பலன்தரும் பரிகாரத் தலம்: வெற்றி தரும் பெருமாள்- மதுரை கூடலழகர் திருக்கோயில்

ஒரு நாள் இரவு மாறுவேடம் பூண்டு நகர் சோதனைக்குச் சென்றான்.
பலன்தரும் பரிகாரத் தலம்: வெற்றி தரும் பெருமாள்- மதுரை கூடலழகர் திருக்கோயில்

பாண்டிய மன்னன் வல்லபதேவன். ஒரு நாள் இரவு மாறுவேடம் பூண்டு நகர் சோதனைக்குச் சென்றான். ஒரு வீட்டின் திண்ணையில் வயதான அந்தணர் ஒருவர் உறங்கிக் கொண்டிருந்தார். மன்னன், அவரை எழுப்பி, "ஐயா நீங்கள் யார்? ஏன் இங்கே படுத்துள்ளீர்?' என்று வினவினான். அதற்கு அவர், வடதேச யாத்திரை செய்து, கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிவிட்டு, ராம சேது தரிசனத்துக்காகச் செல்ல இருப்பதால், இரவு திண்ணையில் உறங்குவதாகச் சொல்லி ஒரு சுலோகத்தைக் கூறினார்.
 ""வர்ஷார்த்தம் அஷ்டௌ ப்ரயதேத மாஸான்
 நிஷார்த்தம் அர்த்தம் திவஸம் யதேத
 வார்த்தக்ய ஹேதோர் வயஸா நவேந
 பரத்ர ஹேதோரிஹ ஜன்ம நாச''
 - ""மழைக் காலத்துக்கு வேண்டிய பொருள்களை மற்ற எட்டு மாதங்களில் சேகரிக்க வேண்டும். இரவுக்கு வேண்டியவற்றை பகலிலேயே தேடி வைக்க வேண்டும். முதுமைக்கு வேண்டியவற்றை இளமையிலேயே தேடி வைத்துக்கொள்ள வேண்டும். மறுமைக்கு வேண்டியவற்றை இம்மையிலேயே தேட வேண்டும்...''.
 இதைக் கேட்ட மன்னன், தாம் மறுமைக்கு இதுவரை ஒன்றும் செய்யாமல் காலம் கழித்தோமே என்று வருந்தினான். கவலை அவன் மனத்தை அறுத்தது. வைணவப் பெரியாரான செல்வ நம்பிகள் என்பவரிடம் வல்லபதேவன் தன் வருத்தத்தைக் கூறினான். செல்வ நம்பிகளும் நாடெங்கும் பறை அறிவித்து, வித்வான்களைத் திரட்டி, வேத அர்த்தங்களைக் கொண்டு பரம்பொருளைப் பற்றி நிர்ணயித்து, அவ்வழியாலேயே பெறலாம் என்றார். அதன்படி அரசனும், தங்கக் காசுகளை துணியில் முடிந்து, அப் பொற்கிழியை சபை நடுவே கட்டி வைக்க ஏற்பாடு செய்தான். நாடெங்கும் பறை அடித்து அறிவிக்கவும் செய்தான்.
 செய்தி திருவில்லிபுத்தூரையும் சேர்ந்தது. அங்கே கோயில் கொண்ட பெருமான் வடபெருங்கோயிலுடையான் தனக்கு மாலை கட்டி அழகு பார்த்த வைணவர் விஷ்ணுசித்தரின் கனவில் தோன்றி, "நீர் போய் பொற்கிழியை அறுத்து வாரும்' என்று கட்டளையிட்டான். விஷ்ணு சித்தரோ, "அது சகல சாத்திரங்களும் கற்ற பண்டிதர்கள் செய்யவேண்டியது... நானோ சாத்திரம் முழுதும் கற்றவன் அல்லேன். சகலகலா வல்லவர்களான அந்த மாயாவாத பண்டிதர்கள் நிறைந்த சபையில் எப்படி நான் பரதத்துவ நிர்ணயம் செய்யப் போகிறேன்?' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு இறைவன், "அதைப்பற்றி உமக்கு என்ன கவலை? செய்யப்போவது நாமே... நீர் செல்லும்' என்று ஆணையிட்டான்.
 விஷ்ணுசித்தரும் அதை ஏற்று, கூடல்நகருக்குப் பயணமானார். செய்தி மன்னனுக்குக் கிடைக்க, செல்வநம்பியோடு சேர்ந்து அவரை எதிர்கொண்டு அழைத்தான் மன்னன். வேதத்தின் விழுப்பொருளான பரதத்துவத்தை நிச்சயித்து அருள வேண்டும் என்று பிரார்த்தித்தான்.
 விஷ்ணுசித்தரும் மடை திறந்த வெள்ளம் போல் வேதத்தின் விழுப்பொருளை உரைக்கலானார். "இந்த உலகுக்குக் காரணமான வஸ்து எவனோ அவனே தியானத்துக்குரியவன்.
 எவனிடத்திலிருந்து அனைத்துப் பொருளும் உண்டாகின்றனவோ, எவனால் இவை யாவையும் நிலை பெற்றிருக்கின்றனவோ, முடிவில் எவனிடத்தில் இவையனைத்தும் லயமாகின்றனவோ அவனே பரப்பிரும்மம்.
 சிலந்திப் பூச்சியானது எவ்வாறு நூலை உருவாக்கிக்கொண்டு, உணவாகிற பூச்சிகளைப் பிடித்துக் கொள்ளுமோ அவ்வாறே சகல உயிர்களையும், பொருள்களையும் அந்தப் பரன் படைத்தான்,
 அந்தப் பரன் விஷ்ணு என்னும் பெயருடையவனாய், சாத்விகனாய், அனைவராலும் தொழப்படுகின்றவனாய் இருக்கிறான் என்றும்,
 ஓம்கார வடிவினனான அந்த விஷ்ணு ஒருவனே என்றும், வேத வசனங்களுக்கும் நாயகன் அவனே என்றும், ஜீவர்கள் அந்த ஓம்காரத்தை உச்சரித்த மாத்திரத்திலேயே நலன் அடைகிறார்கள் என்றும், அந்த நாராயணன் ஒருவனே பாபங்களைக் களைபவன் என்றும்,
 ஸ்ரீமந் நாராயணனிடத்திலிருந்து பிரம்மா, ருத்ரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களும் பிறந்தார்கள் என்றும், நாராயணனே பர ப்ரும்மம் என்றும்,
 பகவான் வியாசரும், எந்தக் காலங்களிலும் நாராயணனுக்கு மிஞ்சிய பர தெய்வமில்லை என்று வேதங்களும், புராணங்களும் சத்ய பூர்வமாகச் சொல்லி இருப்பதை ரிஷிகளாகிய உங்கள் மத்தியில் பிரமாண பூர்வமாகச் சொல்ல விழைகிறேன் என்றும் கையை மேலே உயர்த்தி சத்தியம் செய்து, நாராயணன் ஒருவனே பரனாயிருப்பது போல, சர்வ மந்திரங்களில் அஷ்டாட்சரம் ஒன்றே பரதத்வ நிர்ணயம் செய்யவும் உயர்ந்த மந்திரமாக இருக்கிறது என்றும் அருளிச் செய்தார்.
 வேத வாக்கியம் கொண்டும், ஸ்ம்ருதி, இதிகாசம், புராணம் முதலான பிரமாணங்களைக் கொண்டும் அனைத்து வித்வான்களும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் ஸ்ரீமந் நாராயணனே பரம்பொருள் என்று நிர்ணயம் செய்தார்.
 உடனே பொற்கிழி கட்டியிருந்த கம்பம் வளைய விஷ்ணுசித்தரும் பொற்கிழியை அறுத்துக் கொண்டார். பின்னர், மன்னன் விஷ்ணுசித்தருக்கு பட்டர்பிரான் என்னும் பட்டம் வழங்கி, பட்டத்து யானையின்மீது அவரை ஏற்றி, நகர்உலா வரச் செய்தான்...
 அப்போது, திருமால், அயன், அரன், இந்திரன் முதலியோர் புடைசூழ கருடன் மீதேறி வந்து, விஷ்ணுசித்தருக்கும் அரசனுக்கும் காட்சியளித்தார்.
 ஆனால், பரந்தாமன் எழில் கண்ட விஷ்ணுசித்தர், பரமனுக்குக் கண் எச்சில் படுமோ என்று கவலையுற்று, அவன் எழில் என்றும் திகழ பல்லாண்டு பாடி வாழ்த்தினார்.
 இவ்வாறு பெரியாழ்வார் பரதத்துவ நிர்ணயம் செய்த விழா, வரும் டிச.13ல் மதுரை கூடல்அழகர் திருக்கோயிலில் பெரும் உற்ஸவமாகக் கொண்டாடப் படுகிறது.
 பிரம்மபுத்திரரான சனத்குமாரர் விரும்பியபடி, பெருமாள் இங்கே அர்ச்சாவதார வடிவில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தந்தார். பின்பு சனத்குமாரர், விஸ்வகர்மாவிடம் தான் கண்ட காட்சியைக் கூறி சிலை வடிவமைக்கச் செய்தார். அழகிய அஷ்டாங்க விமானத்தின் கீழ் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவரே கூடலழகர். இத்தலம் கிருத, திரேதா, துவாபர, கலி என நான்கு யுகங்களிலும் சிறப்புற்றதால், பெருமாள் யுகம் கண்ட பெருமாள் எனப்படுகிறார்.
 ஒரு முறை இங்கே தொடர்ந்து மழை பெய்தது. மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். தங்களைக் காக்க வேண்டினர். பெருமாள் நான்கு மேகங்களை ஏவினார். அவை, மதுரையைச் சுற்றி நான்கு மாடங்களாகக் கூடி மக்களைக் காத்தன. இவ்வாறு, மேகங்கள் கூடியதால், நான்மாடக்கூடல் என்றும், கூடல் மாநகர் என்றும் பெயர் பெற்றது. பெருமாளும் கூடலழகர் ஆனார்.
 பஞ்சபூதத் தத்துவம் உணர்த்தும் ஐந்து கலசத்துடன் கூடிய ஐந்து நிலை ராஜ கோபுரம், எட்டெழுத்து மந்திரத்தை உணர்த்தும்படி, எட்டு பிராகாரங்களுடன் அமைந்த கோயில். ஆண்டாள், சக்கரத்தாழ்வார், நவக்கிரகாதியர், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள், மணவாள மாமுனிகள், விஸ்வக்சேனர், ராமர், கிருஷ்ணர், லட்சுமிநாராயணர், கருடன், ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் என சந்நிதிகள் நிறைந்த பெரிய கோயில். உற்ஸவர் வியூகசுந்தர்ராஜன். எந்தச் செயலையும் வியூகம் அமைத்து செயல்பட்டால் வெற்றி கிட்டும். பெருமாள் இங்கே எதிலும் வெற்றி தரும் அழகர். எனவே இப்பெயர்.
 பாண்டியர்களின் சின்னமாக மீன் அமைய, இப்பெருமாளே காரணமானார். இங்கே வைகை நதி, கிருதுமால் நதி இரண்டும் மாலை போல் நகரைச் சுற்றி ஓடின. பாண்டிய மன்னன் சத்தியவிரதன் ஒரு முறை கிருதுமால் நதியில் நீராடிய போது, பெருமாள் மீன் வடிவில் தோன்றி அவனுக்கு அருள் புரிந்தார். மத்ஸ்யாவதாரம் நிகழ்ந்த தலம் ஆதலால், மீன் சின்னத்தை பாண்டியன் வைத்துக் கொண்டான் என்பர்.
 இங்கே அஷ்டாங்க விமானத்தின் கீழ் தளத்தில் கூடலழகர் ஸ்ரீதேவி, பூதேவி சகிதராக அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இரண்டாவது தளத்தில், சூரிய நாராயணர் தேவியருடன் நின்ற கோலம். மூன்றாவது தளத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் பாற்கடல் நாதராக அருள்கிறார். இவ்வாறு, பெருமாள் நின்ற, அமர்ந்த, கிடந்த என மூன்று கோலங்களிலும் காட்சி தருகிறார். இங்கே பக்தர்கள் இந்த விமானத்தை கிரிவலம் வருவது போல் வலம் வந்து அருள் பெறுகிறார்கள்.
 பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. மார்கழி மாதத்தில் இத்தலத்தை தரிசிப்பது சிறப்பு.
 பிரார்த்தனை: திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியறிவு பெற பிரார்த்தனை செய்து, தாயாருக்கு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர் பக்தர்கள்.
 திறக்கும் நேரம்: காலை 6-12, மாலை 4-9 வரை.
 தகவலுக்கு: 0452 2338542

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com