ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ரத்தம் கெடுதல்... தோலில் பிரச்னை!

என் வயது 35. இரண்டு வயதில் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்து கழுத்து முதல் கால் வரை சிறு கொப்புளங்களாகத் தோன்றி பின்பு பெரியதாக ஆகி, சீழ் வைத்து உடைந்து பின் அந்த இடம் கருப்பு வடுவாகி
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ரத்தம் கெடுதல்... தோலில் பிரச்னை!

என் வயது 35. இரண்டு வயதில் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்து கழுத்து முதல் கால் வரை சிறு கொப்புளங்களாகத் தோன்றி பின்பு பெரியதாக ஆகி, சீழ் வைத்து உடைந்து பின் அந்த இடம் கருப்பு வடுவாகிறது. என்னைப் பார்க்க எனக்கே வெறுப்பாக உள்ளது. அரிப்பு ஏற்பட்டு சொறிந்தால் அந்த இடத்தில் படை போல் தோன்றி, தோலில் இருந்து திரவம் போல கசிகிறது. கட்டி ரணமாக உள்ளது. இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை. ஆனால் பயமாக உள்ளது. இது எதனால்? எப்படிக் குணப்படுத்துவது?

அபிராமசுந்தரி,
மயிலாடுதுறை.

ஏழு வகையான தாதுக்களில் ஒன்றாகிய ரத்தம் ஒரு போதும் தானாகவே கெடுவதில்லை. பித்த தோஷத்தின் சீற்றத்துக்கு எவை காரணமாகிறதோ அவை ரத்தத்தையும் உடனடியாகக் கெடுத்துவிடும் தன்மையுடையவை. அதிக கோபம், வருத்தம், பயம், உழைப்பினால் சோர்வு, பட்டினி, சீரணத்தில் எரிச்சலை உருவாக்கும் உணவுகள் (ஊறுகாய், கரம் மசாலா போன்றவை), காரம், புளி, உப்பு, ஊடுருவும் தன்மை, சூடான வீர்யம் கொண்ட உணவு, நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும் மிளகாய்ப் பொடி, மிளகு, பட்டை போன்றவை நல்லெண்ணெய், புண்ணாக்கு, கொள்ளு, கடுகு, மீன், ஆடு, தயிர், மோர், சீஸ், தயிர் மேல் நிற்கும் தண்ணீர், ஆறிய கஞ்சி, பீர், மதுபானம், புளிப்பான பழங்கள், ஆடை நீக்கிய புளித்த தயிர் ஆகியவை பித்த சீற்றத்தை ஏற்படுத்தி, ரத்தத்தையும் கெடுத்துவிடும். நீர்த்த உணவு, நெய்ப்பு, செரிப்பதில் கடினமானவை, பகல் தூக்கம், நெருப்பின் அருகில் நெடுநேரம் இருத்தல், கடும் வெயிலில் வெளியே சுற்றித் திரிதல், அஜீரணம், ஒவ்வாமை உணவுகள் ஆகியவை ரத்தத்தை நேரடியாகவே கெடுத்துவிடும் ஆபத்தான விஷயங்களாகும்.

மேற்கூறிய காரணங்களால் மனிதர்களுக்கு பித்த - ரத்த சீற்றம் ஏற்பட்டு, நீங்கள் குறிப்பிடும் வகையில் கடும் தோல் உபாதைகளை ஏற்படுத்தும். இதில் கெட்டுள்ள பித்தத்தை, ரத்தத்திலிருந்து பிரித்து வெளியேற்ற வேண்டும். சமமான குணங்களைக் கொண்ட இந்த இரு வஸ்துகளையும் பிரிப்பது என்பது சாமான்ய விஷயமல்ல. அதைச் சாதிக்கக் கூடிய சுவைகளாகிய கசப்பும், துவர்ப்பும் மட்டுமே நீங்கள் சில நாட்களுக்கு உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்த வேண்டி வரும். இந்த இரு சுவைகளையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவம் பொதுவாகவே மனிதர்களுக்கு குறைவே என்பதுடன், நாக்கிலுள்ள ருசி கோளங்களின் அமைப்பும் அவற்றை ஏற்க அதிக அளவில் இல்லாதிருப்பதும் வேறு ஒரு காரணமாகும்.

பேய்ப்புடல், வேப்பம்பட்டை, கடுகு ரோஹிணி, மரமஞ்சள், வட்டத்திருப்பி, சிறுகாஞ்சுரி வேர், பர்பாடகப்புல், நீர் பிரம்மி போன்ற கசப்பான மூலிகைகளின் சேர்க்கையினால் தயாரிக்கப்படும் கஷாயத்தையும், நன்னாரி வேர்பட்டை, சுக்கு, கடுக்காய் ஆகியவற்றின் சேர்க்கையினால் தயாரிக்கப்படும் கஷாயத்தையும் கலந்து காலை, மாலை என இருவேளை வெறும் வயிற்றில் சுமார் நாற்பத்தி எட்டு நாட்களுக்குத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பித்த - ரத்த கெடுதிகளைப் பிரித்துத் தனியாக்கலாம்.

அதன் பிறகு, வாய்விடங்கம், நெல்லிக்காய், கடுக்காய், சிவதை வேர் போன்ற மூலிகைகளின் கலப்பினால் உருவாக்கப்படும் லேகிய மருந்தைச் சாப்பிட்டு, நீர் பேதியாக குடல் உட்புற தோஷங்களை வெளியேற்றிய பிறகு, ரத்த சுத்திக்கான மூலிகைகளைச் சாப்பிட வேண்டும். நீர்க்கசிவு நின்று தோல் வறண்ட நிலைக்கு மாறும்போது, மூலிகைத் தைலங்களை உடலில் தேய்த்துக் குளிப்பதால், உங்கள் உடல் உபாதைகள் குணமாக வாய்ப்பிருக்கிறது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com