ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: செரிமானச் செயல்பாடு... முடி வளர்தல்!

என் மகளுக்கு 13 வயது வரை முடி நன்றாக வளர்ந்து அடர்த்தியாக இருந்தது. உடல் பருமன் அதிகமாகி பிசிஓடி பிரச்னை ஏற்பட்டது. முடிகொட்டி விட்டது. இப்போது வயது 20 ஆகிறது. உடல் மெலிந்துவிட்டது. 
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: செரிமானச் செயல்பாடு... முடி வளர்தல்!

என் மகளுக்கு 13 வயது வரை முடி நன்றாக வளர்ந்து அடர்த்தியாக இருந்தது. உடல் பருமன் அதிகமாகி பிசிஓடி பிரச்னை ஏற்பட்டது. முடிகொட்டி விட்டது. இப்போது வயது 20 ஆகிறது. உடல் மெலிந்துவிட்டது. முன்பு மாதிரி முடி வளருமா?

ரேணுகா,
திருவேற்காடு, சென்னை- 77.

எலும்பினுள் வரும் உணவின் சத்தானது, அங்குள்ள நெருப்பினால் வேக வைக்கப்பட்டு, தன் வளர்ச்சிக்கான போஷக சத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, கழிவாக வெளியிடும் பகுதியே முடியாக தலையில் வளர்வதாக ஆயுர்வேதம் கூறுகிறது. நிலத்தின் ஆதிக்யத்தினால் உருவாகும் உணவுப் பொருள்கள் அனைத்தும் வயிற்றிலுள்ள பசித்தீயில் வேக வைக்கப்பட்டு. அதன் சத்தான பகுதியை எலும்பு வரவேற்று, பாகப்படுத்தி தன்னை வளர்த்துக் கொள்கிறது. உங்களுக்குப் புரியாத புதிராக இந்தச் செய்தி இருந்தாலும், வாஸ்தவத்தில் இதுதான் நடக்கிறது. கழிவை அதிகப்படுத்த வேண்டுமெனில் எலும்பினுள்ளே அமைத்துள்ள பசித்தீயை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வயிற்றிலுள்ள பசித்தீயின் ஓர் அம்சமே எலும்பிலுள்ள தீயும். வயிற்றிலிருந்து எலும்பிற்கு இந்தத் தீயின் அனுகூலத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற்ற பிறகே அந்தத் தீயின் செயல்பாடு சிறப்புற்று விளங்கும் என்பதால், உங்கள் மகள் பசியின் தன்மையை சீராகப் பெற்றிருக்க வேண்டிய அவசியத்திலிருக்கிறார்.

காரம்-புளி - உப்பு ஆகியவற்றின் சமச்சீரான சேர்க்கை, நெய், எண்ணெய், கொழுப்பு சத்து, மஜ்ஜை ஆகியவற்றின் அளவான சேர்க்கை முதலியவற்றால் அவர் பெறும் பசியானது, நிரந்தரமான செயலை சிறப்பாகச் தரும் பெருமையை அடைந்துவிடும். அதன் வளர்ச்சிக்கு உதவிடும் எண்ணற்ற ஆயுர்வேத மருந்துகளும் உள்ளன. குமார்யாஸவம், தாடிமாதிகிருதம், அஷ்டசூரணம், வில்வாதி லேகியம், காலசாகாதி கஷாயம் போன்றவை இங்கு குறிப்பிடத் தக்கவை.

செரிமான இயந்திரத்தின் செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பாகச் செயல்படத் தொடங்கிவிட்டால், அதன் பிறகு சியவனப் பிராசம் எனும் லேகிய மருந்தை காலையிலும், பெருங்குடல் பகுதியில் மலம் வாயு நிற்காமல் எளிதில் வெளியேறச் செய்யும் கல்யாண குலம் எனும் மருந்தை மாலையிலும் சாப்பிட வேண்டும்.

சுமார் 21 நாள்கள் முதல் 48 நாள்கள் வரை இம்மருந்துகளைச் சாப்பிட்ட பிறகு, நாரஸிம்ஹ ரசாயனம் எனும் லேகிய மருந்தை, சுமார் பத்து கிராம் அளவில் காலை, மாலை வெறும் வயிற்றில் மூன்று மாதங்கள் சாப்பிடலாம். ஆனால் பிசிஓடி குணமாக இந்த மருந்தைப் பயன்படுத்த இயலாது. உடல் புஷ்டி அடைவதற்கு பயனளிக்கும்.

திரிபலை சூரணத்தில் சேர்த்து தரப்படும் லோகபஸ்மம், சிருங்க பஸ்மம், பிரவாள பற்பம், அன்னபேதி சிந்தூரம், சங்கபஸ்மம் போன்றவற்றின் மூலமாகவும் மகளுடைய பிரச்னைக்கான தீர்வைப் பெறுவதற்காக முயற்சிக்கலாம்.

உடல்நிலை ப்ருகிருதி எனும் உடலின் தோஷ நிலை ஆகியவற்றின் அடிப்படையில் இம்மருந்துகளின் கலவையைத் தீர்மானித்துச் சாப்பிடுவதே நல்லது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com