திருவையாற்றில் சப்தஸ்தானம்!

திருவையாற்றுக்கு உரிய சிறப்பு "சப்தஸ்தானம்' என்னும் ஏழூர்த் திருவிழா. இத்திருத்தலத்தின் இறைவன் ஐயாறப்பர், அறம்வார்த்த நாயகியுடனும் நந்தியெம்பெருமானுடனும் ஏழு ஊர்களுக்கு எழுந்தருளும் வைபவத்தைக் காணக் க
திருவையாற்றில் சப்தஸ்தானம்!

திருவையாற்றுக்கு உரிய சிறப்பு "சப்தஸ்தானம்' என்னும் ஏழூர்த் திருவிழா. இத்திருத்தலத்தின் இறைவன் ஐயாறப்பர், அறம்வார்த்த நாயகியுடனும் நந்தியெம்பெருமானுடனும் ஏழு ஊர்களுக்கு எழுந்தருளும் வைபவத்தைக் காணக் கண் கோடி வேண்டும்.

நந்தியெம்பெருமானுக்கு திருமழபாடியில் திருமண விழா நடைபெற்றது. அந்த விழாவிற்கு பல பொருட்கள் அனுப்பியதற்கு நன்றி தெரிவிக்கும் ஊர்வலமாக சப்தஸ்தான விழா நடைபெறுகிறது என்பது ஐதீகம்.

சித்திரை மாதம் முழுமதி நாளுக்கு அடுத்த விசாகத்தில் ஐயாறப்பர் ஒரு கண்ணாடிப் பல்லக்கிலும், நந்தி தேவர், சுவயம்பிரகாச அம்மையுடன் தனியொரு வெட்டிவேர்ப் பல்லக்கிலும் திருவையாறிலிருந்து புறப்படுவார்கள். திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய தலங்களுக்கு எழுந்தருள்வார்கள். அந்தந்த ஊர்களின் இறைவனும் தனித்தனி பல்லக்குகளில் ஐயாறப்பரை ஊர் எல்லையில் எதிர்கொண்டு அழைத்து வருவார்கள். மறுநாள் காலை திருவையாறுக்கு ஏழு ஊர்களின் பல்லக்குகளும் ஒன்று சேர்ந்து வரும் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும்.

இந்த ஊர்வலத்தில் தேவாரம், திருவாசகங்கள் ஓதியபடி சிவனடியார்கள் கூட்டம் வரும். அனைத்து இடங்களிலும் அன்னதானம் என்று இந்த சப்தஸ்தான விழா களைகட்டும்.

வரலாற்று ரீதியாக ஆராய்ந்தால் இவ்விழா எப்பொழுது தொடங்கியது என்று கூற முடியாதபடி அத்தனை பழமையானதாக அறியப்படுகிறது.

அருணகிரிப் பெருமான் திருவையாறு குறித்து ""சொரியும் மாமுகில்'' என்ற தொடக்கத்தை உடைய திருப்புகழைப் பாடியதுடன் நில்லாமல் ஏழு தலங்களையும் சேர்த்து ""மருவுலாவிடு'' என்று தொடங்கும் திருப்புகழையும் பாடியுள்ளார். அப்பர் பெருமானும் இத்தலங்களை தனது திருத்தாண்டகங்களில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாண்டு திருவையாறு திருத்தலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி சித்திரைப் பெருவிழா நடைபெற்று வருகிறது. மே 6 ஆம் தேதி (12ஆம் நாள் திருநாள்) "சப்த ஸ்தானம்' (ஏழூர்வலம்) நடக்கும். மே 7ஆம் தேதி ஆறு ஊர் பல்லக்குகளும் திருவையாற்றுத் திருக்கோயிலுக்கு வரும் ஆனந்தக் காட்சியும் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com