.
எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ""தவறு செய்துவிட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள்'' என்று சொல்வதற்குக் கூட தைரியம் வரவில்லை. தலைகுனிந்தபடியே நின்று கொண்டிருந்தேன்.
""தில்லியில் இனியும் சுற்றிக் கொண்டிருக்காதே. உடனடியாக சென்னைக்குப் புறப்பட்டுப் போ. மிகமிக அவசியமானால் மட்டுமே நீ தில்லிக்கு வர வேண்டும். நான் என்றல்ல, எந்த அரசியல் தொடர்பு குறித்தும் யாரிடமும் நீ சொல்லக் கூடாது. உன்னுடைய நம்பகத்தன்மையை நீயே கெடுத்துக் கொள்ளாதே. உனது செய்தி நிறுவனத்தை ஒழுங்காக நடத்தும் வேலையைப் பார். அநாவசியமான பிரச்னைகளை வலிய வரவழைத்துக் கொள்ளாதே...''
"என் முன்னால் நிற்காதே போ' என்று சொல்லவில்லை. அவ்வளவுதான். அதே நேரத்தில், நான் என்ன செய்ய வேண்டும்; எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் மறைமுகமாக உணர்த்தி விட்டார்.
அவர் பேசுவதை நிறுத்திவிட்டு, தாடையில் கை வைத்தபடி சற்று நேரம் கண்ணை மூடி அமைதி காத்தார். தனது பைப்பை எடுத்துப் புகையிலையை நிரப்பத் தொடங்கினார். "நான் போகலாம்' என்று சொல்லாமல் சொல்கிறார் என்பதை ஊகித்துக் கொண்டு கிளம்பத் தயாரானேன்.
என்னைக் கோபமாக உற்றுப் பார்த்தபடி கேட்டார்:
""உன்னை இந்த முயற்சியில் இறங்கத் தூண்டியது யார்? எதற்காக, யாருக்காக இந்த ரிஸ்க்கை எடுக்கத் துணிந்தாய்?''
உண்மையைச் சொல்வதா, வேண்டாமா என்கிற தயக்கத்துடன், நான் நடந்ததை சுருக்கமாகச் சொன்னேன். ஆளுநர் பலிராம் பகத் தான் எனக்கு இந்த "ஐடியா' கொடுத்தார் என்று சொன்னவுடன் அவருக்கு வந்ததே பார்க்கலாம் ஆத்திரம். அவர் சொன்னதை நான் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை.
"நான் கிளம்புகிறேன்' என்று சொன்னதும் அவர் தலையாட்டினார். என்மீதான கோபம் சற்று தணிந்திருக்கிறது என்பதை நான் புரிந்து கொண்டேன். அடுத்த நாளே தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் சென்னைக்குக் கிளம்பிவிட்டேன்.
நான் பயணித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், பல்வேறு தமிழக அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் வெவ்வேறு பணிகள் நிமித்தம் தில்லிக்கு வந்து திரும்பிக் கொண்டிருந்தனர். முதல் வகுப்பு ஏசி பெட்டியில் வலம்புரி ஜான் பயணிக்கிறார் என்கிற தகவலை அவர்களில் ஒருவர் தெரிவித்தார். அதற்குப் பிறகு எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. அவரை சந்திக்க விரைந்தேன்.
தமிழக அரசியலில் நான் சந்தித்த விந்தை மனிதர் வலம்புரி ஜான் என்று முன்பே பலமுறை தெரிவித்திருக்கிறேன். எப்படித்தான் அருவிபோல அவரிடமிருந்து வார்த்தைகள் வந்து கொட்டுமோ தெரியாது. அசாத்தியமான தமிழ் அவருடையது. "மின்னலை விழுங்கித் தென்றலைக் கக்கியவர்' என்று மகாகவி பாரதி குறித்த அவரது பதிவை அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.
1984-இல் எம்ஜிஆரால் வழங்கப்பட்ட அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவி 1990-இல் முடிவடைந்திருந்தது. அதற்குப் பிறகும் பல்வேறு நாடாளுமன்ற சிறப்புக் குழுக்களில் அதன் சிறப்பு அழைப்பாளராக அவ்வப்போது தில்லி வந்து கொண்டிருந்தார். இரண்டு பேர் பயணிக்கும் "கூபே' அறையில் அவர் மட்டும் இருந்தார். வழக்கம்போல, சுற்றிலும் புத்தகங்கள்.
எங்கள் பேச்சு தமிழக அரசியல் குறித்துத் திரும்பியது. திமுகவையும், வை. கோபால்சாமி மதிமுக தொடங்க இருப்பதும்தான் எங்களது பேச்சில் முக்கியத்துவம் பெற்றன என்பதைச் சொல்லவா வேண்டும்?
வலம்புரி ஜானும், வை. கோபால்சாமியும் அன்றைய ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். திமுகவில் தங்களது அரசியலைத் தொடங்கியவர்கள். அரசியல்ரீதியாகப் பார்த்தால், வயதால் சற்று இளையவரானாலும் வை. கோபால்சாமியை விட வலம்புரி ஜான் மூத்தவர். இருவருமே அனல் பறக்கும் பேச்சாளர்கள். நல்ல நண்பர்களும்கூட.
""வை. கோபால்சாமி திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறாரே, அவரது அரசியல் வருங்காலம் எப்படி இருக்கும்?''
""அவரால் தனிக்கட்சி தொடங்கி வெற்றி பெற முடியாது. ஏதாவது ஒரு கட்டத்தில் அவர் திமுகவில் சங்கமமாவதைத் தவிர வழியில்லை.''
வலம்புரி ஜானால்தான் அப்படித் தீர்மானமான கருத்துகளைத் தெரிவிக்க முடியும். இத்தனைக்கும் அப்போது வலம்புரி ஜான் எந்தக் கட்சியிலும் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ளாத நிலைமை. ஜெயலலிதாவின் அதிமுகவில் ஜானகி அணி சங்கமமாகிவிட்டிருந்தது. அவரால் திமுகவில் இணைய முடியவில்லை.
ஜனதா தளத்தில் பெயருக்குத் தன்னை இணைத்துக் கொண்டாரே தவிர, அதிலும் அவர் ஐக்கியமாகவில்லை. வலம்புரி ஜான் தனது நண்பர் தொடங்கி இருக்கும் மதிமுகவில் இணைவார் என்று நான் எதிர்பார்த்திருந்த நிலையில், ஜான் சொன்னது எனக்கு வியப்பாக இருந்தது.
""வை. கோபால்சாமி நல்ல பேச்சாளர், இளைஞர்கள் மத்தியில், குறிப்பாக ஈழத் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு இருக்கிறது. அரசியலில் வெற்றி பெற அது மட்டுமே போதாது. அவர் பலமுனை எதிர்ப்புகளை சந்திக்கிறார். பண பலமும், அதிகார பலமும் உள்ள ஜெயலலிதாவும் அதிமுகவும் ஒருபுறம்; கலைஞரின் தலைமையில் உள்ள திமுக மறுபுறம்; மத்திய ஆளும் கட்சியான காங்கிரஸ் அவருக்கு எதிர்ப்பு. இத்தனைக்கும் நடுவில் அவர் எப்படி வெற்றி பெற முடியும்?''
வலம்புரி ஜானின் கணிப்பு என்னை இப்போதும் வியப்பில் ஆழ்த்துகிறது. அவரே தொடர்ந்தார்:
""கலைஞரை சாதாரணமாக எடைபோடாதீர்கள். அவர் மக்கள் செல்வாக்குள்ள எம்ஜிஆரையே எதிர்த்து அரசியல் நடத்தியவர். மதிமுக பிரிந்ததால், அமைப்புரீதியாக திமுக சற்று பலவீனமாகி இருக்கலாம். பலமிழந்து விடவில்லை. வை. கோபால்சாமி வளர்ந்து விடக்கூடாது என்பதில் ஜெயலலிதாவும், கலைஞரும் ஒரே கருத்தில் இருப்பார்கள்.''
""நீங்கள் மதிமுகவில் இணைவீர்கள் என்று நான் எதிர்பார்த்தேன்...''
வலம்புரி ஜான் எதுவும் பேசவில்லை. சிரித்தார். அவருக்கும் அப்படியொரு எண்ணம் இருந்திருக்குமோ என்று நான் நினைக்கிறேன்.
""தமிழக அரசியல் விசித்திரமானது. திராவிடக் கட்சிகள் தேசிய நீரோட்டத்திலிருந்து விலகி நிற்கின்றன. அதே நேரத்தில், அவை தேசிய அரசியலைச் சார்ந்தும் இருக்கின்றன. விடுதலைப் புலிகளின் ஆதரவாளரான வை. கோபால்சாமியை காங்கிரஸ் ஆதரிக்காது. திமுகவுடன் நெருக்கமாக இருக்கும் ஜனதா தளமும் ஆதரிக்காது. வை. கோபால்சாமியால் பாஜகவுடன் சேர அவரது பின்னணி இடம் கொடுக்காது. கம்யூனிஸ்ட்டுகளை மட்டுமே நம்பி அரசியலில் வெற்ற பெற முடியாது.'' - தமிழக அரசியல் குறித்த வலம்புரி ஜானின் கணிப்பு இன்றுவரை சரியாக இருக்கிறது என்பதுதான் ஆச்சரியம்.
இரவில் எனது இருக்கைக்கு தூங்க வந்ததுபோக, மீதம் உள்ள சுமார் 18 மணி நேரம், நான் வலம்புரி ஜானுடன்தான் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் கழித்தேன். கடந்த 30 ஆண்டு இந்திய அரசியலில் ஏற்பட்டிருக்கும் பல மாற்றங்களையும் "வார்த்தைச் சித்தர்' வலம்புரி ஜான் முன்கூட்டியே தெரிவித்திருந்தார் என்பதை என்னவென்பது?
மிகச் சிறந்த அறிவாளி, அற்புதமான மேடைப் பேச்சாளர், அசாத்தியமான ஆங்கிலப் புலமை கொண்டவர். ஆனாலும், வலம்புரி ஜானால் ஏன் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை? எனக்கு விடை தெரியவில்லை.
நரசிம்ம ராவ் தலைமையிலான மத்திய அரசுக்கு நாடாளுமன்றத்தில் தமிழக ஆளும் கட்சியான அதிமுக ஆதரவு அளித்து வந்தாலும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் ஆளுநர் டாக்டர் சென்னா ரெட்டிக்கும் இடையேயான உறவு நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருந்தது. காவிரியில் தண்ணீர் திறந்து விடும்வரை உண்ணா விரதம் மேற்கொள்வதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபோது, இந்தியாவே அதிர்ந்தது. 80 மணி நேரம் மெரினா கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்தார் அவர். கடைசியில் அவரது கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு காவிரியில் நீர் திறந்துவிட வழி வகுத்தது.
உண்ணாவிரதத்தைக் கைவிடக் கோரி ஆளுநர் சென்னா ரெட்டி வற்புறுத்தியும் அதை முதல்வர் ஜெயலலிதா சட்டை செய்யவில்லை. கடைசியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் வி.சி. சுக்லா நேரில் வந்து உறுதி அளித்துத் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதை மத்திய அரசுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகவே ஆளுநர் சென்னா ரெட்டி கருதினார். அவர் மட்டுமல்ல, பிரதமர் உள்ளிட்ட எல்லா மத்திய காங்கிரஸ் தலைவர்களும் கூட.
அது முதல் மோதல் அதிகரித்தது. வழக்கமான ஆளுநர் உரை இல்லாமல் சட்டப் பேரவை கூட்டப்பட்டது. அனைத்துப் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியிலிருந்து ஆளுநர் அகற்றப்பட்டு முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் பல்கலைக்கழகங்களைக் கொண்டு வர சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆளுநரின் நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்கும்படி எல்லா அதிகாரிகளுக்கும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அத்துடன் நின்றுவிடவில்லை. அரசு வளாகங்களிலும், அரங்கங்களிலும் ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அவ்வளவு ஏன், ஆளுநரின் பாதுகாப்பு வரை குறைக்கப்பட்டது.
"ஆளுநர் என்னிடம் முறை தவறி நடந்து கொண்டார்' என்கிற கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்ததுடன், "சென்னா ரெட்டி ஆளுநராக இருக்கும்வரை இனி நான் ஆளுநர் மாளிகைக்குள் அடியெடுத்து வைக்க மாட்டேன்' என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபோது, ஆளுநர் - முதல்வர் மோதல் உச்சகட்டத்தை எட்டியது.
குடியரசுத் தலைவராக இருந்த சங்கர் தயாள் சர்மா அடிக்கடி திருப்பதி தரிசனத்துக்கு வருவது வழக்கம். அவர் திருப்பதியில் இருக்கும்போது, அவரை சந்திக்க நான் செல்வதுண்டு. அப்படி ஒரு நாள், திருமலையில் உள்ள பத்மாவதி கெஸ்ட் ஹெüசில் தங்கியிருந்த குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவை சந்திக்கச் சென்றிருந்தேன். குடியரசுத் தலைவரை சந்தித்துவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தவர் அப்போதைய தமிழக ஆளுநர் டாக்டர் மாரி சென்னா ரெட்டி!
(தொடரும்)