அசத்திய ஆண்டாள்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் வருகை தந்தபோது,  நாற்பத்து ஐந்து வயது பெண் யானை ஆண்டாள், ' மவுத் ஆர்கன்'  வாசித்து அசத்தியது. 
அசத்திய ஆண்டாள்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் வருகை தந்தபோது, நாற்பத்து ஐந்து வயது பெண் யானை ஆண்டாள்,' மவுத் ஆர்கன்' வாசித்து அசத்தியது.
இங்கு யானை ஆண்டாளின் கதையே வியப்புக்குரியதுதான். பொள்ளாச்சி வனப் பகுதியில் 1979-ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் (பிப்.28) பிறந்த ஆண்டாளை, திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வளர்ப்பதற்காக வாங்கி வந்து, பின்னர் காரமடை அரங்கநாத சுவாமி கோயிலுக்கு வழங்கினார். அங்கிருந்தபோது, ரஜினிகாந்த் நடித்த 'தம்பிக்கு எந்த ஊரு' திரைப்படத்தில் ரஜினிக்கு ஆசீர்வாதம் செய்யும் காட்சியிலும் சிறு வயது ஆண்டாள் இடம்பெற்றிருக்கும்.
இந்த நேரத்தில் ஆண்டாளை, ஸ்ரீரங்கம் பெருமாளுக்கும் சேவை செய்திட விருப்பம் மேற்கொண்டு ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் முறைப்படி எழுதி வாங்கி 1986-ஆம் ஆண்டு அக்.17-இல் இங்கு கொண்டு வந்து சேர்த்தார். அன்றுமுதல் இன்று வரை ஸ்ரீரங்கம் நம்பெருமாள், ஸ்ரீரங்கநாச்சியாருக்கு மட்டுமின்றி, கோயிலுக்கு அனைத்து கைங்கர்யங்களையும் சிறப்புடன் செய்து வருகிறாள் ஆண்டாள்.
கோயிலுக்கு ஆண்டாள் வந்து சேர்ந்தபோது அதற்கு வயது எட்டு. இப்போது, நாற்பத்து ஐந்து வயதாகிவிட்டது.
ஆண்டுதோறும் பிப். 28-ஆம் தேதி பிறந்த நாள் விழாவையும் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. கோடைகாலத்தில் ஆண்டாள் குளிப்பதற்காகவே ரூ.3 லட்சம் மதிப்பில் பிரத்யேக ஷவர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. அன்னதான மண்டபம் அருகே திறந்தவெளி கல் மேடையில் 400 சதுர அடி பரப்பில், 18 அடி உயரத்துக்கு இந்த பிரத்யேக ஷவர் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 10 ஷவர்களில் இருந்து கொட்டும் தண்ணீரில் கோடையில் தினம்தோறும் குளித்து குதூகலித்து மகிழும்.
மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படும் ஆண்டாள் தமிழ், மலையாளம் என இரு மொழிகளைப் புரிந்துகொள்ளும்.
கோயிலுக்கு வந்தபோதே பெருமாளுக்கு காவிரியில் இருந்து தங்கக் குடத்தில் புனித நீர் எடுத்தும் வரும் வாய்ப்பை ஆண்டாள் பெற்றது. அன்றிலிருந்து கடந்த 36 ஆண்டுகளாக ஆண்டாளே அனைத்து கைங்கர்கயங்களையும் மேற்கொண்டு வருகிறது.


இதுமட்டுமின்றி 'மவுத் ஆர்கன்' வாசிப்பதிலும் திறமை கொண்டது ஆண்டாள். கோயிலின் நவராத்திரி திருவிழாவுக்கு தாயாருக்கு மவுத் ஆர்கன் வாசிப்பதை தலையாய கடமையாகக் கொண்டுள்ளது.
விஸ்வரூபத் தரிசனம் நிகழ்வின்போது அதிகாலையே பெரிய பெருமாள் சந்நிதி முன்பு ஆஜராகிவிடும். முதல் தரிசனத்தை நம்பெருமாள், ஆண்டாளுக்குதான் தருவார். முதல் பிரசாதமும் ஆண்டாளுக்குத்தான். முக்கியப் பிரமுகர்கள், பக்தர்கள் வரும்போது, தனது துதிக்கையை உயர்த்தி ஆசி வழங்கி வருகிறது ஆண்டாள்.
இந்த நிலையில், திருச்சிக்கு ஜன. 20-இல் வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்தபோது, பூரண கும்ப மரியாதையை ஏற்றுக் கொண்ட அடுத்த விநாடி ஆண்டாளையே பார்வையிட்டார். ஆண்டாளுக்கு ஆப்பிள்களை வழங்கிய பிரதமர், பாகனிடம் ஆண்டாள் குறித்து ஆர்வமுடன் கேட்டறிந்தார். அப்போது, ஆண்டாள் மவுத் ஆர்கன் வாசித்தபோது வியப்டைந்த பிரதமர், துதிக்கையைத் தடவி கொடுத்து மகிழ்ந்தார்.
இதுகுறித்து யானைப் பாகன் ராஜேஷ் கூறியதாவது:
'எங்கள் குடும்பத்தில் மூன்றாம் தலைமுறையாக நான் இந்த யானையை பராமரித்து வருகிறேன். பத்து ஆண்டுகளாக, உடனிருக்கிறேன். கோயிலுக்கு வரும் பக்தர்களும், ஊழியர்களும் ஆண்டாளை தங்களில் ஒருவராகவே கருதி வருகின்றனர். ஆண்டாள் எங்கே, எப்படி இருக்கிறாள் என்றுதான் அழைப்பர். அளவுக்கு கோயிலுக்கும், பக்தர்களுக்கும் ஆண்டாள்தான் செல்லம்.
ஆறு ஆண்டுகளுக்கு முன் நான் கேட்கும் கேள்விகளுக்கு சிறு ஒலி எழுப்பி பதில் அளித்ததை கண்டேன். அன்று முதல், தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் ஆண்டாளுடன் பேசத் தொடங்கிவிட்டேன். எனது கேள்விகளுக்கு தலையை ஆட்டியும், ஒலி எழுப்பியும் பதில் அளிக்கும்.
'ஆண்டாள் சமத்துப்பிள்ளையா?' என்றால், 'உம்' என சப்தம் எழுப்புவாள். 'எங்கேபோகணும்' என்றால், 'தும்பிக்கையால் வெளியே செல்ல வேண்டும்' என காட்டுவாள். 'சாப்பிட்டாயா?' என்றால், ' உம்' என சப்தம் எழுப்புவாள், தலையையும் ஆட்டுவாள்.
கோயில் வழக்கங்கள் அனைத்தும் ஆண்டாளுக்கு மனப்பாடம். எனது கட்டளையை எதிர்பாராமலேயே அனைத்தையும் சரியாக செய்வாள். துதிக்கையில் மவுத் ஆர்கன் வாசிப்பது என்றால் அலாதிப் பிரியம். இதுவரை நான்கு மவுத் ஆர்கன்களை மாற்றிவிட்டோம். பிரதமர் வருகையின்போதும் மவுத் ஆர்கன் வாசித்து அசத்தியது. அப்போது, யானையின் பெயரை என்னிடம் கேட்டார் பிரதமர். நான், 'ஆண்டாள்' என பதில் அளித்து, யானையின் சிறப்புகள் குறித்தும், நவராத்திரி விழாவில் யானை இசைக்கும் நிகழ்வையும் விளக்கினேன். மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், யானையின் துதிக்கையைத் தடவி கொடுத்து விடைபெற்றார்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com