சர்வதேச பரிசு பெற்ற தமிழ்ப் பெண் டாக்டர்! பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் டாக்டர்
By ந.ஜீவா | Published On : 15th September 2013 03:29 PM | Last Updated : 15th September 2013 03:29 PM | அ+அ அ- |

ஃபிரான்சிஸ் ஃபான்டன். புகழ்பெற்ற இதய மருத்துவ நிபுணர். இதய - மார்பு மருத்துவ நிபுணர்களுக்கு என EUROPEAN ASSOCIATION FOR CARDIO THORACIC SURGERY (EACTS) என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.
அந்த அமைப்பு உலக முழுவதும் உள்ள சிறந்த இதய - மார்பு நோய் மருத்துவ நிபுணர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து ஃபான்டன் பிரைஸ் என்ற ஒரு பரிசை வழங்குகிறது. அந்தப் பரிசைப் பெற்ற முதல் இந்திய டாக்டர் சென்னையைச் சேர்ந்த செüம்யா ரமணன்.
அவர் சென்னை முகப்பேரில் உள்ள டாக்டர் கே.எம்.செரியன் ஹார்ட் ஃபவுண்டேஷனின் ஃபிராண்டியர் ஹெல்ப் லைன் மருத்துவமனையில் இதய அறுவைச் சிகிச்சை நிபுணர். இந்தப் பரிசால் என்ன நன்மை? பரிசுக்காக இவரை எப்படித் தேர்ந்தெடுத்தார்கள்? என்ற கேள்விகளுடன் அவரை அணுகினோம்:
"மருத்துவத்துறை ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. புதிய புதிய நோய்களும், உடல் நலப் பிரச்னைகளும் ஒவ்வொரு நாளும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. நோய்களைத் தீர்க்க புதிய புதிய ஆராய்ச்சிகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. அதற்கு உதவுவதுதான் இந்த ஃபான்டன் பிரைஸ்.
இந்தப் பரிசின் மதிப்பு கிட்டத்தட்ட 25 லட்சம் ரூபாய். உலகம் முழுவதிலும் உள்ள இதய - மார்பு நோய் மருத்துவர்கள் இந்தப் பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 2006 ஆம் ஆண்டு முதல் ஜப்பான், கனடா, இத்தாலி, ஹங்கேரி, நேபாளம் முதலிய நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் இந்தப் பரிசைப் பெற்றிருக்கிறார்கள். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி எனக்கு வழங்க இருக்கிறார்கள்.
இதய - மார்பு நோய் மருத்துவத்துறையில் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், பயிற்சி பெறுவதற்கும் உதவவே இந்த ஃபான்டன் பிரைஸ் வழங்கப்படுகிறது.
இந்த பரிசைப் பெற்றவர்கள் ஐரோப்பிய நாடுகளையோ, பிரிட்டனையோ தாங்கள் ஆராய்ச்சி செய்வதற்காக, பயிற்சி பெறுவதற்காக - தேர்ந்தெடுத்துக் கொண்டு ஓராண்டு அங்கே தங்குவார்கள். அதற்காகும் செலவை ஈடுகட்டவே இந்தப் பரிசுத் தொகை.
குழந்தைகளுக்கு ஏற்படும் இதயநோய்களில் ஒன்று, நீலநிறமாக குழந்தைகளின் உடல் மாறிப் போவது. இந்த நோய்க்கான மருத்துவத்தில் நான் ஈடுபட்டு வருவதால் இந்தப் பரிசை எனக்குத் தருவதாக அறிவித்திருக்கிறார்கள்.
இதை புளூ பேபி சிண்ட்ரோம் என்பார்கள். சில குழந்தைகள் பிறக்கும்போதே நீல நிறமாகப் பிறக்கும். குழந்தைகள் ஓடி விளையாடினால், அவர்களுடைய உடல் நீலநிறமாக மாறிவிடும். குழந்தைகளின் நான்கு வயதில் இந்தப் பாதிப்பு அதிகமாகத் தெரிய வரும். நடக்க முடியாது. மூச்சுத் திணறல் ஏற்படும். திடீரென்று நினைவிழந்து மயங்கி விழுந்துவிடுவார்கள்.
இதற்குக் காரணம், இதயத்தில் உள்ள வால்வுகள் சரியாக வேலை செய்யாமல் போவதுதான். வால்வுகள் சரியாக வேலை செய்யாவிட்டால், இதயத்தில் இருந்து நுரையீரலுக்குச் செல்லும் இரத்தம் தடைபடும்.
இதனால் ரத்தத்தில் கார்பன் டை ஆக்ûஸடின் அளவு அதிகமாகிவிடும். அல்லது சுத்தமான ரத்தமும், சுத்தமில்லாத ரத்தமும் ஒன்று கலந்துவிடும். இவற்றால் உடல் நீல நிறமாகிவிடுகிறது.
இந்த நோய் ஏன் வருகிறது? என்பதற்குச் சரியான காரணம் தெரியவில்லை. பரம்பரையாக இந்நோய் வரும் என்றும் கூறுவதற்கில்லை. அம்மாவுக்கு இந்த நோய் இருந்தால் 5 சதவீதமே குழந்தைகளுக்கு வரும் வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த நோயை வராமல் தடுப்பதைவிட வந்த பின் சரி செய்வதுதான் சாத்தியமானது.
எங்களுடைய மருத்துவமனையில் இந்த நோய்க்குச் சிகிச்சை செய்கிறோம். இதயத்தில் உள்ள வால்வுகளைப் பழுது பார்த்துச் சரி செய்யும் சிகிச்சைகளை மேற்கொள்கிறோம். சரி செய்ய முடியாத நிலையில், தேவைப்பட்டால் இதயத்தில் உள்ள வால்வுகளை எடுத்துவிட்டு புதிய வால்வுகளைப் பொருத்துகிறோம். புதிய வால்வுகள் எங்கிருந்து கிடைக்கும்?
உடல் உறுப்புகளைத் தானம் செய்பவர்கள் இதயத்தையும் தானம் செய்திருப்பார்கள். அப்படி தானம் செய்யப்பட்ட இதயம் முழுவதையும் பயன்படுத்த முடியாதநிலை ஏற்படும். அப்படிப்பட்ட நிலையில் அந்த இதயத்தில் உள்ள வால்வுகளை மட்டும் எடுத்து, பிறருக்குப் பொருத்துகிறோம்.
மனிதர்களின் இதய வால்வுகள் கிடைக்காத நிலையில் மிருகங்களின் இதயங்களில் இருந்து வால்வுகளை எடுத்துப் பொருத்தும் புதிய சிகிச்சைமுறையை நாங்கள் மேற்கொள்கிறோம்.
இந்த நோய்க்கு உலக அளவில் என்ன சிகிச்சைகள் செய்கிறார்கள்? அவற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்ள ஏதாவது இருக்கிறதா? என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன்.
அந்த ஆசையை நிறைவேற்றும்விதமாக எனக்கு ஃபான்டன் பிரைஸ் கொடுத்து இருக்கிறார்கள்'' என்கிறார் மகிழ்ச்சி பொங்க.
படம்: ஏ.எஸ். கணேஷ்