'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 120

தமிழ்நாடு காங்கிரஸிலும், திமுகவிலும் ஒருவித பரபரப்பு வெளிப்படையாகவே தெரிந்தது என்றால், ஆளும் அதிமுகவில் விசித்திரமான அமைதி நிலவியது.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 120

தமிழ்நாடு காங்கிரஸிலும், திமுகவிலும் ஒருவித பரபரப்பு வெளிப்படையாகவே தெரிந்தது என்றால், ஆளும் அதிமுகவில் விசித்திரமான அமைதி நிலவியது. இரண்டு முக்கியமான திராவிடக் கட்சிகளும் காங்கிரஸின் முடிவுக்காகக் காத்திருந்தன என்றால், ஏனைய சிறிய கட்சிகளும்கூடக் காங்கிரஸின் முடிவுக்காகத்தான் காத்திருந்தன. 

திமுக அல்லது அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தால், கூட்டணி அமைக்காத கட்சியுடன் கூட்டு சேரக் காத்திருந்தன அந்தக் கட்சிகள். காங்கிரஸூடன் கூட்டணி அமையாவிட்டால், தங்களை இழுக்க திராவிடக் கட்சிகளில் ஒன்று நிச்சயம் முன்வரும் என்பது அந்தக் கட்சிகளுக்குத் தெரியும்.
இப்போது ருக்மிணி லட்சுமிபதி சாலை என்று அழைக்கப்படும் அன்றைய மார்ஷல்ஸ் சாலையில் அமைந்திருந்த குரு ஹோட்டல் அரசியல் கட்சிகள் கூடிப் பேசும் முக்கிய இடங்களில் ஒன்றாக மாறி இருந்தது. ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு எதிரே அமைந்திருந்த அந்த ஹோட்டலில், கூட்டணி முயற்சியில் ஈடுபட்டிருந்தார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வை. கோபால்சாமி.

வழக்குரைஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்தான் அப்போது மதிமுகவின் செய்தித் தொடர்பாளர். சொல்லப்போனால், அரசியல் கட்சியின் செய்தித் தொடர்பாளர் என்று தமிழகத்தில் முதன்முதலில் இயங்கியவர் அவர்தான் என்று எனது நினைவு. அவரைத் தொடர்பு கொண்டு, மதிமுக பொதுச் செயலாளர் வை. கோபால்சாமியை சந்திக்க குரு ஹோட்டலுக்குச் சென்றேன்.

பாமக நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், ஜனதா தளத் தலைவர் ஜி.ஏ. வடிவேலு ஆகியோருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருந்தார் வை. கோபால்சாமி. கம்யூனிஸ்ட் கட்சிகளின் முக்கியமான தலைவர்களும் அவருடன் தொடர்பில் இருந்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைமையுடன் அவருக்கு இருந்த நெருக்கம் காரணமாக, அந்தக் கட்சி மதிமுகவுடன் சேர்வது உறுதியானது.

""வர இருக்கும் தேர்தலில் மதிமுகவின் அணுகுமுறை எப்படி இருக்கப் போகிறது?'' என்கிற கேள்வியுடன் மதிமுக பொதுச்செயலாளர் வை. கோபால்சாமியிடம் பேச்சைத் தொடங்கினேன்.

""நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க இந்திய ராணுவத்தை அனுப்பிய காங்கிரஸ் கட்சியுடனும், அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் கட்சியினரோடும் எந்தவிதத் தேர்தல் உடன்பாடும் சாத்தியமில்லை.''

""காங்கிரஸ் - அதிமுக கூட்டணி அமையாவிட்டால், அதிமுக கூட்டணியில் நீங்கள் இணைவீர்களா?''

""ஊழலின் மொத்த உருவம் அதிமுக. ஈழத்தமிழர்களின் ஒரே இயக்கமான விடுதலைப் புலிகள் இயக்கத்தை எதிர்க்கும் அதிமுகவுடனும் கூட்டணி இல்லை...''

""திமுக, அதிமுக, காங்கிரஸ் என்று மூன்று முக்கியக் கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்றால், நீங்கள் தனித்துப் போட்டியிடப் போகிறீர்களா?''

""அந்த மூன்று கட்சிகளையும் அகற்றி நிறுத்தி, ஏனைய கட்சிகளை ஒருங்கிணைத்து மூன்றாவது அணி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாமக, ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். திமுக, அதிமுக, காங்கிரஸ் என்கிற மூன்று ஊழல் கட்சிகளையும் புறக்கணித்து எங்களது மூன்றாவது அணிக்கு மக்கள் ஆதரவளிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.''

""மற்ற கட்சிகள் தங்களது கூட்டணி ஆலோசனையை ஏற்றுக் கொண்டிருக்கின்றனவா?''

""பேசிக் கொண்டிருக்கிறோம். விரைவில் நல்ல முடிவு எட்டப்படும். கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள். தமிழகத்தில் மறுமலர்ச்சி ஏற்படும்!''

""திண்டிவனம் சென்று பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்தீர்களே, அவர் உங்கள் கூட்டணியில் இணைய சம்மதித்திருக்கிறாரா?''

""கூட்டணி குறித்து எந்த முடிவும் நாங்கள் யாரும் இதுவரையில் எடுக்கவில்லை. ஆனால், ஊழல் அதிமுகவுடனும், திமுகவுடனும் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம்.''

""நாங்கள் என்று சொன்னால், அதில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அடங்குமா?''

""அதை நீங்கள் அவர்களிடம் போய் கேளுங்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை எனக்குத் தெரிவியுங்கள். காங்கிரஸ் இருக்கும் அணியில் கம்யூனிஸ்ட்டுகள் இருக்க வாய்ப்பில்லை என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும்.''

""காங்கிரஸ் இல்லாத அணியில் அவர்கள் சேர்ந்தால்...?''

""அதைத்தான் அவர்களிடம் போய்க் கேளுங்கள்...''

அதற்கு மேலும் கேள்விகள் கேட்டால், வை. கோபால்சாமி பொறுமை இழந்துவிடுவார் என்று எனக்குத் தோன்றியது. எப்படியாவது மூன்றாவது அணியை அமைக்க வேண்டும் என்கிற முனைப்பில் அவர் இருந்தார்.  நான் கிளம்பிவிட்டேன்.

காங்கிரஸூடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக தயாராக இருக்கிறது என்பதை இடதுசாரிக் கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை. ஒரு முறைக்கு இரண்டு தடவை திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றியும்கூட, திமுக தலைவர் மு. கருணாநிதி காங்கிரஸூக்கு நேசக்கரம் நீட்டுவதை அவர்கள் சந்தர்ப்பவாதமாகப் பார்த்தனர்.

"பேசினால் பேசுவது தமிழர் பண்பாடு' என்று திமுக தலைவர் காங்கிரஸூடன் பேச்சுவார்த்தைக்குப் பச்சைக்கொடி காட்டியதை அவர்கள் கடுமையாக விமர்சித்தனர். ""பாரதிய ஜனதா கட்சி, அதிமுக பேச வந்தால், தமிழர் பண்பாடு என்று கூறி அவர்களுடனும் கருணாநிதி பேசுவாரா?'' என்று கோபமாக என்னிடம் கேட்டார், அப்போது மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்த என். வரதராஜன்.

மதிமுகவைத் தவிர, வாழப்பாடியின் தமிழக இந்திரா காங்கிரஸ், ஜனதா தளம், பாமக, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட ஏனைய கட்சிகள் எல்லாமே, அதிமுக - காங்கிரஸ் கூட்டணி அமையும் என்றும், தாங்கள் திமுக கூட்டணியில் இடம் பெறுவோம் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தன. 

ஜனதா தளத்தின் மூத்த தலைவர் இரா. செழியனை சந்தித்தேன். இதுபோன்ற நேரங்களில் அரசியல் தெளிவு பெற நான் அவ்வப்போது நாடும் தலைவர்களில் அவர் முக்கியமானவர்.

""மூன்றாவது அணி அமைவது அவ்வளவு எளிதல்ல. எல்லா கட்சிகளையும் ஒருங்கிணைப்பது சாத்தியமில்லை.  யார் தலைமையில் இயங்குவது என்பதுகூட இரண்டாவது பிரச்னைதான். முதலில் இணைவதே சிரமம். விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் மதிமுகவுடன் வாழப்பாடி ராமமூர்த்தியின் இந்திரா காங்கிரஸ் எப்படி ஒரே கூட்டணியில் இருக்க முடியும்?'' என்கிற அவரது கேள்வியின் நியாயம் புரிந்தது.

மதிமுக, ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அடங்கிய கூட்டணி ஏற்படும் என்று இரா. செழியன் உறுதியாகத் தெரிவித்தார். அவர் இன்னொரு செய்தியையும் கூறினார்.

""திமுக - காங்கிரஸ் கூட்டணி ஏற்படாது. காங்கிரஸூடன் பேசத் தயார் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருப்பது ராஜதந்திரம். அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். அந்த கூட்டணி அமைவதைத் தடுக்க வேண்டும். திமுக - காங்கிரஸ் ரகசியப் பேச்சுவார்த்தை என்பதுபோல தெரிவித்தால், ஜெயலலிதா காங்கிரஸை நிராகரிப்பார். காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால், அது தனக்கு சாதகமாகும் என்று அவர் திட்டமிடுகிறார்...'' - இது இரா. செழியன் முன்கூட்டியே தெரிவித்த கணிப்பு!

தன்னை எந்தவிதத்திலும் அரசியலுக்கு இழுக்கக் கூடாது என்று ரஜினிகாந்த் தெரிவித்திருந்த நிலையில் ஆர்.எம். வீரப்பனின் எம்.ஜி.ஆர். கழகம், ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவை எதிர்க்கும் அணிக்கு ஆதரவு தருவது என்று முடிவெடுத்தது. காங்கிரஸூடன் கூட்டணி அமைத்தாலும், அமைக்காவிட்டாலும் திமுகவுக்கு ஆதரவு என்பதுதான் அதன் அர்த்தம்.

ரஜினிகாந்தின் முடிவால் தனித்து விடப்பட்ட திருநாவுக்கரசின் நிலைமைதான் தர்மசங்கடமாகிவிட்டது. ஆரம்பத்தில் இருந்து எம்.ஜி.ஆருடன் இருந்த திருநாவுக்கரசு திமுக ஆதரவு நிலைப்பாடு எடுக்கத் தயாராக இல்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தலில் பங்கு பெறாமல் இருக்கவும் முடியாது. தடாலடியாக அவர் எடுத்த முடிவு, ரஜினிகாந்தையேகூட ஆச்சரியப்படுத்தி இருக்கும்.

அதிமுகவில் இணைவது என்று எஸ். திருநாவுக்கரசு முடிவெடுப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. திருநாவுக்கரசு மட்டுமல்ல, அவருடன் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன், எஸ். ராகவானந்தம் என்று அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற தலைவர்கள் பலர் ஜெயலலிதாவை சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்.

சென்னையில் திருநாவுக்கரசு உள்ளிட்ட பழைய தலைவர்கள் மீண்டும் அதிமுகவுக்குத் திரும்புகிறார்கள் என்றால், தில்லியில் அதிமுக மூத்த அமைச்சர்கள் எஸ்.டி. சோமசுந்தரமும், முத்துசாமியும் பிரதமரை சந்திக்கக் காத்திருந்தனர். அவர்கள் பிரதமரை சந்திக்கப் போகிறார்கள் என்கிற செய்தி கிடைத்ததும், அதிமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியானது என்று எனக்குத் தெரிந்துவிட்டது.

தில்லிக்குக் கிளம்பிப் போவது என்று முடிவெடுத்தேன். நான் தில்லிக்குப் போய்ச் சேருவதற்குள், பிரதமருடனான அவர்களது முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை முடிந்திருந்தது. என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை.

அதிமுக - காங்கிரஸ் கூட்டணி அவ்வளவு சுலபமாக ஏற்பட்டுவிடவில்லை. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியனும் சரி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் குமரி அனந்தனும் சரி, கூட்டணி குறித்து எதுவும் தங்களுக்குத் தெரியாது என்று சொன்னார்கள். மூப்பனாரும், ப. சிதம்பரமும் பிரதமரைச் சந்தித்து அதிமுக கூட்டணி வேண்டாம் என்று வலியுறுத்தியதாகத் தகவல் கிடைத்தது. அவர்களை நான் சந்திக்கவில்லை.

ஷாஜஹான் சாலையில் உள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் வி.என். காட்கிலை சந்திக்கப் போனேன். மாலையில் காங்கிரஸ் செயற்குழு கூடுவதாகவும் அதில்தான் கூட்டணி குறித்த முடிவு எடுக்கப்படும் என்றும் சொல்லி நழுவிவிட்டார் அவர். 

அதிமுக அமைச்சர்களுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார் மத்திய இணையமைச்சர் கே.வீ. தங்கபாலு. இரண்டு மூன்று தடவை ஹரீஷ்சந்திர மாத்தூர் லேனிலுள்ள அவரது வீட்டுக்குப் போனதுதான் மிச்சம். அவரை சந்திக்க முடியவில்லை.

செயற்குழு உறுப்பினர் குலாம்நபி ஆஸாதை சந்தித்தால் என்ன என்று தோன்றியது. அவருடன் பேசியபோது கூட்டணியில் நடந்த பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.

காங்கிரஸ் - அதிமுக கூட்டணி என்பது முடிவான பிறகும் ஒரு சிக்கல் தடையாக இருந்தது. கூட்டணி குறித்து யார் அறிவிப்பது என்பதில்தான் அந்தக் கட்சிகளுக்கு இடையே சிக்கல்.

""அதிமுகவுடன் கூட்டணியை விரும்பியது காங்கிரஸ்தான் என்கிற தோற்றம் ஏற்பட வேண்டும். அதனால் காங்கிரஸ்தான் கூட்டணி குறித்து அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் விரும்புகிறார்'' என்று கோரிக்கை வைத்தார் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் ஜி. சுவாமிநாதன். பிரதமரும் சரி, காங்கிரஸூம் சரி அதற்கு சம்மதிக்கவில்லை.

""காங்கிரஸ் - அதிமுக உறவை முறித்தவர் ஜெயலலிதாதான். எனவே அவர்தான் மீண்டும் உறவு மலர்ந்ததை அறிவிக்க வேண்டும்'' என்பது காங்கிரஸின் பிடிவாதம்.

""கூட்டணியை எதிர்த்த காங்கிரஸாருக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது'' என்பது ஜெயலலிதா தரப்பு நிபந்தனை. ""யாருக்குப் போட்டியிட வாய்ப்பளிப்பது என்பது குறித்து அதிமுக வற்புறுத்த முடியாது'' என்பது காங்கிரஸ் தரப்பு நிராகரிப்பு.

இதுபோன்ற பல பிரச்னைகளையும் கடந்து அதிமுக - காங்கிரஸ் கூட்டணி காங்கிரஸால் தில்லியில் இருந்தும், அதிமுகவால் சென்னையில் இருந்தும் அறிவிக்கப்பட்டது. கூட்டணி அறிவிப்பு வெளியான அடுத்த சில மணி நேரங்களில், அமெரிக்காவிலிருந்து நடிகர் ரஜினிகாந்தின் அறிக்கை வெளியானது. அந்த அறிக்கை தமிழக அரசியலையே திசைதிருப்பி விட்டது!

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com