வக்கீல் வீட்டுத் தாம்பூலம்

'முப்பது வருஷம் வாழ்ந்தவாளும் இல்லே;  முப்பது வருஷம் தாழ்ந்தவாளும் இல்லே.
வக்கீல் வீட்டுத் தாம்பூலம்

'முப்பது வருஷம் வாழ்ந்தவாளும் இல்லே;  முப்பது வருஷம் தாழ்ந்தவாளும் இல்லே. இப்பல்லாம் பழமொழிகள் கேட்க சுவாரஸ்யமா இருக்கே தவிர வாஸ்தவத்துல நிஜத்தைச் சொல்றதில்லை. என்னையே பாருங்களேன். என்னோட அம்மா தன் வாழ்க்கை முழுக்கவும் கட்டிக் காப்பாத்தின வறுமைக்கு, அவளைத் தொடர்ந்து கடந்த இருபது வருஷ காலமா நான் அடைக்கலம் குடுத்துண்டிருக்கேன். ஏறத்தாழ நாப்பத்தஞ்சு வருஷ காலம் வசதின்னா என்னன்னு தெரியாமலேயே ஓடிப்போயிடுத்து.  அடியே ஜானு, எனக்கு ஒன்ன ரொம்பப் புடிச்சுப் போச்சுடீன்னு  நான் ஆஸ்பத்திரியிலே பொறந்த பொழுது என்னைக் கட்டிண்ட தரித்திரம். 'நான் ஏண்டீ ஒன்னை விட்டுப் போகணும்?  முடிஞ்சா நீ என்னை விட்டுட்டுப் போயேண்டீன்னு இன்னிய தேதிக்கு என்கிட்டே சவால் விட்டுண்டிருக்கு.'

வாயிலே ஈ போறது தெரியாமே டி.வி.யில சீரியல் பார்க்கிற மாதிரி இந்த ஊர் மார்க்கசகாயேஸ்வர சுவாமியும் துளியும் அலுப்பு சலிப்பு இல்லாமே நான் படற பாட்டையெல்லாம் சுவாரஸ்யமாப் பார்த்துண்டுதான் இருக்கார். விளம்பர இடைவேளையே கிடையாது இந்த டிராமாவுக்கு.

சுவாமி எப்படியாவது இருந்துட்டுப் போகட்டும். என்னோட கவலைய நான் படாமல் இருக்க முடியுமோ?

வர்ற வியாழக்கிழமை நடுத்தெரு வக்கீல் வேதாச்சல ஐயராத்துல பன்னெண்டு சுமங்கலிகளுக்குத் தாம்பூலத்தோடு புடவையும் வெச்சுக் குடுக்கறதா ஒரு பேச்சுக் கிளம்பியிருக்கு. நிச்சயம் எனக்கு ஒரு புடவை கெடைச்சுடும். 

ஆனால், கூடுதலாக இன்னொண்ணும் கிடைச்சால் ரெண்டை நாலாக் கிழிச்சு என்னோட ரெண்டுங்கெட்டான் பொண்களுக்கு ஆளுக்கு ஒவ்வொரு தாவணியாக்கிடலாம். அதுகளுக்கும் புதுத்துணி கிடைச்சாப்பல இருக்கும். 

வக்கீல் ஆம்படையாள் விசாலாட்சி அம்மாள் நெகு நெகுன்னு பட்டுப் புடவையும் வைரத்தோடுமா ஜொலிப்பாள். பழகறதுக்கு என்னமோ ரொம்ப நல்லவள்தான். கோயில்ல கீயில்ல சந்திச்சா அந்தஸ்து வித்தியாசம்லாம் பார்க்காமல் 'எப்படி இருக்கேள் மாமி?'ன்னு சிரிச்சுண்டே கேட்கக் கூடியவள்தான்.  இருந்தாலும் பெரிய மனுஷாள். ஒரு புடவைக்கு ரெண்டு புடவையாக் கொடுங்களேம்மா அப்பிடின்னு கேட்கிறது சரியா இருக்குமோ? சட்டுனு ஒரு வார்த்தை சொல்லிப்புட்டால் என்ன பண்றது. நாம கேட்கிறது கிட்டத்தட்ட யாசகம் மாதிரிதான். இருந்தாலும் அதிலயும் ஒரு கெளரவம் வேணுமோல்லியோ?

பார்ப்போம். நடுவுல இன்னும் ஒரு வார காலம் இருக்கே.

அரைகுறை வேதாகமப் படிப்பு. சுத்துப்பட்ட ஏழெட்டுக் கோயில்களிலே பூஜை. கோயில்கள் ஒண்ணொண்ணும் மூணு நாலு மைல் தூரம். வழியிலே எப்போ நிக்கும்னு தெரியாத மொபெட் வண்டியிலே ஏழெட்டுக் கோயிலுக்கும் ஏழெட்டு டிபன் பாக்ஸ்களிலே பிரசாதம் எடுத்துண்டு போய் பூஜையை முடிச்சு மத்தியான பதைபதைக்கிற வெயில்ல வீடு திரும்பற வைத்தியநாத குருக்களுக்குப் பொண்டாட்டியா ஒரு வாழ்க்கையை எனக்கு விதிச்சிருக்கு. இடுப்புத் துணியா, இல்லை, எண்ணெய் கறை படிஞ்ச பிள்ளையார் கோயில் திரைச் சீலையான்னு தெரியாத ஒரு டிசைன்ல தாவணியோடு நிற்கிற நாலு பொண்ணுகள் எங்களுக்கு. மூணு வேளைச் சாப்பாட்டுக்கு வழியில்லேன்னாலும் இதுகளுக்கு வளர்த்தியிலே ஒண்ணும் கொறைச்சல் இல்லே. 

என்னமோ வண்டி வண்டியா சொத்து சேர்த்து வெச்சிருக்காப்பல நாங்க ரெண்டு பேரும் ஒரு புருஷப் பிரஜைக்கு வேண்டிக்கிட்ட பைத்தியக்காரத்தனத்தை என்னன்னு சொல்றது? 

இதோ பதினோரு வயசுப் பிள்ளையாண்டான் சுப்புணி இடுப்புல துண்டும் தோளிலே பொய்ப் பூணூலுமா அப்பாவோட கோயில் கோயிலாப் போயிண்டிருக்கான். படிப்பு சுத்தமா ஏறல்லே.

'டேய் ஒரு பிளஸ் டூவாவது படிக்கணுண்டா பையா'-ன்னு சொன்னால், 'பழையது இருந்தாப் போடும்மா'-ன்னு தன்னோட பழைய நசுங்கிப் போன சாப்பாட்டுத் தட்டை எடுத்துப் போட்டுண்டு உட்கார்ந்துடறான்.

பிள்ளையாண்டானுக்கு அவ்வளவாகத் துணிப் பிரச்னை கிடையாது. அந்த ஏழெட்டுக் கோயில்களில் ஒரு கோயிலுக்கு தர்மகர்த்தா துணிக்கடைக்காரர். எங்காத்துக்காருக்குச் சம்பளம் கொடுக்கறாரோ இல்லையோ, பொங்கலுக்கும் தீபாவளிக்கும் தலா ரெண்டு எட்டு முழ வேஷ்டியும் காசித் துண்டும் கிடைச்சுடும். அப்பாவும் பிள்ளையுமா பகிர்ந்துப்பா.

என் தங்கை பர்வதா பக்கத்தூருலதான் வாக்கப்பட்டிருக்கா. பர்வதாவோட புருஷனுக்குப் புரோகிதம். குருக்களுக்குப் புரோகிதர் நெலமை கொஞ்சம் பரவாயில்லை.  நான்தான் இப்படிக் கிடந்து அல்லாடறேன். எங்க பர்வதாவுக்காவது எங்க மார்க்கசகாயேஸ்வரர் லேசா கருணை காண்பிச்சாரே, அது வரைக்கும்போதும்.

சொல்ல மறந்துட்டேனே, எங்க மார்கசகாயேசுவரர் தன்னோட கருணையைக் காண்பிக்கறதுலே கொஞ்சம் சிக்கனப் பேர்வழி. ஒரேயடியா எல்லாக் கருணையையும் காட்டிட்டா மனுஷாளுக்கு அஜீரணம் ஆயிடுமேன்னு 
நினைக்கிறவர் எங்க சுவாமி. 

பர்வதாவுக்குத்தான் கொஞ்சம் வருமானத்தைக் காண்பிச்சோமே  அப்பிடின்னு யோசிச்சு, புத்திரப் பாக்கியத்தை இழுத்துப் பிடிச்சுட்டார். கல்யாணமாகிப் பதினெட்டு வருஷம் ஆச்சு எங்க அவளுக்கு. இன்னும் வயத்துல புழு பூச்சி உற்பத்தி ஆகல்லே. அப்பப்போ அதைக் குத்திக் காண்பிச்சுண்டிருந்த மாமியார்க்காரியும் போய்ச் சேர்ந்தாச்சு. 

நீயும் நானுமடி, எதிரும் புதிருமடின்னு என் தங்கையும் அவ புருஷனும் இருந்துண்டு வராள். குடியிருக்கற ஓட்டு வீட்டை மச்சு வீடாக் கட்டறதுக்குக் குருவி மாதிரி பணம் சேர்த்துண்டிருக்கா. பர்வதாவோட புருஷன் இப்பல்லாம் புரோகிதத்துக்கு ரேட்டை ஒசத்திக் கேட்கிறாதாகவும் பேச்சு அடிபட்டுண்டிருக்கு. அந்த வம்பெல்லாம் நமக்கு எதுக்கு.

பர்வதாவுக்கு என்கிட்டே ரொம்பப் பாசம். பொறந்தாத்துல சண்டையே போடாமல் வளர்ந்த அக்கா தங்கை நாங்க ரெண்டு பேரும்தான்னு எல்லாரும் சொல்றது வழக்கம். 

என் குழந்தைகள்கிட்டே பர்வதா ரொம்பப் பிரியமா இருப்பா. ரூபாய் நோட்டை வாரி எறைக்காவிட்டாலும், அவ்வப்பொழுது எங்காத்துக்கு வந்து போறதும், என் கொழந்தை களுக்கு பட்சணம் பலகாரம்னு வாங்கிக் கொடுக்கிறதுமா இருக்கா. அவ புருஷனும் இதுக்கெல்லாம் தடை போடறதில்லை.

இதெல்லாம் கிடக்கட்டும். வக்கீல் சம்சாரத்திடம் ரெண்டாவது புடவையை எப்படி வாங்கறதுன்னு என் மனசோட ஒரு மூலையிலே ஒரு கேள்வி என்னைக் குடைஞ்சுண்டே இருந்தது.

ரேஷன் கடை கியூவுல நிக்கும் பொழுது ஒரு ஐடியா தோணித்து.

ஏழெட்டுக் கோயில்களிலும் இன்னைக்கு சாயரட்சை பூஜை முடிஞ்சு எங்க ஆத்துக்காரர் திரும்பி வந்தப்புறம் அவர் போனை வாங்கி பர்வதாவோடு பேசணும். 
வர்ற வியாழக்கிழமை எனக்கோசரம் நீ கௌம்பி வந்து வக்கீல் வேதாசல ஐயராத்துல கொடுக்கற தம்பூலத்தை வாங்கிக்கணும். வாங்கின கையோட, அந்தப் புடவையை மட்டும் என்கிட்டே கொடுத்துடணும்' னு சொல்லணும். 
என்னோட தங்கை என்னைவிடக் கொஞ்சம் வசதியானவள். வந்து தாம்பூலம் வாங்கிக்கோம்மான்னு வக்கீல் ஆத்துல யாரும் அழைக்காமல் தானே வலிய வர்றது அவளுக்குக் கொஞ்சம் கெளரவக் குறைச்சல்தான்.

ஆனாப் பாருங்கோ, அவளுக்கு என்கிட்டேயும் என் குழந்தைகள்கிட்டயும் ரொம்பப் பிரியம். கட்டாயம் என் சொல்பேச்சைக் கேட்பாள். புடவையை மட்டும் என்கிட்டே கொடுத்துட்டு ரவிக்கைத் துண்டோடு, தேங்காய் பழம் வெற்றிலை பாக்கையெல்லாம் அவளே எடுத்துக்கொண்டு போகட்டும். எப்படியும் எக்ஸ்ட்ராவா ஒரு புடவை கிடைச்சால் போதும். நாலு குட்டிகளுக்கும் நாலு புது தாவணியாகும்.

'பையை நேராப் புடிங்கம்மா'ன்னு ரேஷன் கடைக்காரர் சொன்னதும்தான் ரெண்டாவது புடவையைப் பத்தின நினைப்பை விட்டுட்டு இந்த உலகத்துக்கு வந்தேன்.

பத்து கிலோ அரிசி,  ரெண்டு கிலோ சர்க்கரை ரெண்டையும் தூக்கிண்டு வர்றதுக்குக் கஷ்டமாத்தான் இருக்கு. என்ன பண்றது. இந்தக் காலத்துலே, வயசுப் பொண்ணுகளைக் கடை கண்ணிகளுக்கு அனுப்பவே ரொம்ப பயமா இருக்கே. 
இதுகளையும் நம்ப முடியலை. மத்தவாளையும் நம்ப முடியலை. இருபது, பதினெட்டு, பதினாறு, பதினாலு வயசு. ஒரே சீரா ரெண்டு ரெண்டு வருஷ இடைவெளி. எட்டாம் கிளாúஸாட நிறுத்தியாச்சு. 
'கதவை உள் பக்கமாகத் தாழ்ப்பாள் போட்டுக்கோங்கடி. யார் வந்தாலும் டக்குனு கதவைத் தொறந்துடக் கூடாது. வாசல் ரூம் ஜன்னல் கதவைத் தொறந்து யாருன்னு பார்த்துட்டு, ரொம்பத் தெரிஞ்சவாளா இருந்தால் மட்டும்.'
அட்வைஸ் பண்ணும் போதே,  'போதும் போதும் உன்னோட புராணம்'-ன்னு நாலுமாகச் சேர்ந்து நம்பளை வெளியே தள்ளிக் கதவைச் சாத்தும். 
யாராவது பொறுப்பான பிள்ளைகளாகப் பார்த்து இதுகளை ஒப்படைக்கிற வரையில் எனக்குத் தூக்கம் ஏது?
வியாழக்கிழமை.  நான்தான் சொன்னேனே.  பர்வதா நான் சொல்லும் பேச்சைக் கேட்பாள்னு. 'டாண்' என்று மூணு மணிக்கே எங்காத்துக்கு வந்துட்டாள். 
அவளோட வீட்டுக்காரரும் ஒரு கல்யாண காண்டிராக்ட்னு வெளியூருக்குப் போயிட்டாராம். 
'தாம்பூலம் வாங்கிண்டு நான் சீக்கிரமே திரும்பணும் ஜானு. ஆறரை மணிக்கு எங்க ஊர் டவுன் பஸ் கிளம்பும்.  அதுக்குள்ள வக்கீல் மாமி தாம்பூலம் தந்துடுவாள் இல்லையா? தொடர்ந்து ஒரு மண்டலம் சாயரட்சையில் எங்க ஊர் துர்க்கையம்மன் கோயில்லே விளக்கேத்தறது வழக்கம்.'
'கவலையே படாதே, அஞ்சு மணிக்கெல்லாம் வக்கீலாத்துக்குக் கிளம்பிப் போயிடலாம். அங்கே தாம்பூலம் கொடுத்த அடுத்த நொடியே நேரே பஸ் ஸ்டாண்டுக்கு நீ போயிடலாம்.'
பசங்களுக்காகத் தான் வாங்கி வந்த பட்சணங்களை எடுத்துக் கொடுத்துட்டு, 'என்ன அத்திம்பேர்'ன்னு எங்காத்துக்காரரை விசாரிச்சுட்டு எல்லார்கிட்டயும் சகஜமாப் பேசிண்டிருந்தா. அவளுக்குன்னு ஸ்பெஷலா முறுகலா செஞ்ச அடையை சாப்பிட்டவள் 'அரை டம்ளர் காபி போதும்'ன்னு சொன்னாள். 
மணி அஞ்சு பதினஞ்சு.
அப்போவே வக்கீலாத்துல ஏழெட்டுப் பெண்டுகள் வந்திருந்தா.
'வாங்கோ ஜானும்மா, யார் இது, உங்க தங்கையா, வந்து உக்காருங்கோ..'
வாசல்லியே வரவேற்பு சொன்ன வக்கீல் மாமி இருவது நிமிஷம் கழிச்சுதான் மறுபடியும் தலையைக் காண்பித்தாள். கூடத்துல ஷோகேஸ் முழுக்க அழகழகான பொம்மையெல்லாம் பிரமாதமா அடுக்கியிருந்தது. ஆனா, என்னைப் போல பராரிகளுக்கு அதுல கவனம் போனாத்
தானே? 
திருவிளையாடல் தருமி மாதிரி தாம்பூலத் தட்டு எப்போ வரும்னுதானே மனசு அடிச்சுக்கறது.
ஒருவழியா மாமி பொம்மைகளுக் கெல்லாம் கற்பூரம் காட்டி ஆரத்தி சுத்தின பிறகு தாம்பூலத்தட்டு ரெடி பண்ண ஆரம்பித்தாள்.  ஒத்தாசையா அவாளோட மூத்த மாட்டுப் பொண்ணு. வெத்திலை பாக்கு, தேங்காய், ஆப்பிள், வாழைப்பழம், குண்டு மஞ்சள், குங்குமச்சிமிழ், மீடியம் சைஸ் எவர்சில்வர் பாக்ஸ் ஒண்ணு, அப்புறம் அந்தப் பளபளக்கும் புடவை. சின்னாளப் பட்டி சேலையா இருக்கணும்னு தோணித்து.
மாமியாரும், மாட்டுப்பொண்ணுமா தாம்பூலம் கொடுக்க ஆரம்பிச்சாள்.
எனக்கு முன்னால நின்னுண்டிருந்த பர்வதாகிட்ட, 'நீங்க இப்போ எந்த ஊர்ல இருக்கீங்கோ?'- அப்பிடின்னு கேட்டுட்டு மாமி சம்பிரதாயமா ஒரு சிரிப்பு சிரிச்சாள்.
தாம்பூலம் வாங்கிண்டு பர்வதா நகர்ந்ததும் என் காதுகிட்டே வந்த வக்கீல் மாமி, 'ஜானு மாமி, இன்னிக்கு சுமங்கலிகளுக்குக் கொடுக்கறா மாதிரி, நாளைக்குக் கன்யா பொண்ணுகளுக்கு பாவாடை தாவணியோடு தாம்பூலம் கொடுக்கறோம். திடீர்னு வந்த ஐடியா. 
மறக்காம உங்க பொண்ணுகள் நாலு பேரையும் அனுப்பிச்சு வையுங்கோ..?'
அப்பிடீன்னு சொன்னதும் சந்தோஷத் துலே என் தலை ஒரு சுத்து சுத்தி நின்னுது. மார்க்கசகாயேஸ்வர சுவாமி எங்களுக்கு அவ்வப்பொழுது இது போல அனுக்கிரகம் செஞ்சால் ரொம்பவே நன்னா இருக்கும்.
'அவசியம் அனுப்பி வெக்கறேன் மாமி' என்று பதில் சொல்லிட்டு எனக்கான தாம்பூலத்தை வாங்கிண்டேன்.
வாங்கினப்புறம் அங்கே என்ன வேலை. நானும் பர்வதாவும் வெளியே வந்தோம். 
நேரே பஸ் ஸ்டாண்டு. 
பர்வதா ஊருக்குப் போற டவுன் பஸ் வருவதற்கு இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தது.   
பஸ் ஸ்டாண்டு பெஞ்சில் உட்கார்ந்த பர்வதா, தன்னோட பையிலே கைய விட்டு எடுத்து,  'இந்தா ஜானு அந்தப் புடவை.'ன்னு என் கிட்டே நீட்டினாள். 
அவளையே கொஞ்ச நேரம் பாத்துண்டிருந்தேன். 
'என்ன ஜானு பாக்கறே?'
'ஒண்ணுமில்லே பர்வதா! பிறந்தகத்து சீர்னு உனக்குக் கொடுக்க இங்கே யாரு இருக்கா. பிறந்த ஊரிலேருந்தாவது இது உனக்கு வந்ததா இருக்கட்டுமே. இந்த வாடாமல்லிக் கலர்ப் புடவை உன்னோட கலருக்கு ரொம்ப லட்சணமா இருக்கும்' ன்னு பர்வதாவுடைய பையிலேயே புடவையைத் திணிச்சேன்.
டவுன் பஸ்  பிரவேசம் ஆனது.
'போய் முதல் சீட்டு பிடிச்சு உக்காரு பர்வதா..'
மெதுவா எழுந்து என்னோட வலது கையை ஒரு அழுத்து அழுத்திட்டு பர்வதா பஸ் ஏறினாள். 
பர்வதாவோட கண்ணு லேசா கலங்கினா மாதிரி இருந்தது.
எனக்கும்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com