காணாமல் போன நகை

அன்று அமாவாசை. நல்ல அடர்த்தியான கும்மிருட்டு. நடு நிசி இரண்டு மணி. தெருவில் நாய்களின் குரைப்புச் சத்தம் கூட அடங்கி விட்டது.
காணாமல் போன நகை

அன்று அமாவாசை. நல்ல அடர்த்தியான கும்மிருட்டு. நடு நிசி இரண்டு மணி. தெருவில் நாய்களின் குரைப்புச் சத்தம் கூட அடங்கி விட்டது. அம்மா, தங்கைகள் தாரா, மீராவுடன் படுத்துக் கொண்டு தூங்காமல் விழித்துக் கொண்டிருந்த காவேரி, சுறுசுறுப்பாய் எழுந்தாள். வீட்டில் இருந்த ஒரே பெஞ்சுக்
கடியில் குனிந்து மறைவாக வைத்திருந்த பையை எடுத்துக் கொண்டாள். சரேலென்று வாசல் கதவைத் திறந்து வெளியே வந்தாள். குடித்துவிட்டு திண்ணையில் போதையில் படுத்திருந்த அப்பாவை ஒரு நிமிடம் நின்று பார்த்து, "என்னை மன்னிச்சுடு அப்பா' என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள். தெருவில் இறங்கி ... முனையில் நின்று கொண்டிருந்த சரவணனுடன் இணைந்து நடக்கலானாள்.

""காவேரி, அடுத்த வாரம் தானே பிளான் போட்டிருந்தோம். ஏன் இன்னிக்கே அதுவும் இந்த ராத்திரி நேரத்தில் ஒருவருக்கும் தெரியாமல் வரச்சொல்லி மெúஸஜ்'' ஸ்கூட்டரை ஸ்டார்ட் பண்ணிய சரவணன் தயக்கத்துடன் கேட்க...
"" பிளானெல்லாம் மாறிப் போச்சுங்க. யாரும் பாக்கிறதுக்கு முந்தி நாம இப்போ வெரசா உங்க இடத்துக்குப்போயிடணும். அங்க வந்து எல்லாம் சொல்றேன்''
காவேரி பின்னால் உட்கார ஸ்கூட்டர் தாம்பரம் நோக்கி விரைந்தது.
சூரியனின் கிரணங்கள் சுளீரென்று மேலே பட்டவுடன் தான் ரங்கசாமிக்கு கொஞ்சமாவது தூக்கம் குறையும். அதன் பின் இரண்டு மணி நேரமாவது கழித்துதான் எழுந்திருப்பான்.
அன்று என்னவோ தெரியவில்லை. அவனுக்கு சீக்கிரமே விடியற்காலையிலேயே போதை தெளிந்து விட்டது. "நேத்து நைட் அடிச்ச சரக்குல வீரியம் பத்தலையோ...' யோசித்தவாறு எழுந்து கொண்டான். "சரக்கும் சரியில்லை...தூக்கமும் சரியில்லை... தலை வலிக்கிறதே.இன்னும் காவேரி கூட எந்திரிக்கல்ல போல இருக்கே. இந்நேரம் வாசலில் தண்ணி தெளிச்சுக் கூட்டிக் கோலம் போட்டிருப்பாளே. உள்ளே போய் பார்க்கலாம்' ரங்கசாமி பாயைச் சுருட்டிக் கொண்டு உள்ளே போவதற்கு எழுந்தான்.
கதவைத் தட்ட வேண்டிய அவசியமே இல்லாமல் கை வைத்ததும் திறந்து கொண்டதில் ஆச்சரியத்
துடன் உள்ளே வந்தான். "படுக்கையில் காவேரியைக் காணோமே? எங்கே தொலைந்தாள்? காபி வச்சுத் தரச்சொல்லலாம். தலைவலி மண்டையை பிளக்கிறது'ன்னு பார்த்தா...சமையலறையுடன் இணைந்த கூடம், புழக்கடை, கிணற்றடி எல்லா இடங்களிலும் தேடினான். எங்கேயும் காவேரி இல்லை... மனசில் ஏதோ குறு குறுத்தது. உள்ளே ஓடி மேலே பலகையில் வைத்திருந்த தன்னுடைய சொத்தான பழைய தகரப் பெட்டியை எடுத்து பார்த்தான். பூட்டைக் காணோம்.
"அய்யய்யோ' முனகலுடன் பெட்டியைத் திறந்து பார்த்தான். அவன் பயந்தபடி அதைக் காணோம். மனைவி தங்கம்மாவுக்குத் தெரியாமல் அரிசிப்பானையில் அவள் பதுக்கி வைத்திருந்த நகைப் பையை, கொஞ்ச நாளைக்கு குடிச் செலவுக்கு கவலை இல்லைன்னு நேத்துத் தானே எடுத்து இந்தப் பெட்டில வச்சேன். இதை எப்படியோ தெரிஞ்சுக்கிட்டு அந்த சிறுக்கி... ரெண்டும் ரெண்டும் நாலு எனமனசு கணக்குப் போட்டது. ராவோட ராவா நகையையும் எடுத்துக்கிட்டு வீட்டை விட்டு ஓடிட்டா. மனைவியை உலுக்கினான்.
""என்னாடி தூக்கம்... இடி விழுந்துடிச்சு தெரியுமா... ஓம் செல்ல மக காவேரி எவனோடவோ ஓடிப் போயிட்டா'' தெருவுக்கே கேட்கும்படிக் கத்தினான்.
""என்ன ஆச்சு ஓவர் மப்புலே பெனாத்தறிங்க'' தூக்கம் கலையாத குரலில் தங்கம்மா முனகினாள்.
"" நீயே போய்ப் பாரு'' உறுமினான். மகள் ஓடிப் போனதை விட தான் அபேஸ் பண்ணியிருந்த நகையைத் தூக்கிண்டு போயிட்டாளே என்ற ஆத்திரம் உள்ளுக்குள் குமுறியது. திருடனுக்குத் தேள் கொட்டின மாதிரி... அதை வெளியேவும் சொல்ல முடியாத ஆத்திரத்தில் கத்திக் கொண்டிருந்தான்.
"வெய்யிலு சுள்ளுனு உடம்பு மேலே உறைக்கிறவரைக்கும் எந்திரிக்காத மனுஷன், இன்னிக்கு இப்படி எந்திருச்சு உளறிக்கிட்டு'
""என்னங்க சொல்றீங்க, அடியேய் மீரா, தாரா எந்திருங்கடி. உங்க அக்கா எங்கே போனான்னு பாருங்கடி...'' இளைய மகள்களையும் எழுப்பித் தானும் எழுந்து கொண்டாள்.
மூவருமாக வாசல், கிணற்றடி, சமையலறை என்று அந்த சிறிய வீட்டில் புழங்கக் கூடிய எல்லா இடங்களையும் ஓடி ஓடிப் போய் தேடினர். எங்கேயும் இல்லாததால், "கணவர் சொல்வதுபோல் வீட்டை விட்டு ஓடிட்டாளோ'. அந்த வார்த்தைதான் இந்த மாதிரி நேரங்களில் மனசில் தோன்றுகிறது.
திடுதிப்பென்று, அதுவும் காவேரி போய்... என்ன பிரச்னை... ஏன் இப்படி செய்தாள்... ஒன்றுமே புரியல்லியே ...
""ஏன்டி, உங்ககிட்டே ஏதாவது சொன்னாளா உங்கக்கா... எப்பப் பாத்தாலும் மூணு பேரும் குசு குசுன்னு எதையாவது பேசிக்கிட்டே இருப்பீங்களே?''
""நாங்க ஒண்ணும் தப்பா பேச மாட்டோம். அக்கா தான் எங்களுக்கு புத்திமதி சொல்லிட்டே இருப்பா. நம்ம குடும்ப சூழ்நிலையால் எனக்குத்தான் எட்டாவதுக்கு மேலே படிக்க முடியலை. நீங்க ரெண்டு பேரும் நல்லா படிக்கணும். வாழ்க்கையிலே முன்னுக்கு வந்து நம்ம குடும்பத்துக்குப் பெருமை சேர்க்கணும். அப்பாவை மதிக்கணும். அவர் எந்நேரமும் குடிக்கிறார். வேலைக்குப் போய் ஒத்தைப் பைசா சம்பாதிக்கிறதில்லைங்கற தெல்லாம் உண்மைதான். இருந்தாலும் அவர் நம்மையெல்லாம் பெற்ற அப்பாயில்லையா? அவர் இந்தக் குடி ராட்சஷன் கிட்டேயிருந்து புத்தி தெளிஞ்சு மீண்டு வரணும்னு நாமெல்லாம் கடவுள் கிட்டேவேண்டிப்போம். அப்புறம் நம்ப அம்மா நெல் அரவை மெஷினில் போய் பாடுபட்டு சம்பாரிச்சு குடும்பத்தை நடத்தறாங்க. அவங்க கஷ்டத்தையும்
நாம புரிஞ்சுக்கணும். அப்படி இப்படின்னு எங்களைத் தூங்க விடாம ரம்பம் போடுவா. இப்போ அவளே இப்படி பண்ணியிருக்காளேம்மா. எல்லாம் ஊருக்கு உபதேசம் தான்''
ரெண்டுபேரும் கோரஸாகச் சொன்னதும்...
""அதானே... அப்படித்தானே அவ பொறுப்பா இருந்தா... நீ பாவம் இவ்வளவு சிரமப்பட்டு குடும்பத்துக்காக உழைக்கிறேயே அம்மா... தங்கைகள் படிப்புச்
செலவுக்காவது நானும் கொஞ்சம் சம்பாதிக்கிறேனம்மான்னு, தெரிஞ்சவங்களுக்கு மாவு அரைச்சுத் தரேன்னு கிரைண்டர் வாங்கித் தரச்சொல்லி பாவம்... என்னை வீட்லே ஒரு வேலை செய்ய விடாம உழைச்சுக் கொட்டினாளே... இப்போ திடீர்னு இப்படி செஞ்சுட்டாளே... ஹும்... அவளும் தான் எத்தனைநாளைக்குபொறுமையாயிருப்பாள். தன் வழியைத் தானே தேடிக்கிட்டுப் போயிட்டா போலிருக்கு... அப்பன்காரன் அடவா இருந்தா இப்படியெல்லாம் நடக்குமா?'' தங்கம்மாவும்அழுதுகொண்டே பலவும் சொல்லி புலம்பினாள்.
""ஆமாம் என்னையைச் சொல்லு... உனக்கு பொண்ணுங்களை சரியா வளக்கத் தெரியல்லை''
ரங்கசாமி முனகிக்கொண்டே குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்க அங்கிருந்து நகர்ந்து வாசல் திண்ணைக்குப் போனான். அவனுக்கும் காவேரி மீது ஒரு படி அதிகமாகவே பாசம் உண்டு. அவள் ஒருத்திதான் அவனை மதித்து அப்பா அப்பான்னு பிரியம் காட்டி, கேட்டதை செஞ்சு கொடுத்து, ""இப்படிக் குடிச்சீங்கன்னா உடம்பு கெட்டுப் போயிடும்ப்பா''ன்னு உருகுவாள். அவளா இப்படி செஞ்சாள்? குடிகாரனானாலும் அந்த நேரம் ஒரு தகப்பனாய் வருந்தினான். இந்த நகை விஷயம் வேறு உதைத்தது. வெகு நேரம் குழம்பி குழம்பி, இதெல்லாம் வேலைக்காவாது... ஒரு குவார்ட்டர் அடிச்சாத்தான் சரியாகும்னு டாஸ் மாக் கடைக்கு கிளம்பினான்.
இவர்கள் கலாட்டாவில் அக்கம் பக்கத்து ஆட்கள், ""என்ன ஆச்சு தங்கம்மா... ஏதும் பிரச்னையா... உங்க வீட்டுக்காரர் எதோ சத்தம் போட்டாரே'' என்று வர ஆரம்பித்தனர்.
"ஒன்றும் இல்லம்மா... அவரு அப்படித்தான் கத்துவாரு'' என்று அவர்களை அனுப்பினாள் தங்கம்மா.
"ஹூம்... எங்கேன்னு காத்துக்கிட்டு வந்துடுவாங்க... அடுத்த வீட்டை ஆராய... என்ன ஆச்சு... என்ன செய்யறது... எங்கே போய் தேடறதுன்னு நமக்கே விவரம் ஒண்ணும் புரியல... இப்போதைக்கு எதையும் யாரிடமும் சொல்லக் கூடாது. எப்பவும் போல இருக்கணும். அதுதான் சரி.
""எனக்கு வேலைக்கிப் போக நேரமாயிடிச்சி... வெறுமனே ஒரு சோற்றை மட்டுமாவது வடிப்போம். இதுங்க ரெண்டும் தின்னுட்டு ஸ்கூலுக்குப் போகட்டும். மகள் ஓடிப் போன கவலையை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு சுறுசுறுப்பை வரவழைத்துக் கொண்டு எழுந்து சமையலறைக்குப் போனாள்.
மனதுக்குள் கேள்விகள் குடைந்தன.
"நம்ப பெண்ணா இப்படிச் செய்தாள்... எத்தனை வெகுளியாய் வெள்ளந்தியாய் இருப்பாள். யாருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கும். சாதாரணமாய் அப்படிச் சட்டென்று ஆண்களுடன் பேசக் கூட மாட்டாளே. இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா? என்று இருந்து கொண்டு அவளா இப்படிச் செய்திருப்பாள். மனசு உலைக்களனாய் கொதிக்க, கேஸ் அடுப்பைப் பற்ற வைத்து குக்கரில் தண்ணீரை ஊற்றி உலை வைத்தாள். இந்த அடுப்பு , குக்கர் இரண்டுமே சிக்கனமாக குடும்பத்தை கவனித்து, காவேரி முனைந்து வாங்கியது தானே என்ற நினைவு தோன்றி கண்கள் குளம் கட்ட, அரிசிப் பானையைத் திறந்தவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஐயோ இதிலிருந்த நகைப் பையைக் காணோமே...
பதினைந்து பவுன் நகை... மூணு பொண்ணுங்களை பெத்துருக்கோமேன்னு குருவி சேக்கற மாதிரி கொஞ்சம் கொஞ்சமா பணத்தை சேமித்து நகைக் கடையிலே சீட்டுக் கட்டி வாங்கியது. காவேரிக்கும் எனக்கும் தான் இந்த விஷயம் தெரியும். வீட்லே வேறே யாருக்கும் தெரியாது. சொல்லப் போனால் இதுவும் அவளோட ஏற்பாடுதான். அப்போ...போனவ சும்மா போகலை. நகையையும் தூக்கிட்டு ஓடிருக்கா. என்ன அநியாயம்...
வேலியே பயிரை மேயற கதையாயில்லை இருக்கு.சே... என் பொண்ணா இப்படி செஞ்சா... ஐயோ கடவுளே இப்போ நான் என்ன செய்வேன். யாரிட்டப் போய் சொல்லிப்பேன். ஊமச்சியை ஓங்கி அடிச்சாப்பில வாயைத் திறக்க முடியாதே... மூத்த பொண்ணு குடும்பத்துக்குப் பொறுப்பா இருக்காளேன்னு அவளை மலை போல நம்பினேனே... நெஞ்சிலே நெருப்பை வச்ச மாதிரி இப்படி பண்ணிட்டாளே - நினைக்க நினைக்க ஆறவே இல்லை. அப்படியே இடிந்து போய் உட்கார்ந்து விட்டாள் தங்கம்மா.
""என்னம்மா... குக்கர் தண்ணி கொதிக்குது. நீ பாட்லே உட்கார்ந்திருக்கே?''ஓடிவந்த தாராவும் , மீராவும் அம்மாவின் நிலையைப் பார்த்து, பாவம்... அம்மாவால அக்கா செஞ்சதைத் தாங்க முடியலை. அவங்களே மனசை சமாதானப்படுத்திக்கிட்டு எந்திருச்சு ஏதோ செய்யட்டும். நமக்கு ஸ்கூலுக்கு நேரமாயிடுத்து' என்று இருவரும், அடுப்பை அணைத்து விட்டு இருக்கிற பழைய சாதத்தைக் கரைச்சுக் குடிச்சுட்டுப் போய்விட்டனர்.
காலத்தேர் யாருக்காகவும், எதற்காகவும் காத்திருப்பதில்லை. அதுபாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்க, மூன்று மாதங்கள் கடந்து விட்டன. காவேரியைப் பற்றி எந்த விவரமும் தெரியவில்லை. கிராமத்திலிருக்கும் தன்னுடைய சித்தி வீட்டுக்குப் போயிருக்கிறாள் என்று தெரிந்தவர்களிடம் சமாளித்துக் கொண்டு எந்நேரமும் கனத்த மனத்துடன், குடும்பத்தை ஓட்டிக் கொண்டிருந்தாள் தங்கம்மா.
அன்று காலை... வழக்கம்போல் சாராயக் கடைக்குப்போன ரங்கசாமிக்கு நேரம் சரியில்லை போலிருக்கு. ஏதோ ஒரு கடையில் விஷச்சாராயம் காய்ச்சி விற்றதில், அதைக் குடித்தவர்களில் உயிர்ப் பலி ஏற்பட்டு ஒரே கலவரம். போலீஸ் வந்து அந்தக் கடைக்கு சீல் வைத்து, மற்ற எல்லாக் கடைகளையும் நிலைமை சரியாகும் வரை மூடச்சொல்லி உத்தரவு போட்டு விட்டார்கள். ரங்கசாமி ஏமாற்றத்துடன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். தெருமுனையில் வரும்போதே தங்கள் வீட்டுக்குள் ஒரு ஆணும், இரண்டு பெண்களும் நுழைவது தெரிந்தது. ஒருத்தி நம்ப காவேரி மாதிரி இருக்கே... விரைந்து வந்தவன், வீட்டுக் கதவு சாத்தியிருக்கவே திண்ணையிலே நின்று கொண்டான்.
அன்று தங்கம்மா வேலை செய்யும் மில் ஓனருக்கு பிறந்த நாள் என்று மில்லில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு விடுமுறை. அதனால் தங்கம்மா வீட்டிலிருந்தாள். பகல் வேலைகள் முடிந்து, துவைத்த துணிகளை மடித்துக் கொண்டு ஓய்வாக அமர்ந்திருந்த அந்த நேரம் திடீரென்று, "அம்மா' என்று அழைத்துக் கொண்டு ஓடி வந்து தன்னை கட்டிப் பிடித்த காவேரியைக் கண்டு திகைத்துப்போனாள்.
காணாமல் போயிருந்த மகளை வா என்று வரவேற்பதா, "இத்தனை நாள் எங்கே யிருந்தேடி, ஏன்டி இப்படி செய்தாய்? என்றெல்லாம் திட்டுவதா ... ஒன்றும் புரியாமல் வாயிலிருந்து வார்த்தைகள் எதுவும் வராமல் வாளாவிருந்தாள்.
""அம்மா, என் மேல் உனக்குப் பயங்கரக் கோபம் இருக்கத்தான் செய்யும். அது பாட்டுக்கு இருக்கட்டும். நீ முதலில் என் கூட வந்திருக்கிறவர்களைப் பாரம்மா'' என்று மகள் சுட்டிக் காட்டியதும் தான் மகள் கூட வந்திருப்பவர்களைப் பார்த்தாள்.
யாராயிருக்கும்...இவர்கள்? சுமார் முப்பது வயதோ ஒன்றிரண்டு கூடவோ மதிக்கக் கூடிய ஒரு பெண்மணியும் கல்யாண வயதிருக்கக் கூடிய ஒரு வாலிபனும் நின்று கொண்டிருந்தார்கள்.
யாராயிருக்கும்... இவர்கள்? மனதிற்குள் யோசனையுடன் எழுந்து போய் ""வாங்க... உட்காருங்க'' என்று வீட்டில் இருந்த இரண்டு நாற்காலிகளை எடுத்துப்போட்டாள்.
""வெய்யிலில் வந்திருக்கிறீர்கள் ... முதலில் தண்ணீர் சாப்பிடுங்கள்'' என்று ஜில்லுனு பானைத் தண்ணீர் கொடுத்து உபசரித்தாள்.
""அம்மா, என்பெயர் சகுந்தலா. இவன் என் தம்பி சரவணன். நாங்க காஞ்சிபுரத்திலிருந்து வருகிறோம். கடந்த மூன்று மாதங்களாக எங்கள் வீட்டில் தான் உங்கள் பெண் காவேரி இருந்தாள்'' என்று அந்தப் பெண்மணி தான் பேச ஆரம்பித்து, தொடர்ந்து சொன்னாள்:
""காஞ்சிபுரத்தில் எங்கள் குடும்பம் கொஞ்சம் வசதியானது. எங்கப்பா ஐந்தாறு நெசவுத் தறிக்கடை, புடவைக்கடை எல்லாம் வைத்திருக்கிறார். இங்கு பெரிய பெரிய கடைகளுக்கெல்லாம் பட்டுப் புடவைகள், காட்டன் சேலைகள் சப்ளை பண்ணுவார். எல்லாவற்றுக்கும் ஆள்களை வைத்து வேலை வாங்கினாலும் அப்பாவும் அம்மாவும் முழு மூச்சுடன் தாங்களும் ஈடுபட்டு வேலை பார்ப்பார்கள். மூன்று மாதங்களுக்கு முன்னால் அம்மா சாலையில் நடக்கும்போது கல் தடுக்கிக் கீழே விழுந்து விட்டார்கள். இடுப்பில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டு நடக்க முடியாமல் படுத்த படுக்கையாய் கஷ்டப் பட்டார்கள். அம்மாவைப் பார்த்துக் கொள்ள ஒரு ஆள் தேவைப் பட்டது. நான் துபாயில் இருப்பதால் என் குழந்தைகளை விட்டுவிட்டு உடனேஅம்மாவைப் பார்த்துக் கொள்ள வர முடியவில்லை.
இதோ என் தம்பி... இவன் இங்கு சென்னையில் தாம்பரத்தில் எங்கள் கடையின் கிளை ஒன்றை கவனித்துக் கொள்கிறான். இவனுக்கு உங்கள் காவேரியைத்
தெரியும் போலிருக்கு. அவன் தான் அம்மாவை பார்த்துக் கொள்வதற்கு அவளை எங்கள் வீட்டிற்குக் கூட்டி வந்தான்.
அம்மாவிற்கு ஆபரேஷனும் செய்து , காவேரியும் நன்கு பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டதில் இப்பொழுது நன்கு தேவலாம்.
"வீட்டிலிருந்த நகையையும் தூக்கிண்டு எவனோடயோ ஓடிப் போயிட்டாப் போலிருக்குன்னு நாம்ப வருத்தமும் கவலையும் பட்டுட்டிருக்கோம். இந்தப் பெண் கதை மாதிரி என்னென்னமோ சொல்கிறாளே'.
""இப்போ முக்கியமா நான் எதுக்கு உங்க வீட்டுக்கு வந்தேன் என்பதையும் சொல்லிடறேன். மூணு மாசமா காவிரியுடன் பழகியதில் எங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அவளை ரொம்பப் பிடித்துப் போயிற்று. அவளைத் தங்கள் மருமகளாக்கிக் கொள்ளணும்னு ரொம்ப ஆசைப்படறாங்க. என் தம்பிக்கும் சம்மதம். காவேரிக்கும் விருப்பம் என்று தான் நினைக்கிறோம். உங்கள் வீட்டில் எல்லாருக்கும் சம்மதம் என்றால் நாங்களே இந்தக் கல்யாணத்தை நடத்தறோம் என்று அப்பா சொல்லச் சொன்னார்''
ஒரு வழியாக அந்தப் பெண் பேசி முடித்தாள். என்ன நடக்கிறதென்று புரியாமல் பிரமித்துப் போய் வாய் திறவாமல் கேட்டுக் கொண்டிருந்தாள் தங்கம்மா.
அம்மாவின் குழப்பமான மன நிலை காவேரிக்கு நன்கு புரிந்தது.
அம்மாவின் அருகில் வந்து, ""அம்மா இங்கே கொஞ்சம் வா'' என்று கையைப் பிடித்து தங்கள் அறைக்கு அழைத்து ச் சென்றாள். மறக்காமல் தன்னுடைய பையையும் எடுத்துக் கொண்டாள்.
""அம்மா.. எனக்குப் புரிகிறது..நீங்கள் எல்லாரும் ... நான் ஏதோ காதல் விவகாரத்தில் எவனோடயோ ஓடிப் போய் விட்டேன் என்று தானே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?''
வாசல் திண்ணையில் இருந்த ரெங்கசாமிக்கும் இவர்கள் பேசுவது பாதி திறந்திருந்த ஜன்னல் வழியாகக் காதில் விழ அவனும் உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தான்.
""அம்மா... என்னைப் பற்றி உனக்குத் தெரியாதா? பிறகு ஏன்? இந்த சரவணனுடன் எப்படிப் பழக்கம்? எங்களிடம் சொல்லாமல்... அவர்கள் வீட்டுக்குப் போனது. எங்களிடம் ஏன் மறைக்கணும்? என்றெல்லாம் உனக்குத் தோன்றும். எல்லாவற்றையும் நான் விவரமாகச் சொல்கிறேன்.
நம்ப வீட்லே நாந்தானேம்மா எப்பவும் கரண்ட் பில் கட்டப் போவேன்? நான்கு மாதங்களுக்கு முன்னால் ஒரு நாள் நான் கரண்ட் பில் கட்டப் போயிருந்தபோது அங்கு இந்த சரவணனும் வந்திருந்தார். கியூவில் கடைசி ஆளாக நின்று கொண்டிருந்தேன். காலையில் ஒன்றும் சாப்பிடாமல் போய் விட்டதால் பசியும் மயக்கமுமாக அவஸ்தைப்பட்டேன். எவ்வளவோ சமாளித்தும்... என் முறை வந்து கவுன்டர்பக்கம் போனதும் என்னையுமறியாமல் மயங்கி விழுந்துட்டேன். எனக்கு முன்னால் இருந்த இந்த சரவணன் தான் என்மேல் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிவித்து என்னுடைய பில்லையும் கட்டி, எனக்கு ஜூஸ் வாங்கிக் கொடுத்து அவருடைய ஸ்கூட்டரில் என்னை வீட்டு வாசல் வரை கொண்டு வந்து விட்டுப் போனார். "ஏன் சாப்பிடாமல் போனாய்?' என்று திட்டுவீர்களே என்று யாரிடமும் சொல்லவில்லை.
அடுத்த மாதமும் நான் போன சமயம் அவரும் வந்திருந்தார். அப்பொழுதுதான் தான் தாம்பரத்தில் இருப்பதாகவும் தன் நண்பன் வெளி நாட்டில் இருப்பதால் நண்பனுடைய வயதான பெற்றோர்களுக்கு உதவியாக மாதாமாதம் அவர்கள் வீட்டுக் கரண்ட் பில்லைத் தான் வந்து கட்டுவதாகவும் கூறினார்.
சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுக் கேட்டார். "காவேரி... உங்களிடம் ஒரு உதவி கேட்கலாமா?' என்றார் தயக்கத்துடன்... எனக்கு எத்தனை உதவி செய்தார். அவருக்கு நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்று விரும்பினேன்.
"தாராளமாகக் கேளுங்கள்' என்று நான் பதிலளித்ததும் விஷயத்தைச் சொன்னார்.
"என் அம்மா கீழே விழுந்து இடுப்பில் எலும்பு முறிந்து ஆஸ்பத்திரியில் இருக்கிறார். அடுத்த வாரம் வீட்டுக்கு வந்து விடுவார். கொஞ்ச நாளைக்கு நடமாட முடியாது.அம்மாவுக்கு உதவியாகவும் , நன்கு கவனித்துக் கொள்ளவும் ஒரு பெண் இருந்தால் நல்லது . நல்ல சம்பளம். மாதம் பத்தாயிரம் கொடுக்கலாம் என்று அப்பா சொல்கிறார். அம்மா வீட்டுக்கு வருவதற்குள் ஏற்பாடு செய்யச் சொல்கிறார். எனக்கு எங்கே எப்படித் தேடுவதுன்னு தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது வருவார்களா? கொஞ்சம் விசாரித்து சொல்ல முடியுமா?' என்று கேட்டதும்... நாமே இந்த வேலைக்கு ஒத்துக்கொண்டால் என்ன... தங்கைகள் படிப்புச் செலவுக்கும் வீட்டில் கொஞ்சம் வசதிகள் செய்து கொள்வதற்கும் இந்தப் பணம் மட்டும் நமக்கு கிடைத்தால் எவ்வளவு செளகரியம்... என்று என் மனதில்ஆசை தோன்றியது.
உன்னிடமும் அப்பாவிடமும் கேட்டுவிட்டு சம்மதம் சொல்லலாம் என்று நினைத்துக்கொண்டு அவரிடம் சொன்னேன். "நானே கூட வீட்டில் சும்மாத்தான் இருக்கிறேன். எங்கள் குடும்பத்துக்கும் பணத்தேவை இருக்கிறது. அதனால் நானே வந்து உங்கள் அம்மாவை நன்கு கவனித்துக் கொள்வேன். வீட்டில் என் பெற்றோரைக் கலந்து பேசிவிட்டு சொல்கிறேன். நீங்கள் அடுத்தவாரம் எங்கள் வீட்டிற்கு வாருங்கள்' என்று நம் வீட்டு விலாசத்தைக் கொடுத்து விட்டு அவருடைய போன் நம்பரை வாங்கிக் கொண்டு வந்தேன்.
ஆனால் நான் உங்களிடம் சொல்வதற்குள்... அப்பா பண்ணிய காரியம்...''
"என்னைப் பற்றி என்ன சொல்லப் போகிறாள்?' வெளியிலிருந்த ரங்கசாமியும்ஆவலாய் காத்திருக்க... ""ஆமாம் அம்மா... அப்பா... அப்பா ... மேலே சொல்லத் தயங்க...''
""சொல்லுடி உங்கப்பா அப்படி என்ன தான் செஞ்சாரு? ''
""ஆமாம் அம்மா... அப்பா நீ அரிசிடின்னுல மறைச்சு வச்சிருந்த நகையை எப்படியோ மோப்பம் புடிச்சு எடுத்து தன்னோட தகர பொட்டில வெச்சதைநான் பார்த்துட்டேன். அதுக்கப்புறம் என்ன செய்வாருன்னு எனக்கு நல்லாவே தெரியுமே. நகையை ஒண்ணொண்ணா வித்து நிறையக் குடிப்பாரு. உன்கிட்ட சண்டை போட்டுக் கிடைக்கிற காசு அவருக்குப் பத்தலையே... எனக்கு நகையைப் பத்திக் கூட கவலையில்லம்மா... ஓவராக் குடிச்சா அப்பா உடம்பு கெட்டுப் போயிடுமே... எப்போ அப்பா நகையைப் பாத்துட்டாரோ... இனி நாம என்ன சொன்னாலும் கேட்க மாட்டார். அதனால்தான் நான் யோசித்து உங்களிடம் சொல்லாமலே நகையையும் எடுத்து கொண்டு அன்றைக்கே காஞ்சிபுரம் போய் விடலாம். மூன்று மாதம் கழித்து திரும்பி வந்து எல்லா விவரமும் சொல்லிக் கொள்ளலாம். அதற்குள் அப்பாவும் மறந்திருப்பார்...என்றுதான் சரவணனுக்கு அன்று இரவே வரச்சொல்லி மெசேஜ் போட்டு ராத்திரி ஊர் அடங்கியதும் வீட்டை வீட்டுக் கிளம்பி அவருடன் நைட் பஸ் பிடித்து காஞ்சிபுரம் போனேன்.
நான் செய்ததென்ன சாதாரண விஷயமா... ஏன் ஒரு போன் போட்டு எங்களுக்கு விஷயத்தைத் தெரிவிக்கக் கூடாதா.. நாங்கள் எவ்வளவு தவிச்சுப் போயிட்டோம்ன்னு உங்களுக்கு கோபம்வருவது நியாயந்தானே... ஆனால் அப்பாவுக்குத் தெரிஞ்சுதுன்னா நான் இருக்குமிடத்துக்கு வந்துட்டார்னா எல்லாம் வீணாகப் போயிடுமேன்னுதான் பேசாம இருந்தேன்... மறுபடியும் கேட்கிறேன்... என்னை மன்னித்து விடும்மா'' என்று கேவியவள்... ""இந்தாம்மா... அப்பா வருவதற்குள் வேறு இடத்தில் பத்திரமாக வை...தன் பையிலிருந்து அந்த நகைப்பையை எடுத்துக் கொடுக்கும் சமயம் சரியாக கதவைத் திறந்து கொண்டு வந்த ரங்கசாமி...""தங்கம்மா பயப்படாதே. காவேரி பேசியதையெல்லாம் நானும் கேட்டேன். அத்தனையும் எனக்கு விழுந்த சம்மட்டி அடிகள் என்று எனக்குத் தோன்றுகிறது. நான் இனி குடிகாரன் இல்லை. நல்லதொரு குடும்பத் தலைவன்... அவள் சொன்னாளே... நகை பற்றிக்கூடக் கவலை இல்லை. அப்பா உடம்பு கெட்டுப் போயிடுமேன்னு. அந்த நிமிஷமே செருப்பாலடித்த மாதிரி எனக்கு புத்தி வந்து விட்டது. இனி நான் குடியை மனத்தாலும் நினைத்துக் கூடப் பார்க்க மாட்டேன். காவேரி... என் கண்ணே நீ எனக்காக எப்படிப்பட்ட அபவாதத்தைத் தாங்கிக் கொண்டு செயல் பட்டிருக்கிறாய். இனி நான் சத்தியமாக உங்களையெல்லாம் வருத்தமாட்டேன். இந்த அப்பாவை மன்னித்து விடும்மா'' மகளை அணைத்துக் கொண்டு கண்ணீர் உகுத்தான்.
""அம்மா... இந்தக் கல்யாணப் பேச்செல்லாம் அவர்களாகத்தான் பேசுகிறார்கள். உங்கள் விருப்பம் தான் என் விருப்பம்'' என்று காவேரி சொல்லவும், அந்த நிமிஷமே தங்கம்மா மனதில் மகிழ்ச்சிகரமான அத்தனை விஷயங்களும் சேர்ந்து ஆனந்தப் பிரவாகமே ஊற்றெடுத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com