ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ஆழ்ந்த தூக்கத்திற்கு...

என் வயது 20. படிப்பை முடித்து ஒரு கம்பெனியின் பயிற்சி முகாமில் தினமும் எட்டு மணி நேரம் இருக்க வேண்டிய கட்டாயத்தினால், பின் தலையில் வலி,  பொடுகு, அரிப்பு, மதியம் சரியானபடி வேகாத சாதத்தைச் சாப்பிடுவதால்
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ஆழ்ந்த தூக்கத்திற்கு...

என் வயது 20. ஐ.டி.ஐ. படிப்பை முடித்து ஒரு கம்பெனியின் பயிற்சி முகாமில் தினமும் எட்டு மணி நேரம் இருக்க வேண்டிய கட்டாயத்தினால், பின் தலையில் வலி,  பொடுகு, அரிப்பு, மதியம் சரியானபடி வேகாத சாதத்தைச் சாப்பிடுவதால் வயிறு மந்தம், குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்திருப்பதாலும் சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுதல், தூக்கமின்மை போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. இவை குணமாக மருந்து உள்ளதா?

-லோகேஸ்வரன்,
அரக்கோணம்.

உடல் உட்புறச்சூடு தோலின் வியர்வை வழியாகவும், நுண்ணிய துவாரங்களின் வழியாகவும் வெளியேற வேண்டிய  நிலையில், குளிரூட்டப்பட்ட அறையிலுள்ள குளிர்ச்சியினால் தடைப்பட்டுப் போய், உடல் உட்புறத்திலேயே தங்குவதால், பித்த சூட்டின் வெளியேற்றத்தை மஞ்சள் நிறமான சிறுநீர் தெரியப்படுத்துகிறது.

சூட்டினால் இளகிய தலைப்பகுதியிலுள்ள சளியானது, பின்தலையில் கனத்தையும், அரிப்புடன் கூடிய பொடுகையும் ஏற்படுத்துகிறது. வேகாத சாதத்தைச் செரிக்க செய்ய வேண்டிய பித்தம் சரிவர இயங்காத நிலையில் பசி மந்தம், தூக்கமின்மை போன்ற உபாதைகளை ஏற்படுத்துகிறது.

பித்த, கப தோஷங்களின் சீற்றத்தை நீங்கள் குறிப்பிடும் அறிகுறிகளின் வாயிலாக, நன்கு உணர முடிகிறது. செரிமானத்தைச் சீராக்கி, சிறுநீர் மஞ்சள் நிறத்தை மாற்றி அமைத்தாலே மற்ற உபாதைகளின் தாக்கத்தையும் பெருமளவு குறைக்கலாம்.

சீந்தில் கொடி, பதிமுகம், வேப்பம்பட்டை, சிவப்பு சந்தனம், கொத்தமல்லி விதை ஆகியவற்றின் சேர்க்கையினால் கஷாயம் தயாரித்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, மேற்குறிப்பிட்ட தாக்கமனைத்தும் பெருமளவு குறைக்கலாம்.

வில்வ வேர், துளசியின் இலை, புஷ்பம், தகர விதை, தேவதாரு தொடங்கிய மூலிகைகளை ஆட்டினுடைய சிறுநீரில் அரைத்து, உருட்டி, குளிகைகளாகச் செய்து, ஒன்றிரண்டு குளிகைகளை, முன்சொன்ன கஷாயத்துடன் சாப்பிட, பொடுகுத் தொல்லையும், இளகிய சளியும் நன்கு குறைந்துவிடும்.

உங்களுக்குப் பொதுவாகவே நோய் எதிர்ப்பு சக்தியானது குறைவாக இருப்பதாகத் தெரிகிறது. முன்குறிப்பிட்ட கஷாயம் மற்றும் குளிகையை காலையில் மட்டும் பதினான்கு முதல் இருபத்தியோரு நாட்கள் வரை சாப்பிட்டு, அதன்பின்னர் உடல் ஊட்டம், உற்சாகம், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றை வளர்க்கச் செய்யும் ரஸாயன மருந்துகளாகிய சியவனபிராசம், ப்ராம்ஹரஸாயனம், அகஸ்திய ரஸாயனம் போன்றவற்றில் ஒன்றை, காலையில் வெறும் வயிற்றில் சில மாதங்கள் சாப்பிட வேண்டும். சளி மற்றும் பித்த தோஷங்கள் குறைவதுடன், கல்லீரல் செயல்பாடும் மேம்படும்.

தூக்கமின்மையைப் போக்கிக் கொள்ளவும், ஜலதோஷத்தினால் ஏற்பட்டுள்ள பின் தலைவலி உபாதை குறையவும், உடலுக்கு வலுவூட்டவும் நீங்கள் கசகசாவை பசுவின் பால்விட்டு அரைத்துப் பிழிந்து பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம்.  கஞ்சியாக்கிப் பருகலாம்.

வயிற்றில் கிருமி, தினவு, சீதமும், ரத்தமும் கலந்த கடுப்பு போன்ற உபாதைகளையும் இதன் மூலம் நீக்கிக் கொள்ளலாம்.

மாவுப் பண்டமாகிய அரிசி, உளுந்து, உப்பு சேர்ந்த இட்லி, தோசை, வடை போன்றவரை தவிர்க்கத்தக்கவை. உளுந்தினால் கப- பித்த- சீற்றம் குறையாது என்பதால் அதனைத் தவிர்த்து, காலை உணவாக சூடான பொங்கல், உடைத்த அரிசி உப்புமா, மிளகு சீரகம் பூண்டு சேர்த்த சூடான ரஸம் சாதம் என்ற வகையில் நீங்கள் சாப்பிட உகந்தது.

ஓய்வு நாட்களில் கூட, பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது. சுக்குத் தட்டிப் போட்ட வென்னீர் குடிப்பதற்கு நல்லது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com