அலெக்ஸை எல்லா நடிகர்களுக்கும் பிடிக்கும்!

கோலிவுட், டோலிவுட், மல்லுவுட், பாலிவுட் உள்பட எல்லாச் சினிமா-வுட் நடிகர்களும் விரும்பும் பெயர் "குதிரை கோவிந்தராஜன்'. ஐம்பது வருட சினிமாவில் இடம்பெற்ற எல்லாக் குதிரைக் காட்சிகளிலும் இவர் வளர்த்த குதிர
அலெக்ஸை எல்லா நடிகர்களுக்கும் பிடிக்கும்!

கோலிவுட், டோலிவுட், மல்லுவுட், பாலிவுட் உள்பட எல்லாச் சினிமா-வுட் நடிகர்களும் விரும்பும் பெயர் "குதிரை கோவிந்தராஜன்'. ஐம்பது வருட சினிமாவில் இடம்பெற்ற எல்லாக் குதிரைக் காட்சிகளிலும் இவர் வளர்த்த குதிரைகள் நடித்துள்ளன. கோவிந்தராஜனைத் தொடர்ந்து அவரது மகன் தமிழரசனும் குதிரைகளுக்குப் பயிற்சிக் கொடுத்து பல்வேறு படங்களில் நடிக்க வைத்து வருகிறார்.

""தாத்தா தங்கவேல் சில குதிரைகள் வைத்து வளர்ந்து வந்தார். அப்பா ஒரு குதிரையோடு சென்னை வந்து பீச்சில் ஓட்டிக் கொண்டிருந்தார். இதன்பிறகு மெல்ல சினிமா துறையினரோடு தொடர்பு ஏற்பட்டு இந்தத் துறைக்கு வந்தார். அவரோடு சிறுவயதிலிருந்தே நானும் இந்தத் துறையில் ஈடுபட்டு வருகிறேன்.

எம்.ஜி.ஆரின் "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்', "உரிமைக்குரல்' போன்ற பெரும்பாலான படங்களிலும், "வஞ்சிக்கோட்டை வாலிபன்' போன்ற படங்களிலும் எங்களுடைய குதிரைதான் நடித்தது. எம்.ஜி.ஆர். மீது அப்பாவுக்குப் பிரியம் அதிகம். அதனால் தன் மகனுக்கு எம்.ஜி.ஆரை பெயர் வைக்கச் சொல்லியிருக்கிறார். அவர்தான் எனக்குத் தமிழரசன் என்கிற பெயரையே வைத்தார். சிறுவயதில் தூரத்தில் நின்று எம்.ஜி.ஆர். நடித்த காட்சிகளை ரசித்தது மட்டுமே எனக்கு ஞாபகம் இருக்கிறது. வேறு எதுவும் அவரோடு பேசிய அனுபவமெல்லாம் எனக்கு இல்லை.

எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து இன்றைக்கு விஜய் காலம்வரை வந்த தமிழ்ச் சினிமாவில் இடம்பெற்ற அனைத்துக் குதிரைக் காட்சிகளிலும் எங்கள் குதிரைகள் இடம்பெற்றுள்ளன.

ஆரம்பத்தில் ஒரு குதிரையை மட்டும் வைத்துக்கொண்டு அப்பா சினிமாவுக்குக் குதிரை சப்ளை செய்யும் பணியைத் தொடங்கினார். தற்போது 50 குதிரைகள் வைத்திருக்கிறோம். இதில் 36 குதிரைகள் மட்டும் சினிமாவில் நடித்தவை. மீதமுள்ள 14 குதிரைகளுக்கு அதற்கான பயிற்சி கொடுப்பதுடன் கல்யாண ஊர்வலத்தில் சாரட் வண்டிகளை இழுத்துச் செல்வதற்கும் பயன்படுத்துகிறோம்.

சினிமாவில் நடிக்கக்கூடிய குதிரைகளுக்கு நிச்சயம் பயிற்சி கொடுக்கவேண்டும். சினிமா எடுக்கிற இடம் எப்போதும் சத்தமாக இருக்கும். இந்த இடத்திற்குக் குதிரைகளை பழக்கப்படுத்த வேண்டியது அவசியம். அதைப்போல வேட்டுச் சத்தம், துப்பாக்கிச் சத்தம், கிளாப் தட்டும் சத்தம் போன்றவற்றிக்குப் பழக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் மேலே உட்கார்ந்திருக்கிற நடிகர்களை கவிழ்த்துவிட்டுவிடும். எங்களிடம் இருக்கிற எல்லாக் குதிரைகளுக்குமே ஒவ்வொரு பெயர் வைத்து குழந்தைகள் போல் அழைக்கிறோம். இதில் அலெக்ஸ் குதிரையை மட்டும் எல்லா நடிகர்களுக்கும் பிடிக்கும். அந்தக் குதிரையைத் தெரியாத நடிகர்களே இல்லை எனலாம். கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளது.

சமீபத்தில் அது நடித்த ஒரு முக்கியமான படம் "இம்சை அரசன் 23-ம் புலிகேசி'. குதிரையோடு நடிப்பதற்கு வடிவேலு பழகவேண்டும் என்பதற்காக முன்பே அந்தக் குதிரையைக் கேட்டிருந்தார். ஆனால் வேறு ஷூட்டிங்கில் அலெக்ஸ் இருந்ததால், அதைக் கொடுக்கமுடியவில்லை. சிம்புதேவனுக்கு இதில் சிறிது கோபம் இருந்தது. அதேசமயம் ஷூட்டிங் தொடங்கியபோது அலெக்ஸ் கொடுத்த ஒத்துழைப்பைப் பார்த்து சிம்புதேவன் அசந்துவிட்டார்!

நடிகர் முரளி ஷூட்டிங் இல்லாத நேரங்களில் இந்தக் குதிரையில்தான் அவரது மகன் மற்றும் மகளோடு குதிரைப் பயிற்சி செய்வார். தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு இந்தக் குதிரை மீது கொள்ளைப் ப்ரியம். அவருடைய படங்களில் அவசியம் அலெக்ஸýக்கு ஒரு சீன் வைத்துவிடுவார். கடைசியாய் ஒரு படத்தில் நடிப்பதற்கு எங்களிடம் "அலெக்ûஸ'க் கேட்டார். ஆனால் எங்களால் கொடுக்க முடியவில்லை. அதற்கு வயதாகிவிட்டதால் இரண்டு வருடங்களுக்கு முன்பே ஓய்வு கொடுத்து பாதுகாப்பாகத்தான் வைத்திருந்தோம். ஒருநாள் அதிக ஜூரம் வந்து இறந்தேபோய்விட்டது. இந்தத் தகவலை மகேஷ்பாபுவிடம் சொன்னபோது ஆடிப்போய்விட்டார். எங்களாலும் அந்தத் துயரத்தைத் தாங்கமுடியவில்லை. நடிகர் முரளிக்குத் தகவல் தெரிந்தபோது அதிக வருத்தப்பட்டார்.

தற்போது "அலெக்ஸின்' இடத்தை லட்சுமி உள்பட பல குதிரைகள் ஈடு செய்கின்றன. விஜய்யின் "வேட்டைக்காரன்' படத்தில் போஸ் கொடுப்பது லட்சுமிதான்'' என்கிறார்

தமிழரசன்.

"50 குதிரைகளை எப்படிப் பராமரிக்கிறீர்கள்?''

""மந்தைவெளியில் இதற்காக ஒரு பெரிய கொட்டகையை வைத்திருக்கிறோம். 24 மணிநேரமும் யாராவது ஒரு ஆள் காவல் காத்துக் கொண்டுதான் இருப்பார். இதனால் 24 மணிநேரக் குதிரைக் கடை என்றே அந்தக் கொட்டகையை அழைக்கிறார்கள். குதிரைகள்தானே என்று அவற்றை விட்டுவிடமுடியாது. குழந்தைகள்போல் அடித்துக் கொள்ளும். அதனால்தான் 24 மணிநேரக் காவல்'' என்கிறார் தமிழரசன்.

- குறும்புத்தனம் செய்யும் அவையும் ஒருவகையில் குழந்தைகள்தானே!





தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com