கோபத்தை அடக்கி ஆள்வோம்!

ஒருமுறை நபிகள் நாயகம் (சல்) தனது நண்பர்களைப் பார்த்து, ""உண்மையான வீரன் யார்?'' எனக் கேட்டார். அதற்கு, ""மல்யுத்தத்திலும், போரிலும் வெற்றிபெறுபவனே உண்மையான வீரன்'' எனப் பதிலளித்தார்கள். நபிகள் நாயகம்
கோபத்தை அடக்கி ஆள்வோம்!

ஒருமுறை நபிகள் நாயகம் (சல்) தனது நண்பர்களைப் பார்த்து, ""உண்மையான வீரன் யார்?'' எனக் கேட்டார். அதற்கு, ""மல்யுத்தத்திலும், போரிலும் வெற்றிபெறுபவனே உண்மையான வீரன்'' எனப் பதிலளித்தார்கள்.

நபிகள் நாயகம் (சல்) இதனை மறுத்து, ""அவ்வாறு அல்ல... யாதொருவன் தன்னுடன் அநியாயமாகச் சண்டைக்கு வந்தபோது, தான் அதனைத் தடுத்து, தீங்கு விளைவிக்க சக்தி இருந்தும், அதனால் ஏற்படும் கோபத்தை அடக்கி ஆண்டு மன்னித்து விடுகிறானோ அவனே உண்மையான வீரன்'' என்றார்.

"செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துக் காக்கின்என் காவாக்கால் என்'  என்கிறார் திருவள்ளுவர்.

 கோபம் கொள்வதற்கான நியாயமான காரணங்களும், அதற்குப் பதிலடி கொடுக்கும் வலிமையும் இருந்தும் கோபத்தை அடக்கி ஆள்வது மிகப் பெரியது. மற்ற இடங்களில் கோபத்தைக் காட்டுவதில் எந்த ஒரு மதிப்பும் இல்லை என்பது இதன் பொருள்.

ஒருவர் நபிகள் நாயகம் (சல்) அவர்களிடம் வந்து ""எனக்கு எல்லா நிலைகளிலும் நன்மையே தரும் ஒரு செயலைக் கற்றுக் கொடுங்கள்'' எனக் கேட்டார்.

அதற்கு நபிகள் நாயகம் (சல்) ""எடுத்ததற்கெல்லாம் கோபம்கொள்ளாதீர்கள். அடிக்கடி கோபத்திற்கு அடிமையாவது உமது உடலையும், மனதையும் பாதிக்கும்'' என்றார்கள். இதனால்தான் ""உயர் ரத்த அழுத்தமுடையவர்கள், மன அதிர்ச்சி கொள்ளக்கூடாது'' என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

""நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்

பகையும் உளவோ பிற'' என்கிறார் திருவள்ளுவர். துன்பங்களை மறந்து சிரிக்கும் பண்பு, மகிழ்ச்சி போன்ற நன்மைகளை அழிப்பதில் கோபத்தைப் போன்ற தீயவைகள் இல்லை.

கோபம் என்றால் என்ன என ஆராய்ந்தால், மனிதருடைய உள்ளத்திலிருந்து பொங்கி வரும் ஓர் உணர்வுதான் கோபம் என்று சொல்லப்படுகிறது. மேலும் ஒரு விதத்தில் சாம்பலுக்கடியில் கனன்று கொண்டிருக்கும் நெருப்பைப் போன்றது கோபம் என்கின்றனர்.

நபிகள் நாயகம் (சல்) கூறினார்கள்: ""உங்களில் எவருக்காவது கோபம் பொங்கி வருமானால், நின்று கொண்டிருந்தால் உட்கார்ந்து விடுங்கள். உட்கார்ந்து இருந்தால் படுத்துக் கொள்ளுங்கள். மேலும் குளிர்ந்த தண்ணீர் கொண்டு உடலை சுத்தம் செய்து கொள்ளுங்கள். ஏனெனில் கோபம் என்பது நெருப்பைப் போன்றது. இதனாலேதான் கோபங்கொண்டவுடன் கண்கள் சிவந்து நெருப்பைப் போன்று காணப்படுகின்றன. குளிர்ந்த தண்ணீர் கொண்டு சுத்தம் செய்கையில் நெருப்பு அணைவதுபோல் கோபத்தின் தாக்கமும் அணைந்துவிடும். இல்லாவிடில் இந்த கோபமே உங்களின் அழிவிற்கு காரணமாய் விடும்.''

""தன்னைத்தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம்'' என்கிறார் திருவள்ளுவர்.

கோபமும் வெறுப்பும் ஒருவருடைய மனதை அலைக்கழித்து, அமைதியையும் உடல் நலத்தையும் கெடுக்கும். தன் உயிரைக் காக்க கோபத்தை அழிக்க வேண்டும். இதனையே ""ஆறுவது சினம்'' என்று ஒüவையார் கூறுகிறார்.

""இனர்எரி தோய்வுஅன்ன இன்னா செயினும்

புணரின் வெகுளாமை நன்று'' என்கிறார் வள்ளுவர்.

எரியும் தீயின் நாக்கைத் தொட்டதுபோன்ற துன்பமும், கெடுதியும் செய்பவர்களிடம்கூட அவர்கள் தம்மை நாடிவரும்போது கோபம் கொள்ளாமல் இருப்பதே நல்லது என்பது இதன் பொருள்.

கோபம்கொண்ட நேரத்தில் அறிவுக் கண் மூடப்படுகிறது. அதேநேரத்தில் என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம் எனத் தெரிவதில்லை. ஆகையால்தான் தன்னிடம் நீதி செலுத்தும் அதிகாரம் கொண்டவர்கள், கோபமான நிலையில் தீர்ப்பளிக்கக்கூடாது எனக் கூறப்படுகிறது.

திருக்குர்ஆனில் சுலைமான் நபி (அலை) என்றும், பைபிள் வேதத்தில் சாலமன் எனவும் கூறப்படும் அரசர், மிகவும் நீதிமான்; பெரிய அறிஞர்! அவரது தந்தை தாவுது நபி (அலை) கூறினார். ""மகனே! அரச பதவியுடைய நீ மிகவும் கோபம் கொண்ட சூழ்நிலையில் ஒரு நாளும் தீர்ப்பளிக்காதே. அடிக்கடி கடுகடுப்புடன் உனது பணியாட்களுடன் நடந்து கொள்ளாதே'' என அறிவுரை கூறினார்.

கண்ணகி - கோவலன் கதை தெரிந்ததே! இதனால் "சிலப்பதிகாரம்' என்ற இலக்கியம் தோன்றியது. நிரபராதியான கற்புக்கரசி கண்ணகியின் கணவன் கோவலன், அரசியின் சிலம்பைத் திருடியதாக பொய்ப்பழி சுமத்தப்பட்டது. கோபம்கொண்ட அரசன், அறிவு மயக்கத்தால் சரியான விசாரணை இன்றி, ""கள்வனைக் கொன்று சிலம்பைக் கொணர்க'' என உத்தரவிட்டான். அதன் விளைவு அரசு, உயிர், நாடு, மனைவி, மக்கள் யாவரும் கற்புக்கரசி கண்ணகியின் சாபத்தால் அழிந்தனர்.

நமது ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புகளையும், துன்பங்களையும் நினைத்துப் பார்த்தால் அதிகப்படியாக நாம் கோபத்தை அடக்கி ஆளாததுதான் அதற்குக் காரணம் என அறியலாம்.

நம்மை நாம் கோபத்தை அடக்கி ஆண்டு நல்வாழ்வைப் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com