'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 110

நான் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நுழைவதைப் பார்த்ததும், பீஷ்ம நாராயண் சிங் பதறி விட்டார்.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 110


நான் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நுழைவதைப் பார்த்ததும், பீஷ்ம நாராயண் சிங் பதறிவிட்டார். வாழப்பாடியாரும், ரங்கராஜன்  குமாரமங்கலமும் என்னைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பீஷ்ம நாராயண் சிங் ஏதாவது சொல்லிவிடக் கூடாது என்று நினைத்தாரோ என்னவோ, வாழப்பாடியார் சட்டென சுதாரித்தார்.

""வாங்கய்யா... நாங்கள் இருப்பது தெரிந்து வந்தீர்களா, இல்லை இவரைப் பார்க்க வந்தீர்களா...?'' என்று சிரித்தபடி கேட்டபோது, அங்கு  நிலவிய இறுக்கம் தளர்ந்தது.

""உள்ளேயிருந்து ஒரு நாற்காலியை எடுத்துட்டு வாங்க...'' என்று ரங்கராஜனும் சொன்னபோது பீஷ்ம நாராயண் சிங்கும் பதற்றம் தணிந்து சகஜ நிலைக்கு வந்தார். ரங்கராஜன்தான் பேச்சைத் தொடங்கினார்.

""ரஜினிகாந்த் எப்போது  நரசிம்ம ராவைச் சந்திக்க வரப்போகிறார்? உனக்கு அதுபற்றித் தகவல் கிடைத்திருக்குமே...''

""ரஜினியை பிரதமர் சந்திக்கிறார் என்பதே இப்போது நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும். ஆர்.வி.யைக் காலையில் சந்தித்தேன். ரஜினியை அரசியலுக்குக் கொண்டுவர மூப்பனாரும், சோ சாரும் முயற்சி செய்து வருவதாக அவர் சொல்லித்தான் தெரிந்துகொண்டேன். அவருக்கு அந்தத் தகவல்களைக் கொடுத்தவர் வாழப்பாடியாராக இருக்க வேண்டும். அதனால் நீங்கள்தான் அது குறித்துத் தெரிந்துவைத்திருக்கிறீர்கள்...''

வாழப்பாடியார் சிரித்தார். நான் பீஷ்ம நாராயண் சிங்கைப் பார்த்தேன். அவரது முகத்தில் எந்தவித சலனமும் இல்லை. முதல்வர் ஜெயலலிதாவுக்கும் காங்கிரஸுக்கும் இடையிலான தொடர்புக்கு அவர் முக்கியக் காரணம் என்பதும், அவருடன் ம. நடராஜன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார் என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும். பிரதமர் அலுவலகம் ரஜினிகாந்துக்கு சந்திக்க நேரம் கொடுத்திருந்தால், அவருக்குத் தெரியாமல் இருக்காது.

""ரஜினிகாந்த் பிரதமரை சந்திப்பது இருக்கட்டும். முதல்வருக்கும் பிரதமருக்கும் இடையில் சமரசம் ஏற்படுத்தி காங்கிரஸ் - அதிமுக கூட்டணி அமைவதை இருதரப்பும் விரும்புவதாகத் தெரிகிறதே...''


எனது கேள்வியை அவர்கள் மூவரும் அலட்சியம் செய்ததை முகபாவம் காட்டியது. அதிமுக - காங்கிரஸ் கூட்டணி என்பது அன்றைய நிலையில் அசாத்தியம் என்பதால் அவர்கள் எனது கூற்றை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. 

""அதிமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை'' - சிகரெட்டைப் புகைத்தபடி ரங்கராஜன் குமாரமங்கலம் கூறினார். ""அப்படியே கூட்டணி அமைந்தாலும் அது தோல்விக் கூட்டணியாகத்தான் இருக்கும்'' என்று அவரே தொடர்ந்தார்.

""ஏன் அப்படி நினைக்கிறீர்கள்? மதிமுக ஏற்படுத்தி இருக்கும் பிளவால் திமுக பலவீனமடைந்திருக்கிறது. அதிமுகவுக்கு ஆட்சி அதிகாரம் இருக்கிறது. மத்திய ஆட்சியில் இருக்கும் காங்கிரஸும் சேரும்போது அது ஏன் வெற்றிக் கூட்டணியாக அமையாது என்று நினைக்கிறீர்கள்?''

பீஷ்ம நாராயண் சிங், நாங்கள் பேசியதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாரே தவிர, எதுவுமே பேசவில்லை.

அரசியலில் பலம், பலவீனம் என்பது எப்போது வேண்டுமானாலும் தலைகீழாக மாறலாம் என்பதற்கு அன்றைய தமிழக அரசியல் ஒரு உதாரணம்; ஊழல் குற்றச்சாட்டுகள், வளர்ப்பு மகன் திருமணம் உள்ளிட்ட பல பலவீனங்கள் இருந்தாலும், அப்போது அடிமட்டத்தில் அதிமுக பலமாகவே இருந்தது என்பதுதான் உண்மை நிலைமை.

மாறாக, மதிமுக பிளவுக்குப் பிறகு திமுகதான் மிகவும் சோர்ந்து போயிருந்தது. அதுவரையில் இல்லாத பணபல அரசியல், ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவால் தமிழக அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அதை எதிர் கொள்ளும் நிலையில் திமுக அப்போது  இருக்கவில்லை.

மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் தோற்றம், மிக அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தியது திமுகவுக்குத்தான். திமுகவின் முக்கியப் பொறுப்பில் இருந்த பல மாவட்டச் செயலாளர்கள் வை. கோபால்சாமியின் மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சென்றனர் என்பது மட்டுமல்ல, இளைஞர்கள் மத்தியிலும், திமுக தொண்டர்கள் மத்தியிலும் அந்தக் கட்சிக்கு செல்வாக்கு ஏற்பட்டிருந்தது.

வட தமிழகத்தில் திமுக பலமாக இருந்ததற்கு வன்னியர்கள் மிக முக்கியமான காரணம். திமுகவின் ஆரம்ப காலத்தில், அண்ணாவின் முக்கிய தளபதிகளில் ஒருவராக இருந்த முகையூர் கோவிந்தசாமி, வன்னியர்களை திமுகவின் பின்னால் திரட்டியிருந்தார். வன்னியர் சமுதாயத் தலைவர்களான மாணிக்கவேலு நாயக்கரும், ராமசாமி படையாச்சியும், 1952-இல் ராஜாஜி அமைச்சரவையில் இணைந்து, காங்கிரஸில் கரைந்து போனதைத் தொடர்ந்து, வன்னியர் வாக்குவங்கி திமுகவை நோக்கி நகர்ந்தது.

வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி என்று வன்னியர்கள் தங்களுக்குத் தனி அடையாளம் தேடிக் கொள்ள முற்பட்டபோது, அதனால் திமுக பாதிக்கப்பட்டது. இத்தனைக்கும் வட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திமுக மாவட்டச் செயலாளர்களும், திமுக தலைவர்களும் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். அப்படி இருந்தும், டாக்டர் ராமதாஸ் பாமகவைத் தொடங்கியதைத் தொடர்ந்து, வன்னியர் வாக்குவங்கி அவரை நோக்கி நகரத் தொடங்கியது.

1991 ராஜீவ் காந்தி படுகொலை அலையிலும் பாமக ஓர் இடத்தில் வெற்றி பெற்றது ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்டது. மிகவும் பிற்பட்ட சமுதாயத்துக்கு ஒதுக்கீடு கேட்டுப் போராடி வெற்றி பெற்றதைத் தனது பலமாக்கிக் கொண்டிருந்தார் டாக்டர் ராமதாஸ். ஒதுக்கீடு வழங்கிய திமுகவால் அதன் பலனை அறுவடை செய்ய முடியவில்லை.

இடதுசாரிக் கட்சிகளும் சரி, திமுகவுடன் இணையத் தயாராக இல்லை. மார்க்சிஸ்ட் கட்சி மதிமுகவுடன் நெருக்கமாக இருந்தது என்றால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிமுகவுடன் தொடர்பில் இருந்தது.

தமிழக அரசியலில் என்னவெல்லாம் நடக்கும் என்பது பற்றியும், காங்கிரஸ் - அதிமுக கூட்டணியா அல்லது ரஜினிகாந்த் தலைமையில் காங்கிரஸா என்றெல்லாம் வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தோம். தேர்தலுக்கு ஒன்பது மாதங்களுக்கு மேல் இருந்த நிலையில், எந்தத் தெளிவும் இருக்கவில்லை என்பதுதான் உண்மை.

ரஜினிகாந்த் நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவராக இருந்தார் வாழப்பாடி கே. ராமமூர்த்தி. ""அவரை மூப்பனாரும், சோவும் கொம்பு சீவி விட்டு வேடிக்கை பார்க்க நினைக்கிறார்கள்'' என்பது அவரது கருத்து.

""அதிமுக - காங்கிரஸ் கூட்டணி இருக்கட்டும். திமுக - திவாரி காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி விட்டதா?'' - நான் கேட்டேன்.
""அதிமுகவும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைக்குமா, தனித்துப் போட்டியிடுமா என்று என்னால் இப்போது சொல்ல முடியாது. அவர்கள் கூட்டணி வைத்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.  ஊழல், ஊழலுடன்தான் கைகோர்த்துப் போட்டியிடும். தனித்துப் போட்டியிட்டால், இன்னும் நல்லது. மும்முனைப் போட்டியில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி...'' என்றார் வாழப்பாடி ராமமூர்த்தி.

""நாங்கள் வெற்றி பெறுவது உறுதி என்றால், திவாரி காங்கிரஸ் - திமுக கூட்டணி உறுதியாகி விட்டது என்று அர்த்தமா?''
""அப்படித்தான் வைத்துக் கொள்ளுங்களேன். கலைஞர் எங்கள் ஆதரவைக் கோரியிருக்கிறார். நாங்களும் திமுகவுடன் இணைந்து செயல்படுவோம் என்று உறுதி அளித்திருக்கிறோம். பாமகவையும் எங்கள் அணிக்குக் கொண்டு வந்து விடுவோம்.''
""அப்படியானால் மதிமுக?''

""மதிமுகவால் அதிக காலம் தாக்குப் பிடிக்க முடியாது. திமுக ஏற்றுக்கொள்ளாது. விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் அந்தக் கட்சியை அதிமுகவும், காங்கிரஸும் சேர்த்துக் கொள்ளாது. தனித்துப் போட்டியிட்டால், டெபாசிட் பணம்கூட மதிமுகவால் பெற முடியாது.''
வாழப்பாடியார் 1996 மே மாதத் தேர்தலுக்கான எல்லா திட்டங்களையும் வகுத்துத் தயாராக இருந்தார். ரஜினிகாந்த் வரமாட்டார் என்பதிலும் தெளிவாக இருந்தார்.

""ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என்று இவ்வளவு தீர்மானமாக நீங்கள் எப்படிச் சொல்கிறீர்கள்?''

""சினிமா நடிகர்களின் மனநிலையை நான் நன்றாகத் தெரிந்து வைத்திருப்பவன். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நெருங்கிப் பழகியவன். அவர்கள் எப்போதும் இரட்டைக் குதிரையில் சவாரி செய்யத்தான் நினைப்பார்கள். சினிமாவில் வருகிற வருமானத்தை இழக்க முன்வர மாட்டார்கள். அரசியலில் இறங்கி, அதுவரை சம்பாதித்த பணத்தை இழந்து விடுவோமோ என்று பயப்படுவார்கள். அரசியலுக்கு வந்துதான் புகழும் பெயரும் பெற வேண்டும் என்கிற அவசியம் ரஜினிகாந்துக்கு என்ன இருக்கிறது?''

""ரஜினிகாந்த் காங்கிரஸில் சேர்ந்தாலோ, தனிக்கட்சி தொடங்கி அரசியலுக்கு வந்தாலோ தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா, இல்லையா?''

""அத்தைக்கு மீசை முளைக்கட்டும், அப்புறம் சித்தப்பா என்று கூப்பிடுவோம். ரஜினிகாந்துக்கு அரசியலுக்கு வரும் துணிவு கிடையாது. அவருக்கு மட்டுமல்ல, எந்த சினிமா நடிகருக்கும் கிடையாது. அவர்களுக்கு ஆசை உண்டு, ஆனால் தைரியம் கிடையாது.''

""எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., ஜெயலலிதா எல்லாம் வரவில்லையா?''
""எம்.ஜி.ஆருக்கு பதவி, அதிகாரம் என்றால் என்ன என்று தெரியும். அப்படி இருந்தும் மிகுந்த தயக்கத்துக்குப் பிறகுதான், முழுநேர அரசியலுக்கு வரத் தயாரானார்.

ஜெயலலிதா அவராக வரவில்லை. எம்.ஜி.ஆரால் அழைத்து வரப்பட்டார். என்.டி.ஆர். மட்டும்தான் துணிந்து களம் இறங்கி ஜெயித்தார். ரஜினிகாந்த், என்.டி. ராமா ராவ் அல்ல...''

அதற்கு மேலும் வாழப்பாடியாருடன் நான் சர்ச்சை செய்ய விரும்பவில்லை. பீஷ்ம நாராயண் சிங் எதுவும் பேசாமல் இருந்ததில் இருந்து, அவருக்கு காங்கிரஸ் - அதிமுக பேச்சுவார்த்தை பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை என்று நான் ஊகித்தேன். ஒருவேளை தனக்கு எதுவும் தெரியாததுபோல அவர் நடித்தாரா என்பதும் தெரியாது.

நான் கிளம்புகிறேன் என்று சொன்னதும், அவர்கள் மகிழ்ச்சியுடன் எனக்கு விடை கொடுத்ததில் இருந்து, அதை அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தது எனக்குப் புரிந்தது. அழையா விருந்தாளியாக நுழைந்திருக்கும் நிலையில், அவர்கள் என்னைப் போகச் சொல்வதற்குள் கிளம்பி விட்டேன்.

வாழப்பாடியாரும், ரங்கராஜனும் எதற்காக பீஷ்ம நாராயண் சிங்கை சந்தித்துப் பேசினார்கள் என்பது எனக்கு இன்றுவரை புதிர்.

நான் ஷாஜஹான் சாலையில் உள்ள வி.என். காட்கிலின் வீட்டை அடைந்தபோது, அவர் வந்திருந்ததன் அடையாளமாக வாசலில் அவரது அம்பாசிடர் கார் நின்று கொண்டிருந்தது. இரவு உணவை முடித்துவிட்டு, டிவியில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்தார். செய்திகள் முடியும் வரை காத்திருந்தேன். எப்படிப் பேச்சைத் தொடங்குவது என்று தெரியவில்லை.

""திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு உண்டா?''

""ராஜீவ்ஜியின் படுகொலையில் சம்பந்தப்பட்ட கட்சியுடன் காங்கிரஸ் எப்படி கூட்டணி அமைக்க முடியும்?''

""அப்படியானால் காங்கிரஸ் - அதிமுக கூட்டணி உறுதியா?''

""காங்கிரஸுடனான கூட்டணி முறிந்து விட்டது என்று ஜெயலலிதாஜி கூறியிருக்கும்போது, அது எப்படி நடக்கும்? ஜெயலலிதாஜி மனம் மாறி பிரதமரிடம் பேசினால், ஒருவேளை சாத்தியமாகலாம்...''

""காங்கிரஸ் தமிழகத்தில் தனித்துப் போட்டிபோடப் போகிறதா?''

""நீ எங்கே வருகிறாய் என்று எனக்குத் தெரியும். அது ரஜினிகாந்தின் முடிவைப் பொருத்து அமையும்.''

""ரஜினிகாந்திடம் மூப்பனார்ஜியும் சோ சாரும் பிரதமரின் ஒப்புதலுடன்தான் பேசுகிறார்களா?''

காட்கில்ஜி அர்த்தபுஷ்டியுடன் புன்னகை புரிந்தார்.

""இரண்டு நாள்கள் பொறுத்துக் கொள். ரஜினிகாந்த் பற்றி எதிர்பாராத செய்தி சொல்கிறேன்.''

அவர் சொன்ன அந்த எதிர்பாராத செய்திக்காக நகம் கடித்தபடி இரண்டு நாள்கள் நான் காத்திருந்தேன்...

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com