பேல் பூரி

வெற்றி என்பது எளிதில் இல்லை. தோல்வி என்பது இல்லவே இல்லை.
பேல் பூரி


கண்டது


(ஈரோடு- கொடுமுடி வழியில் உள்ள ஒரு ஊரின் பெயர்)

'சோலார்'

(பரமத்திவேலூர்- கொடுமுடி வழியில் உள்ள ஒரு ஊரின் பெயர்)

'சேமங்கி'

-கே.எம். இளங்கோ,
பரமத்திவேலூர்.

(கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே உள்ள ஒரு பகுதியின் பெயர்)

' 'கச்சேரி நடை'

-கே.ஆர். உதயகுமார்,
சென்னை -1.

( தருமபுரி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த காரில் எழுதியிருந்தது)

'எதிர்பார்ப்பதை கற்றுக் கொள்ளாதே!
  எதிர்கொள்வதை கற்றுக் கொள்..'

-இரா.வசந்தராசன்,
கிருஷ்ணகிரி .

கேட்டது


(திருவாரூர் பேருந்து நிலையத்தில் இருவர் பேசியது)

'சிங்கப்பூரானை பார்த்தீங்களா?'
'அப்படி ஒரு பூரானை நான் பார்த்ததே இல்லைங்க?'

-மு.பெரியசாமி,
விட்டுக்கட்டி.

(சிதம்பரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில்..)

'சமர்த்து பையனில்லை நீ.. எந்தக் கையில் ஊசி போடணும்னு சொல்லு பார்க்கலாம்..?'
'உங்க கையில்தான் டாக்டர்..'

-ஆர்.சுந்தரராஜன்,
சிதம்பரம்.

(கன்னியாகுமரியில் ஒரு ரேஷன் கடை வாயிலில் மூதாட்டியும், நடுத்தர வயது பெண்ணும் பேசியது)

'ஏன்டி.. நீ கோடியில் ஒருத்தியா? ஐம்பது லட்சத்தில் ஒருத்தியா?'
'என்ன பாட்டி உளர்றே?'
'அரசு கொடுக்கிற ஆயிரம் ரூபாய் பணம் கிடைச்சவன்னா கோடியில் ஒருத்தி. கிடைக்காதவங்க ஐம்பது லட்சத்தில் ஒருத்தி..'

-க.நாகராஜன்,
பறக்கை.

யோசிக்கிறாங்கப்பா!


வெற்றி என்பது எளிதில் இல்லை. 
தோல்வி என்பது இல்லவே இல்லை.

-எஸ். அரசு மணிமேகலை,
சென்னை- 103.

மைக்ரோ கதை


அவர்கள் இருவரும் வெவ்வேறு நகரங்களில் பணிபுரியும் நெருங்கிய நண்பர்கள்.  இருவருக்கும் ஒரே காலகட்டத்தில் திருமணம் நடந்தது. ஒருவனுக்கு பெற்றோர் பார்த்து நிச்சயித்த திருமணம். மற்றவனுக்கு காதல் திருமணம். இருவரும் சந்திக்காமலேயே மணவாழ்வில் ஓராண்டைக் கடந்த நிலையில் இருந்தனர்.
இருவரும் தன் இணைகளுடன் கேரள மாநிலத்தில் முகாமிட்டு இயற்கையழகைக் கண்டு மகிழ திட்டமிட்டு,  மலப்புரத்தில் ஒன்று சேர்ந்தனர். சொகுசுமிக்க காட்டேஜில் நான்கு நாள்களுக்கு ஒன்றாகத் தங்கியிருந்து, சுற்றுலாவை அனுபவித்ததனால் நல்ல புரிதலும் அவர்களிடையே உருவாகியிருந்தது.
சுற்றுலா முடிந்து அவர்கள் தத்தம் ஊர்களுக்குத் திரும்பும் நேரத்தில் ஒருவன் மற்றவனிடம் ,' என் மனைவியைப் பத்தி உன்னோட கருத்து என்னடா ?'  எனக் கேட்டான்.
அதற்கு மற்றவன் , ' நீ என்னவளைப் பத்தி என்ன நினைக்கிறேங்கறதை முதலிலே சொல்லு' என்று பதிலுக்குக் கேட்டான்.
அப்போது, அவர்களின் மனைவியர்கள் பெட்டி படுக்கையுடன் ஊருக்குக் கிளம்பத் தயாராக வந்துவிடவே,  மறுநாள் காலை சரியாக எட்டு மணிக்குத் தங்கள் எண்ணங்களை வாட்ஸ் ஆப்பில் பரிமாறிக்கொள்ளலாம் எனக் கூறிவிட்டு,  இரு ஜோடிகளும் தனித்தனி கார்களில் வெவ்வேறு திசைகளில் பயணப்பட்டனர்.
மறுநாள் காலை ஒரே நேரத்தில் அவர்கள் பரிமாறிக் கொண்ட தகவல்கள் :
'நீ என்னைக் காட்டிலும் பல மடங்கு கொடுத்து வைச்சவன்டா மச்சி'    - ஒருவன்.
'எங்க ஆளுக்கு உங்க வீட்டம்மா எவ்வளவோ மேல்டா'    - மற்றவன். 

-  சிதம்பரம்  ஆர்க்கே

எஸ்எம்எஸ்


வெற்றி எனும் மாடியை அடைய 
தோல்வி எனும் படிகளைக் கட..!

-காகை ஜெ.ரவிக்குமார்,
காங்கேயம்.

அப்படீங்களா!


இணையவழி தகவல் தேடல் களஞ்சியமான கூகுளுக்கு மாற்றாக,  அனைத்து வகையான தகவல்களையும் இணைத்து தேவையான அளவில் சுட்டியாய் வழங்கும் 'சாட் ஜிபிடி' கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகமாகி உலகையே வியப்பில் ஆழ்த்தியது. 
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த புதிய வகை கண்டுபிடிப்பை மைக்ரோ சாப்ட் நிறுவனம் அறிமுகம் செய்தது.
சாட் ஜிபிடி அளிக்கும் தகவல்கள் பல முன்னணி தேர்வுகளிலேயே வெற்றி பெறும் அளவுக்கு துல்லியமாக இருந்தன. பள்ளி, கல்லூரிகளில் சாட் ஜிபிடிக்கு தடை விதிக்கும் அளவுக்கு மனிதர்களின் சிந்தனையை தாண்டியது.
எனினும், அண்மையில் நடந்த சம்பவங்கள் இதன் திறனுக்கு எட்டாதது பின்னடைவாக இருந்தது, இதற்கு செப்டம்பர் 2021 வரையிலான தகவல்களை மட்டும் இந்த சாட் ஜிபிடிக்குள் உள்ளடக்கும் செய்யப்பட்டிருந்ததே காரணம்.
அண்மையில் சாட் ஜிபிடியின் ஓபன் ஏஐ நிறுவனம் கட்டண சேவையில் தற்போதைய நடப்பையும் வழங்கியது.  சாட் ஜிபிடி அறிதிறன் பேசி வடிவில் வழங்கிய அந்த நிறுவனம் தற்போது ஓராண்டின் முடிவில் அசாத்திய திறனுடம் அதை மேம்படுத்தி உள்ளது.
முன்பு அதிகபட்சமாக 3 ஆயிரம் வார்த்தைகளைக் கொண்ட தகவல்களை மட்டும் சாட் ஜிபிடி வழங்கியது. தற்போது சாட் ஜிபிடி-4 டர்போ வெர்ஷன் 300 பக்கங்கள் கொண்ட தகவல்களை அளிக்கும் என ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை வைத்து ஒரு புத்தகத்தையே வடிவமைத்துவிடலாம். 
மேலும், சாட் ஜிபிடி அளிக்கும் எழுத்துவடிவ தகவல்களை ஒலி வடிவில் கேட்கும் வசதியும் அறிமுகமாக உள்ளதாகவும், சாட் ஜிபிடி சேவையை உலகம் முழுவதும் 1கோடி நிறுவனங்கள் பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். நிறுவனங்களுக்கு ஏற்ப தனித் தனியாக சாட் ஜிபிடி சேவைகளை அளிக்கவும் அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

-அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com