ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் எரிச்சல் குணமடைய?

நான் தஞ்சையிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்து வீடு எடுத்துத் தங்கியுள்ளேன்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் எரிச்சல் குணமடைய?

நான் தஞ்சையிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்து வீடு எடுத்துத் தங்கியுள்ளேன்.  குளிப்பதற்கான தண்ணீரில் உள்ள கலப்பட ரசாயனங்களாலோ, ஹோட்டலில் சாப்பிடுவதாலோ தெரியவில்லை. எனக்கு உடலில் வெள்ளையத்திட்டுகள் மாதிரி தினவு எடுக்கிறது. எரிச்சலும் ஏற்படுகிறது. இதை எப்படி குணப்படுத்துவது?

-ஜெயஹரி,
சென்னை.

தஞ்சையில் நல்ல சுகாதாரமான காற்றும், தண்ணீரும் அமைந்த பகுதியிலிருந்து, தூசும் மாசும் நிறைந்த சென்னைப் பகுதிக்கு, நீங்கள் மாற்றலாகி வந்ததன் விளைவை எதிர்கொள்ளும் சக்தியை உங்கள் உடல் பெறவில்லை என்பதையே இது காட்டுகிறது.

நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெறுவதற்கு முன், ஏற்பட்டுள்ள பிரச்னையை நீக்க வழி தேட வேண்டிய அவசியமிருப்பதால், ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, உடல் உட்புறப் பகுதிகளில் கலந்துள்ள ரசாயனக் கலவைகளை அகற்ற, ஆயுர்வேதம் அறிவுறுத்தும் கஷாயங்கள், லேஹியங்கள், சூரண மருந்துகள் போன்றவை பல இருப்பதால், உங்களுடைய உடல் தன்மை, நாடித் துடிப்பு, உண்ணும் உணவு வகைகள் போன்றவற்றை நன்கு கேட்டறிந்த பின்னரே, தேர்வு செய்து பயன்படுத்த வேண்டிய அவசியமிருக்கிறது.

குடலைச் சுத்தம் செய்யாமல், நோயைத் தணிக்கக் கூடிய மருந்துகளை மட்டுமே பயன்படுத்தினால், நோயின் சீற்றமானது தணியலாம். ஆனால் வெறும் சிறுகாரணங்களால் கூட, நோயின் உபாதையானது திரும்பவம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதால், "சமனம்' எனும் நோய் அடக்குமுறையைவிட, "சோதனம்' எனும் சக்திமுறைகளையே ஆயுர்வேதம் அதிகம் பாராட்டுகிறது.

நீங்கள், உங்களின் வயது, குடலின் தன்மை, உடல் வளு போன்ற விவரங்களைத் தெரிவிக்கவில்லை. ஏனென்றால் குடல் சுத்தியைச் செய்ய, இதுபோன்ற விவரங்கள் மிகவும் முக்கியமானவை. மெலிந்த தோற்றமும், உடல் பலவீனமும் உள்ளவர்களுக்கு, சோதனம் எனும் சிகிச்சையைவிட, சமனம் எனும் சிகிச்சை முறையே மிகவும் நல்லது.

பேதி மூலம் குடலை சுத்தப்படுத்தும் சிகிச்சை முறையாலேயே, உங்களது உபாதையானது பெறுமளவு தணிந்து விடுவதற்கான வாய்ப்பிருப்பதால், அதன் பின்னர் பயன்படுத்தப்படும், நன்னாரிவேர்ப்பட்டை, சுக்கு, கடுக்காய் ஆகியவை கலந்து தயாரிக்கப்படும் கஷாயம், சரக்கொன்றைப்பட்டை, வேப்பம்பட்டை, மேலும் பல மூலிகைகளின் கலப்பினால் தயாரிக்கப்படும் அரிஷ்டம் எனும் மருந்து, அருகம்புல்லை முக்கிய மருந்தாகக் கொண்டு தயாரிக்கப்படும் மூலிகைத் தைலம், கருங்காலிக் கட்டையை தண்ணீரிலிட்டு, வேகவைத்தெடுத்த மூலிகைத் தண்ணீரைப் பருகுதல், ஏழிலைப்பாலைப்பட்டை, புங்கன்பட்டை, அரசம்பட்டை போன்றவற்றை இரவு வென்னீரில் ஊறவைத்து, மறுநாள் காலை, குளிப்பதற்குப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலமாகவும், உடல் தன்மைக்கேற்ப, உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலமாகவும் முழு நிவாரணத்தைப் பெற முடியும்.

நோய் நீங்கியதே, இனி கவலை இல்லை என்றிராமல், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டும் லேஹிய மருந்துகள், நெய் மருந்துகள், டானிக் மருந்துகள், உடல் வெளிப்புறத் தைலங்கள் ஆகியவற்றின் மூலம் பெறுவதற்கான முயற்சிகளையும் நீங்கள் செய்துகொள்ள வேண்டும். 

உடலைத் திடமாக்கச் செய்யும் எந்தச் சிகிச்சை முறைகளாக இருந்தாலும் அவைதான் மனித உடலை இறுதிவரை பாதுகாத்துத் தரக் கூடியவை.  அதைப் பெறுவதற்கான முயற்சிகளைத்தான் மேற்குறிப்பிட்டவாறு செய்துகொள்ள வேண்டிய உடை மாற்றங்கள், தடை செய்யப்பட்டுள்ள தோல் பூச்சுகளைப் பயன்படுத்தாதிருத்தல் போன்ற விவரங்களை, நீங்கள் நன்கு கேட்டறிந்து செயல்படுத்துவதும் மிகவும் அவசியமானதாகும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com