Enable Javscript for better performance
எங்க வீட்டு ப்ரூஸ்லீ- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  எங்க வீட்டு ப்ரூஸ்லீ 

  By எஸ்.ஸ்ரீதுரை  |   Published On : 03rd July 2022 06:00 AM  |   Last Updated : 03rd July 2022 06:00 AM  |  அ+அ அ-  |  

  kadhir4


  பந்த், லாக் டவுன் தினங்களைப் பற்றிக் கூறுவதென்றால் ஊரே வெறிச்சோடிக்கிடந்தது என்று செய்தி வாசிப்பாளர்கள் வாசிப்பதைக் கேட்கக் கேட்க சுமதிக்குப் பற்றிக்கொண்டு வரும்.
  ""அதென்ன, வெறிச்சோடிக் கிடந்தது. வேற வார்த்தையே இதுக்குக் கிடையாதா? அமைதியாகக் கிடந்தது! நிசப்தமாக இருந்தது! இதெல்லாம் சொல்லக் கூடாத வார்த்தைகளா என்ன?''
  ஒவ்வொரு தரம் சுமதி இப்படிக் கேட்கும்போதும் ""அதை ஏம்மா எங்ககிட்ட கேட்கிறே.? நியூஸ் சானல்காரங்க கிட்டே போய்க் கேளு'' என்று சொல்லிப் பெண்கள் இருவரும் ரிமோட்டைப் பிடுங்கிக்கொள்வது வழக்கம். புருஷன் சண்முகம் டி.வி. பக்கமே வருவதில்லை.
  என்ன சொல்லி என்ன? ப்ரூஸ்லீ கிளம்பிப் போன மறுநாளே தன் சிநேகிதிகள் ஒவ்வொருவருக்கும் போன் செய்த சுமதி, ""கிழவன் கிளம்பினதுலேர்ந்து வீடே வெறிச்சோடிக் கிடக்குதுடீ'' என்றுதான் ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறாள்.
  வாஸ்தவம்தான்.
  ப்ரூஸ்லீ கிளம்பிச் சென்றதிலிருந்து நிலவுகின்ற இந்தச் சூழலை அமைதி என்றோ நிசப்தம் என்றோ சொன்னால், அதை யாராலும் உணர்ந்து கொள்ள முடியாது என்றே சுமதிக்குத் தோன்றியது. வீடே வெறிச்சோடிக் கிடக்கிறது என்பதில் இருந்த அர்த்தபுஷ்டி வேறு வார்த்தைகளில் கிடைக்கவில்லைதான்.
  எல்லாம் சரிதான். அந்த ப்ரூஸ்லீயை இந்த வீட்டைவிட்டுக் கிளப்புவதற்குத் தான் பட்ட பாடு!.
  உஸ்... அப்பாடா! அது சாதாரண பாடில்லை. மூன்று வாரப் போராட்டம் அது.
  நினைக்கும்போதெல்லாம் சுமதியிடமிருந்து ஒரு பெருமூச்சு கிளம்பியது.
  ப்ரூஸ்லீயை இத்தனை சுலபமாக இங்கிருந்து வேறொரு இடத்துக்கு கிளப்பி அனுப்பவும் முடியுமா என்ற பிரமிப்பு இன்னமும் நீங்கிய பாடில்லை!
  என்புதோல் போர்த்திய உடம்பு என்று கேள்விப்பட்டிருப்போம்.
  ப்ரூஸ்லீயின் எலும்புக் கூட்டைப் போர்த்துவதற்கு பிரம்மதேவன் மிக, மிக மெல்லிய ப்ளாட்டிங் பேப்பர் போன்ற தோலைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். அனாட்டமி வகுப்பில் அப்படியே ஆளைக் கொண்டு போய் நிறுத்தி மனித உடம்பில் எத்தனை எலும்புகள் என்று கேட்டால் எட்டாம் வகுப்புப் பையன் கூட எண்ணிப் பார்த்துச் சொல்லிவிடுவான்.
  எக்கிய வயிறு. ஒட்டிய கன்னம். இன்று காலையில்தான் நாற்பது நாள் ஒரிஜினல் உண்ணாவிரதம் இருந்து முடித்துவிட்டு இன்னும் பழரசம் கூடப் பருகாமல் எழுந்துவந்தது போல ஒரு பரிதாபத் தோற்றம். சிக்ஸ் அல்ல, சிக்ஸ்டீன் பேக் அமைந்த ஒட்டிய வயிறு.
  அது சரி, ப்ரூஸ்லீ என்ற இந்தப் பெயர்?
  அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டுமே ?
  கரெக்ட். சுமதியும் அவள் பெண்களும் கிழவருக்கு வைத்த இன்னொரு பெயர்தான் ப்ரூஸ்லீ. அவள் கணவனுக்குக்கூடத் தெரியாது. கிழவரின் ஒரிஜினல் பெயர் கிருஷ்ணமூர்த்தி.
  பகாசுரத் தீனி. உருவத்துக்கும் சாப்பாட்டுக்கும் சம்பந்தமே கிடையாது.
  "" ஏம்மா சுமதி. இன்னைக்கு அடை செய்யறியா?'' என்று கேட்டால் சுமதியின் அடிவயிற்றில் பெரியதாய் ஒரு திகில் பகீர் கிளப்பும்.
  ப்ரூஸ்லீ ஓர் ஆளுக்கே நாலைந்து அடை சரியாகப் போகும். வாட்டசாட்டமான அவள் கணவனே இரண்டு அடை தின்றால் ஜாஸ்தி. சுமதிக்கு ஒன்றரை அடைக்கே வயிறு அடைத்துக்கொள்ளும். மகள்கள் இரண்டும் ஆளுக்கு ஒன்று தின்றால் அதிகம்.
  ப்ரூஸ்லீ மட்டும் சட்னியுடன் இரண்டு, அவியலுடன் இரண்டு, சும்மா ஒன்று என்று ஐந்தைத் தின்றுவிட்டு ஒன்றுமே ஆகாதது போல ராத்திரிக்கு பயத்தங்கஞ்சி போட்டுத் தரச்சொல்லும். சுமார் இரண்டு லிட்டர்.
  சாப்பாட்டைப் போல இன்னொரு விஷயத்திலும் ப்ரூஸ்லீக்கு ஒருவித சூரத்தனம் இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அந்த விதத்தில் பார்த்தால் ஹாலிவுட் ஸ்டார் ப்ரூஸ்லீயின் பெயர் இந்தக் கிழவனாருக்கு ரொம்பவே பொருந்தும் என்பதையும் சர்வ நிச்சயமாக ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
  அது என்ன சூரத்தனம் என்கிறீர்களா ?
  பழங்கால ஓட்டுக்கூரையும், சுற்றிலும் காடு போல வளர்ந்திருப்பதெல்லாம் என்னென்ன செடிகள் என்ற பெயர் கூடத் தெரியாமல் அடர்ந்து கிடக்கும் தோட்டமும், உள்ள வெளிச்சம் உள்ளே வரத் தயங்குகின்ற அந்த வீட்டில் திடீரென்று எதிர்ப்படும் ஜந்துக்கள் விஷமுள்ளதோ, அற்றதோ எதுவாயினும் அதனை அநாயாசமாக அப்புறப்படுத்துவதில் கிழவர் கில்லாடி.
  எதிரிகளின் பிரதேசத்துக்குள் புகுந்து அதகளப்படுத்துகின்ற அந்த ப்ரூஸ்லீயை போலவே, பூச்சி பொட்டுகளைக் கையாளுவதில் இந்த ப்ரூஸ்லீ மகா கெட்டிக்காரர்.
  அதிலும், தேள்களைப் பார்த்து ப்ரூஸ்லீக்குக் கொஞ்சம் கூட பயமே கிடையாது.
  ஆயிரம்தான் அலங்காரம் பண்ணின பணக்காரத் துடைப்பம் இருந்தாலும், தேஞ்சு போன ஒரே ஒரு தென்னந்துடைப்பத்துக்கு ஈடாகாது குட்டீ!
  இந்தக் குட்டீ சுமதிக்கு அவர் வைத்த பெயர். செல்லமாம். பற்றிக்கொண்டு வரும் சுமதிக்கு. ஐந்து பேர் கொண்ட குடும்பத்துக்கு வாங்கும் மளிகையில் பாதியைக் காலி செய்துவிட்டுக் குட்டியாம் குட்டீ.
  மருமகளைக் கொடுமைப்படுத்துவதில்லைதான். ஆனால் குட்டீ என்று கூப்பிட்டுக் கொண்டு வேளாவேளைக்கு வயணமாக சமைத்துத் தரும்படி கேட்டால் யாருக்குத்தான் கோபம் வராது.
  அந்தத் தென்னந்துடைப்பத்தை அப்படியே விட்டுவிட்டோமே.
  தேளைப் பார்த்ததும் ப்ரூஸ்லீ பறந்தோடிச் சென்று ஒரு தென்னந்துடைப்பத்தைப் பக்கத்து வீட்டில் கடனாகவாவது வாங்கிக்கொண்டு நுனிப்பகுதியைப் பிடித்துக்கொண்டு சுழற்றுச் சுழற்றி ஒரு போடு போட்டால், கண்டுபிடித்துக் கால் மணி நேரமானாலும் ஏதோ தவம் போல அதே இடத்தில் மயங்கி நின்று கொண்டிருக்கும் அந்தத் தேள் பொத்தென்ற ஓசையுடன் சட்னியாகும்.
  மாசம் தவறினாலும் தேளின் வருகையும் , அது ப்ரூஸ்லீ வீசும் தென்னந்துடைப்பத்தால் சட்னியாவதும் தவறுவதில்லை.
  ""என்றைக்கு இந்த ஓட்டு வீட்டை இடித்துத் தள்ளிவிட்டுக் கான்கிரீட் வீடு கட்டப்போகிறோமா அப்போதுதான் தேளைப் பார்க்காமல் இருக்கலாம்?'' என்று பெண்கள் சொல்லுவதும், ஆமாம். இந்தப் பெருந்தீனிக் கிழவர் ப்ரூஸ்லீ இருக்கும் வரையில் காசு மிச்சம் பிடித்து வீடு கட்டின மாதிரிதான் என்று அவ்வப்போது சுமதி நொடித்துக் கொள்வதும் வழக்கமாகிவிட்டது.
  மழைக்காலத்தில் சுவாதீனமாகப் படையெடுக்கும் தவளைகளை இந்த ப்ரூஸ்லீ தன்னுடைய பழைய டவல் துணியில் பொட்டலம் கட்டி அலேக்காக தெருவாசலில் ஓடும் சிறிய வாய்க்காலில் வீசி விட்டு வருவது வழக்கம்.
  ஒருசமயம் ப்ரூஸ்லீ வீட்டிலில்லாமல் அதிசயமாகக் கோயிலுக்குப் போயிருந்தபோது சுமதியும் தவளைப் பிடியை முயன்று பார்த்திருக்கிறாள்.
  அவசரத்துக்குத் தன்னுடைய குட்டிப்பெண்ணின் டர்க்கி டவலை தவளைமேல் போட்டதில் அந்தப் பெரிய தவளை அங்கேயே சட்டென்று திகிலடைந்து நின்றிருக்க வேண்டும். சுமாரான பீட்ரூட் அளவுக்கு இருந்த அந்தத் தவளையை சுமதி தன் இரண்டு கைகளாலும் அமுக்கிப் பிடித்துத் தூக்கியதில் டவல் மட்டும் சுமதியின் கையோடு வந்தது. டவலைத் துறந்த தவளை சுமதியின் பாதத்தில் மெத்தென்று ஒருதடவை உட்கார்ந்துவிட்டு ஒரு எகிறு எகிற, அதிர்ச்சியும் அருவெறுப்புமாய் ""ஆவ்ழ்'' என்று வித்தியாசமாய் அலறியபடியே டவலை விசிறிக் கடாசிய சுமதியை ""என்னம்மா ?''
  என்று பெண்கள் இருவரும் ஓடிவந்து வந்து பிடித்துக்கொண்டார்கள். உடம்பு நடுங்குவது முழுவதுமாக நிற்க அரைமணி நேரம் பிடித்தது.
  ""உனக்கு ஏம்மா இந்த வேலையெல்லாம். நீயென்ன ப்ரூஸ்லீயா?'' என்றாள் பத்தாம் கிளாஸ் மூத்த மகள்.
  ""உன்னை யாரும்மா தவளையைப் பிடிக்க என்னோட டவலை எடுக்கச் சொன்னது?'' என்று சண்டைக்கு வந்த இரண்டு வயது இளையவளுக்குப் புது டர்க்கி டவல் வாங்க இருநூறு ரூபாய் மொய் எழுத வேண்டியதாயிற்று.
  ஆபீஸிலிருந்து வந்த சண்முகம் திட்டியதைக் காட்டிலும், கோயிலிலிருந்து திரும்பி வந்ததும் விஷயம் அறிந்து ப்ரூஸ்லீ தன்னைப் பார்த்த "ஹையே' என்ற கேலிப் பார்வையில் சுமதிக்கு மானம் போனது. அன்றைக்கு ராத்திரி டிபன் பூரிக்குத் தோதாக உருளைக்கிழங்கு மசாலா செய்திருந்தபோதிலும், செய்யவில்லை என்று ப்ரூஸ்லீயிடம் பொய் சொல்லிவிட்டாள். மனசைக் கல்லாக்கிக்கொண்டு மத்தியானம் செய்த வெங்காய சாம்பாரின் மிச்சத்தை இலையில் கொட்டினாள். சுவாரசியமில்லாமல் அதைத் தொட்டுக்கொண்டு ஏழெட்டு பூரியைக் கபளீகரம் செய்தது கிழம்.
  பூரான்களை ப்ரூஸ்லீ ஒருபோதும் அடிப்பதில்லை.
  பூரான்ங்க அதுங்களோட தாய்க்கு ஒரே குழந்தைன்னு சொல்லுவாங்க! என்று கதைவிடும் ப்ரூஸ்லீ, தன் கண்ணில்படும் எப்படிப்பட்ட பூரானையும் எப்படியோ ஒரு சிறிய பிளாஸ்டிக் வாளியில் வாரிப்போட்டு அந்தத் துறுதுறு பூரான் அவசர அவசரமாக பக்கெட்டிலிருந்து வெளியே எட்டிப்பார்ப்பதற்குள் தெருக்கோடிக் கால்வாயில் வீசிவிடுவது வழக்கம்.
  இதையெல்லாம் விடப் பெரிய எதிரி ஒன்று இருக்கிறது.
  கரெக்ட். கரப்பான் பூச்சியேதான்.
  பெரிய மகள் சின்னவள் இரண்டுக்கும் கரப்பான் என்றால் ஒரே அலர்ஜி. சுமதிக்கு அதற்கும் மேலே. கரப்பான் பூச்சியைப் பார்த்தாலே ஸ்தலத்தைவிட்டு நாலு மைல் ஓடிவிடும் அளவுக்குத் தைரியம். ஆனால், கரப்பான்களின் ஜம்பம் நம்ம ப்ரூஸ்லீயிடம் பலித்ததே கிடையாது.
  கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பரின் அகன்ற கிளவுஸ் மாட்டிய கைகளில் கேட்ச் மாட்டுவது போல கரப்பான்களின் மீசை எப்படியோ கிழவனாரின் விரலிடுக்குகளில் வெகு சுலபமாகச் சிக்கிவிடும். இரண்டு கைகளிலும் தலா இரண்டிரண்டு கரப்பான்களைப் ஓட்டலில் கட்டிக்கொடுத்த பார்சல் சாம்பார் கவர் போலப் பிடித்தபடி முகத்தில் கர்வம் வழியத் தெருவாசல் குப்பைத்தொட்டியில் போடுவதற்கு எடுத்துச் செல்லுவதும், அதற்கு முன்பு இரண்டு பேத்திகளிடமும் அவற்றை ஒரு முறை காட்டி அதுகள் பயந்து ஓடுவதைப் பார்த்து ஓர் அலட்சியச்சிரிப்பு சிரித்துவிட்டு டிஸ்போஸ் செய்வதும்
  விட்டு வருவதும் ப்ரூஸ்லீயின் வழக்கம்.
  திரும்பி வந்து கையைக் கழுவும்போதே, "" குட்டீ, ஒரு காஃபி ப்ளீஸ்'' என்று நான்காவது டோஸ் காபிக்கு அடிபோடும்.
  அடுத்தமுறை ஒரு கரப்பானை மீசையோடு பிடித்துத் தூக்கிக் காப்பி டம்ளரில் போட்டு நீட்டவேண்டும் என்று சுமதிக்குத் தோன்றாத நாள் இல்லை. அதற்கு தைரியம் இருந்தால் அப்புறம் ஏன் இந்தக் கிழவரை உதவிக்கு அழைத்துக் கூடவே தண்டமாக ஒரு காபியையும் கொடுக்கப் போகிறாள்.
  சுமதியின் மாமியார் பத்து வருஷத்துக்கு முன்பு போனபோது, ""அடியேய் என்னையும் கூட்டிக்கிட்டு போக மாட்டியா ?'' என்று உறவுக் கூட்டத்துக்கு நடுவே அமர்க்களம் பண்ணிய கிழவர் பிறகு அதையெல்லாம் மறந்து நங்கூரம் போட்டுக்கொண்டு உட்கார்ந்தாகிவிட்டது.
  வயசு எழுபதைத் தொடப் போகிறது.
  பென்ஷனுக்கு வழியில்லாத ஒரு கம்பெனி குமாஸ்தா வேலையில் இருந்துவிட்டு, ரிடையர் ஆகியதும் கிடைத்த சொற்ப ஆயிரங்களைத் தன் பெண்டாட்டியின் ஆஸ்பத்திரிச் செலவுகளுக்குக் கொடுத்துவிட்டு வெறும் கையோடு உட்கார்ந்திருக்கும் வயசாளி.
  அவ்வப்போது எட்டிப்பார்க்கும் பூச்சிப் பொட்டுகளை அப்புறப்படுத்துவது தவிர வேறு பெரிய உதவி எதுவும் இந்த ப்ரூஸ்லீயால் ஆகப் போவதில்லை. யோசித்துப் பார்த்தால் இந்தக் கிழவர் ப்ரூஸ்லீயால் பெரிதாக உபத்திரவங்களும் இல்லைதான். எழுபதைத் தொடும் இந்த வயசிலும் நோய் நொடி என்று ஆஸ்பத்திரி செலவு ஏதும் வைத்ததில்லை. அதுவரையில் பாராட்டலாம்.
  ""அப்பா பாவம் வயசாளி, இன்னும் எத்தனை நாளைக்கு இருக்கப் போறாரு.?'' என்று சண்முகம் இவளது வாயை அடைக்கத்தொடங்கி பத்து வருஷம் ஆகிவிட்டது. கெட்டியான ஜாதகம்.
  ஆனால் அந்த பகாசுரச் சாப்பாடு?
  யோசித்து யோசித்துத் தலைவலி கண்ட சுமதியின் காதில் இன்பத்தேன் வந்து பாய்ந்தது, இருபது நாள்கள் முன்பு.
  ஆரம்பகாலத்திலிருந்தே தில்லியில் உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்த மைத்துனன் செல்வராஜு, சண்முகத்தின் உடன் பிறந்த ஒரே தம்பி, இந்தப் பக்கம் வந்தாலென்ன என்று யோசித்துச் சென்னைக்கு மாற்றல் பெற்றுக்கொண்டு குடும்பத்தோடு வந்து சேர்ந்துவிட்டான்.
  "" ஏங்க, அப்பாவை நாமளே எத்தனை வருஷமாப் பாத்துக்கிட்டிருக்கோம். கொஞ்ச நாள் உங்க தம்பி வீட்டுலதான் போய் இருக்கட்டுமே?''
  தயங்கினான் ஷண்முகம் .
  "" இப்பதானே அவங்க சென்னைக்கே வந்திருக்காங்க. கொஞ்சம் செட்டிலாகட்டுமே சுமதி. தம்பி வொயிஃப் வேற வடநாட்டுப் பொண்ணு. அப்பாவுக்கு ஒத்துப்போகுமா தெரியலையே?''
  ஆமாம். காலமெல்லாம் வடிச்சுக்கொட்டணும்னு என் தலையிலதான் எழுதியிருக்குது. எல்லாம் என் விதி.!
  சுமதியின் கண்களில் இருந்து சட்டென்று ஓர் அருவி கிளம்பியது.
  அதன்பிறகு ஷண்முகம் தன் தம்பியிடம் பேச அதிக நாள் எடுத்துக்கொள்ளவில்லை.
  ""ஒ.கே. அண்ணா. டோன்ட் வொர்ரி, அப்பாவை நானே வந்து கூட்டிக்கிட்டுப் போறேன்'' என்று மறுநாளே காருடன் வந்த தம்பியுடன் மனசு கனக்கத் தன் அப்பாவை அனுப்பி வைத்தான் ஷண்முகம்.
  ""கவலைப்படாதே குட்டீ! சீக்கிரமே நான் திரும்பி வந்துர்றேன்'' என்று சொன்ன ப்ரூஸ்லீயைத் தன்னுள் பீறிட்ட சிரிப்பை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வழியனுப்பி வைத்தாள் சுமதி.
  "" பாவம்மா ப்ரூஸ்லீ'' என்றபடிப் பெண்கள் இருவரும் தத்தமது மடிக்கணினியில் புதைந்து கொண்டாயிற்று.
  வீடே வெறிச்சோடியது. அதைத் தன் தோழிகளிடமும் தன்னுடைய விசுவாசிகளிடமும் ( வேறு யார், அம்மாவும் தங்கைகளும்தான் ) சுமதி செல்ஃபோனில் சொல்லிச் சொல்லிச் சிலிர்த்துக் கொண்டிருந்தாள்.
  கிழவர் கிளம்பிய நான்காவது நாள் காலை.
  ஷண்முகம் அப்போதுதான் ஆபீஸ் கிளம்பிப்போய்ருந்தான்.
  ""ழீ !'' என்று சப்தமிட்டபடி அவிழ்ந்த கூந்தலுடன் கண்களில் மிரட்சியுடன் பாத்ரூமிலிருந்து ஓடிவந்த பெரியவள் சமயலறைக்குள் நுழைந்து, ""அம்மா, பாத்ரூம்ல நாலஞ்சு காக்ரோச்!'' என்றாள்.
  ""என்னை எதுக்குடீ கூப்பிடுறே, ப்ரூஸ்லீயை கூப்பிட வேண்டியதுதானே ?'' என்றாள் சுமதி, அனிச்சையாக!


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp