முக்திக்கு ஒரு சீட்டு!

  வைணவத்தைக் கட்டிக் காத்ததில் ராமானுஜருக்கு உதவியாகப் பல சீடர்கள் இருந்துள்ளனர் என்பதை நாம் அறிவோம். உடையவராகிய ராமானுஜரின் கருணை உள்ளமே அவர்பால் அனைவரையும் ஈர்த்தது என்றால் மிகையாகாது.   திருக்கோட்ட
முக்திக்கு ஒரு சீட்டு!

  வைணவத்தைக் கட்டிக் காத்ததில் ராமானுஜருக்கு உதவியாகப் பல சீடர்கள் இருந்துள்ளனர் என்பதை நாம் அறிவோம். உடையவராகிய ராமானுஜரின் கருணை உள்ளமே அவர்பால் அனைவரையும் ஈர்த்தது என்றால் மிகையாகாது.

  திருக்கோட்டியூர் நம்பிகளிடம் 18 தடவை சென்று மூல மந்திரத்தை அறிய அரும்பாடு பட்டவர் உடையவர். அப்படி சிரமப்பட்டுப் பெற்ற நல்லுபதேசத்தை, "தன் உயிர் போனாலும் பரவாயில்லை; மக்களுக்கு நல்வழி கிடைக்க வேண்டும்' என்றெண்ணி, திருக்கோட்டியூர் ஆலயத்தின் மீதேறி அனைவருக்கும் உரத்த குரலில் அவர் எடுத்துரைத்த தன்மையானது திருக்கோட்டியூர் நம்பியையே சற்று அயரவைத்துவிட்டது. உடனேயே ராமானுஜரை அவர் வார்த்தைகளால் சுட்ட போதிலும், ராமானுஜரின் பரந்த உள்ளத்தைக் கண்டு பரவசமாகிவிட்டார். ராமானுஜரை ஆசீர்வதித்து, ""இந்த மனப்பான்மை எனக்கு இல்லாமல் போய்விட்டதே! நீரே சிறந்த வைணவ சீலனாக விளங்குகின்றீர். இனி இந்தத் தரிசனமே உம் பெயரால் "ராமானுஜ தரிசனம்'- "எம்பெருமானார் தரிசனம்' என்று போற்றப்படும்'' என்றருளினார். இதிலிருந்தே நம்பிகளுக்கு ராமானுஜரிடம் இருந்த அன்பை, பரிவைக் காண முடிகிறது.

  அதன் பின்னர் ஸ்ரீரங்கம் ஆலயத்தில் பல சீர்த்திருத்தங்களைச் செய்தார் ராமானுஜர். அது சிலருக்குப் பொறுக்கவில்லை. ராமானுஜரை எப்படியாவது கொன்றுவிட வேண்டும் என்று அவர்கள் சதித் திட்டம் தீட்டினார்கள். ராமானுஜருக்கு பிட்சை அளிக்கும் ஓர் மூதாட்டி மூலம் விஷம் கலந்த உணவை அவருக்குப் போட ஏற்பாடு செய்தனர். வழக்கம்போல் பிட்சைக்கு வந்த ராமானுஜருக்கு, விஷம் கலந்த உணவுப் பொருளை அளித்துவிட்டாள் அந்த அம்மையார் ஆயினும் தவறு செய்துவிட்டதால் ஏற்பட்டுவிட்ட மனக் கலக்கத்தை வெளியில் சொல்ல முடியாமல் ராமானுஜரின் திருவடியில் வீழ்ந்து அழுதாள். நிலைமையை ஒருவாறாகப் புரிந்துகொண்டார் ராமானுஜர். அதன் பின்பு அவ்வன்னத்தை காவிரியில் வீசிவிட்டு தொடர்ந்து தினமும் உணவேதும் கொள்ளாமல் வெறும் தண்ணீரே அருந்தி உபவாசம் இருக்க ஆரம்பித்துவிட்டார். இதனால் அவர் உடல் மிகவும் சோர்வு பெற ஆரம்பித்தது.

  இந்தச் செய்தி திருக்கோட்டியூர் நம்பிகளுக்குச் சென்றது. இதற்கு ஏதாவது வழி செய்து ராமானுஜரை காக்க வேண்டுமென நினைத்து அவர் ஸ்ரீரங்கம் வந்தார். நம்பிகள் வருவதைக் கேள்விப்பட்ட ராமானுஜர், காவிரி மணலில் கோடைச் சூட்டில் நம்பிகளை எதிர்கொண்டு அழைக்கச் சென்றார்; நம்பிகளின் காலடியில் தெண்டனிட்டார். கடும் கோடை வெய்யில் தகிக்கும் தரையில் ராமானுஜர் தன் காலடியில் கிடப்பதைக் கண்ட நம்பியும் அவரை எழுந்திருக்கச் சொல்லாமலே இருந்ததைக் கண்ட "கிடாம்பி ஆச்சான்' என்ற சீடர், கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். அவர் நம்பிகளைப் பார்த்து, ""இதுதானா சீடர்மீது நீர் காட்டும் பரிவு?'' என்று அலறியபடி தானே ராமானுஜரை வாரி எடுத்து அணைத்து நின்றார். நம்பிகளும், ""எனக்கு ராமானுஜர் மீது பரிவு உண்டு. வேறு யாருக்காவது இம்மாதிரியான பரிவு உள்ளதா என்பதைப் பரிசோதிக்கவே நான் வாளா இருந்தேன். கிடாம்பி ஆச்சானே! நீர் ராமானுஜரிடம் காட்டிய பரிவைக் கண்டு என் பயம் குறைந்துவிட்டது. இனி நீரே ராமானுஜருக்கு உணவு தயாரித்து அளித்து அவரைக் கவனித்துக் கொள்ள வேண்டும்'' என்று உத்தரவிட்டார். அன்று முதல் கிடாம்பி ஆச்சானே ராமானுஜரை கவனிக்கத் தொடங்கினார்.

  அப்படிப்பட்ட கிடாம்பி ஆச்சானைப் பற்றி சிறிது காண்போம்...

  கிடாம்பி ஆச்சான், கலியுகாதி 4058-ல், ஹேவிளம்பி வருடத்தில் சித்திரை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவர் திருமலை ஸ்ரீனிவாஸருக்கு "தீர்த்த கைங்கர்யம்' செய்து வந்தவரான பெரிய திருமலை நம்பிக்கு உதவியாய் இருந்தவர். அது மட்டுமல்லாமல் காஞ்சிப் பேரருளாளன், அரங்க நகரப்பனுக்கும் தொண்டு செய்யும் பேறு பெற்றவர். இவருடைய பெயர் "பிரணதார்த்திஹரர்' என்றிருப்பதால் இவர் காஞ்சியில் வாழ்ந்தவர் அல்லது காஞ்சியைச் சேர்ந்தவர் என்ற கருத்துகள் உண்டு.

  இவரும் ராமானுஜரைப் போல சாஸ்திர சம்பிரதாயங்கள் அறிந்தவர் என்பதால்தான் ராமானுஜர் ஸ்ரீரங்கம் நிர்வாக சம்பிரதாயங்களைப் பத்து கொத்தாகப் பிரித்து, எட்டாவது கொத்தின் பணியை இவரிடம் கொடுத்தார் என்கிறது வரலாறு.

  இவர் ஒரு சமயம் ராமானுஜருக்காக அமுது (உணவு) தயாரிக்கும் பணியில் இருந்தபோது "தும்பையூர் கொண்டி' என்ற மங்கை நல்லாள், மடத்திற்கு பால்-தயிர் இவைகளைக் கொடுத்து வந்தாள். ஒரு நாள் அவளைக் கண்ட ஆச்சான், அவளுக்கு தீர்த்த பிரசாதங்களைக் கொடுத்து, மடத்திற்கு பால்-தயிர் கொடுத்ததற்கான கணக்கு பற்றி விசாரித்தார். அந்த மங்கையோ, ""நான் கொடுத்து வந்த பாலுக்கும், தயிருக்கும் எனக்கு பணமாகத் தர வேண்டாம்; பதிலாக எனக்குப் பரமபதம்தான் வேண்டும்'' என்றாள். அதற்கு ஆச்சானோ, ""திருவேங்கடவனாலன்றோ பரமபதம் அளித்திட முடியும்?'' என்று சொல்ல, அவளும் விடாமல், ""நீர் எனக்குப் பரமபதம் அளிக்க திருவேங்கடவனுக்கு ஓர் சீட்டு எழுதித் தாரும்; நான் அவரிடம் பெற்றுக் கொள்கிறேன்'' என்று பிடிவாதம் பிடித்தாள். ஆச்சானும் ஓர் சீட்டு எழுதிக் கொடுக்க, அவளும் திருவேங்கடமுடையானிடம் அதைக் காட்டினாள். அந்தப் பெருமாளும் அவளுக்கு பரமபதம் அருளினான் என்ற வரலாற்றை பிள்ளைலோகம் ஜீயர், "ராமானுஜர் திவ்ய சரிதை' எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

  கிடாம்பி ஆச்சான், ராமானுஜரின் தொண்டுகளில் ஈடுபட்டிருந்தமையால் இவர் தனி கிரந்தங்கள் ஏதும் எழுதவில்லை என்பர். கி.பி. 1056 முதல் 1158 வரை வாழ்ந்தவர் இவர் எனத் தெரிகிறது.

  கிடாம்பி ஆச்சானுக்கு என ஓர் விக்ரஹத் திருமேனி, திருவஹிந்திரபுரத்தில் (சந்நிதி தெரு) அமைந்துள்ள புராதனமான திருவேங்கடமுடையான் சந்நிதியில் அமைந்துள்ளது.

  இப்படி வைணவத்தில் குருபக்தி என்பதை எங்கும் காணலாம். அப்படிப்பட்ட ராமானுஜரின் சீடரான கிடாம்பி ஆச்சானையும் ராமானுஜ ஜெயந்தி நன்னாளான 29.4.09ல் நினைவில் நிறுத்திப் பணிவோம்! பரமபதமும் பெறுவோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com