வாய்ப்பும், வருமானமும் தேவை!

சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம்... மழை பொழிவதற்கு முந்தைய ஒரு ரம்மியமான மாலை நேரம். ஆங்காங்கே தேநீர் விடுதிகள். கடந்த மூன்று நாள்களுக்கு முன் ஒரு தேநீர் விடுதியில் அலுவலக நண்பர் ஒருவர
வாய்ப்பும், வருமானமும் தேவை!

செ ன்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம்... மழை பொழிவதற்கு முந்தைய ஒரு ரம்மியமான மாலை நேரம். ஆங்காங்கே தேநீர் விடுதிகள். கடந்த மூன்று நாள்களுக்கு முன் ஒரு தேநீர் விடுதியில் அலுவலக நண்பர் ஒருவருடன் அளவளாவிக்கொண்டிருந்தபோது ஒரு வயதான மனிதர் கையில் ஒரு சிறிய பையை வைத்துக்கொண்டு பஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தார்.

 எங்கேயோ பார்த்த முகமாக இருக்கிறதே எனப் பார்வையை அழுத்தமாகப் பதிவு செய்தும் உடனடியாக அவர் பெயர் பிடிபடவில்லை. அருகே இருந்தவரிடம் அந்தப் பெரிய மனிதரைச் சுட்டிக் காட்டி "அடிக்கடி பார்த்த முகமாக இருக்கிறதே' என விசாரித்தபோது "அட... அவரைத் தெரியவில்லையா? அவர்தான் டைப்பிஸ்ட் கோபு. காமெடி நடிகர். எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறார். இங்கு அடிக்கடி பார்த்திருக்கிறோம். பஸ்ஸýக்காகக் காத்திருப்பார்' என்றவுடன்தான் டைப்பிஸ்ட் கோபுவைப் பற்றிய நினைவுகள் பின்னோக்கிச் சுழல ஆரம்பித்தன.

 உடனே அவரிடம் சென்று அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பித்தோம். "பஸ்ஸýக்கு நேரமாச்சு தம்பி; வீட்டில் பேசலாமே...' என அயப்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டு முகவரியைத் தந்தார்.

 அடுத்த நாள் காலை; அயப்பாக்கம் வீடு; கதவைத் தட்டியவுடன் அன்புடன் வரவேற்றார். அந்தச் சிறிய வீட்டுக்குள் சென்றவுடன் "ஒரு நிமிஷம் இருங்க...' என்று வாசலுக்கு வந்தவர், வெளியே எட்டிப் பார்த்து "அம்மா கல்பனா, ஒரு சேர் கொடும்மா' என எதிர் வீட்டுப் பெண்ணிடம் கேட்க உடனே அந்தப் பெண் வீட்டுக்குள் சென்று ஒரு சேரை எடுத்து வந்தார். அதில் நம்மை அமரச் சொல்லிவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டார் கோபு. பேட்டிக்கு முன்பாகவே அவருடைய பொருளாதாரச் சூழலை ஓரளவு யூகிக்க முடிந்தது. இனி மனம் திறக்கிறார் டைப்பிஸ்ட் கோபு...

எப்படி இருக்கிறீர்கள்? இப்போதெல்லாம் உங்களைப் படங்களில் அதிகமாகப் பார்க்க முடியவில்லையே?

 இருக்கிறேன். டி.வி. பார்த்துக் கொண்டும் புத்தகங்களைப் படித்துக் கொண்டும் பொழுதைக் கழிக்கிறேன். நரம்புப் பிரச்னை காரணமாக நான்கு வருடங்களுக்கு முன்பு இடது காலில் ஓர் ஆபரேஷன் நடந்தது. அதனால் நான்கு வருடங்களாக ஓய்வில்தான் இருக்கிறேன். இந்தக் காலகட்டத்தில் சினிமா தொடர்புகள் இல்லாததால் வாய்ப்புகள் பெரிய அளவில் வரவில்லை என நினைக்கிறேன். இப்போது பூரண குணமடைந்துவிட்டேன்.

 எவ்வளவு காலமாக இந்தத் துறையில் இருக்

 கிறீர்கள்?

 நான் சிறு வயதிலிருந்தே நடிக்க ஆரம்பித்துவிட்டேன். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணக்கால் கிராமம்தான் என் சொந்த ஊர். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே பள்ளி நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தேன். அதன் பிறகு தந்தையுடன் சென்னைக்குக் குடியேறினோம். மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரியில் பி.காம்., முடித்தேன். கல்லூரியில் படிக்கும்போது பல நாடகங்களிலும் கலை விழாக்களிலும் நடித்திருக்கிறேன்.

 நாடகத்துறை அனுபவம் பற்றி..?

 நடிப்புதான் என் தொழில் என முடிவு செய்த பிறகு சென்னை சபாக்களில் நடக்கும் நாடகங்களில் வாய்ப்புக் கேட்டு சிறிய வேடங்களில் நடித்து வந்தேன். 1955, 56-களில் நாகேஷின் நட்பு கிடைத்தது. அதன் பிறகுதான் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. நாகேஷ் சொந்தமாக ஒரு நாடக ட்ரூப் வைத்திருந்தார். அதில் அவர், ஸ்ரீகாந்த், நான் ஆகிய மூவரும் ரெகுலர் ஆர்ட்டிஸ்ட்டுகள்.

 அப்போதெல்லாம் தேனாம்பேட்டை காங்கிரஸ் பொருட்காட்சி மைதானத்தில் பெரிய பெரிய ஜாம்பவான்களின் நாடகங்கள் நடந்துகொண்டிருக்கும். அந்த சபா செயலாளர் கிருஷ்ண ஐயரிடம் கெஞ்சிக் கூத்தாடி மைதானத்தின் ஓரத்தில் எங்களுக்காக ஒரு மேடையைக் கேட்டுப் பெற்றோம். அங்கு தொடர்ச்சியாக ஒரு வாரம் நாடகங்களை நடத்தினோம். முதல் நாள் எங்களுக்குப் பெரிய அளவில் கூட்டமில்லை. ஆனால் அடுத்தடுத்த நாள்களில் பெரிய நடிகர்களின் நாடகங்களைப் பார்க்க வந்த ரசிகர்கள் எங்களுடைய காமெடி நாடகத்தைப் பார்த்துவிட்டுப் பாராட்ட - கூட்டம் சேரத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் எங்கள் மேடைதான் களைகட்டியது. "மிஸ் மைதிலி', "கைராசி', "கப் அண்டு கேஸ்', "மாந்தருள் மாணிக்கம்' போன்ற நாடகங்கள் எங்களுக்கு அதிக அளவில் ரசிகர்களைத் தேடித்தந்தன. 1955 முதல் 58 வரை 600-க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துவிட்டேன்.

 "டைப்பிஸ்ட்' அடைமொழி எப்படி வந்தது?

 நாடகத்துறையின் ஜாம்பவான் சி.எஸ்.சேஷாத்ரிதான் என்னுடைய குருநாதர். அவரிடம் 1959-ல் சேர்ந்தேன். காலை 9 முதல் மாலை 5 மணி வரை ஓர் அலுவலகத்தில் நடைபெறும் சம்பவங்களை வைத்து "நெஞ்சே நீ வாழ்க' என்ற நகைச்சுவை நாடகத்தை எடுத்தார். எங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரம் ஒதுக்கப்பட்டது. ஆனால் எனக்கு மட்டும் எதுவும் இல்லை. "அம்பி... உனக்கு அடுத்த நாடகத்தில் பார்த்துக்கலாம்...' என்றார். அப்போது நான் "ஆஃபீஸ் என்றால் ஒரு டைப்பிஸ்ட் இருப்பார். நம்முடைய நாடகத்தில் அந்தக் கதாபாத்திரம் இல்லையே' என்றவுடன் "அட... ஆமாம்' எனக் கூறி எனக்கே அந்த டைப்பிஸ்ட் வேடத்தைக் கொடுத்தார். வசனமே இல்லாத அந்த வேடத்தில் எனது பருத்த உடலைக் கொண்டு நான் செய்த அங்க சேஷ்டைகள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. அப்போதிலிருந்து கோபுவான நான் "டைப்பிஸ்ட்' கோபுவாகிவிட்டேன். என்னுடைய இயற்பெயர் கோபாலரத்தினம்.

 சினிமாத்துறைக்கு எப்படி வந்தீர்கள்?

 நாடகங்களில் நடிக்கும்போதே சினிமா வாய்ப்பையும் தேடிக்கொண்டுதான் இருந்தேன். கே.பாலசந்தரின் "நாணல்' படத்தின் மூலம் சினிமா நடிகனாக அறிமுகமானேன். அடுத்து "அதே கண்கள்' வாய்ப்புக் கிடைத்தது. அதன்பிறகு எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஏவி.எம்.ராஜன், கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பாக்யராஜ், டி.ராஜேந்தர், பாண்டியராஜன், விஜய் ஆகியோருடன் நடித்துவிட்டேன். இதுவரை சுமார் 400 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். சினிமாவில் நடித்துக்கொண்டே ஒய்.ஜி.மகேந்திரனின் நாடகக் குழுவிலும் நடித்துவந்தேன். இப்போதும் அவருடைய குழுவில் இருக்கிறேன். அவர் குழு மூலமாக அமெரிக்கா, டென்மார்க், ஜெர்மனி, லண்டன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் உட்பட ஏராளமான ஐரோப்பிய நாடுகளில் பல நாடகங்களில் நடித்திருக்கிறேன். கலைமாமணி, மயிலாப்பூர் அகாதெமி விருது, பார்த்தசாரதி ஸ்வாமி சபா விருது, கிருஷ்ண கான சபா விருது, உலக நாடக மன்ற விருது என ஏராளமான விருதுகள் கிடைத்துள்ளன.

 உங்கள் குடும்பம் பற்றி..?

 வரதராஜன், கல்யாணராமன் என இரண்டு மகன்கள். மகள் ஜெயசீதா பெங்களூரில் இருக்கிறார். மனைவி ராஜலட்சுமி. இரண்டாவது மகனுடன் இந்த வீட்டில் இருக்கிறோம். மகன்கள் தனியார் நிறுவனத்தில் சிறிய வேலையில் இருக்கிறார்கள்.

 ஏராளமான நாடகங்கள், சினிமாக்களில் நடித்த நீங்கள் பெரிய அளவில் வருமானம் ஈட்டியதாகத் தெரியவில்லையே?

 உண்மைதான். எனக்கு நாடகத்திலும் சினிமாவிலும் மட்டும்தான் நடிக்கத் தெரியும். வாழ்க்கையில் நடிக்கத் தெரிந்திருந்தால் ஒரு வேளை செட்டில் ஆகியிருப்பேனோ என்னவோ! தவிர, என்னுடைய மகனுடைய மருத்துவச் செலவுக்காக மிகப் பெரிய தொகையைச் செலவழிக்க வேண்டியதாகிவிட்டது.

 நான்கு வருடங்களாக பெரிய அளவில் வருமானமில்லை. மூத்த கலைஞர்களுக்கு அரசு மாதம்தோறும் தரும் ரூ.1000 வருகிறது. எப்படியோ வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

 இப்போது நான் நலமுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கிறேன். எனக்குத் தெரிந்த தொழில் நடிப்புதான். டி.வி.யைப் பார்க்கும்போது இப்போதுள்ள இளைஞர்கள் எப்படியெல்லாம் படம் எடுக்கிறார்கள் என வியப்பாக இருக்கிறது. அவர்களுடனும் பணியாற்ற விரும்புகிறேன். இப்போதுள்ள சூழ்நிலையில் எனக்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்தால் போதும். வருமானத்தை நான் ஈட்டிக்கொள்வேன். ஏனென்றால்  Now I am 77 years young''   என்ற டைப்பிஸ்ட் கோபுவின் வார்த்தைகளில் இருந்த உறுதி அவரை மீண்டும் மேடைகளிலும் திரையிலும் பார்க்க

 முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.

 படங்கள் : யு.கே. ரவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com