காருகுறிச்சி 100

நாகஸ்வர கலாநிதி காருகுறிச்சி அருணாசலத்தின் நூற்றாண்டு நினைவுத் தபால் தலை வெளியீடு, நூற்றாண்டு நிறைவு விழா, மலர் வெளியீடு, மலர் வெளியீட்டுக்கு முன்னும் பின்னும் நாகஸ்வரக் கச்சேரிகள் என்று அவரைக்
காருகுறிச்சி 100


நாகஸ்வர கலாநிதி காருகுறிச்சி அருணாசலத்தின் நூற்றாண்டு நினைவுத் தபால் தலை வெளியீடு, நூற்றாண்டு நிறைவு விழா, மலர் வெளியீடு, மலர் வெளியீட்டுக்கு முன்னும் பின்னும் நாகஸ்வரக் கச்சேரிகள் என்று அவரைக் கெளரவிக்கும் வகையில் மிகச் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மூத்த வயலின் வித்வான் சங்கீத கலாநிதி எம்.சந்திரசேகர் காருக்குறிச்சியார் சிறப்பு மலரை வெளியிட, தவில் வித்வான் தஞ்சாவூர் டிஆர். கோவிந்தராஜன் பெற்றுகொண்டார்.

"நின்றொளிரும் மின்னல்' என்ற தலைப்பில் காருக்குறிச்சி அருணாசலத்தின் நூற்றாண்டு விழா மலரைத்தொகுத்துப் பதிப்பித்திருக்கும் சிவகுமாரிடம் பேசியபோது, காருக்குறிச்சியாரைப் பற்றி பல விஷயங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்:

காருகுறிச்சி அருணாசலத்தின் பெற்றோர்களுக்குப் பூர்வீகம் திருநெல்வேலி தாழையூத்துக்கு அருகிலுள்ள புளியங்கொட்டாரம் கிராமம். பிழைப்பு நாடி காருகுறிச்சிக்கு குடி பெயர்ந்தவர்கள் அவர்கள். கோயில்களுக்கு பூக்கட்டிக் கொடுக்கும் வேலைகளைச் செய்துவந்த அருணாசலத்தின் தந்தை பலவேசத்துக்கு நாகஸ்வர வித்வானாக வேண்டுமென்பது அவரது ஆசை. ஆனால் அவரது ஆசை நிறைவேறவில்லை. ஆகவே, தன் மகனை ஓர் இசைக் கலைஞராக்க வேண்டும் என்று பெரிதும் விரும்பினார்.

நாகஸ்வர சக்ரவர்த்தி திருவாவடுதுறை டி. என். ராஜரத்தினம் பிள்ளையிடம் துணை நாயனம் வாசிக்கப் போன காருகுறிச்சியார், அவருடனேயே சென்று அவர் தம்சீடரானார். இசை நுணுக்கங்களையும் நுட்பங்களையும் கற்றறிந்து இசையை தன் வசமாக்கிக் கொண்டார்.

தனது குருநாதர் டி.என்.ஆருடன் இணைந்து பல கச்சேரிகளைச் செய்துவந்தார். சுவாமிமலையில் ஒவ்வொரு ஆண்டும் நாகஸ்வர சக்ரவர்த்தியார் சார்ந்த சமூகத்தாரின் மண்டகப்படியன்று அவரது குருநாதரின் வாசிப்புதான் நடக்கும்.

கச்சேரி தொடங்கிய சில மணி நேரத்தில் திருவாவடுதுறையார் காருகுறிச்சியாரைத் தொடர்ந்து வாசிக்கச் சொல்லிவிட்டு தன் ஜாகைக்குத் திரும்பிவிட்டார். காருகுறிச்சியார் "உசேனி'யை விஸ்தாரமாக ஆலாபனை செய்ய செய்ய, மகிழ்ச்சியின் உச்சத்துக்கே இசை ரசிகர்களை அழைத்துச் சென்றது காருகுறிச்சியாரின் நாகஸ்வர இசை.

நள்ளிரவில் தொடங்கிய கச்சேரி விடியற்காலை வரை நீடித்தது. இந்த நிகழ்வே, காருகுறிச்சியாரின் அரங்கேற்றக் கச்சேரியாக அமைந்தது.

சுவாமிமலை கச்சேரிக்குப் பின்னர், காருகுறிச்சியார்அவரின் குரு நாகஸ்வர சக்ரவர்த்தியாரின் ஆசிகளோடு தனிக் குழு அமைத்து கச்சேரிகள் செய்ய ஆரம்பித்தார். தனது காருகுறிச்சி வீட்டுக்கு "இராஜரத்தின விலாஸ்' என்று பெயர் சூட்டி, தனது குரு பக்தியைக் காட்டினார்.

1955- ஆம் ஆண்டு ஜுலை 26- ஆம் நாள் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளைக்குப் பாராட்டு விழாவை காருகுறிச்சியார் முன்னின்று நடத்தினார். அந்த விழாவிலே, திருவாவடு துறையார் தனது கலைவாரிசு காருகுறிச்சி அருணாசலம்தான் என்று அறிவித்தார்.

கச்சேரிக்குத் தேதி கேட்பவர்களைப் பாரபட்சமின்றி கல்யாணம், திருவிழா, தனிக் கச்சேரி என எதுவாக இருந்தாலும் தனி சன்மானம் எதுவும் வைத்துக் கொள்வதில்லை. அவரவர் தகுதிக்கேற்ப சன்மானம் எதுவாயினும் ஏற்றுக் கொண்டார்.

கறார் தன்மை கிடையாது. தான் செல்ல இயலாத நிகழ்ச்சிகளுக்கு தனது சக கலைஞர்களைநிகழ்ச்சிகளுக்குப் பரிந்துரை செய்வது அவரது பழக்கம். பல இடங்களில் இசை நிகழ்ச்சிக்கு சன்மானம் எதுவும் பெறாமலும் வாசித்திருக்கிறார். கோவில்பட்டி கன்னி விநாயகர் கோயில் சங்கீத சபாவின் திருவாதிரை இசை நிகழ்ச்சி, பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள விநாயகர் கோயில் வருஷாபிஷேக நிகழ்ச்சி, எட்டயபுரம் பாரதி விழா ஆகியவை இதற்கு உதாரணங்கள்.

கச்சேரி இல்லாவிட்டாலும் தனது குழு கலைஞர்களை தனது வீட்டிலேயே தங்க வைத்து எல்லோருக்கும் ஊதியம் வழங்கவும் ஏற்பாடு செய்திருக்கிறார். கலைஞர்கள் தங்குமிடம், விருந்தினர்கள் தங்குமிடம், சாதகம் செய்ய தனி அறை, உணவு அறை, வீட்டின் பின்புறம் சிறு சிறு வீடுகளாக 9 வீடுகளுடன்அமைத்து, மொத்த வீட்டைச் சுற்றிலும் தோட்டம்,அமைத்திருந்தார்.
கோவில்பட்டியின் பிரபலங்கள் வாழும் தெருவான கலெக்டர் பங்களா தெருவில்அந்த வீடு இருந்தது. மிக அமைதியான இடம்.

திருச்செந்தூரில் ஆண்டுதோறும் பச்சை சாத்தி உத்ஸவத்துக்குதான் இருக்கும்வரை அவரே வாசிப்பதாக உறுதிமொழி அளித்திருந்தார். அந்த நிகழ்வுக்காக குடும்ப சகிதம் சென்று தங்கிவிடுவதுண்டு. அன்றிரவு உத்ஸவத்தில் பல மணி நேரம்நின்றுகொண்டே வாசித்திருக்கிறார்.

திருச்செந்தூர் செந்திலாண்டவர் மீதுஆழ்ந்த பக்தி கொண்ட அவர், தான் எழுதும் கடிதங்களில் செந்திலாண்டவர் அருளால் நல்லபடியாக நடக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது நெருங்கிய நண்பரான எழுத்தாளர் கி. ராஜநாராயனன் கூறியதாவது:

""சிறு வயதிலேயே அவர் ரொம்ப அருமையாகப் பாடுவார். சாப்பிடுகிற நேரம், தூங்குகிற நேரம் தவிர மற்ற நேரங்களிலெல்லாம் சதா ஏதாவது ஒரு ராகத்தை முனகிக் கொண்டிருப்பார். அதுகேட்க மிக மனோரம்மியமாய் இருக்கும். பெண்களே ஆசைப்படும்படியாக கூந்தல் தலைமுடி வைத்திருந்தார். தலை முழுகி விட்டு, விரிந்து தொங்கும் கூந்தலினூடே விரல்களை நுழைத்து சிக்கெடுத்துக் கொண்டே பிரமாதமாக ராக ஆலாபனை செய்வார்.

கச்சேரிகளுக்குப் புறப்படுவற்கு முன்னால் அவர் தன்னை அலங்கரித்துகொள்வார். நாங்கள் சூழ உட்கார்ந்துகொண்டு வெகு சுவாரஸ்யமாக இந்த அலங்கார வைபவத்தைவிடாமல் பார்த்துகொண்டே இருப்போம். இதில் எங்களுக்கு அலுப்புத் தட்டியதேஇல்லை!'' என்றார்.

"கொஞ்சும் சலங்கை' எனும் திரைப்படத்துக்காக, "மந்திரமாவது...' என்று தொடங்கும் தேவாரப் பாடலுக்கு காருகுறிச்சியாரின் நண்பரும் இசைப்பேராசிரியருமான டி.ஏ. சம்பந்தமூர்த்தி ஆச்சாரியார் அமைத்த மெட்டை மெருகேற்றி, கொஞ்சும் சலங்கையில் வரும் "சிங்காரவேலனே தேவா...' என்ற பாடலுக்கு ஏற்றபடி மாற்றியமைத்து வாசித்தார் காருகுறிச்சியார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com