திரைக்  கதிர்

ரஜினியின் திரைப் பயணத்தில் ஒரு மைல்கல் ஆகத் திகழ்ந்த படம் "ஜெயிலர்'. நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைத்த இப்படம் ரூ.635 கோடி வசூலை எட்டியதாகச் சொல்கிறார்கள்.
திரைக்  கதிர்

ரஜினியின் திரைப் பயணத்தில் ஒரு மைல்கல் ஆகத் திகழ்ந்த படம் "ஜெயிலர்'. நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைத்த இப்படம் ரூ.635 கோடி வசூலை எட்டியதாகச் சொல்கிறார்கள். இப்படியொரு வெற்றியைக் கொடுத்த ரஜினி - நெல்சன் கூட்டணி மீண்டும் இணையும் படம்தான் "ஜெயிலர் 2'. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை என்றாலும் நிச்சயம் ஜெயிலருக்கு இரண்டாம் பாகம் உண்டு என்கிறார்கள். இந்நிலையில் "ஜெயிலர் 2'வில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார் எனத் தகவல்கள் பரவியுள்ளன. இப்போதைக்கு இந்தப் புதிய படத்தில் அனிருத் மட்டுமே உறுதி செய்யப்பட்டிருக்கிறார். மற்றபடி படத்தின் இதர கலைஞர்கள் முடிவாகவில்லை. கதை விவாதம்தான் தீவிரமாக நடந்து வருகிறது. முழுக்கதையும் ரெடியான பிறகே, கதைக்கான ஆட்களை நடிக்க வைக்கத் திட்டமிட்டிருக்கிறார் நெல்சன். 

------------------------------------

பிரதமரின் சென்னை பயணத்தின் போது  கிண்டி ஆளுநர் மாளிகைக்குச் சென்று பல்வேறு முக்கிய பிரமுகர்களும் மோடியை சந்தித்துப் பேசினார்கள். அந்த வகையில் நடிகர் அர்ஜுனும் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியிருக்கிறார்.  இதனைத் தொடர்ந்து பலரும் "அர்ஜுன் பா.ஜ.க-வில் இணையவுள்ளாரா?' என்ற கேள்வியை எழுப்பி இருக்கின்றனர்.  இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  அர்ஜுன், "என்னுடைய கோயிலுக்கு வருமாறு பிரதமருக்கு அழைப்பு விடுத்திருக்கிறேன். கூடிய சீக்கிரம் வருவேன் என்று சொல்லி இருக்கிறார்.  கேஷுவலாகத்தான் சந்தித்துப் பேசினேன்.

அதன்படி இப்போது சந்தித்துவிட்டு வந்திருக்கிறோம்." தான் பா.ஜ.க-வில் இணைந்து விட்டதாகப் பரவிய செய்தி குறித்து கேள்வி எழுப்பியதற்குப் பதிலளித்த அர்ஜுன், "அய்யய்யோ அப்படியெல்லாம் இல்லைங்க. அரசியல் என்பதே எனக்கு அவ்வளவாக தெரியாது' என்று பதிலளித்திருக்கிறார்.

------------------------------------

விஜயகாந்தின் புகைப்படத்தோடு, தமிழ் நடிகர்கள் பாதுகாப்பு அறக்கட்டளை என்று ஒன்றை நிறுவியிருக்கிறார் நடிகர் பெஞ்சமின். "திருப்பாச்சி'யில் குணச்சித்திர நடிப்பால் கவனம் ஈர்த்த பின், "திருப்பாச்சி' பெஞ்சமின் என அழைக்கப்பட்டார். இயக்குநர்கள் சேரன், பேரரசு படங்களின் ஆஸ்தான நடிகர். இப்போது தமிழ் நடிகர்கள் பாதுகாப்பு அறக்கட்டளை என்று ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். "அதில் இயன்றதைச் செய்வோம்.. இல்லாதவர்க்கு' என்று இருக்கிறது. விஜயகாந்த் ஓவியமும் அதில் இடம்பெற்றிருக்கிறது. நலிந்த, வறுமையில் வாடும் நடிகர்களுக்கு உதவும் எண்ணத்தோடு இதை ஆரம்பித்திருக்கிறார்."முன்பெல்லாம் நலிந்த நடிகர்கள் இறந்துபோனால், நடிகர்கள் சங்கத்தில் உள்ள அத்தனை பேரும் திரண்டு போய், அஞ்சலி செலுத்துவார்கள். அது தொடர வேண்டும்' என்று தெரிவித்திருக்கிறார் பெஞ்சமின்.

------------------------------------

ராஜ்கமல் நிறுவனம் இப்போது சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தை தயாரித்துள்ளது. அதைப் போல, சிம்பு, தேசிங்கு பெரியசாமி காம்பினேஷனிலும் ஒரு படத்தை அறிவித்தது. பட அறிவிப்பு வெளியாகி பல வாரங்கள் ஆனதால், இப்படம் மேற்கொண்டு வளராது என தகவல்கள் பரவின. ஆனால், படத்துக்கான வேலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. சூர்யாவின் "கங்குவா'வில் பீரியட் காட்சிகளை அரங்கம் அமைத்து எடுத்தது போல, சிம்புவின் படமும் அரங்கம் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு நடக்கிறது. இப்போது துபாயில் இருக்கும் சிம்பு, இக்கதைக்கேற்ற உடல்வாகுடன் தயாராகிவிட்டார் என்றும் இம்மாத கடைசியில் சென்னை வருகிறார் என்றும் சொல்கிறார்கள். அநேகமாக வரும் பிப்ரவரியில் படப்பிடிப்புக்கு கிளம்புகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com