ஓடி விளையாடு பாப்பா..!

டிரையத்தலானில் இந்தியாவின் முதல் இரும்புப் பெண்மணி ஈஸ்வரியின் தந்தை நடத்தி வந்த பள்ளியில் பத்து குழந்தைகளுக்கு ஒரு மாற்றுத் திறனுடைய குழந்தை என்கிற விகிதத்தில்  படிப்பு, விளையாட்டு
ஓடி விளையாடு பாப்பா..!

டிரையத்தலானில் இந்தியாவின் முதல் இரும்புப் பெண்மணி ஈஸ்வரியின் தந்தை நடத்தி வந்த பள்ளியில் பத்து குழந்தைகளுக்கு ஒரு மாற்றுத் திறனுடைய குழந்தை என்கிற விகிதத்தில்  படிப்பு, விளையாட்டு, குழுவாகச் செயல்படுதல் ஆகியவற்றை செயல்படுத்தியபோது, மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.  சுமார் 10 ஆண்டுகள் இந்த முயற்சியில் கிடைத்த வெற்றி, அனுபவத்தை ஈஸ்வரியும், அவரது சகோதரர் ராமநாதனும் வெவ்வேறு தளங்களிலும் செயல்படுத்தி சாதித்தனர்.  

அவர்களிடம் பேசியபோது:

''சாதாரணக் குழந்தைகளைப் போன்றே  மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சமமான வாய்ப்பும், அவர்கள் வெற்றி பெறுவதற்கான பயிற்சியும்,  வெற்றியைக் கொண்டாடி மகிழத்தக்கதொரு சூழலும் உருவாக்கித் தருவது நமது கடமை.

டிரையத்தலான் என்பது நீச்சல், சைக்கிள், ஓட்டம் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய ஒரு  தடகளப் போட்டியாகும்.   டிரையத்தலானில் மற்ற குழந்தைகளோடு மாற்றுத் திறனுடைய குழந்தைகளையும் ஈடுபடுத்த விரும்பினோம்.  

சென்னை எஸ். கொளத்தூரில் உள்ள எஸ்.ஜி.  நீச்சல் குளத்தில் செயல்படும், யாதவி மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கான பயிலகத்தைத் தொடர்பு கொண்டோம்.  அங்கு  மாற்றுத் திறனுடைய குழந்தைகளையும் ஒருங்கிணைத்து டிரையத்தலான் போட்டி நடத்த ஒப்புக்கொண்டனர். 

இந்தக் குழந்தைகள் அனைவரும் நீச்சலில் மட்டுமே நன்கு பயிற்சி பெற்றவர்களாக இருந்தனர். இப்போது அவர்களுக்கு டிரையத்தலானுக்காக சைக்கிள் மற்றும் ஓட்டத்திலும் பயிற்சியளிக்கப்பட வேண்டும். இப்பொறுப்பையும் யாதவி பயிலகம் ஏற்றுக்கொண்டது.  போட்டியை பொறுப்பேற்று நடத்த இருவரும் முடிவு செய்தோம்.

பயிற்சி, உபகரணங்கள்,  இடம், தன்னார்வலர்களை ஒருங்கிணைத்தல், பொதுமக்கள் ஆதரவு, காவல்துறை அனுமதி, மருத்துவ உதவி, உதவி நிலையங்களை நிர்வகித்தல் என மிகுந்த செலவை ஏற்படுத்தும். அதிலும் சிறப்புத் திறனாளிக் குழந்தைகளை உள்ளடக்கிய டிரையத்லான் என்பதால் பயிற்சி அளிப்பது, போட்டிக்கான செலவு என அத்தனை விஷயங்களிலும் கடும் சவாலை எதிர்கொண்டோம்.

இந்தியாவில் அயர்ன்மேன் போட்டிகளை நடத்தும் யோஸ்கா அமைப்பு இப்போட்டியை அங்கீகரித்து நடத்த முன்வந்ததோடு மட்டுமல்லாது போட்டிக் கட்டணத்தை குறைப்பதற்கு ஏதுவாக சத்யா ஏஜென்சீஸ், ஃபுட்ஸ்ட்ராங், ஹெட்விண்ட்ஸ் என புரவலர்களையும் அழைத்து வந்தது. 

நிகழ்ச்சிக்கான இடத்தை எஸ்ஜி நீச்சல் பள்ளி அளித்தது. ப்ரோ பைக்கர்ஸ் சுரேஷ் வாடகை சைக்கிள்களை ஏற்பாடு செய்தார். டீம் ஹேம்மர், சென்னை ரன்னர்ஸ், வைப்ரண்ட் வேளச்சேரி, தாம்பரம் தண்டர்போல்ட்ஸ் ஆகியவை தன்னார்வலர்களை அனுப்பி போட்டிக்கு ஆதரவு அளித்தது. 

முன்னாள் விமானப்படை அதிகாரியும், நான்கு முறை அயர்ன் மேன் பட்டம் வென்றவருமான அனில் ஷர்மாவின் தலைமையில், யோஸ்கா அமைப்பின் ஆர்த்தி, மருத்துவர் நந்தினி ஷர்மா ஆகியோரின் முன்னிலையில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு  மாற்றுத் திறனாளிக் குழந்தைகளை உள்ளடக்கிய டிரையத்லான் போட்டி நடைபெற்றது. தொழில்முறை டிரையத்லான் போட்டியாளரைப் போலவே குழந்தைகள் 500 மீ. நீச்சல், 5 கி.மீ. சைக்கிள், 1.5 கி.மீ. ஓட்டம் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக முடிக்க வேண்டும். 

எஸ்.ஜி. நீச்சல் குளத்தில் நடைபெற்ற நீச்சல் போட்டியின்போது,  மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு உதவும் விதமாக இரண்டு பயிற்சியாளர்கள் தயாராக இருந்தனர். நீச்சல் போட்டிக்குப் பிறகு, அடுத்தகட்டமாக சைக்கிளும், ஓட்டமும் நீச்சல் குளத்தைச் சுற்றியுள்ள சாலையில் நடைபெற்றது. 

சைக்கிள் ஓட்டுவதை குழந்தைகள் தொடங்கினர். அவர்களோடு உதவியாளர் ஒருவரும் சைக்கிள் ஓட்டியபடி சென்றார்.    நிறைவாக 1.5 கி.மீ.  ஓட்டத்துக்குத் தயாராகி  குழந்தைகள் உற்சாகமாக ஓடினர். அவர்களுடன் பெற்றோர், பயிற்சியாளர்களும் ஓடி குழந்தைகள் சோர்வடையாமல் பார்த்துக்கொண்டனர்.

ஓட்டத்தின் முடிவில், ஒரு கடினமான தடகள விளையாட்டை, தேர்ந்த தொழில்முறை போட்டியாளரைப்போல தங்களாலும் வெல்ல முடிந்ததை எண்ணி சிறப்புத் திறனாளிக் குழந்தைகள் கொண்டாடி மகிழ்ந்தனர்.  சாதாரண குழந்தைகளுடன் சிறப்புத் திறனாளிக் குழந்தைகளையும் ஒருங்கிணைத்து டிரையத்லான் நடத்தியது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை'' என்றனர்.

ஈஸ்வரியும், ராமநாதனும் டிரையத்லானில் மட்டுமல்ல;  அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு ஒரு புதிய கதவைத் திறந்துவிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com