திருக்கோயில் நெற்களஞ்சியங்கள்

தை மாதம் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை வர உள்ளது.
திருக்கோயில் நெற்களஞ்சியங்கள்

தை மாதம் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை வர உள்ளது. கிராமங்களில் வயல்களில் அறுவடை முடிந்து நெல் தானியத்தைப் பாதுகாப்பாக வைக்க, வைக்கோல் கொண்டு குதிர் மற்றும் பெரிய மண் பானை (சால்)களில் நெல்லைக் கொட்டி வைப்பார்கள். சில இடங்களில் மரப்பலகைகளால் செய்யப்பட்ட "குதிர்' - அமைப்பினை இன்றும் கிராமங்களில் காணலாம்.
 இதனை "பத்தாயம்' என்றும் அழைப்பர். பண்டாரம் - (கருவூலம்) என்பது பத்தாயமாக மருவி விட்டது போலும்.
 சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு செங்கற்களைக் கொண்டு அமைக்கப்பட்ட நெற்களஞ்சியங்கள் பல திருக்கோயில்களில் உள்ளன. திருவரங்கம், திருஆனைக்கா, திருக்கோயிலூர் அருகே திருவரங்கம் கோயில், அழகர்கோயில் மற்றும் தஞ்சாவூர் - பாபநாசம் திருப்பாலத்துறை கோயில்களில் காணலாம். திருப்பாலத்துறை கோயிலில் உள்ள நெற்களஞ்சியம் தஞ்சை நாயக்கர் காலத்தைச் சேர்ந்ததாகும். இதனை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது.
 வைணவத் தலங்களில் முதன்மைத் தலமாக விளங்கும் திருவரங்கம் பெரிய கோயிலில் நான்கு நெற்களஞ்சியங்கள் உள்ளன. இவை அமைந்துள்ள இடம் "ஸ்ரீபண்டாரம்' மற்றும் "கொட்டாரம்' என அழைக்கப்படுகிறது. இதுவே கோயில் கருவூலமாகும்.
 திருவரங்கம் கோயிலின் நிலங்களிலிருந்து வரும் நெல் போன்ற தானியங்கள், பொருள்கள், நெய் போன்றவை இங்கே சேகரித்து பாதுகாக்கப்படும். இதனை ஸ்ரீபண்டாரவாரியம் மற்றும் ஸ்ரீவைஷ்ணவ கணக்கு போன்ற அமைப்புகள் கண்காணித்து நிர்வகித்து வந்ததை கல்வெட்டுகளின் மூலம் அறிய முடிகிறது. திருவரங்கம் கோயில் கொட்டாரத்தில் "தான்யலட்சுமி' எழுந்தருளி அருள்புரிவதைக் காணலாம்.
 மேலும் இங்கு அரங்கநாதர் ஓவியத்திற்கு முன்பாக "மரக்கால்' ஒன்றினை வைத்து அதன் அருகில் குத்துவிளக்கும் வைத்துள்ளனர். வழிபாடும் நடைபெறுகிறது. பண்டை நாளில் இத்தகைய மரக்கால்கள் பயன்பாட்டில் இருந்து வந்ததையும் பெயரிட்டு அழைக்கப்பட்டதையும் கல்வெட்டுகள் கூறுகின்றன. பள்ளி கொண்டான் மரக்கால், ராஜகேசரி மரக்கால், திருவரங்கன் மரக்கால், சீரங்கப்பிரியன் மரக்கால், சென்னாடைக்கால் மரக்கால் போன்ற அளவைகளின் பெயர்களை கல்வெட்டுகள் எடுத்துக் கூறுகின்றன.
 திருவரங்கம் திருக்கோயிலில் சித்திரை (விருப்பன் திருநாள்), ஐப்பசி (ஊஞ்சல் திருநாள்), மாசி (தெப்பத் திருநாள்), பங்குனி (பிரம்மோற்சவம்) ஆகிய நான்கு முறை நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் இங்கு எழுந்தருளுகிறார். கொட்டாரம் முன்பு நான்கு கால் நெல் அளவை மண்டபம் உள்ளது. இங்கு நெல் கொட்டி வைக்கப்படும். பெருமாள் முன்பாக "காரளப்பான்' என்ற அளவுக்காரன், ""திருவரங்கம் பெரிய கோயில்'' எனக் கூறி நெல் அளப்பது வழக்கமாக உள்ளது. அதாவது பெருமாள் உலகத்து உயிர்களுக்கெல்லாம் உணவு தடையின்றி கிடைக்க அருளுவதாக ஐதீகம். இவ்வைபவம் முடிந்து பெருமாள் தாயார் சந்நிதிக்கு எழுந்தருளி உலகத்து உயிர்களுக்குப் படி அளந்துவிட்டேன் எனக் கூறுவது போல இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது. நெற்களஞ்சியத்தை "இரையாயிரம் கொண்டான்' எனவும் அழைப்பது வழக்கம். கோயில் நெற்களஞ்சியங்கள் கோயில் பணிகளுக்கு மட்டுமல்லாமல் இயற்கை நிகழ்வுகளான மழை - வறட்சிக் காலங்களில் சேமித்து வைத்த தானியங்கள் பொது மக்களுக்கும் பயன்பட அளித்து உதவி செய்தது.
 நமது பாரம்பரியச் சிறப்பினை எடுத்துக்கூறும் நெற்களஞ்சியங்களைப் போற்றிப் பாதுகாப்போம்!

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com