செல்போன் மூலம் பாடம்!

பழைய வண்ணாரபேட்டையில் உள்ள சென்னை உருது பெண்கள் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார் ஜி.ஜரினா பானு.
செல்போன் மூலம் பாடம்!

பழைய வண்ணாரபேட்டையில் உள்ள சென்னை உருது பெண்கள் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார் ஜி.ஜரினா பானு. எந்தவித ஆரவாரமுமின்றி இந்தியாவில் சாதனைப் புரிந்துள்ளார் இவர். இவர் செய்த சாதனை என்ன தெரியுமா? 5ஆம்வகுப்பு மற்றும் 6ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு செல்போன் மூலம் ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாடம் கற்றுத் தருகிறார். வளரும் தொழில்நுட்பத்தைக் கொண்டு கல்வி கற்றுத் தரும் ஆசிரியை என்ற வகையில் ஜரீனா பானுவை பாராட்டி பியர்சன்ஃ பவுண்டேசன் சார்பில் "குளோபல் பிரிட்ஜ்' விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை மேயர் சைதை துரைசாமி வழங்கியுள்ளார். இது குறித்து ஜரீனா நம்முடன்
 பகிர்ந்து கொண்டவை:
 ""கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு புதிதாக வளரும் தொழில் நுட்பத்தைக் கொண்டு ஒரு புரோகிராம் கொண்டு வரப்பட்டது. இது ஆந்திராவில்தான் முதன்முதலில் துவங்கப்பட்டது. பிறகு நுங்கம்பாக்கத்தில் உள்ள "ஈசி வித்தியாலயா' என்ற அமைப்பின் மூலம் சென்னையில் அறிமுகப்படுத்தினார்கள். நகராட்சி கல்வி அதிகாரி ரவிசந்திரன் எங்களுக்கு இதுகுறித்து தெரிவித்தார். ""இந்தப் பயிற்சி முறைக்கு சில சி.பி.எஸ்.சி பள்ளிகள் மற்றும் நகராட்சிப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் உங்கள் பள்ளியும் தேர்வாகியிருக்கிறது'' என்றார். பிறகு இந்த அமைப்பின் மூலம் மூன்று ஆண்டுகளில் 46 பள்ளிகளில் இருந்து 54 ஆசிரியர்களுக்கு இந்தப் பாடமுறையைப் பயிற்சியளித்தார்கள்.
 எங்கள் பள்ளியில் இருந்து நானும், நசிராபானு என்ற இன்னொரு ஆசிரியையும் கலந்து கொண்டோம். "ஈசி வித்தியாலயா' அமைப்பைச் சார்ந்தவர்கள் எங்களுக்குப் பயிற்சி கொடுத்தார்கள். மேலும் பாடதிட்டத்திற்கு தேவையான உதவிகளையும் சுபேதா என்பவர் செய்து கொடுத்தார். புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்தால் மைதிலி என்பவர் எங்களை அழைத்து கற்றுத் தருவார். அதைப் பிள்ளைகளுக்கு கற்றுத் தருகிறோம்.
 அதாவது செல்போன் மூலம் ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாடத் திட்டங்களை வழங்கியிருக்கிறார்கள். கைப்பேசியை தொலைக்காட்சிப் பெட்டியுடன் இணைத்து அதன் மூலம் பாட திட்டத்தையும் அது சம்பந்தப்பட்ட வீடியோக்களையும், இணையத்தில் கிடைக்கும் தகவல்களையும் கொண்டு குழந்தைகளுக்கு பாடங்களைக் கற்றுத் தருகிறோம். இதனால் பிள்ளைகளால் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. படிப்பில் பின் தங்கிய நிலையில் உள்ள பிள்ளைகள் கூட இந்தப் பாடத்திட்டத்தின் மூலம் எளிதில் புரிந்து கொள்கிறார்கள். இதனால் குழந்தைகளின் மதிப்பெண்ணும் உயர்ந்திருக்கிறது.
 உதாரணமாக அறிவியல் பாடத்தில் நீர் மாசடைதல் பற்றிய பாடமாக இருந்தால் ஆலைகளில் இருந்து வெளிவரும் கழிவுகள் எப்படி ஆறுகளிலும், நிலத்திலும் கலக்கிறது என்பதை வீடியோவாக பார்க்கும் பிள்ளைகள் நன்கு புரிந்து கொண்டு ஆர்வத்துடன் கற்கின்றனர். அதேபோன்று ஆங்கில இலக்கணங்களை விளையாட்டு, பாடல்கள் மூலம் கற்றுத் தருகிறோம்.
 இதன் காரணமாக குழந்தைகள் பள்ளிக்கு வராமல் இருப்பதும், தேர்வில் தோல்வி அடைவதும் முழுதாக குறைந்திருக்கிறது. இந்த பகுதியைப் பொறுத்தவரை வறுமை நிலையில் உள்ள குழந்தைகள்தான் அதிகம். அவர்களால் பணம் செலவு செய்து "ஸ்மார்ட் கிளாஸ்'களுக்கு செல்ல முடியாது. அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு இந்த ஸ்மார்ட் கிளாஸ்கள் ஒரு வரப்பிரசாதமாக கிடைத்திருக்கிறது. மேலும் தற்போது 5ஆம் வகுப்பு 6ஆம் வகுப்பு பிள்ளைகளுக்கு மட்டும் எடுத்து வரும் இந்தப் பாடமுறையை இன்னும் எட்டாம் வகுப்புவரை விரிவு படுத்தினால் வருங்காலத்தில் குழந்தைகளின் அறிவுத் திறனும், கற்கும் திறனும் அதிகரிக்கும்.
 அதேபோல் கணிதம் மற்றும் புவியல் பாடங்களையும் இந்த பாடத்திட்டம் முறையில் மாற்றியமைத்தால் சுமாராகப் படிக்கும் குழந்தைகளும் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் ஸ்பெஷல் சில்ரன்ஸ் கூட இந்தப் பாடமுறையை எளிதில் புரிந்து கொள்கிறார்கள்.
 ஏதோ ஒரு மூலையில் இருந்த எங்கள் பள்ளி இந்தஅளவிற்கு புகழ் பெற்றிருப்பதை நினைத்து மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இதற்கு உறுதுணையாக இருந்த எங்கள் தலைமை ஆசிரியை அதியா பாத்திமா, மஹ்முதா பேகம் மற்றும் எங்கள் பள்ளி ஆசிரியைகளுக்கும், என் பெற்றோருக்கும்தான் இந்தப் புகழ் சேரும்.
 ஏனென்றால் எங்கள் வீட்டில் ஒன்பது பிள்ளைகள். அதில் நான் ஐந்தாவது. என் அப்பா ஆடு வெட்டும் தொழில் செய்பவர் அப்படி இருந்தும் எவ்வளவு கஷ்டமிருந்தாலும் எங்கள் ஒன்பது பேரையும் நன்றாகப் படிக்க வைத்துள்ளார். நான் எம்.ஏ.பிஎட் படித்திருக்கிறேன். தற்போது எம்.எட். படிக்க முயற்சி செய்து
 வருகிறேன். எனது வெற்றிக்குப் பின்னால் என் கணவரின் உழைப்பும் இருக்கிறது'' என்றார்.
 -ஸ்ரீதேவி குமரேசன்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com