பேல் பூரி

மனித உணர்வுகளின் அதிர்ச்சி அலைகள்
பேல் பூரி

கண்டது

(திருவண்ணாமலையில் உள்ள கடை ஒன்றின் பெயர்)

'யாழ்துகில் மகளிர் ஆடையகம்''

-முனைவர் ச.உமாதேவி, திருவண்ணாமலை.

(திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

''சிக்கு போல கவுண்டன்பட்டி.''

-ஆர்.லிங்கராஜ், திண்டுக்கல்.

(ஈரோட்டிலிருந்து காங்கயம் செல்லும் சாலையில் உள்ள ஊரின் பெயர்)

'இராட்டைசுற்றிபாளையம்''

-க.வை.ராமகிருஷ்ணன், நாமக்கல்.

கேட்டது

(தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் இரு நண்பர்கள்...)

'பொண்ணுக்கு வாய் நீளமுன்னு தரகர் சொன்ன பிறகும் நீ ஏன் கல்யாணத்துக்கு சம்மதிச்சே...?''

'வாய் நீளமாக இருந்தா, கை நீளமா இருக்காதுன்னு தப்புக் கணக்கு போட்டுட்டேன்டா...?''

-கி.வாசுதேவன், தஞ்சாவூர்.

(தேனியில் ஓடிய நகரப் பேருந்தில் தம்பதி பேசியது)

'ஆயிரம் ரூபாய் சம்பள கவரில் குறைஞ்சதுக்கு மல்லுக்கு நிற்கறீயே.. என் உடல், பொருள், ஆவி எல்லாம் உனக்குதானே...''

'அந்த வீணாப் போறதெல்லாம் யாருக்கு வேணும்ங்க...''

-ச.அரசமதி, தேனி.

(சென்னை தி.நகரில் உள்ள துணிக்கடை ஒன்றில் வாடிக்கையாளரும், விற்பனையாளரும்..)

'வானவில் கலரில் புடவை இருக்கா?''

'இருக்கு மேடம். ஆனா ஏழு புடவைகளா இருக்கு. பார்க்கறீங்களா...?''

-சௌமியா சுப்ரமணியன், பல்லாவரம்.

யோசிக்கிறாங்கப்பா!

எதிரியை பேசவிட்டு கவனிக்கணும்.

துரோகியை பேச விடாம கவனிக்கணும்.

நெ.இராமகிருஷ்ணன், சென்னை-74.

மைக்ரோ கதை

பாலுவும் சகுந்தலையும் புறநகரில் புதிய குடியிருப்புப் பகுதியில் ஆங்காங்கே ஒவ்வொன்றாக வீடுகள் உள்ள பகுதியில் வசிக்கும் வயதான தம்பதி.

இரவு 2 மணிக்கு பாலு, 'நெஞ்சு வலிக்குதே' என்று கத்தினார்.

தூக்கம் கலைந்து எழுந்த சகுந்தலை, 'என்ன பண்ணுவேன். உதவிக்கு ஆளில்லையே..'' என்று சேர்ந்து கத்தினாள்.

சில நிமிடங்கள் இருவரும் கத்தலுக்குப் பின்னரும் யாரும் வரவில்லை.

ஆனால் பாலுவோ, 'ஜன்னலைத் திற'' என்றார்.

சகுந்தலை எழுந்து சென்று ஜன்னலைத் திறந்தபோது, இரு இளைஞர்கள் சற்றுதொலைவில் பதற்றத்துடன் செல்வதைக் கவனித்தாள்.

உடனே பாலு, ' இருவரும் வீட்டில் திருட முயற்சித்தாங்க. அவங்களை எதிர்த்துப் போராட நம்மால் முடியாது. அதான் அப்படி நடிச்சேன்'' என்றாள்.

உடனே சகுந்தலையும் பெருமூச்சி விட்டாள்.

இரா.சாந்தகுமார், கூடுவாஞ்சேரி.

எஸ்எம்எஸ்

நிஜங்கள் இல்லாத இடத்தில் நிசப்தமாக இரு.

ஜி.அர்ஜுனன், செங்கல்பட்டு.

அப்படீங்களா!

புகைப்படங்கள், விடியோ பகிர்வுக்கு பெயர்போன இன்ஸ்டாகிராமில் புதிய சேவைகள் அறிமுகமாகி உள்ளன. மெட்டா நிறுவனம் அண்மையில் இதனை அறிமுகம் செய்துள்ளது.

பிறருக்கு அனுப்பப்பட்ட எழுத்துவடிவ மெசேஜை 15 நிமிஷங்களுக்குள் திருத்தம் செய்யலாம். இதற்காக அனுப்பிய மெசேஜை சிறிது நேரம் அழுத்தியபடி அதில் மீண்டும் திருத்தி அனுப்பலாம்.

இதேபோல், சாட்டுகளை இன்பாக்ஸில் முதலிடத்தில் வைக்க உதவும் 'பின் சாட்ஸ்' என்ற புதிய சேவையும் அறிமுகமாகி உள்ளது. மூன்று குழுக்கள் வரையில் இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம். முக்கியமான தகவல்களை பிறர் எளிதில் தெரிந்து கொள்ள இது உதவும்.

அனுப்பப்பட்ட தகவல் படித்தாகிவிட்டதை பிறருக்கு தெரியப்படுத்துவதை 'ஆன்' அல்லது 'ஆப்' செய்வதற்கும் புதிய சேவை அறிமுகமாகி உள்ளது. இதை குறிப்பிட்ட நபருக்காகவும் மாற்றிக் கொள்ளலாம்.

சாட்டுகளில் பதிலளிக்க ஸ்டிக்கர்களை சேமித்து பயன்படுத்தும் வசதியும் அறிமுகமாகி உள்ளது. இதில் ஜிஃப், விடியோக்கள், போட்டோ, வாய்ஸ் மெசேஜ் ஆகியவற்றையும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று மெட்டா தெரிவித்துள்ளது.

இந்தச் சேவைகளை வாட்ஸ்ஆஃப் செயலியில் ஏற்கெனவே மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. தற்போது இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர்களை அதிகரிக்க இதை மெட்டா நிறுவனம் விரிவாக்கம் செய்துள்ளது.

அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com