பேல் பூரி

'முதுமை அடைந்திருக்கும்போது நாம் கற்றுகொள்ள வேண்டியதைவிட ஏற்றுகொள்ள வேண்டியது அதிகம்'
பேல் பூரி


கண்டது

(திருச்சி- கல்லணைக்கு அருகே உள்ள ஊரின் பெயர்)

'கிளிக்கூடு'

-பொறிஞர் ப நரசிம்மன், திருச்சி.

(பொன்னமராவதியில் உள்ள ஒரு  துணிக் கடையின் பெயர்)

'கண்டாங்கி'

-அ.கருப்பையா,
பொன்னமராவதி.

(தென்காசி மின்நகர் நடைபழகுவோர் சங்கப் பலகையில் எழுதியிருந்தது)

'முதுமை அடைந்திருக்கும்போது நாம் கற்றுகொள்ள வேண்டியதைவிட ஏற்றுகொள்ள வேண்டியது அதிகம்'

-சோம.இளங்கோவன், தென்காசி.

கேட்டது

(சென்னை ஐஸ் ஹவுஸ் டீக்கடை ஒன்றில் இருவர்..)

'என்னடா சட்டையின் பின்பக்கம் ஓயிட்டா இருக்கு. முன்பக்கம் டிசைன், டிசைனா புள்ளி இருக்கு..'
'நல்லாயிருக்கா.. மவுண்ட் ரோடில் பைக்கில் போய் பாரு. உன் வெள்ளைச் சட்டையும் இப்படி ஆகிடும்...'

-பா.து.பிரகாஷ், தஞ்சாவூர்.

(சென்னையில் உள்ள கிளீனிக் ஒன்றில் மருத்துவரும், நோயாளியும் பேசியது)

'தினமும் வெடி வெடிக்கிற மாதிரி கனவு வருது டாக்டர்..'
'கனவுதானே இதுல என்ன கஷ்டம்..'
'வெடி சத்தம் கேட்டதும், தூக்கத்திலிருந்து
முழிச்சுக்கிறனே டாக்டர் அதான்..'

-சின்னஞ்சிறுகோபு, சேலையூர்.

(செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பிள்ளையார் கோயில் எதிரில் இருவர்)

'ஏம்பா ஷுவை கழட்டி 
வச்சிட்டு வணங்க கூடாதா?'
 'நான் வெளியில் நின்று  தான் வணங்குகிறேன்..'
' இரண்டாவது கடவுள் நமது காலை பார்ப்பதில்லை மனதை தான் பார்க்கிறார்..'

-ஜி அர்ஜுனன்,
செங்கல்பட்டு.

யோசிக்கிறாங்கப்பா!


இரண்டு பொருள்களை இழந்த பிறகுதான் அவற்றை நாம் மதிக்கிறோம். 
ஆரோக்கியத்தையும், இளமையையும்..!

-மு.பெரியசாமி,
விட்டுக்கட்டி.


மைக்ரோ கதை


'இந்த மாதம் சம்பளம் கொடுக்கும்போது வேலைக்காரியின் முகம் போன போக்கைப் பார்த்தாயா?' என்று மனைவியைப் பார்த்துக் கேட்டார் மணிகண்டன்.
'ஆமாம் பார்த்தேன். இரண்டு நாள் சம்பளத்தைக் குறைத்துகொடுத்தால் அவள் முகம் அப்படித்தான் போகும்.  முகம் சுழிக்கத்தான் செய்வாள். அது எல்லோருக்கும் இயல்புதானே!' என்று மனைவி லட்சுமி சொன்னாள்.
'ஆமாம். அவுங்க ரெண்டு நாள்  வேலைக்கு வராமல் மட்டம் போட்டுட்டு வேற எங்கயாவது வேலைக்குப் போயிடுவாங்க...  நாம அதற்கும் சேர்த்து சம்பளம் கொடுக்கணுமாக்கும். இது என்னடி நியாயம்?' என்று ஏளனமாகச் சிரித்தார் மணி
கண்டன்.
'போனமாசம் 'லாஸ் ஆப் பே'ன்னு  ரெண்டு நாள் சம்பளத்த உங்கள்  ஆபிஸில்  பிடித்ததுக்கு நீங்க என்ன மாதிரி  புலம்பினீங்கன்னு எனக்குத்தான தெரியும்..' என்று பட்டென மனைவி 
சொன்னதைக் கேட்டதும்,  அலுவலகத்துக்கு மட்டம் போட்டுட்டு சொற்பொழிவுக்குப் போய் சம்பாதித்த  நினைப்பு வந்து சுருக்கென  தைத்தது  மணிகண்டனுக்கு..! 
'அப்புறம் என்ன?' என யோசித்த மணிகண்டன், வேலைக்காரியின் ஜிபேவுக்கு பிடித்த பணத்தை அனுப்பிவிடும் முயற்சியில் இறங்கிவிட்டார்.

-மா. ரா, உடன்குடி.

எஸ்எம்எஸ்

முயற்சி எனும் பயிற்சி கொள். 
உன்னை நாடும் வளர்ச்சி.

-காகை ஜெ.ரவிக்குமார்,
காங்கயம்.


அப்படீங்களா!

உலகம் முழுவதும் பல கோடி பேர் பயன்படுத்தும் வாட்ஸ் ஆஃப்பில்  விடியோ கால், சேட்டிங், குரூப் சேட்டிங் உள்ளிட்ட சேவைகள்  மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.  வாட்ஸ் ஆஃப்  குழுக்கள்  மூலம் தகவல் பரிமாற்றம் வேகம் அடைந்துள்ளது.
இந்தச் சூழலில் வாட்ஸ் ஆஃப்  புதிய சேவைகனை  அறிமுகம் செய்துவருகிறது. இந்த வரிசையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'சேனல்ஸ்'  எனும் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது.  குழுவின் தலைப்புக்கு ஏற்ப அனைத்து  தகவல்களை சேனல்ஸில் தெரிந்துகொள்ள முடியும். 
இந்நிலையில் சேனல்ஸ் உரிமையாளர்களுக்கும், பின்தொடர்பவர்களுக்கும் இடையேயான தொடர்பை மேம்படுத்தும் வகையில் வாட்ஸ் ஆஃப் சேனல் வாக்கெடுப்பு அம்சம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.   இது பயன்பாட்டாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். 

-அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com