நேற்று.. இன்று.. நாளை...

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசாரிபாக்கில் உள்ள வினோபா பாவே பல்கலைக்கழகத்தின் 7-ஆவது பட்டமளிப்பு விழாவின் புகைப்படம்தான் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்தப் படம்.
நேற்று.. இன்று.. நாளை...

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசாரிபாக்கில் உள்ள வினோபா பாவே பல்கலைக்கழகத்தின் 7-ஆவது பட்டமளிப்பு விழாவின் புகைப்படம்தான் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்தப் படம்.

2016-ஆம் ஆண்டு ஜனவரி 9-இல் நடைபெற்ற இந்த விழாவுக்கு, அப்போதைய ஜார்க்கண்ட் ஆளுநர் திரௌபதி முர்மு தலைமை வகித்தார். அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் பங்கேற்று, சிறப்பித்தனர்.

2022-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் நேரடியாகக் களம் காணும் நிலையில், இந்த விழாவின் புகைப்படம் வைரலாகிவருகிறது.

விழா குறித்தத் தகவல்:

1992- ஆம் ஆண்டில் இந்தப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட பின்னர், 1994-இல் நடைபெற்ற முதல் பட்டமளிப்பு விழாவில், அப்போதைய திட்டக் குழுத் துணைத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்றார். பின்னர், அவர் மத்திய அரசில் முக்கிய துறைகளில் அமைச்சராகவும், குடியரசுத் தலைவராகவும் பதவி வகித்தபோது, பல்கலைக்கழக வளர்ச்சிக்கு உதவி புரிந்துள்ளார். பின்னர் நடைபெற்ற பட்டமளிப்பு விழாக்களிலும், பல்கலை. விழாக்களிலும் அவர் பங்கேற்றுள்ளார்.

இதேபோல், மத்திய பாஜக அரசுகளில் அங்கம் வகித்த யஷ்வந்த் சின்ஹாவும் (பின்னர் பாஜகவில் இருந்து விலகி, திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார்) பல்கலைக்கழக வளர்ச்சிக்கு உதவியுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், 2016-இல் நடைபெற்ற 7-ஆவது பட்டமளிப்பு விழாவுக்கு, அப்போதைய ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான திரெளபதி முர்மு தலைமை வகித்தார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்று, 5,235 மாணவர்களுக்குப் பட்டம் வழங்கினார். விழாவில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு "டாக்டர்' பட்டத்தையும் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

""நாட்டின் கிழக்குப் பகுதி உயர்கல்வித் துறையில் பின்தங்கியுள்ளது. இதற்கான சூழலை மாற்றுவது நமது கூட்டுப் பொறுப்பு. ஜார்க்கண்ட் மாநில மாணவர்கள் நல்லவர்கள், ஆசிரியர்கள் சிறந்தவர்கள். மாநிலத்தில் பல பிரச்னைகள் உள்ளன. ஆனால் நாம் முன்னேறுவதற்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்தப் பகுதியை முக்கிய நீரோட்டத்தில் கொண்டு வருவதற்கு பல்கலைக்கழகங்கள் சிறந்த மாணவர்களையும் அவர்களின் கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிக்க வேண்டும்'' என்று திரௌபதி முர்மு பேசினார்.

"" நாட்டின் இரு தலைவர்களான பிரணாப் முகர்ஜியும், யஷ்வந்த் சின்ஹாவும் ஒரே மேடையில் வந்திருப்பது எங்கள் அதிருஷ்டம். சாதாரண குடிமகனை இந்தச் சூழ்நிலைக்கு மாற்றும் அளவுக்கு சக்தி வாய்ந்தவர்களாக ஆக்குவதில் அவர்கள் உழைத்துள்ளனர்'' என்று துணைவேந்தர் ஜெயந்த் சின்ஹா விழாவில் தெரிவித்திருந்தார். இன்று திரௌபதி முர்மு சரித்திரத்தில் இடம்பெற்றுவிட்டார். விழாவும் கூடத்தான்!

- ஸ்ரீதர் சாமா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com