இருபது ரூபாய்க்கு மருத்துவம்!

இன்றைய காலகட்டத்தில் வைத்தியம் என்றாலே நோய் வந்தவர்கள் பயந்துபோய் விடும் அளவிற்கு பில் வந்துவிடுகிறது.
இருபது ரூபாய்க்கு மருத்துவம்!

இன்றைய காலகட்டத்தில் வைத்தியம் என்றாலே நோய் வந்தவர்கள் பயந்துபோய் விடும் அளவிற்கு பில் வந்துவிடுகிறது. அப்படிபட்ட சூழ்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் குறைந்த விலையில் நிறைந்த மருத்துவ சேவையை வழங்கி வருகிறார் ஆண்டிபட்டியில் பிறந்து வளர்ந்து மலேசியாவில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வரும் பத்மினி.
 ஆண்டிபட்டியை சேர்ந்த ஆசிரியர் சொக்கலிங்கம் - ரத்தினம்மாள் தம்பதியினருக்கு ஆறாவது குழந்தையாகப் பிறந்த பத்மினி ஆண்டிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்த பின் மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவப் படிப்பை முடித்தார்.
 அதன் பின் வேதகுரு என்ற மருத்துவரை இல்லறத் துணைவராக ஏற்றுக்கொண்டு மலேசியாவில் மருத்துவராக இருவரும் பணியாற்றி வருகிறார்கள். இவர்களது இரண்டு பெண் குழந்தைகளும் மருத்துவப் படிப்பு படித்து வருகின்றனர்.
 சிறுவயதில் இருந்தே சமூக சேவையில் ஈடுபட்ட வரும் இவரை அவரது தந்தையும்,கணவரும் ஊக்கப்படுத்தியுள்ளனர். தாம் பிறந்த கிராமப்பகுதி மக்களுக்கு குறைந்த செலவில் மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இவர் யாருடைய நிதி உதவியும் இல்லாமல் தனது சொந்த செலவில் கடந்த 2008-ஆம் ஆண்டில் ஆண்டிபட்டி அருகே பின்தங்கிய பகுதியான இயற்கை சூழல் நிறைந்த டி.வி.ரெங்கநாதபுரம் என்ற கிராமத்தில் தனது பெற்றோர்கள் சொக்கலிங்கம், ரத்தினம்மாள் என்ற பெயரில் 10 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனை கட்டி ரூ.20க்கு மருத்துவம் பார்த்து வருகிறார்.
 இவர் ஆரம்பித்த மருத்துவமனையில் நிரந்தரமாக மருத்துவர் மற்றும் செவிலியர்கள் தங்கி சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
 அதோடு மட்டுமல்லாமல் பொதுமருத்துவம், யோகாசனப் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு நேரடியாக சென்று மருத்துவ முகாம் அமைத்து சிறப்பு மருத்துவர்களின் உதவியால் அப்பகுதியில் உள்ள மக்களின் நோய்களைக் கண்டறிந்து குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் இம்மருத்துவமனைக்கு கிராமப்புற மக்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மேலும் இம்மருத்துவமனை கிராம மக்களின் நோய் தீர்க்கும் தன்வந்திரியாக விளங்கிவருகிறது என்பதில் ஐயமில்லை.
 இது குறித்து பத்மினி கூறியது:
 ""அன்னை டோரா ஸ்கார்லெட் என்பவர் இங்கிலாந்தில் பிறந்து 1950-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்து ஆண்டிபட்டி அருகே தெப்பம்பட்டி என்னும் குக்கிராம பகுதியில் சேவா நிலையம் என்ற பெயரில் மருத்துவமனை ஆரம்பித்து குறைந்த செலவில் மருத்துவ சேவை செய்து, இப்பகுதி மக்களுக்கு பல்வேறு தொண்டுகளைச் செய்து, அங்கேயே மறைந்தார். அவர் தான் என்னுடைய ரோல் மாடல்.
 நான் மலேசியாவில் மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றி வந்தாலும் என்னுடைய பிறந்த மண்ணில் வாழும் கிராமமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவசேவை கிடைக்கவேண்டும என்ற எண்ணம் ஏற்பட்டது. அதனடிப்படையில் நான் இந்த மருத்துவமனையைத் துவக்கியுள்ளேன்.
 இப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தற்போது இங்கு வரத்துவங்கியுள்ளனர். இதனால் எனது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் மருத்துவமனையில் பல்வேறு நவீன வசதிகள் ஏற்படுத்தும் எண்ணம் உள்ளது.
 தற்போது இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்காக இங்கு மலிவுவிலையில் உணவகம் திறக்கப்பட்டுள்ளது. அதில் மதிய சாப்பாடு ரூ.30 மட்டுமே, அதோடு மட்டுமல்லாமல் முதியவர் காப்பகம் மற்றும் மனநலகாப்பகம் என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் எண்ணம் உள்ளது.
 எனது இந்த சேவைக்கு எனது கணவர் மருத்துவர் வேதகுரு மற்றும் எனது குழந்தைகள் எனது சகோதரர்கள் ஆகியோர் உறுதுனையாக இருந்து வருகின்றனர்''
 என்றார்.
 - எஸ்.பாண்டி.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com