வயலூர் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்! - கலையில் சிறக்க வைக்கும் ஆலயம்!

சோழ மன்னன் ஒருவன். சிராப்பள்ளி மலையில் இருந்து சற்று தொலைவில் இருக்கும் அந்தக் காட்டுப் பகுதியில் வேட்டையாடச் சென்றான். சற்று நேரத்தில் களைப்பு மிகுதியால் ஓரிடத்தில் அமர்ந்தான். தாகம் அவனை வாட்டியது.
வயலூர் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்! - கலையில் சிறக்க வைக்கும் ஆலயம்!

சோழ மன்னன் ஒருவன். சிராப்பள்ளி மலையில் இருந்து சற்று தொலைவில் இருக்கும் அந்தக் காட்டுப் பகுதியில் வேட்டையாடச் சென்றான். சற்று நேரத்தில் களைப்பு மிகுதியால் ஓரிடத்தில் அமர்ந்தான். தாகம் அவனை வாட்டியது. தண்ணீரைத் தேடினான். தட்டுப்படவில்லை. எதிரே வித்தியாசமாக மூன்று கிளைகளாக வளர்ந்த கரும்பு தென்பட்டது. ஆர்வ மிகுதியில் அதனை ஒடித்து தன் தாகம் தீர்க்க முனைந்தான். ஆனால்... கரும்பு வெட்டுப்பட்ட இடத்தில் இருந்து சுவை நீர் வருவதற்கு பதிலாக ரத்தம் வடிந்தது. அச்சத்தால் அந்த இடத்தைத் தோண்டினான் மன்னன். அங்கே சிவலிங்கம் ஒன்று இருக்கக் கண்டு, அதனை வணங்கி, அதே இடத்தில் கோயில் ஒன்றை எழுப்பினானாம். இந்தச் செவிவழிக் கதையைத் தன்னுள்ளே கொண்டு, வயல்களின் நடுவே திகழ்கிறது குமார வயலூர்.

கார்த்திகை மாதம் என்றால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில்தானே நம் நினைவுக்கு வரும். அங்கே அண்ணாமலையாரைத் தவிர இன்னுமோர் தெய்வத்துக்கும் சிறப்பு உண்டே. வேறு யார்... நம் முருகப் பெருமான்தான்.

நாராயணனுக்கு திவ்யப் பிரபந்தம்போல், சிவபெருமானுக்கு திருமுறைகள் போல், முருகப் பெருமானுக்கு திருப்புகழ். அப்படிப்பட்ட புகழ்வாய்ந்த திருப்புகழைப் பாடிய அருணகிரியாரிடம் புலவன் சம்பந்தாண்டான் பிரச்னை செய்தான். அருணகிரியாரின் பக்தியை இகழ்ந்தவன், முருகனை நேரில் காட்டுமாறு சவால் விட்டான். அருணகிரியார் முருகனை வேண்ட, அவருக்காக திருவண்ணாமலை ஆலய 16 கால் மண்டபத்தின் தூணில் முருகப் பெருமான் காட்சி தந்தார். இதனால், முருகனுக்கு "கம்பத்து இளையனார்' என்னும் பேர் ஏற்பட்டது. இவ்வாறு முருகப் பெருமான் பக்தியில் தோய்ந்து போன அருணகிரியார் ஒருமுறை வல்லாள மகாராஜா கோபுரத்தில் இருந்து கீழே விழுந்து உயிர்விட முயன்றார். அப்போது முருகனே கோபுரத்து இளையனாராகத் தோன்றி, அவரைக் காப்பாற்றினார். மேலும், "முத்தைத் தரு' என்ற பதத்தை எடுத்துக் கொடுத்து அவரை திருப்புகழ் பாடுமாறு பணிக்கிறார். "மேலும் பாட வேண்டுமெனில் வயலூருக்கு வா' என்று அசரீரியாக ஒலித்து அவரைத் தூண்டுகிறார்.

முருகப் பெருமானின் வாக்கை சிரமேற்கொண்ட அருணகிரியார் வயலூர் கோயிலுக்கு வருகிறார். அங்கே எவ்வளவு முயன்றும் முருகப் பெருமானின் திருக்காட்சி கிட்டவில்லை. வருத்தம் மிகக் கொண்டார் அருணகிரியார். தான் ஏமாற்றப்பட்டதாக எண்ணி, அசரீரி பொய்யோ என உரக்கக் கூவ, "அசரீரி உண்மையே' என்ற குரல் ஒலித்தது. அங்கே விநாயகர் அவர் முன்னே தோன்றியிருந்தார்.

அருணகிரியாருக்கு ஆச்சரியம். அந்தப் பிள்ளையாரை பொய்யா கணபதியென போற்றிக் கொண்டாடினார். கணபதியும், வயலூர் முருகப் பெருமானைக் கையைக் காட்டிவிட்டு மறைந்தார். அருணகிரியாரும் குமார முருகனைத் தொழ, குமரன் அவர் முன் தோன்றி தன் வேலால் அவர் நாவில் எழுத, அதன் பின் அப்பெருமானைப் புகழ்ந்து 18 திருப்புகழ் பாடல்களைப் பாடினார் அருணகிரியார்.

இதன் பின்னரே அருணகிரியார் பல்வேறு தலங்களுக்கும் சென்று செந்தமிழ்ப் பாக்களான திருப்புகழால் முருகன் புகழ் பரப்பினார். இவ்வாறு திருப்புகழ் நம் தமிழுலகுக்குக் கிடைக்கக் காரணமாக அமைந்தது இந்த வயலூர் தலமே!

அதனால்தான் முருகன் புகழ் பரப்பிய கிருபானந்த வாரியாரை குமார வயலூர் அதிகம் ஈர்த்ததில் வியப்பில்லை. இந்தக் கோயிலுக்கு கோபுரம் கட்டி குடமுழுக்கு வைபோகத்தை அவர் நடத்தியும் வைத்தார். இதற்குக் காரணமான சுவையான ஒரு சம்பவத்தைச் சொல்கிறார்கள்.

1934ல் வயலூருக்கு வந்த வாரியாருக்கு குருக்களாக இருந்த ஜம்புநாத சிவாச்சாரியார் சுவாமி தரிசனம் செய்து வைத்தாராம். அதில் மகிழ்ச்சியடைந்த வாரியார், ஐம்பது பைசாவை காணிக்கை அளித்திருக்கிறார். அன்று இரவு, கோயில் நிர்வாகி ஒருவரின் கனவில் தோன்றிய முருகப் பெருமான், "காணிக்கை பெற்ற ஐம்பது பைசாவில் கோபுரம் கட்ட முடியுமா?' என்று கேட்டாராம். இதனால் வியப்படைந்த அந்த நிர்வாகி மறுநாள் குருக்களிடம் சொல்ல, அவரும் வாரியார் குறித்த விவரத்தைச் சொன்னாராம். உடனே அந்த ஐம்பது பைசாவை வாரியாருக்கே திருப்பி அனுப்பிவிட்டாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த வாரியார், இங்கே வந்து விவரம் அறிந்து, முருகப் பெருமானின் அருளால் கோபுரம் கட்டி குடமுழுக்கும் செய்வித்தாராம். சோழ மன்னர்களால் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் இது.

முருகனுக்கே சிறப்பு:

இது சிவத்தலம் என்றாலும், இங்கே சிறப்பு முருகனுக்குத்தான். சிவன் சந்நிதிக்குப் பின்புறம் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார் குமரன். சுவாமி மணக்கோலத்தில் காட்சி தருவதால், செவ்வாய் தோஷம் உள்ளிட்ட சில தோஷங்களால் திருமணத் தடை இருந்தால், இங்கே வந்து பெருமானை வேண்டிக் கொள்ள தடைகள் அகன்று நல்ல வரன் அமையும். கந்த சஷ்டியின்போது தெய்வானை திருமணம், பங்குனி உத்திர திருவிழாவில் வள்ளி திருமணம் என திருக்கல்யாணங்கள் நடைபெறும்.

மேலும், அருணகிரிநாதர் திருப்புகழ் பாடுவதற்கு அருள்புரிந்த பெருமான் என்பதால், எழுத்துத் துறையில் உள்ளவர்கள், கவிஞர்கள் இங்கே வந்து பெருமானை வேண்டிக்கொள்ள கலைகளில் சிறப்பு பெறலாம் என்பது நம்பிக்கை.

இந்தத் தலத்தில் குமரனுக்கு அடுத்து, அருணகிரிநாதருக்கு காட்சி தந்த பொய்யாகணபதி சிறப்பு வாய்ந்த மூர்த்தியாக வணங்கப்படுகிறார். அருணகிரிநாதர் இவரைப் போற்றி திருப்புகழில் காப்புச் செய்யுள் பாடியுள்ளார். இங்கே அருணகிரிநாதருக்கும் சந்நிதி உள்ளது. ஆனி மூலத்தன்று இவர் முருகனுடன் புறப்பாடு கண்டருளுவார். இந்த ஆலயத்துக்கு வெளியே முருகன் வேலால் உருவாக்கிய சக்தி தீர்த்தம் உள்ளது.

கருவறையில் முருகன் மயில் வடக்குப் பக்கம் பார்த்து இருக்கிறது. இதனை தேவமயில் என்பர். மற்ற தலங்களில் வடக்கே பார்த்து இருக்கும் ஆதிநாயகி, இங்கே தென்முகமாய்க் காட்சி தருவது சிறப்பானது.

மற்ற தலங்களில் முருகப் பெருமான் தாய் - தந்தையரை தனித்து நின்றே பூஜை செய்வார். ஆனால் வயலூரில் தெய்வ குஞ்சரி வள்ளியுடன் சேர்ந்து நின்று பூஜை செய்கிறார். இது தனிச்

சிறப்பு வாய்ந்தது. தனது வேலினால் தடாகத்தை உருவாக்கி இங்கே சிவன் பார்வதியை முருகன் வழிபட்டார். மேலும், அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதைக் காட்ட, தாய் தந்தையர் காலில் பணிந்த கோலத்தில் காட்சி தருகிறார்.

நாகதோஷம் நீக்கும் தலம்:

இத்தலத்தில் உள்ள நவக்கிரக சந்நிதியில் சூரியன் தனது தேவியர் சாயாதேவி, உஷாதேவியுடன் மேற்கு நோக்கியும் மற்ற எட்டு கிரகங்களும் சூரியனை நோக்கியும் உள்ளன. இங்கே நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் பரிகார பூஜைகள் செய்வது சிறப்பானது. ஸ்ரீ சுப்பிரமணியர், வள்ளி - தெய்வானைக்கு திருக்கல்யாணம் செய்வித்து திருமண தோஷம் நீங்கி திருமணம் கை கூடியவர்கள் இங்கே அநேகம். மேலும், சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் அன்று திருக்குளத்தில் மூழ்கி முருகனை தரிசித்து அர்ச்சித்தால் திருமணத்தடை நீங்கி சுபநிகழ்வு உடனே நடந்தேறும். தமிழகத்தில் உள்ள பிரார்த்தனைத் தலங்களில் மிகவும் சிறப்பான தலமாக விளங்குகிறது குமார வயலூர். நோய் தீர, துன்பம் விலக, குழந்தை பாக்கியத்துக்கு, ஆயுள் விருத்திக்கு, கல்வி பெற, அறிவும் செல்வமும் ஓங்க, விவசாயம் செழிப்படைய என பலவற்றுக்கும் இங்கே முருகனிடம் வேண்டிக் கொள்கிறார்கள். வேண்டுதல் நிறைவேற முடி இறக்கி காது குத்தல், காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், சஷ்டி விரதம் இருத்தல், அங்க பிரதட்சணம், அடிப்பிரதட்சணம் என செய்கிறார்கள்.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6-1 மணி, மாலை 3.30-9 மணி. விழாக்காலங்களில் அதிகாலை 4.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை தொடர்ந்து நடை திறந்திருக்கும்.

இருப்பிடம்: திருச்சியில் இருந்து சுமார் 10 கி.மீ. சத்திரம் பேருந்து நிலையம், புத்தூர் நால்ரோடில் இருந்து நகரப் பேருந்துகள் உண்டு.

ஃபோன்: 0431-2607344

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com