சவால்கள் எனக்குப் பிடிக்கும்!

காஸ்ட்யூம் டிசைனராக தான் பணியாற்றிய முதல் படத்திற்கே தேசிய விருது பெற்றவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் பூர்ணிமா ராமசுவாமி, பிரபலமான வணிகக் குடும்பத்தின் வாரிசு.
சவால்கள் எனக்குப் பிடிக்கும்!

காஸ்ட்யூம் டிசைனராக தான் பணியாற்றிய முதல் படத்திற்கே தேசிய விருது பெற்றவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் பூர்ணிமா ராமசுவாமி, பிரபலமான வணிகக் குடும்பத்தின் வாரிசு. "பரதேசி' படத்திற்காக சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கும் பூர்ணிமா இனி உங்களுடன்...
 ""எங்களின் வேலைகளை நாங்கள்தான் பார்த்துக் கொள்ளவேண்டும். நாங்கள் சாப்பிட்ட தட்டை எடுப்பது, சுத்தம் செய்வதில் தொடங்கி அவரவரின் வேலைகளை அவரவர்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். இப்படியொரு கண்டிப்பு இரண்டு மூன்று தலைமுறைகளாகவே எங்களின் குடும்பத்தில் இருக்கிறது. அது இன்றைக்கும் தொடர்கிறது. இந்த கண்டிப்பும் உழைப்பும்தான்
 1939-இல் ஒரு சாதாரண டெய்லராக சென்னைக்கு வந்த எனது தாத்தா, எம்.ஜி.நாயுடுவை படிப்படியாக உயர்த்தி "நாயுடு ஹால்' என்னும் ஆயத்த ஆடைகள் விற்பனையகத்தை தொடங்குவதற்குக் காரணமாக இருந்தது. அதன்பின் நவீனமாக பல யுக்திகளை வியாபாரத்தில் புகுத்தி என்னுடைய தந்தை ராமசுவாமி வியாபாரத்தில் வெற்றிபெறுவதற்கும் காரணமாக இருந்தது.
 சிறுவயது விளையாட்டு, படிப்பு, பொழுதுபோக்கு எல்லாமே எனக்கும் என் அண்ணாவுக்கும் (அரவிந்த் ராமசுவாமி)
 கடையில்தான்.
 திரைப்பட உலகத்துக்கு எங்களின் குடும்பம் நன்கு அறிமுகமாகி இருந்தாலும் திரைப்படத்திற்குச் சென்று சினிமா பார்ப்பதை தவிர்ப்பார்கள். ஐஸ்வர்யா என் பள்ளித் தோழி. ஐஸ்வர்யாவின் அப்பா ரஜினி என்று தெரியும். அவரை நேரில்தான் அதிகம் பார்த்திருக்கிறேனே தவிர திரையில் நான் பார்த்ததில்லை. அவர் நடித்த "தளபதி' படத்தை அவரின் குடும்பத்தோடு ஆல்பட் திரையரங்கத்தில் பார்த்ததுதான் என்னுடைய முதல் திரையரங்க அனுபவம்! இந்த அளவுக்குத்தான் எனக்கு திரைப்படம் தொடர்பான நெருக்கம் இருந்தது.
 பள்ளி இறுதியாண்டு முடிந்ததும் நம்முடைய தொழிலுக்கு உதவும் வகையில் ஏதாவது படிக்க வேண்டும் என்று விரும்பினேன். மத்திய ஆடை வடிவமைப்பு பள்ளியில் இதற்காக தேர்வு எழுதினேன். ரியலிஸ்டிக் வகையான ஓவியம் வரைவது அவ்வளவு துல்லியமாக எனக்கு வராது. அதனால் அந்தத் தேர்வில் என்னால் வெற்றிபெறமுடியவில்லை. இதன்பின் பிரிட்டிஷ் கல்வி நிறுவனத்தால் நடத்தப்படும் நிதி மற்றும் மேலாண்மைப் பள்ளியில் சேர்ந்து பட்டம்
 பெற்றேன்.
 எங்கள் வீட்டில் என் அண்ணனை எப்படி வளர்த்தார்களோ அப்படித்தான் என்னையும் வளர்த்தார்கள். கார் ஓட்டுவது, நீச்சல் பயிற்சி, கோ-கார்ட் ரேஸ் இப்படி பல பயிற்சிகளை நான் கற்றிருக்கிறேன். "உனக்கென்று தனித் தன்மையை வளர்த்துக் கொள்..' என்று என்னுடைய தந்தை அடிக்கடி என்னிடம் கூறுவார்.
 அவரின் மறைவுக்குப் பின்னால் கடையை நிர்வகிக்கும் விஷயத்தில் எனக்கும் என்னுடைய அண்ணனுக்கும் இந்த தனித்தன்மைதான் மிகப் பெரிய பலமாக இருந்தது. 2004-ல் எனக்கும் (ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மகன்) திருமகனுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின் ஈரோட்டில் சென்று சிலகாலம் தங்கியிருந்தேன். என்னுடைய மாமியார் வீட்டில் எனக்கு என் வீட்டில் இருந்ததைவிட நூறு மடங்கு சுதந்திரம். ஈரோட்டிற்கு பக்கத்திலிருக்கும் சில கிராமங்களுக்குச் சென்று அங்கிருக்கும் தறி நெய்யும் குடும்பத்தினரோடு நெருங்கிப் பழகினேன். அங்கிருந்தபடியே சில டிசைன்களை அவர்களுக்குக் கொடுத்து அந்த டிசைன்களைக் கொண்ட ஆடைகளை நெய்து எங்களின் சென்னை கடைக்கு
 அனுப்பி வைப்பேன். இந்த டிசைன்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
 2006-ல் மீண்டும் சென்னைக்கு வந்தேன். எனக்கு குழந்தை பிறந்தவுடன் நான் செய்துகொண்டிருந்த அலுவல் ரீதியான பணிகள் எல்லாவற்றுக்கும் தாற்காலிகமாக ஒரு "ஃபுல்-ஸ்டாப்' வைத்தேன். உலகமே என் மகள் சமன்னாதான் என்று ஆனது.
 மூன்று, நான்கு ஆண்டுகளுக்குப் பின் மெதுவாக பட்டுப்புடவைகளுக்கு மேட்சிங்காக பழைய பட்டுப் புடவையின் துணிகளைக் கொண்டே "ப்யூஷன்' பிளவுஸ்களை உருவாக்கினேன். இதைப் பார்த்த என்னுடைய நெருங்கிய நட்பு வட்டாரங்கள் அவர்களின் உறவுக்காரர்களின் வீட்டு திருமண விசேஷங்களுக்கும் மணமக்களுக்கான ஆடை வடிவமைப்பை செய்யும் பொறுப்பை எனக்கு அளித்தனர். இது நடந்துகொண்டிருக்கும்போதே ""நீ திரைப்படத்துக்கான காஸ்ட்யூம் டிசைனிங் செய்யலாமே...'' என்று கேட்டார் இயக்குநர் பாலாவின் மனைவியான மலர். நிறைய தயக்கங்கள் இருந்தாலும் இயக்குநர் பாலாவின் அலுவலகத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தேன்.
 ""1930-களில் ஆரம்பிக்கும் கதை இது...'' என்று கதையின் அவுட்-லைனை சொன்ன இயக்குநர், "ரெட் டீ' என்னும் நாவலைக் கொடுத்து, ""இதைப் படித்துக் கொள்ளுங்கள்'' என்றார். அப்போதே தெரிந்துவிட்டது, இது ஒரு சவாலான புராஜக்ட் என்று. எனக்கு சவால்கள் சிறுவயதிலிருந்தே பிடித்தமான விஷயம்!
 படம் குறித்த விவாதங்களோடு, இணையதளங்கள், புகழ்பெற்ற நூலகங்களில் நிறைய பொழுதுகளை செலவு செய்து, இந்தப் படத்திற்காக "ஹோம்ஓர்க்' செய்தேன். பொதுவாக திரைப்படங்களில் புதிய துணிகளைத்தான் பழசுபோல் ஆக்கிக் காண்பிப்பார்கள். ஆனால் இந்தப் படத்திற்காக பழைய துணிகளையே வாங்கிப் பயன்படுத்தினோம். இயற்கையான வண்ணங்களையே பயன்படுத்தினோம். டிசைன்களைக் கூட அந்தக் காலத்தில் புழக்கத்தில் இருந்த டிசைன்களின் அடிப்படையிலேயே செய்தோம். எனக்குக் கிடைத்த பணியாளர்கள் மிகத் திறமையாகச் செயல்பட்டனர். குறிப்பாக காஸ்ட்யூமர் செல்வம் அவர்களின் உழைப்பு அளப்பரியது! இந்தப் படத்திற்கு வேலை செய்யும்போதுதான், "இதுதான் எனக்கான இடமோ?' என்று தோன்றியது!
 மிகக் குறுகிய கால அவகாசத்தில் மிக அதிக எண்ணிக்கையிலான ஆடைகளை வடிவமைக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற சமயங்களில் மிகத் திறமையாக செயல்பட்டது எங்களின் டீம்! இவ்வளவு வேலைகளுக்கு இடையிலும் என்னுடைய மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வது அழைத்து வருவது போன்றவற்றை நான்தான் செய்தேன். படம் முடிந்து அதை தேசிய விருதுக்கான போட்டிக்கு அனுப்பியது எல்லாம் எனக்குத் தெரியாது.
 ஒருநாள் வழக்கம்போல் நான் என் குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிட்டு வரும்போது, என்னுடைய தோழி ஐஸ்வர்யா தனுஷ், தேசிய விருது கிடைத்ததற்கு செல்போனில் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார். அதைத் தொடர்ந்து இன்னும் சில பேர் என்னைப் பாராட்டினர். எனக்கு நம்பிக்கையே இல்லை. இறுதியில் பாலா அண்ணனே போனில் வாழ்த்து சொல்லும்போதுதான் எனக்கு நம்பிக்கையே வந்தது. முதல் படத்திலேயே விருது பெற்றது சந்தோஷமான விஷயம். இது என்னுடைய டீமிற்குக் கிடைத்த வெற்றி!
 இயக்குநர் பாலாவின் விசிறியான பிரான்ஸ் நாட்டு இயக்குநர் மிச்சேல் ஸ்பினோசா, இந்தியச் சூழ்நிலையில் பிரெஞ்ச் படத்தை இயக்குவதாகவும், "பரதேசி' படத்தைப் பார்த்ததும் அவருடைய படத்தில் பணிபுரிவதற்கு சம்மதமா? என்று கேட்டார். நானும் "என்னுடைய குழந்தைக்கு நான் செய்யவேண்டிய பணிகளைச் சொல்லி, உங்களுக்குத் தேவையான பணிகளை நான் செய்து தந்துவிடுகிறேன். ஆனால் முழுநேரமும் உங்கள் குழுவுடன் இருந்து என்னால் பணியாற்றமுடியாது..' என்று கூறினேன். அவரும் அதற்கு சம்மதிக்கவே பணிபுரிந்து அந்தப் படத்தையும் முடித்து தந்துவிட்டேன்.
 அடுத்து ஐஸ்வர்யா தனுஷின் "வை ராஜா வை' படத்திற்கும் இயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ஒருபடத்திற்கும் காஸ்ட்யூம் டிசைன் செய்கிறேன். முதல் படமே பீரியட் படம் என்பதால், எந்த மாதிரியான படத்திலும் இனி என்னால் வேலை செய்யமுடியும் என்ற தைரியத்தை எனக்குக் கொடுத்திருக்கிறது!'' என்கிறார் பரிபூரண அமைதியுடன் பூர்ணா!
 - யுகன்
 படம்: ஏ.எஸ்.கணேஷ்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com