திரைக் கதிர்

"ராக்கெட்ரி' நல்ல பெயரைக் கொடுத்ததில் மகிழ்ச்சியில் இருக்கிறார் மாதவன்.  இனி தொடர்ந்து படங்கள் தயாரிக்க முடிவெடுத்திருக்கிறார்.  
திரைக் கதிர்

"ராக்கெட்ரி' நல்ல பெயரைக் கொடுத்ததில் மகிழ்ச்சியில் இருக்கிறார் மாதவன். இனி தொடர்ந்து படங்கள் தயாரிக்க முடிவெடுத்திருக்கிறார். மாதவனின் மும்பை நண்பர்களும், அமெரிக்க நண்பர்களும் பொருளாதார உதவியைச் செய்யத் தயாராகி இருக்கிறார்கள். எனவே இப்போது சென்னையில் முகாமிட்டுக் கதை கேட்டு வருகிறார். அவரிடம் கதைகள் சொல்ல மணிரத்தினத்தின் உதவியாளர்களே முன் வருவதால், இந்த அழைப்பு எல்லோருக்குமானது என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்.

-------------------------------------------------------------------------

மறுபடியும் கவுண்டமணியை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. இதற்காகவே தொடர்ந்து பல முறை அவரை சந்தித்துக்கொண்டே இருக்கிறார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனின் பெரியப்பா கதாபாத்திரத்தில் அவர் படம் முழுவதும் வருகிற மாதிரி ஒரு கதையைத் தயாரித்துள்ளனர். அதை அவரிடமும் சொல்லியிருக்கிறார்கள். அவருக்கான தேதிகளில் முழு சுதந்திரம், இரவு படப்பிடிப்பு கிடையாது, அவுட்டோர் படப்பிடிப்பு இல்லை போன்ற சில நிபந்தனைகளை கவுண்டமணி அடுக்கியிருக்கிறார்.

-------------------------------------------------------------------------

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் "சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு மைசூரில் துவங்கியுள்ளது. லட்சுமி மேனன், ஸ்ருஷ்டி டாங்கே, வடிவேலு எனப் பலரும் இதில் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். லாரன்ஸ், வடிவேலு நடிக்கவுள்ள காட்சிகளை முதலில் படமாக்க உள்ளனர். இதற்காக வடிவேலு தொடர்ந்து 25 நாள்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார்.

-------------------------------------------------------------------------

சூர்யா இப்போது பாலாவின் "வணங்கான்' படத்தில் நடித்து வருகிறார். அடுத்து அவர் சிவாவின் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த இரண்டு படங்களும் முடிந்த பிறகே "வாடிவாசல்' பக்கம் செல்வார் எனத் தெரிகிறது. ஜல்லிக்கட்டைப் பின்னணியாகக் கொண்ட இந்தப் படத்துக்காகச் சில மாதங்களுக்கு முன்னர் சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் ஜல்லிக்கட்டு அரங்கம் ஒன்றை அமைத்திருந்தனர்.

-------------------------------------------------------------------------

"அசுரன்' படத்திற்குப் பின் வெற்றிமாறன் விஜய் சேதுபதி, சூரியை வைத்து "விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். ஜெயமோகனின் "துணைவன்' சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கதை உருவாகி வருகிறது. மார்க்சிய-லெனினிய இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரை என்கவுன்ட்டர் செய்வதற்காக இரு காவலர்கள் அழைத்துச்செல்கிறார்கள்.  அவர்களுக்கிடையில் நடைபெறும் உரையாடலே "துணைவன்' சிறுகதை. இந்தச் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு "விடுதலை'யின் விறுவிறு திரைக்கதையை எழுதியிருக்கிறார் வெற்றிமாறன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com