ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வயிறு மந்த நிலைக்கு காரணம் என்ன?

எனது ஆசன வாய் பகுதி சுருக்கம் அடைந்து வலி ஏற்படுகிறது.  கெட்டித்தன்மை அடைந்து கல்போல் உள்ளது.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வயிறு மந்த நிலைக்கு காரணம் என்ன?


எனது ஆசன வாய் பகுதி சுருக்கம் அடைந்து வலி ஏற்படுகிறது. கெட்டித்தன்மை அடைந்து கல்போல் உள்ளது.  மலம் கழிப்பதில் சிரமம், வயிறு மந்தமான நிலை, புளியேப்பம், அபான வாயுவானது கடுமையான துர்நாற்றம் போன்றவை ஏற்படுகிறது. இது 'மூலம்' தொடர்புடையதா கோளாறா? ஆயுர்வேத மருந்துகள் உள்ளதா?

ஞான.தாவீதுராஜா,
பொன்னேரி.

கீழ்ப்பெருங்குடல் பகுதியில் அசைவுகளைத் தன்னிச்சையாக ஏற்படுத்தி மலத்தை எளிதாக வெளியேற்றும் 'அபானன்'  எனும் வாயு, தங்களுக்குக் கடுமையாகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம்  அல்லது தேவையான அளவு தண்ணீர் அருந்ததாதவர்கள்,  உணவில் நெய்ப்பை அதாவது வழுவழுப்பை ஏற்படுத்தும் நெய், எண்ணெய்,  மாமிச கொழுப்பு, மஜ்ஜை, தேங்காய்ப் பால், எள் போன்றவற்றை பயன்படுத்தாதவர்கள் போன்றவர்களுக்கு பெருங்குடல் பகுதியில் வாயுவின் சீற்றம் விரைவாக ஏற்பட்டு, நீங்கள் குறிப்பிடும் உபாதைகள் அனைத்தும் தோன்றுவதற்குக் காரணமாகிறது. 

தூய விளக்கெண்ணெய்யை இளஞ்சூடாக, தொப்புளில் தடவி விடுவதையும், வயிறு முழுவதுமாகத் தேய்த்துவிட்டு அரை முக்கால் மணி நேரம் ஊறுவதையும், ஆசனவாய் முழுவதும் விளக்கெண்ணெய்யால் தடவி விடுவதையும், ஆசனவாய் சுருக்கம், வலி, கெட்டித்தன்மை போன்றவை நன்கு குணமாகும்.

பித்தத்தின் நீர்த்த நிலை, வயிறு மந்தமான நிலைக்குக் காரணமாகிறது. அது வயிற்றிலுள்ள 'சமான வாயு'வின் சேர்க்கையினால் மேல் நோக்கி எழும்பும்போது, புளியேப்பத்தை வெளியேற்றுகிறது. 'விஸ்ரம்' எனும் பித்தத்தின் துர்நாற்றம் எனும் குணத்தின் வாயிலாக, அபான வாயு கடும் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.

அதனால் மந்த நிலை, துர்நாற்றம், புளியேப்பம் என மூன்று வகையான பித்த வாயுவின் நிலைப்பாட்டைக் குணப்படுத்த 'அவிபத்தி' எனும் ஆயுர்வேத சூரண மருந்தை மதிய உணவுக்கு ஒரு மணி ரேம் முன்பாகத் தேனுடன் குழைத்துச் சாப்பிட, மேலெழும் பித்தம் கீழ்நோக்கி இறங்கி வாயுடன் மலத்தை நன்கு இளக்கி வெளியேற்றிவிடும். வாரமிருமுறை மட்டும் சாப்பிடாலே போதுமானது.

உலர் திராட்சையை பத்து கிராம் எடுத்து, விதை நீக்கிய கடுக்காய் தோடு பத்து கிராமுடன் சேர்த்து, இரண்டு ரோஜா மொக்கும் அதில் சேர்த்து மூழ்குமளவு வெந்நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலை கசக்கிப் பிழிந்து வடிகட்டி, தண்ணீரை இளஞ்சூடாக காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதையும் நீங்கள் வழக்கமாக்கிக் கொண்டால், உபாதைகள் நன்கு 
குறையும்.

வனசூரணாதி லேகியம், கல்யாண குலம், சுகுமார லேகியம், சிரிவில்வாதி கசாயம், ஹீதபுகாதி சூரணம், அபயாரிஷ்டம், தந்திரியரிஷ்டம், துராலபாரிஷ்டம் போன்ற நல்ல மருந்துகளையும் சாப்பிடலாம். மருத்துவரை அணுகி விவரமறிந்து சாப்பிடவும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com