வெண்மணியின் கண்மணி!

"வெண்மணி' என்னும் கிராமம், சென்னையிலிருந்து போளூர் செல்லும் சாலையில் உள்ளது. இந்தச் சாலையில்  வந்தவாசி, சேத்பட்டை கடந்து, "தேவிகாபுரம்' என்ற தலத்தை அடைந்தால், அங்கிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் "வெ
வெண்மணியின் கண்மணி!

"வெண்மணி' என்னும் கிராமம், சென்னையிலிருந்து போளூர் செல்லும் சாலையில் உள்ளது. இந்தச் சாலையில்  வந்தவாசி, சேத்பட்டை கடந்து, "தேவிகாபுரம்' என்ற தலத்தை அடைந்தால், அங்கிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் "வெண்மணி' உள்ளது.

திருவண்ணாமலையில் உள்ளது போலவே வெண்மணி தலத்து இறைவியும், இறைவனும், "உண்ணாமுலை', "அண்ணாமலை' என்றே அழைக்கப்படுகின்றனர். தல விருட்சம், வில்வம்.

இறைவனின் இடப்பாகத்தை பெற அன்னை திருவண்ணாமலைக்குச் செல்ல முற்படும்போது  எட்டு இடங்களில் சிவலிங்கங்களைத் தாபித்து வணங்கினாளாம். அவை "அஷ்ட கைலாஸங்கள்' எனப்படுகின்றன. அந்தத் தலங்கள் :

1.  மண்டகொளத்தூர்

2.  கரைபூண்டி

3.  தென்பள்ளிப்பட்டு

4.  பழங்கோவில்

5.  நார்த்தாம்பூண்டி

6.  தாமரைப்பாக்கம்

7.  வாசுதேவம்பட்டு

8.  வெண்மணி என்பனவாம்.

அன்னையின் இந்த பூஜைக்காக பார்வதியின் சேயால் (முருகனால்) உருவாக்கப்பட்ட ஆறுதான் "சேயாறு' ஆகும். இந்த அஷ்ட கைலாயங்களும் சேயாற்றின் கரையில் அமைந்துள்ளன.

வெண்மணி அண்ணாமலையார் கோயில், அந்நியப் படையெடுப்பின்போது முற்றிலுமாக அழிந்துவிட்ட நிலையில் பாணலிங்கம் மற்றும் அம்மன் சிலை மட்டுமே எஞ்சியது. தற்போது போளூர் அன்பர் ஒருவர் உதவியுடன், சிறு ஆலயமொன்று கவினுற அமைக்கப்பட்டுள்ளது.

கோஷ்ட தெய்வங்கள்

இந்தக் கோயிலில் கோஷ்ட தெய்வங்களாக முறையே தென் கிழக்கில் நர்த்தன கணபதியும், தென் திசையில் தட்சிணாமூர்த்தியும், வடகிழக்கில் துர்கையும் அமைக்கப்பட்டுள்ளனர். சண்டிகேஸ்வரருக்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.

சிவாலயங்களில் பாதுகாவலர் என்றழைக்கப்படும் கால பைரவர் சந்நிதி அமைக்கப்பட உள்ளது.

இக்கோயிலின் கும்பாபிஷேகம், வரும் மார்ச் மாதம் 25-ம் தேதியன்று ரிஷப லக்னத்தில் பட்டம் ஸ்ரீ ஹாலாஸ்ய நாத சிவாச்சாரியார் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. நான்கு கால யாக சாலை பூஜையுடன், நான்கு நாட்கள் 7 வேதிகை, 15 ஹோம குண்டங்களுடன் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. கும்பாபிஷேகம், மற்றும் இதர திருப்பணிகளில் பங்கு கொள்ள விழைவோர், "சிவாலய வழிபாட்டு மன்றம், தொலைபேசி 044-24611244, அல்லது 9444917124' என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

"வெண்மணி'யின் கண்மணியாக உள்ள அண்ணாமலையாரின் திருவருளைப் பெற்றுய்வோம், வருக!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com