நினைத்துப் பார்க்க யாருமில்லை!

பெங்களூரு மாநகரின் பெயரைக் கேட்டதும் நமது மனக்கண்ணில் தோன்றுவது, விதானசெüதாவாக இருக்கும். எழில் கொஞ்சும் நுழைவு வாயில்
நினைத்துப் பார்க்க யாருமில்லை!

பெங்களூரு மாநகரின் பெயரைக் கேட்டதும் நமது மனக்கண்ணில் தோன்றுவது, விதானசெüதாவாக இருக்கும். எழில் கொஞ்சும் நுழைவு வாயில், அதை அலங்கரிக்கும் தூண்கள், அவற்றைத் தூக்கிப் பிடிக்கும் மாடம், அதில் வீற்றிருக்கும் அசோகர் சின்னம், பட்டொளி வீசும் மூவண்ணக் கொடி.
 கட்டடத்தின் ஒவ்வொரு சுவர்களும், மேல்விதானங்களும், மல்லிகையாய் கலைமணம் வீசும். திராவிடக் கட்டடக் கலையின் உச்சம் விதானசெüதா. கர்நாடக சட்டப்பேரவை, சட்ட மேலவை, தலைமைச் செயலகம், முதல்வர் அலுவலகம் இடம்பெற்றிருக்கும் விதானசெüதா கட்டடம், இந்தியாவின் மிகப் பெரிய தலைமைச் செயலக கட்டடம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.
 மக்களின் அரண்மனையாய் விளங்கும் விதானசெüதாவை கட்டமைக்கும் கனவைக் கண்டவர் அன்றைய கர்நாடக முதல்வர் கெங்கல் ஹனுமந்தையா. கெங்கல் ஹனுமந்தையாவின் உளியாக விதானசெüதாவை கட்டியவர் ஒரு தமிழர் என்றால், நம்மால் நம்ப முடியாது. அவர் மிகச் சிறந்த கட்டடக் கலைஞரும், பொறியாளருமான பி.ஆர்.மாணிக்கம். காலமும், அதன் கோலமும் விதானசெüதாவின் கல்களில் படிந்திருக்கும் இவரது பெயரைக் கரைக்க முடியாது. விதானசெüதாவை நினைக்கும்போது கெங்கல் ஹனுமந்தையாவை நெகிழ்ந்து நினைவுகூரும் பலரும், கட்டடக் கலையில் புதுமை படைத்த மாணிக்கத்தைப் போற்றாதது ஏன்?
 மாணிக்கத்தின் இளையமகன் பி.எம்.சீனிவாசன் கூறியது:
 ""எனது முன்னோர்கள் தமிழகத்தின் ஆற்காட்டில் இருந்து பெங்களூருவில் குடிபெயர்ந்தவர்கள். 1909, ஏப்.4-இல் எனது தந்தை பி.ஆர்.மாணிக்கம் பிறந்தார். மிஷன் உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்துவிட்டு, அரசு பொறியியல் கல்லூரியில் சேர்ந்து கட்டடவியல் பொறியியல் படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றார்.
 அன்றைய மைசூர் அரசில் இளநிலைப் பொறியாளராக வேலையில் சேர்ந்து, பின்னர், மைசூர் மாநகராட்சிப் பொறியாளராக 1943-44இல் பணியாற்றினார். நீர்ப்பாசனத் திட்டங்களை அறிந்து வர 1946-இல் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிகாகோவில் நகர வடிவமைப்பு மற்றும் கட்டடக் கலையில் முதுநிலை பட்டம் பெற்றார். 1949இல் இந்தியா திரும்பிய என் தந்தை, மைசூர் அரசில் கட்டடக் கலைஞராக (ஆர்கிடெக்ட்) பணி தொடர்ந்தார்.
 அன்றைய முதல்வர் கெங்கல் ஹனுமந்தையா, விதானசெüதாவை கட்டும் பணிக்கு என் தந்தையை 1952-இல் நியமித்தார். கர்நாடகத்தில் கட்டப்பட்டுள்ள பெரும்பாலான கட்டடங்கள் என் தந்தை கட்டியதுதான். விதானசெüதாவை கட்டுவதில் ஏராளமான பிரச்னைகள், தடைகள், தடங்கல்கள். அவற்றையெல்லாம் திறம்பட முறியடித்து, தற்போது காணும் விதான செüதாவைக் கட்டிமுடித்தார்.
 ஆரம்பத்தில் விதானசெüதா கட்டடம் சாதாரணமாக இருந்தது. கெங்கல் ஹனுமந்தையாவின் ஆலோசனையின்பேரில் இந்தியா மட்டுமன்றி, வெளிநாடுகளுக்கும் சென்று அங்குள்ள கட்டடங்களின் நேர்த்தியைக் கண்டறிந்து, திராவிட கலையில் விதானசெüதாவை
 கட்டினார்.
 தமிழகத்தில் உள்ள கோயில்களில் காணப்படும் கலைநுட்பங்கள் பலவற்றை இந்தக் கட்டடத்தில் சாதுர்யமாக சேர்த்துள்ளார். விதானசெüதாவின் கட்டடக் கலையைப் பாராட்டாதவர்களே கிடையாது. ஒரு சிறந்த பொறியாளராக இருந்த என் தந்தையை அரசு பெருமைபடுத்தத் தவறிவிட்டது.
 1964 ஏப்.31-ஆம் தேதி பணி ஓய்வுபெற்ற பிறகு ஒருமாதம் மட்டுமே எங்களோடு வாழ்ந்த அப்பா, தனது 55-ஆவது வயதில் காலமானார். மே 31-ஆம் தேதி உடல்நலிவு காரணமாக வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் இறந்தார். விதானசெüதாவையும், கெங்கல் ஹனுமந்தையாவையும் போற்றும் பலரும், கட்டடக் கலையில் விற்பன்னராக விளங்கிய என் தந்தையை நினைத்துப் பார்க்கத் தவறியது வேதனை தருகிறது'' என்றார் கண்ணீர் மல்க.
 மாணிக்கத்தின் கலைநுட்ப அறிவால் பிறந்துள்ள விதானசெüதாவை ஆராய்ச்சி செய்துள்ள ஜே.ஞானசேகர் கூறியது:
 ""1951-இல் ரஷிய அரசுக் குழுவினர் பெங்களூரு வந்த போது, மேற்கத்திய, ஐரோப்பியக் கலை கட்டடங்களை காட்டுகிறீர்களே, உங்களுக்கென்று கட்டடக் கலை இல்லையா?'' என்று கெங்கல் ஹனுமந்தையாவை கேட்டதன் விளைவாக மலர்ந்ததே விதானசெüதா.
 விதானசெüதாவுக்கு 1951 ஜூலை 13-ஆம் தேதி அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அடிக்கல் நாட்டினார்.
 சாதாரண கட்டடமாக கட்டுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த விதானசெüதாவை பிரமாண்டமாக்கியது கெங்கல் ஹனுமந்தையாவும், மாணிக்கமும்தான். 1956-ஆம் ஆண்டில் விதானசெüதா கட்டிமுடிக்கப்பட்டது.
 அந்த நேரத்தில் கெங்கல் ஹனுமந்தையாவும் பதவியை இழந்தார். அரசியல் காரணங்களுக்காக விதானசெüதாவுக்கு திறப்புவிழா நடத்தப்படவே இல்லை. கட்டடம் கட்டிய பொறியாளர்கள் தொடர்பான கல்வெட்டும் இடம்பெறவில்லை. இது வரலாற்றுப்பிழை என்று கூறப்படுகிறது. 60 ஏக்கர் வளாகத்தில் விதானசெüதா அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவு 5,50,505 சதுர அடி. 700 அடி நீளம், 350 அடி அகலம் கொண்டது. தரையில் இருந்து குவிமாடம் வரையிலான உயரம் 150 அடி. 1952-இல் தொடங்கி 1956-இல் கட்டடம் முடிக்கப்பட்டது.
 கலைநயமான சுவர் ஓவியங்கள், மலர் வடிவங்கள், நுட்பமான மரவேலைப்பாடுகள், அழகிய சந்தனமரக்கதவுகள், சிற்பங்கள், ஒய்யாரமான தூண்கள் விதானசெüதாவின் சிறப்பைக் கூறும். தலா 1.3 லட்சம் சதுர அடி பரப்பு கொண்ட 3 மாடிகள் கொண்ட கட்டடத்தில் 132க்கு 125 அடியில் சட்டப்பேரவை அரங்கும், 100க்கு 78 அடியில் சட்டமேலவை அரங்கும், 192க்கு 120 அடியில் விருந்தினர் மாளிகையும், 80க்கு 40 அடியில் கூட்ட அரங்கும் பிரமிக்க வைக்கின்றன.
 கிழக்குப்பகுதியில் 40 அடி உயரமுள்ள 12 கருங்கல் தூண்கள் புருவத்தை உயர்த்தும் கலைவேலைப்பாடுகள் கொண்டவை. விதானசெüதா உச்சத்தை அலங்கரிக்க 60 அடி விட்டம் கொண்ட பிரமாண்டமான மத்திய குவிமாடத்தில் தங்கத்திலான தேசியச்சின்னம் அமைந்துள்ளது. 5 கட்டடம் கட்டுவதற்கு 5 ஆயிரம் சிறைக் கைதிகள் பயன்படுத்தப்பட்டனர். விதானசெüதாவின் நுழைவுவாயில் நெற்றியில் அரசுப் பணி தெய்வப் பணி என்று பொறிக்கப்பட்டுள்ளது.சதுர அடிக்கு 30 ரூபாய் வீதம், 1.84 கோடி ரூபாய் செலவில் எழுந்து நிற்கிறது காலம்வெல்லும் விதானசெüதா''
 என்றார் அவர்.

 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com