மந்த்ராலயமும் ஹம்பியும்

தொடர்ந்து சில ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டின் முதல் நாளன்று மந்த்ராலயத்திற்குக் குடும்பத்துடன் சென்று வரும் என் அத்தை பேரன் இந்த ஆண்டு பயணத்தின்போது உடன் சிலரை அழைத்துச் செல்லும் எண்ணத்தோடு எங்களைக் கேட்டபோது மந்த்ராலயம் செல்வதற்கான விருப்பத்தினைத் தெரிவித்தோம்
மந்த்ராலயமும் ஹம்பியும்

தொடர்ந்து சில ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டின் முதல் நாளன்று மந்த்ராலயத்திற்குக் குடும்பத்துடன் சென்று வரும் என் அத்தை பேரன் இந்த ஆண்டு பயணத்தின்போது உடன் சிலரை அழைத்துச் செல்லும் எண்ணத்தோடு எங்களைக் கேட்டபோது மந்த்ராலயம் செல்வதற்கான விருப்பத்தினைத் தெரிவித்தோம். எங்களது குழுவில் 25 பேர் குடும்ப உறுப்பினர்கள் சென்றோம். தஞ்சாவூரிலிருந்து சென்னை சென்று அங்கிருந்து மும்பை மெயிலில் மந்த்ராயலம் ரயில்வே ஸ்டேஷனை அடைந்தோம். அங்கிருந்து மூன்று வேன்கள் மூலம் மந்த்ராலயம் சென்று சேர்ந்தோம்.
 முதல்நாள்-மந்த்ராலயம்: ராகவேந்திரர் சமாதியைத் சுற்றி வந்து வழிபட்டோம். வெளியில் வந்து சிறிது நேரம் அங்கு அமர்ந்திருந்தோம். பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து கொண்டும், போய்க் கொண்டும் இருந்தனர். எங்களுக்குத் திரும்ப மனம் வரவில்லை. இரவு அங்கு நடந்த அன்னதானத்தில் பங்குகொண்டு உணவு அருந்தினோம். தொடர்ந்து ஆயிரக்கணக்கில் வந்துகொண்டிருக்கும் பக்தர்களுக்கு அவர்கள் அன்னம் பாலிக்கும் விதம் மனதைத் தொட்டது. சுறுசுறுப்பாகப் பணியாற்றும் மந்திராலயப் பணியாளர்கள், நேர்த்தியாக அன்னமிடப்படும் முறை, வரிசையாக பக்தர்கள் அமைதி காத்து அன்னத்தைப் பெற்று ஓரிடத்தில் அமர்ந்து உணவு உண்ணல், அருமையான பராமரிப்பு என்று ஒவ்வொன்றையும் பாராட்டிக் கொண்டே இருக்கலாம்.
 தொடர்ந்து இரவு மந்த்ராலயத்தில் தங்கத் தேர், வெள்ளித் தேர் மற்றும் மரத்தேர் என மூன்று தேர்களில் ராகவேந்திரரின் திருவுருவம் வைக்கப்பட்டு வந்த அருமையான காட்சியைக் கண்குளிரக் கண்டோம்.
 டிசம்பர் 31-ம் தேதி இரவு 12 மணி.
 மந்த்ராலயத்தைச் சுற்றி எங்கு பார்த்தாலும் வாண வேடிக்கை. மந்த்ராலய வளாகத்தில் புத்தாண்டு இனிமையாக உதயமானது. மறுநாள் அருகேயுள்ள கோயில்களைப் பார்ப்பது என முடிவெடுத்தோம்.
 இரண்டாம் நாள்- மந்த்ராலயத்திற்கு அருகேயுள்ள இடங்கள்: புத்தாண்டின் முதல் நாளன்று மந்த்ராலயத்தில் அருகில் உள்ள இடங்களுக்குச் சென்றோம். அதற்காக ஒரு வேனை ஏற்பாடு செய்து கொண்டு ராகவேந்திரர் 13 ஆண்டுகள் தவம் செய்ததாகக் கூறப்படும் இடத்திற்குச் சென்றோம். அமைதியான சூழல்; அருகே துங்கபத்திரை நதி, அந்த நீரின் சலசலப்பும், காற்றும் மிகவும் மனதுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. பின்னர் பிச்சாளி கோயில் சென்றோம்.
 தமிழ்நாட்டில் நாமக்கல் மற்றும் சுசீந்திரம் போன்ற இடங்களில் உள்ளதைப் போல பெரிய ஆஞ்சநேயராக இருக்கும் என நினைத்துக் கொண்டு சென்றோம். மலை மீது அவ்வாறான அமைப்பு இருப்பதாகக் கூறினர். தனியாக ஆஞ்சநேயர் பெரிய சிலையாகக் காணப்படவில்லை. பின்னர் உருகுந்தா நரசிம்மர், முதுகுலதொட்டி ஆஞ்சநேயர் கோயில்களுக்குச் சென்றோம்.
 அடுத்து ஆடோனியில் உள்ள கோயிலுக்குச் சென்றோம். கோயில் மலைமீது இருந்தது. மலைமீது ஏற சிரமமாக இருந்தது. சிலர் மட்டும் மலைமீது ஏறினர். எங்களில் சிலருக்குப் போக ஆசை இருந்தபோதும், மலை மீது ஏற முடியவில்லை. பின்னர் சலவைக்கல்லால் ஆன மிகமிக அழகான பார்சுவநாதர் எனப்படும் சமணர் கோயில் சென்றோம்.
 பின்னர் பசவத்தொட்டி ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்றோம். இப்பகுதியில் அதிகமான எண்ணிக்கையில் ஆஞ்சநேயர் கோயில்களைக் காண
 முடிந்தது.
 மூன்றாம் நாள்- ஹம்பி: உலகின் மிகப்பெரிய திறந்தவெளி அருங்காட்சியகம் என்ற வார்த்தைகளுடன் ஹம்பி பற்றிய விளம்பரத்தை நான் பத்திரிகைகளில் பார்த்ததுண்டு. ஆனால் அந்த ஊருக்கு இப்போது நேரில் போகப்போகிறோம் என எண்ணியபோது மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
 ஆந்திரத்திலிருந்து கர்நாடகாவிற்குள் நாம்
 நுழைவதாக செல்போனில் செய்தி வந்தது. மிகக் குறுகிய நேரத்திற்குள் ஒரு மாநிலத்திலிருந்து அடுத்த மாநிலத்திற்குள் வந்துவிட்டோமே என்று ஆச்சரியமாக இருந்தது. பெயர்பலகைகள் கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் என மாறி மாறி கண்களில் தென்பட்டுக்கொண்டே இருந்தன. வேன் டிரைவர் உதவும் மனப்பான்மையுடையவராகவும், கேட்கும் விவரங்களைக் கூறுபவராகவும் இருந்தார். ஐந்தாறு மொழிகளைத் தெரிந்து வைத்திருந்த அவர் தமிழில் நன்றாகப் பேசினார். துங்கபத்திரா நதியைத் தாண்டினால் ஹம்பி என்றும், அந்த எல்லை வரை கொண்டு வந்துவிட்டு, பின்னர் அங்கு காத்திருப்பதாகவும் கூறினார். செல்லும் வழியில் கருங்கற்களை அஸ்திவாரமாகக் கொண்டு கட்டப்பட்ட வீடுகளைக் கண்டோம். செங்கற்களைக் காண்பது அரிதாக இருந்தது. செல்லும் வழியில் எங்கு பார்த்தாலும் இடிந்த கட்டடங்கள். ஆங்காங்கே பெரிய பெரிய கூழாங்கற்களைக் தெளித்துச் சிதறிவிட்டது போல மலைகள். சிறிதும் பெரிதுமான மலைகள். ஹம்பி செல்வதற்கு படகில் ஏறி துங்கபத்திரா நதியைக் கடக்க வேண்டியிருந்தது. படகில் செல்லும்போதே விருப்பாட்ஷா சிவன் கோயில் எங்களுக்குத் தெரிந்தது. படகைவிட்டு இறங்கி முதலில் விருப்பாட்ஷா கோயில் சென்றோம்.
 தமிழகக் கோயில்களிலிருந்து சற்று மாறுபட்டு இருந்தாலும், துங்கபத்திரா நதிக்கரையோரம் உள்ள விருப்பாட்ஷா கோயில் மிகவும் அழகாக இருந்தது. 1000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்று சிறப்புமிக்க கோயிலில் உள்ளே நுழைந்ததும் வலப்புறம் கூட்டம் கூட்டமாக மக்கள் ஆர்வமாக எதையோ பார்த்துக் கொண்டிருந்தனர். எங்களுக்கும் ஆர்வம் வரவே, சென்று போய்ப் பார்த்தோம். எங்களால் நம்ப முடியாத ஒன்றை அங்கு கண்டோம். அக்கோயிலின் ராஜகோபுரத்தின் நிழல் தலைகீழாக அங்கே தெரிந்தது.
 இடப்புறம் பெரிய கல் தொட்டி, பார்ப்பதற்கு அழகாக இருந்தது. கோயில் தரிசனம் முடித்து வெளியே வந்தோம். கடல் கல் கணேஷ் என அழைக்கப்படும் ஒரே கல்லில் ஆன பெரிய பிள்ளையார், கடுகு கல் கணேஷ், கிருஷ்ணர் கோயில், தரையின் கீழ் தளத்தில் இருந்த பாதாளலிங்கம் எனப்படும் சிவன் கோயில் (லிங்கம், நந்தி அனைத்தும் தண்ணீரில் மூழ்கிய நிலையில்) ஒரே கல்லால் ஆன அற்புதமான நரசிம்மர் சிலை, நாணயம் அச்சடிக்கப்பட்டதாகக் கூறப்படும் இடம், ராணி குளியல் அறை (ஏறக்குறைய சிறிய குளம் போல உள்ளே அமைப்பு, ஆங்காங்கே சிறிய மண்டபங்களுடன், மேல் தளம் எதுவு
 மின்றி), யானை கட்டும் இடம், வாசற்புறம் மொட்டையாக இருந்த சமணர் கோயில், அவ்வாறே ஒரு ராமர் கோயில், நாற்சதுர வடிவிலான மிக சிறப்பாக படிக்கட்டுகள் அமைந்த குளம் ஆகியவற்றைப் பார்த்தோம்.
 பிறகு கல் தேர் பார்த்தோம். இந்த கல் தேரை விளம்பரங்களிலும் திரைப்படக் காட்சிகளிலும் பார்த்த நினைவு எனக்கு வந்தது. அந்த கல் தேர் ஏழு பாகங்களைக் கொண்டதாகக் கூறினர். படிக்கட்டுகள் சிறப்பாக அமைந்த குளமும், கல் தேரும் எங்கள் மனதில் மிக ஆழமாகப் பதிந்துவிட்டன.
 நாங்கள் ஆட்டோவில் போகும்போது எங்கு பார்த்தாலும் கற்கள் அடுக்கி வைக்கப்பட்ட நிலையில் அமைப்புகள், அழிந்து போன மண்டபங்கள், சிதைந்த சிலைகள் என்ற நிலையில் பலவற்றைக் கண்டோம். ஆட்டோ கிளம்பிய இடமான விருப்பாட்ஷா கோயிலுக்கு வந்து சேர்ந்தோம். பின்னர் படகில் மறுபடியும் திரும்பி துங்கபத்திரை நதியைக் கடந்தோம். அங்கிருந்து ஆட்டோவில் சிறிது தூரம் சென்றபின் படகில் நவ பிருந்தாவன் எனப்படும் இடத்திற்கு சென்று வந்தோம். துளசி மாடம் போன்ற அமைப்புடன் அங்கு காணப்பட்டது. நவபிருந்தாவன் பார்த்தபின் அங்கிருந்து எங்களது வேன் பயணம் தொடர்ந்தது. மந்த்ராலயம் மட்டுமே செல்ல திட்டமிட்டு பின்னர் ஹம்பியும் சென்று பார்த்தது எங்கள் மனதிற்கு நிறைவைத் தந்தது.

 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com