ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தாழ்வு மனப்பான்மை நீங்க...

என் பேத்திக்கு வயது 18. கடந்த ஒரு வருடமாக தினமும் கடுமையான தலைவலி நாள் முழுவதும் உள்ளது. கண், நெற்றி, தலையின் பின்பகுதி, உச்சி, முன்பகுதியில் வலி அதிகமாக உள்ளது.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தாழ்வு மனப்பான்மை நீங்க...


என் பேத்திக்கு வயது 18. கடந்த ஒரு வருடமாக தினமும் கடுமையான தலைவலி நாள் முழுவதும் உள்ளது. கண், நெற்றி, தலையின் பின்பகுதி, உச்சி, முன்பகுதியில் வலி அதிகமாக உள்ளது.  ஆறு வருடங்களாக கண்ணுக்கு கண்ணாடி அணிந்துள்ளார். மூன்று நாட்கள் மாதவிடாய் நாட்களில் கடும் வயிற்று வலி உள்ளது. தாழ்வு மனப்பான்மையும் உள்ளது. இவை குணமாக மருந்துகள் ஆயுர்வேதத்தில் உள்ளதா?

அன்னகாமாட்சி,
திருச்சி.

தலைவலி பிரச்னை கண்ணாடி அணிந்திருப்பதாலா? மாதவிடாய் சம்பந்தப்பட்டதா? தாழ்வு மனப்பான்மையினாலா போன்ற கேள்விகள் நம் முன்னே வந்து நிற்கின்றன.  தலையை ஸ்கேன் செய்து பார்த்ததில் கோளாறு எதுவுமில்லை என்று வந்திருப்பதாக, தங்களது கடிதத்தில் மேலும் ஒரு தகவலாகத் தெரிவித்திருக்கிறீர்கள். தலையைச் சார்ந்த கபாலத்தின் உட்புற ஓட்டைகளில் ஏதேனும் காரணத்தால், நீர்க்கோர்வை ஏற்பட்டிருந்தால் நீங்கள் குறிப்பிடும் தலைப்பகுதியில் கடும் வலியானது ஏற்படும். 

அதுபோன்ற நிலைகளில் ராஸனாதிசூரணம், ஏலாதிசூரணம் போன்ற மருந்துகளை வெற்றிலைச் சாற்றிலோ, இஞ்சி சாற்றிலோ கலந்து சூடாக்கி, நெற்றிப் பரப்பு முழுவதுமாக பற்றிட்டு சுமார் ஒரு மணி நேரம் வைத்திருந்து, காய்ந்த நிலையில் உள்ள பற்றினைத் தட்டிவிட்டு அகற்றிவிடுவதன் மூலமாக, தலைவலி பெருமளவில் குறையும்.

பேத்திக்கு வயது 18 ஆவதாலும், கப தோஷத்தின் ஆதிக்யப் பகுதியான வயதிருப்பதாலும், இந்தப் பற்றுப் போடும் சிகிச்சையை நீங்கள் காலை, மாலை என இருவேளை போட்டு வருவதால் நன்மை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மாதவிடாய் நாள்களில் ஏற்படும் கடும் வயிற்று வலியைக் குணப்படுத்தும் தசமூலம் எனும் பத்து வேர்களின் சேர்க்கையினால் தயாரிக்கப்படும் கஷாயத்துடன், இரண்டு தான்வந்திரம் எனும் குளிகையுடன் காலை, மாலை வெறும் வயிற்றில், மாதவிடாய் வரும் நாட்களுக்கு முன்பாக, சுமார் ஏழு நாட்களுக்குச் சாப்பிட்டால், மாதவிடாய் வயிற்றுவலியானது குறைவதுடன், அதனுடன் தலைவலியும் குறைய வாய்ப்புள்ளது. தாழ்வு மனப்பான்மையினால் மனதில் எழும் வருத்தமான எண்ணங்களின் கூட்டத்தினால், தலையிலுள்ள நுண்ணிய நரம்புகள், அங்கு உண்டாகும் சுரப்பிகளின் குறைபாடுகள் போன்றவற்றில் அழுத்தம் ஏற்பட்டு தலைவலியை ஏற்படுத்தலாம்.

மனநலம் சார்ந்த மருத்துவர்களின் உதவியோடு, வருத்தம், பயம் போன்ற எண்ணங்களை மாற்றும் முயற்சிகளில் ஈடுபடலாம். ஆயுர்வேத மூலிகை நெய் மருந்துகளாகிய கல்யாணக கிருதம், மஹா கல்யாணகிருதம், பஞ்ச கவ்ய கிருதம், சாரஸ்வத கிருதம், பிராம்மீ கிருதம் போன்றவற்றில் ஒன்றை, மருத்துவர் ஆலோசனைப்படி பயன்படுத்துவதால், தலைவலியை பெருமளவு குணப்படுத்தலாம். மூலம் சிறிய அளவில் இருப்பதாகவும், மலம் நன்கு வெளியேறுவதற்கு ஆயுர்வேத மாத்திரையான காயம் எனும் மருந்தை ஒன்று எடுத்துக் கொள்வதாகவும் தங்கள் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளீர்கள். இதையும் நாம் உதாசீனப்படுத்த முடியாது என்பதால், அதைக் குணப்படுத்தும் ஆயுர்வேத கஷாய மருந்தாகிய சிரிவில்வாதியை, சிட்டிகை இந்துப்புடன், மாலை வேளையில் சாப்பிட்டு வந்தால், மூல உபாதைக்கான நிவாரணியாகவும், அதனால் ஏற்படும் தலைவலி உபாதையையும் தீர்த்துவைக்கக் கூடும்.

மேற்குறிப்பிட்ட மருந்துகளின் சேர்க்கையை குடல் சரியான விகிதத்தில் பெறுவதற்கு, திருச்சியில் சிறந்த ஆயுர்வேத மருத்துவர்கள் பலரும் இருப்பதால், அவர்களின் துணை கொண்டு பேத்தியின் தலைவலி உபாதையை போக்க முயற்சி செய்யவும்.

உடலெங்கும் மூலிகைத் தைலங்களைத் தடவி, வியர்வையை ஏற்படுத்தும் சிகிச்சை முறைகளைச் சேர்த்து, வஸ்தி எனும் எனிமா முறையினால் குடல் சார்ந்த மலம் மற்றும் வாயுவை அகற்றி அதன் பிறகு, தலை மற்றும் நெற்றியில் வெதுவெதுப்பாக ஊற்றப்படும் "சிரோதாரா' எனும் சிகிச்சை முறைகளால் தலைசார்ந்த எண்ணற்ற உபாதைகளை நாம் குணப்படுத்திக் கொள்ள முடியும் என்ற ஆயுர்வேதத்தின் அறிவுரையை நீங்கள் சிரமேற்கொண்டு, பேத்திக்குச் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும். பலரும் இந்த சிகிச்சை முறைகளால் குணடைந்திருக்கிறார்கள்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com