இயற்கையின் அதிசயம்

உலகம் அதிசயங்களாலும் ஆச்சரியங்களாலும்  சூழப்பட்டுள்ளது.  நீர், மலை, வனம் என காணும் அனைத்திலும் இயற்கையின் அதிசயங்கள் உள்ளன.
இயற்கையின் அதிசயம்

உலகம் அதிசயங்களாலும் ஆச்சரியங்களாலும்  சூழப்பட்டுள்ளது.  நீர், மலை, வனம் என காணும் அனைத்திலும் இயற்கையின் அதிசயங்கள் உள்ளன.

அதுபோன்ற அதிசயங்களில் ஒன்றுதான் "கிரேட் ப்ளூ ஹோல்'. 

மத்திய அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு சிறிய நாடான பெலிஸ் நாட்டின் கடற்கரை மையத்தில் கிரேட் ப்ளூ ஹோல் அமைந்துள்ளது. கடலின் நடுவே 300 மீட்டர் அகலமும் 125 மீட்டர் ஆழமும் கொண்ட கிரேட் ஃப்ளூ ஹோல், கடலின் நடுவே போடப்பட்ட ஓர் பெரிய துளைபோலக் காட்சியளிக்கிறது.

பெலிஸ் பேரியர் ரீஃப் ரிசர்வ் அமைப்பின் ஒர் பகுதியாக உள்ள இந்தத் துளை, 1996- ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் உலக பாரம்பரியத் தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னொரு காலத்தில் தீவாக இருந்த கிரேட் ப்ளூ ஹோல், புவியியல் மாற்றம் காரணமாக மாறுதலுக்குள்ளானது. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பனி யுகத்தின்போது இப்பகுதியில் கடல் மட்டம் குறைவாக இருந்தது. இப்பகுதியில் கீழே சுண்ணாம்புக் கற்களும் இருந்துள்ளன.

பின்னர்,  சுண்ணாம்புக் கற்கள் மழை மற்றும் நிலத்தடி நீரால் கரைந்தன. இதனால் படிப்படியாக கடலின் நீர்மட்டம் உயர்ந்து கீழே வெற்று இடங்கள், குகைகள் உருவாகியுள்ளன. இதன் காரணமாக,  இந்த இடம் மேலிருந்து பார்க்கும்போது அடர் நீலநிறத்தில் உள்ள பெரிய துளை போலக் காட்சியளிக்கிறது.

இங்குள்ள பவளப்பாறைகள் சுவர்போன்று இந்தத் துளையைச் சுற்றி அமைந்துள்ளன. இப்பகுதியில் நீருக்கடியில் ஸ்டாலாக்டைட் என்ற சுண்ணாம்புக் கற்களால் ஆன குகைகள் உள்ளன. இந்த சுண்ணாம்புக் கற்கள் 9-12 மீட்டர்வரை செங்குத்தாக வளர்ந்து குகைகளை அலங்கரிக்கின்றன.

கிரேட் ப்ளூ ஹோல் உலகின் முதல் 10 சிறந்த  டைவிங் இடங்களில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக நீரின் மேற்பரப்பிலிருந்து 34 முதல் 45 மீட்டர் தொலைவில் உள்ள குகைகளால் டைவிங் ரசிகர்கள் அதிகம் ஈர்க்கப்படுகின்றனர்.

பெலிஸ் நாட்டின் ப்ளூ ஹோலில் டைவிங் செய்வதில் உள்ள சவால்கள் காரணமாக, குறைந்தபட்சம் 24 டைவ்-களை முடித்த பயிற்சி பெற்ற டைவர்கள் மட்டுமே இங்கு அனுமதிக்கப்படுவர். 

காளை சுறாக்கள், கரீபியன் ரீஃப் சுறாக்கள், சுத்தியல் சுறாகள் உள்ளிட்ட பல வகையான சுறாக்களின் வாழ்விடமாக உள்ளது புளூ ஹோல்.  மேலும் லைட்ஹவுஸ் போன்ற வட்டவடிவப் பாறைகள், நீர் மீன்கள், கிளி மீன்கள் ஹாக்ஸ்பில் ஆமைகள், ஸ்டிங்ரேஸ் படல் மீன்கள் உள்ளிட்டவை இந்தப் பகுதியில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com