மருதாணி

அடர் சுருள்முடியில் நடுவகிடாக நீள்கிறது  மண் சாலை.  சில்லிட்ட காற்றில் இரு பக்கமும் சிற்றலையாய்த் தலையசைக்கும் பசும் வயல்வெளி.
மருதாணி


அடர் சுருள்முடியில் நடுவகிடாக நீள்கிறது மண் சாலை. சில்லிட்ட காற்றில் இரு பக்கமும் சிற்றலையாய்த் தலையசைக்கும் பசும் வயல்வெளி. ரவி நிதானமாகவே காரை ஓட்டுகிறார். அருகே மனைவி நந்தினி. ஷர்மிளா தாகூரை நினைவூட்டும் குழி விழும் புன்னகைக் கன்னத்தில் விரல் பதித்து வேடிக்கை பார்த்தபடி நந்தினி.

பிரளயமே வந்தாலும் அமைதியாய் எதிர்கொள்ளும் ஆழ்ந்த கண்கள் ரவிக்கு !
""ரவி.. அதோ பாருங்க.. வரிசையா நூல் புடிச்ச மாதிரி கொக்கு பறந்து வந்து லேண்ட் ஆகுது! மோகன்னு நினைக்கிறேன். "கொக்கு பூத்த வயல்' நாவல்.. ம்ம்.. நீங்கதான் புத்தகம் பக்கமே திரும்பறதில்லையே!

லேசாய் பக்கம் திரும்பிச் சிரிக்கிறார்: ""எனக்கும் சேத்துத்தான் நீ. எல்லாத்தையும் விழுந்து விழுந்து படிக்கிறியே?''

""ஏன்? மனசு விரும்பினா இந்த வயதிலயும் ஆரம்பிக்கலாமே? முன்னாடிதான் கம்பெனி, பேஃக்டரின்னு ஓயாம ஓடினீங்க.! உடம்பு தேஞ்சு போச்சு.. இப்பவோ பிள்ளைகள் கவலை வேற. ரிஷஸன் வந்ததிலிருந்தே மகன், மருமகன் நச்சரிப்பு. அடுத்து கரோனான்னு வரிசையா பிரச்னை''.

""இது ஊர் உலகம் எல்லாத்துக்குமான பிரச்னைதானேநந்தினி.. ''

""ம்... சரிதான். இதே மங்களம் பாட்டி நம்ம வீட்டு கிரஹப் பிரவேசத்துக்கு வந்து சமையல், விருந்து மேற்பார்வை செஞ்சாங்க.. அப்பவே சொன்னாங்க.. ! இங்கே மாயநல்லூருக்கு வந்து பத்து நாள் தங்கிட்டுப் போங்கன்னு...''

""மெட்ராஸ்ல வீடு கட்டினோம். அப்புறம் பசங்க கோபால், லதா வேலை, கல்யாணம்னு வரிசையா வேலை . நாம இங்கே வர்றது இப்ப மூணாவது முறை, அவ்வளவுதானே!''

""இந்தத் தொன்னூறு வயசிலயும் பாட்டி கிடைக்கிற ஆளுங்களை வைச்சு.. இங்கே விவசாயம் பாக்குறாங்க.. போன வாரம் பார்க்கணும்னு தோணுது .. ஒரு நடை உடனே கிளம்பி வாங்கன்னு ஆர்டர் போட்டாங்க..! இதோ வந்தாச்சு. ஆங்... இன்னும் கொஞ்சம் மெதுவாகப் போங்க... மாயநல்லூர் வந்தாச்சு.

வலது பக்கம் தான் பாட்டி வீடு.

""வயல் நடுவே வீடு. முன்னே வீடு. பின்புறம், வலது, இடது பக்கங்களில் வயல்வெளி. வீடு சற்றே முகம் மாறியிருக்கிறது . ஓட்டுக்குப் பதில் தார்சு . அகலத்தில் அமைந்த வீடு. வாசலில் கருங்கல் மதில். நடுவில் செம்மண் சரளைக்கல் பாதை. வலது பக்கம் மா, கொய்யா. இடதில் மாதுளை, வேப்ப மரங்கள். ''

கார் சத்தம் கேட்டு ஓடிவந்து வாசல் ரெட்டைக் கதவைத் திறக்கிறார் முதியவர்.
ப்ளஷர உள்ளாறக் கொண்டாந்து நிப்பாட்டிடுங்க சார் . குச்சி ஊன்றியபடி வந்த மங்களம் பாட்டி மலர்ச்சியாக..

""வாங்கப்பா.. வாம்மா நந்தினி.. இப்பவாவது வந்தீங்களே.. சரி.. லதா, கோபால், லட்சுமி, குமார் எல்லாம் எங்கே? கூட்டியாறலையா?''

""அதான் நாங்க வந்திருக்கோமே.. பாட்டி..''

மங்களம் பாட்டி ஒல்லியான தேகம். நல்ல உயரம்; சந்தன நிறம். மண் சார்ந்த வாழ்வு தரும் உடல் , மன வளம்.

ரவி டிக்கியைத் திறக்க, முதியவர் செல்லமுத்து, பெட்டி, கூடைகளை இறக்கி உள்ளே கொண்டு செல்கிறார் .

""ஐயா.. ! வெதுவெதுன்னு தண்ணி சேந்து வச்சிருக்கேன் . குளியலோ, கை கால் கழுவலோ முடிச்சுக்கிட்டு வந்திடுங்க...''

குளியலறையைக் காண்பிக்கிறார். ரவி சிறு குளியல் போட்டு வருகிறார். நந்தினி முகம் கைகால் கழுவிவந்து பாட்டியுடன் சமையல் கட்டில் அடைக்கலம்.

ஏற்கெனவே மதியச் சாப்பாடு தயாராகிவிட, இப்போது சூடாக அப்பளம், வடை. சாப்பாடு ஆயிற்று. இரு நாள்கள் வீட்டிலும் வயக்காட்டிலுமாக! பொழுதும் போயிற்று.

மைனா, கிளி, அணில்களின் சிநேகச்
செல்லக் குரலோசையும் பசு, கன்றின் அடிவயிற்
றெழுப்பல் பாச அழைப்பும் இவர்களைக்
கிறங்கடித்தன.

வீட்டின் பின்பக்கம் வலதுபுறம் மாட்டுத் தொழுவம் . சிறு தோட்டத்தில் கறிவேப்பிலை, மருதாணி, கீரைப்பாத்தி... இடதுபுறம் பணியாளர் வசிக்கும் ஓட்டு வீடு. வெளி வேலைக்கு ராமசாமி, தோட்ட வயல் வேலைகளுக்கு செல்ல முத்து. சமையல், வீட்டு, மேல் வேலைக்கு செல்லமுத்துவின் மனைவி கண்ணம்மா, மகள் பொன்னி. பொன்னி நந்தினிக்கு இன் சார்ஜ்.

நந்தினியின் கண்பார்வைக்கேற்ப பொன்னியின் சுறுசுறுப்பான வேலைகள். நந்தினியுடன் ஒட்டிக் கொண்டாள்.

மூன்றாம் நாள் முற்பகல். மங்களம் பாட்டி இவர்கள் அறைக்கு வந்து கட்டிலில் நந்தினியின் அருகில் அமர்கிறார்.

""நந்தினி.. நீ சின்ன வயசுலயே உன் அம்மா ஜானகியை இழந்தவ. அவளுக்கு இந்தப் பட்டிக்காடு பிடிக்காமலேயே போயிடுச்சு. மாயவரத்திலயே ஹாஸ்டல்லே தங்கிப் படிச்சு, கல்யாணமாகி அங்கேயே தங்கிட்டா. உன் மாமன் நடராஜனும் எவ்ளவோ சொல்லியும் விவசாயத்தைப் பார்க்க மாட்டேன்னுட்டு தில்லிக்குப் போனவன்தான்! அப்பிடியே லண்டனுக்குப் போய் செட்டிலாயிட்டான். எட்டு வருஷத்துக்கொரு தடவை இங்கே உங்க அத்தையோட வந்து பார்த்துட்டுப் போறான். போன தடவை வந்தப்போ, நான் அவன் பங்கு பத்திச் சொன்னேன்.

""இந்த நிலம், நீச்சு, வீடு வாசல் எதுவும் எனக்கோ, என் வாரிசுகளுக்கோ வேண்டாமுன்னு கையை உதறிட்டான். பத்தாததுக்கு விடுதலைப் பத்திரம் வேற குடுத்துட்டான்'' ரவி, பாட்டியின் மனக் கவலைக்கு மருந்து பூசினார்.

""வாழ்க்கை முறையே இப்ப மாறிடுச்சில்ல.. நீங்க. அந்தக் காலத்து மனுஷி . இன்னமும் பந்தம் பாசம் மண்ணு பூமின்னு மதிக்கிறீங்க ... யாரு பாட்டி இதையெல்லாம் நினைக்கிறாங்க...''

இடைமறிக்கிறார் பாட்டி .

""ப்ச்.. எனக்கு அழைப்பு வர்ற சத்தம் கேட்டிடுச்சு. அதான் எல்லாத்தையும் நேர்செய்யணும்னு தீர்மானிச்சேன். நந்தினிக்குன்னு ஒரு பங்கு எழுதி வைச்சிருக்கேன். முழுசா உயில் எழுதிப் பதிஞ்சுட்டேன். உங்க காப்பி இந்தாங்கப்பா''

""என்ன பாட்டி நீங்க! எங்களுக்கெதுக்கு பாட்டி.. நாங்க என்ன செஞ்சிருக்கோம்!''

நெகிழ்ந்த குரலில் பேசிய நந்தினியின் தலையை ஆதுரத்துடன் தடவிக் கொடுக்கிறார் பாட்டி.
""எதோ... இருக்குது.. குடுக்கிறேன். அவ்வளவுதான்! வேறென்ன...''
ரவி கனத்த குரலில் பேசுகிறார்.
""பாட்டி.. உங்க அன்புதான் பெரிசு. அதே
சமயம் இப்ப பாருங்க! எம் மகன் கோபால், மருமகன் குமார் ரெண்டு பேருமே வீட்டை வித்துட்டுக் கையிலே காசைக் குடுத்துடுன்னு அடம் புடிக்கிறாங்க..''
""அட . என்னப்பா நீங்க! உங்க உழைப்பிலே சம்பாதிச்சுக் கடன் வாங்கிக் கட்டின வீடுதானேப்பா அது!''
""பசங்க பேசறது... எந்த ஊரு நியாயம்ப்பா! குடியிருக்கிற வீட்டை வித்துப்பிட்டா பட்டணத்தில் வேறே எங்கே போறது?''
இதுவரை பேசாத நந்தினி பேசுகிறார்:
""பாட்டி.. எடம் பெரிய இடம்தானே! வாங்குறவன் ஒரு வீடு இருந்த இடத்தில் பத்துக்கு மேலே கட்டுவான் . நீங்க ஒரு ஃப்ளாட் எடுத்துக்குங்க . மீதிப் பணத்தை எங்களுக்குக் குடுத்துடுங்க- இதுதான் பசங்க சொல்றது.''
""அதெப்படிம்மா ! தோட்டம் துரவோட நல்ல சிலான்ஈகமாப் புழங்கீட்டு அப்புறம் நெருப்புப் பெட்டிக் கணக்கா துளியூண்டு வீட்டிலே முட்டி மோதிக்கிட்டு இருக்கணுமா?''
""சரி! அவங்களுக்கு எதுக்குக் காசு?''
""காச வாங்கிக்கிட்டு, அவங்கத் தள்ளி தொலைவில ப்ஃளாட் வாங்கிக் கிட்டுப் போயிடுவாங்களாம்...''
""நந்தினி, நான் வேணும்னா.. மக, மருமகள் லதா, லட்சுமிகிட்டே பேசட்டுமாப்பா ?''
""பாட்டி... நீங்க வேற! இவங்கதான் தூபம் போட்றதே! பேசிப் பார்த்துட்டோம் . ஒன்னும் மசியலை. எங்களைத்தான் மடக்குதுங்க. வயசான காலத்துல பெரிய வீட்டைப் பராமரிக்கிறது கஷ்டம்; ஃப்ளாட்ன்னா.. எல்லாம் பொதுவிலே நடந்துடும்னு! எங்களுக்கு சால்ஜாப்பு சொல்றாங்க...''
""அநியாயமாயிருக்கே; பெண் பிள்ளைங்களுக்கு எதிர்காலம் பத்தின அக்கறையும் பெத்தவங்க பத்திய கவலையும் கூடுதலா இருக்கும் ...''
""ம்ம்... இப்ப நானில்லையா இங்கே தொன்னூறு வயசிலே! போன வருஷம் வரையிலே எல்லாத்தையும் இழுத்து வைச்சுப் பார்த்தேன் . முடியாதப்பதான் பிரிச்சு வித்தேன் ; இப்ப உடையவங்களுக்குக் குடுக்கிறேன் . என்னவோம்மா ! இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு உழைப்போட அருமையும் நிம்மதியின் தேவையும் தெரியவேயில்லை... ம்ம்... என்னவோ பார்ப்போம் ... இன்னிக்கு சாயங்காலம் ஐயனாரு கோயிலுக்குப் போய் வருவோம் . இப்ப ரெஸ்ட் எடுங்க..''
ரவியும் நந்தினியும் அவ்வப்போது வீட்டின் பின்பக்கம் நாடாக் கட்டிலில் அமர்ந்துவிடுகின்றனர் .
தொழுவம் தாண்டி கண்ணுக்கெட்டிய தூரம் வரை அலையடிக்கும் நெல்வயல். அகலக் கிணறு. பம்புசெட். வயல்வெளிப் பசுங்காற்றும், அருகிருக்கும் செடிகொடிகளின் இலை அசைவொலியும் துல்லியமாய் நேரடியாய் இதமாய் இதயம் வருடி விளையாடுகிறது.
""அக்கா! , அக்கா !!'' என்ற பாச ஒட்டுதல் பொன்னிக்கு நந்தினியிடம்! பொன்னியிடமும் நந்தினிக்கு ஈர்ப்பு . மருமகள் லட்சுமியின் வயதுதானிருக்கும் இவளுக்கு . பொன்னி முதல் நாளே லதா, லட்சுமி பற்றி ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தாள்.
கண்ணால் காணாமலே கூட இப்படியோர் அன்பு பிறக்குமா மனுஷியிடம் ! பொன்னி பற்றியும் நந்தினி தகவல் கேட்டுக் கொண்டார் .
பொன்னி பள்ளி இறுதி வரை படித்தவள் . திருமணம் ஆகவில்லை. பொன்னிக்கு வட்ட அழகு முகம் . கரிய நிறம் . களையான கருவிழிகள் . செதுக்கிய மூக்கு .
மெதுவாகத் தயங்கியபடி நந்தினியின் அருகில் வரும் பொன்னி, எதிரே தரையில் சம்மணமிட்டு அமர்கிறாள்.
""அக்கா! பாட்டிகிட்டே கேட்டுட்டேன். இன்னைக்கு ராத்திரி உங்களுக்கு மருதாணி வைச்சுவிடுறேன் . கோயிலுக்குப் போய்ட்டு வந்து சாப்பிட்டவுடனே தூங்குறதுக்கு முன்னாடி ரெடியாயிருங்க...''
""பொன்னி .. மருதாணி எனக்கா? இந்த வயசிலயா?''
"" என்னக்கா இப்பிடிக் கேக்குறீங்க ?''
""இதுக்கென்ன வயசு! உங்க வெள்ளைப் பிஞ்சு வெண்டை விரலுக்குச் சிகப்பு மருதாணி சூப்பராயிருக்கும்கா! ப்ளீஸ் ..!''
""எதுக்கும்மா ப்ளீஸ் எல்லாம்? இதோ சார்! என்னைக் கேலி செய்யப் போறாரு''
""அட .. அவருக்கும் நாளைக்கு நீங்க வச்சுவிட்ருங்க..!''
""யம்மாடி ! நீ நெசமாலுமே தங்கம்தான்ப்பா!'' பெருமூச்சு விடுகிறாள் நந்தினி.
நந்தினியின் முகத்தை அண்ணாந்து பார்க்கும் பொன்னியின் கண்களில் நீர் திரையிடுகிறது.
இரவு ஏழு மணி. சுடச்சுடத் தோசையும் வெங்காயம் - பூண்டுச் சட்னியுமாக இரவு உணவு . சென்னைப் பாலுக்கில்லாத சுவைமிகு பசும்பால் சூடாக .
அறைக்குள் வரும் நந்தினியின் மனசில் நாணம் மல்லியாய் மலர்கிறது . ஒரு கட்டில் இருந்த அறையில் சற்றே இடைவெளி விட்டு அருகருகே இரு கட்டில்கள். பீங்கான் கிண்ணம் நிறைய கரும்பச்சை சாந்தாய் அரைக்கப் பெற்ற மருதாணி , சிறிய துண்டு, நெற்றித் திலகமிடும் அச்சுக்குச்சிகள் சகிதம் பொன்னி வருகிறாள் .
""உங்க.. மருதாணி காஞ்சு படுக்கையெல்லாம் உதிர்ந்திட்டா என்ன பண்றதுன்னு சாருக்கு வேற கட்டில் கொண்டு வந்து போட்டேன். ம்...
ஒவ்வொரு கையா நீட்டுங்க..
அக்கா!
""ஒனக்குத்தான் எவ்வளவு ஆசை! பொன்னி.. நாளைக்கு உனக்கு நான் மருதாணி வைச்சு விட்றேன்!''
"" என்னக்கா பகடி பண்றீங்க..''
""ஹம்... எனக்கெல்லாம் மருதாணியா? நான் இருக்கேன் கரிக்கட்டை நிறத்தில... ! எனக்கு
மருதாணிச் சிகப்பு எங்கேக்கா தெரியப்போகுது ? எனக்கந்த ஆசையெல்லாம் வந்ததேயில்லை...!''
சட்டென முள்குத்திய வலி நந்தினிக்கு.
சென்னைக் கதையும் மாயநல்லூர்க் கதையுமாக நகர்கிறது நேரம் . ஒவ்வொரு விரலுக்கும் நுனியிலிருந்து பாதிவரை பூச்சு.
உள்ளங்கையில் நிலவென பெரிய வட்டம். அதைச் சுற்றி சிறு சிறு சிவப்புக் குண்டுமணி அளவில் வெளிச் சுற்று. பிறகு இரு பாத விரல்களுக்கும் பச்சைத் தொப்பிகள். கணுக்காலை ஒட்டி பாதங்களின் மேற்பக்கம் நெளிக் கோடாய்!
தோட்டத்திலிருந்து வந்த ரவி, தன் கட்டிலில் அமர்ந்து சிறிது நேரம் சிரித்தபடி வேடிக்கை பார்க்கிறார்.
மிக அக்கறையாகவும் அழகாகவும் பொன்னி மருதாணி இடுகையில் அமிழ்
கிறாள். சுமார் ஒரு மணி நேரம் நகர்கிறது .
""அக்கா! முடிஞ்சாச்சு? ஜாக்கிரதை. காலைல கழுவுங்க.! எதாவது வேணும்னா கூப்பிடுங்க. நான் போறேன். ரூம் வாசல்லதான் படுத்திருப்பேன்'' பொன்னியின் பாசமிகு ஈடுபாட்டில் நனைகிறாள் நந்தினி.
முன்பின் பழக்கமில்லாத பொன்னியோட இந்த அன்பும் பாசமும் உள்ளத்திலிருந்து வருதே ! ஆனா நமக்கு நேரடியான சொந்தமான லதாவும் லட்சுமியும் அன்பாகவும் பாசமாகவும் பேசுவது நடிப்போடு உதட்டளவில் மட்டுந்தானோ? சுயநலமாகக் காரியம் செய்துகொள்ளத் தானோ?
குடைகிறது மனசு. எப்போது தூங்கினோம் எனத் தெரியாது உறக்கம் தழுவினார் நந்தினி . காலைக் கனவாக உதிர்ந்து விழும் காய்ந்த மருதாணித் துகள்களாய் மகள், மருமகள், மகன், மருமகன் போலி அன்பு ....எந்த உறவும் அற்ற பொன்னியின் இதயமாகப் பளிச்சிடும் மருதாணிச் சிகப்பழகு முகம் காட்ட !
சட்டென விழித்து எழுகிறார் நந்தினி. அருகில் விழித்தபடியே படுத்திருக்கும் ரவியிடம் மெல்லிய குரலில் சொல்கிறார் நந்தினி.
""என்னங்க! ஒரு விஷயம் சொல்லட்டுமா ?
இந்த மருதாணி சாந்து மாதிரிதான் நம்ம வாழ்க்கை ஆயிடுச்சில்ல ? காரியம் முடிஞ்சு, கை சிகப்பா அழகானவுடனே மருதாணி பத்தைக் கழுவி விட்டுற்ற மாதிரி நம்மைக் கழுவி விட்டுவிட நினைக்கிறாôர்களோ நம்ம பிள்ளைங்க''
ரவி, புன்னகையுடன் நந்தினியின் நெற்றியில் முத்தமிட்டு, அருகே வந்து தலைக்கேசம் நீவிவிட்ட வண்ணம் கூறுகிறார்.
""அப்படியில்லை நந்தினி ! இதுவும் இயற்கையான இயல்புதான். இந்தக் காலத்துப் பிள்ளைகளோட பார்வை வேற மாதிரிதான். முந்தின தலைமுறையான நம்மை மாதிரியே இன்றைய பிள்ளைகளும் யோசிக்கணும்னு நாம் எதிர்பார்க்கலாமா சொல்லு!''
""ஆமா ! நீங்கள் எப்பவுமே பிள்ளைங்களை விட்டுக் கொடுக்க மாட்டீங்களே? ஆனா அவங்க இருக்கறதை அனுபவிக்காம பறக்கிறதைப் பிடிக்க நினைக்கிறாங்களே? அதுக்காக அலையலாமா ? அது நியாயமா ?''
புன்னகைத்தார் ரவி.
""இங்க பாரு நந்தினி - நாமளே இப்போ அவங்க வயசிலே இருந்திருந்தா எப்படி நினைச்சிருப்போம்ன்னு சொல்ல முடியுமா? இதோ. நேத்து இந்தப் பச்சை மருதாணி இன்னைக்கு எப்படி உன் கையில் சிகப்பு நிறமாச்சு பாரு! நாமதான் துளிர்த்து வளர்ந்து காய்ந்து கலைந்து கரைந்து விழும் இலைகளாகணும். இந்த மருதாணி இலை வாழ்க்கையால் நம்ம விரல்களில், உள்ளங்கையில் அழகுச் சிகப்பு நிறங் காட்டுறது நம்மோட சொந்தப் பிள்ளைகள்தானே!''
பச்சைதானே சிகப்பாச்சு?
ரவியின் சொல் கேட்டு, தலை உயர்த்தி நிதர்சனம் புரிபடப் புன்னகைக்கிறார் நந்தினி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com